View status

View My Stats

சனி, 29 மே, 2021

 எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவை

======================================

Dos – செய்ய வேண்டியவை

1. அசையும்போது உணர்ந்து அசைய வேண்டும்.

2. எந்த வேலை செய்தாலும் கவனித்து செய்யவேண்டும்.

3. வரும் உதிப்புகளையெல்லாம் அவ்வப்போது எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

4. பேச்சு, பார்வை, அசைவு முதலியவற்றினால் நாம் நமது நரம்பு சக்தியை அதிகமாக வீணடித்துக்கொண்டிருக்கிறோம். எனவே எப்போதுமே உடலும் மனமும் தளர்ச்சியுடன் இருக்கும்போதுதான் [ரிலாக்ஸ்டாக] ஒரு காரியத்தைச் செய்யவேண்டும்.

5. எண்ணத்தின் போக்கு [thought habit] மாறினால் செயல் மாறும். எதையும் செய்யலாம் / அடையலாம். ஒரு விஷயம் முடியாது என்று தோன்றுகிறதா, படுத்து ரிலாக்ஸ் பண்ணவும். திரும்பத் திரும்ப அவ்விஷயம் பற்றி நினைத்துக்கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் சாத்தியம்தான் என்று தோன்றும்.  பின்பு நம் reach-க்குள்தான் [அடையக்கூடிய தூரத்தில்தான்] என்று தோன்றும். பின்பு reach-க்கே வந்துவிடும். 

6. சிரமம் வரும்போது அதில் என்ன நன்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். 

7. ஒரு பிரச்சனை வந்தால், வந்துவிட்டதே என்று கவலைபடாமல், அமைதியாக, relaxed-ஆக அமர்ந்து சிந்திக்க வேண்டும். முடிந்தால் அப்பிரச்சனை பற்றி சிந்திப்பதை வேண்டுமென்றே ஒத்திப்போட வேண்டும். கொஞ்ச நேரம் கழித்துக்கூட சிந்திக்கலாம். சிந்திக்கணும்.

8. ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையாகத்தான் தீர்க்க வேண்டும். சமயங்களில் ஒன்றைச் சமாளித்தாலே அதிலேயே 10/15 விஷயங்கள் சரியாகிவிடும்.

9. ஒரு விஷயத்தைப் பற்றி நாமே யோசித்து நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் உள்ளது எனினும் அதில் நிறைய சக்தி இருக்கிறது. எதையும் நாமே செய்ய வேண்டும். 

10. ஒரு கோட்டையைக் கட்டப் போகிறீர்களா? அதைப்பற்றி நினைக்கத் தேவையில்லை. அதைக் கட்டவிடாமல் எந்த சின்ன செயல் தடுக்கிறது என்று பாருங்கள். 

11. ஒரு காரியத்தை எடுத்தால் முடித்துவிட வேண்டும். இல்லையெனில் எடுக்கக் கூடாது. 

12. ஒரு பொருளை தர யாராவது கையை நீட்டினால் உடனே வாங்கிக்கொள்ள வேண்டும். கையை நீட்டிக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், [பிச்சைக்காரன் மாதிரி] ஏந்திக்கொண்டே இருப்பாய் என்று அர்த்தம். இப்படியே இருந்தால் நினைத்ததை அடைய முடியாது. 

13. Budget your time and money. ஆனால் இந்த செலவு இந்த அளவு, இப்போது சரியா என்று ‘செக்’ பண்ணிக்கொள்ள வேண்டும். கவனம் செலவு செய்யப்படும் காசில் இருக்கக்கூடாது. ஒரு குழந்தைக்கு இனிப்பு / பிரியாணி போன்றவை எவ்வளவு தரவேண்டுமோ அதைப்போல செலவு செய்யவேண்டும். கவனம் பொருளில்தான் இருக்க வேண்டும். பணத்தில் அல்ல. 

14. நேராக உட்கார வேண்டும். சாய்ந்துகொண்டால், மனசும் சாய்வதாக அர்த்தம். [ரிலாக்ஸ் செய்வதற்காக சாய்ந்துகொள்வது வேறு]. 

15. ஒரு வருடத்துக்கான திட்டம் போட்டுவிட வேண்டும். அவை நிறைவேற ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம், தப்பில்லை. 

16. உடை, ஆரோக்கியம், குடும்ப மகிழ்ச்சி, செல்வம், தர்மாம், சம்பாத்தியாம் எல்லாவற்றிலும் உன்னை நீ வெளிப்படுத்துவதான self-expression-க் காட்டவேண்டும். எதிலும் உனது முத்திரை இருக்க வேண்டும். 

17. செய்யும் வேலைய அதன் பலன் கருதிச் செய்யாமல், வேலையை வேலைக்காகவே செய்யவேண்டும்.

18. கோபம் அல்லது வேதனை வரும்போது முகம் கழுவினால் / இரு கைகளாலும் முகத்தைத் தடவிக்கொண்டால் அந்த உணர்வு மாறிவிடும். 

19. Breaking-point-ல்தான் சக்தி உற்பத்தியாகிறது. ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும்போது போதும் என்று மனம் சொன்னால் அதுதான் Breaking-point. முடியாது என்று ஒரு பத்துப்பதினைந்து வினாடிகள் வேண்டுமென்றே சிந்தித்து Breaking-point-ஐ உடைக்க வேண்டும்.

20. கை குலுக்கும்போது grip-ஆகச் செய்ய வேண்டும்.

21. ஒரு பிரச்சனையை பற்றி மனம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போதுதான் சிந்திக்கவேண்டும்.

22. இரு தோள்களிலும் உள்ள மலக்குகளின் – வானவர்களின் – சிபாரிசு பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். 

23. அவ்வப்போது ஒரு பத்துப் பதினைந்து வினாடிகள் ரிலாக்ஸ் செய்யவேண்டும். அது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாக வந்துவிடும்.

24. நாம் சொல்வது கேட்பவரின் நெஞ்சுக்குள் இறங்க வேண்டுமெனில் அவரது கண்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். 

25. தினமும் குளிக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் ஷேவ் செய்ய வேண்டும். எப்போதும் ‘ட்ரிம்’மாக இருக்க வேண்டும். 

26. இரவில் படுக்கப்போகுமுன், இன்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று பார்க்க வேண்டும். அதாவது எந்த வகையில் முன்னேற்றம் தேவை என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

27. எந்த ஒரு எண்ணத்துக்காவது நீங்கள் அடிமையாக இருக்கிறீர்களா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதைவிட்டு வெளியில் வர முடியும். 

28. விரைந்து முடிவெடுக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும் சரியே. 

29. வரும் உதிப்புகளை குறித்துக்கொள்ள ஒரு பேனாவும் தாளும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 

30. நமக்கு நன்றாகத் தெரிந்த செய்தியை ஒருவர் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் நாம் ஒரு கல்லைப்போல சும்மாதான் இருக்க வேண்டும். 

31. ஒருவரிடம் ஒரு காரியம் பற்றிப் பேசும்போது அவருடைய மூச்சோட்டத்தை கவனித்தே பேச வேண்டும். அதாவது இருவருடைய மூச்சோட்டத்தையும் synchoronise செய்த பிறகு [ஒரே மாதிரியான போக்குக்குக் கொண்டு வந்த பிறகு] பேச வேண்டும். இல்லையெனில் நம் முயற்சி தோல்வியடைந்துவிடும். ஒரு முறை தோல்வியடைந்து விட்டால், தொடர்ந்து தோல்வியடையும். 

32. ஒரு காரியம் தோல்வி அடைந்ததும் மீண்டும் உடனே அதைத் தொடங்காமல், கொஞ்சம் இடைவெளி கொடுத்து மீண்டும் முயல வேண்டும். 

33. நீ யார் என்று காட்டக்கூடிய ஒரு தொழில் + வருமானம் + கௌரவம் இந்த மூன்றும் உள்ளது எதுவோ அதை [உப தொழிலாகச்] செய்யுங்கள்.

34. உடம்புக்கு முடியாமல் இருக்கும்போது அமைதியான, அலைகளற்ற கடலை கற்பனை செய்துவிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டாக இருங்கள். 

35. பாலுணர்வு வந்த உடனேயே அதை நிறைவேற்றப் புறப்படாமல், இப்போது வேண்டாம், இந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு வேலையை எடுத்துக்கொள்வதனால், அந்த செக்ஸ் சக்தி பூராவும் அந்த வேலைக்குப் பயன்படும். அந்த வேலை முடிந்த உடன் செக்ஸ் சக்தி காலியாகிவிடாது. தேக்கி வைத்துச் செய்வதனால் வேகம் அதிகமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தடவையும் அந்த உணர்வு வரும்போது தேக்கி வைத்து, வேறு வேலையை முடித்துவிட்டுச் செய்யலாமா என்றால் தாராளமாகச் செய்யலாம். வேண்டுமென்றே ஒத்தி வைத்துச் செய்வதனால், மனதை இங்கு எனில் இங்கும், அங்கு எனில் அங்கும் வைக்கின்ற தகுதியும் வரும். 

36. சம்பாதிப்பதைவிட குறைவாகத்தான் செலவு செய்ய வேண்டும். 

37. பணம் வரும்போது ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும்.

38. வாரத்திற்கு ஒரு நாள் நல்ல கறி ஆக்கச் சொல்லிவிட்டு அன்று அதை நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

39. நோயுற்றிருக்கும்போது அதில்லாத மாதிரி நடக்க ஆரம்பித்தால் – நடிக்க அல்ல – அந்த நோய் நீங்கிவிடும். 

40. எந்தக் காரியம் நீங்கள் செய்தது, எந்தக் காரியம் தானாக நடந்தது என்று குறித்து வைக்க வேண்டும்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து


ஷரீயத் என்பது பாமரமக்கள் உண்ணக்கூடிய உணவு. தரீகத் என்பது ஒவ்வொருவருக்குமான ஸ்பெஷல் மருந்து. அதனால் தரீக்கா பல வரலாம். ஒரே தரீக்காவில் instructions மாறிவரலாம். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு மாதிரியாக இருக்கலாம். 


(ஒரு பொருளின்மீது படும்) ஒளி அதிகமாக ஆக நிழலே இல்லாமல் போகும். அதேபோல, உங்கள் பாசிடிவிட்டி டெவலப் ஆக ஆக, நீங்கள் தகுதியை மட்டும் வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் பொருளெல்லாம் உங்களைத் தேடி அடையும். நீங்கள் அதை (முயற்சி செய்து) அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி (அது) வரும். 


மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம்.  இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும்.  We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும். 


சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்). 


உங்களிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால், ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவது எளிது. உங்களிடம் ஒரு பைசா கூட இல்லாமலிருந்தால் நூறு ரூபாய்கூட கடன் வாங்க முடியாது (காரணம் பணம் இருக்கும்போது உள்ள மனநிலை, பணம் இல்லாதபோது இருக்காது).


உண்மையான அறிவு வெளிமனதுக்கு வருமுன் distort ஆகிவிடுகிறது. நான் சொல்வதெல்லாம் prove பண்ணப்பட்டது. சூஃபிகளால், சூஃபி வாழ்வைப் பின்பற்றியவர்களால் (அவர்கள் சூஃபியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சூஃபித்துவத்தை ஒரு பிசினஸ்மேன் பிசினஸுக்குப் பயன்படுத்தலாம். அதையே ஒரு குடும்பஸ்தன் மனைவி மக்களுக்குப் பயன்படுத்தலாம்). எடிசன் பல்பை எதற்காகக் கண்டுபிடித்தானோ, அதை நாம் இன்று பெட்ரூமுக்கும் பயன்படுத்தலாம், புர்தா ஷரீஃபுக்கும் பயன்படுத்தலாம் அல்லவா? அது பயன்படுத்தும் ஆளைப்பொறுத்தது. 


எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அறிவுக்கு வித்து எதுவோ அங்கிருந்து அது வந்திருக்கும்.  Infinite Intelligence என்று அதற்குப்பெயர். ஆண்டவனுக்குப் பெயர்.

எங்கள் ஞானாசிரிய ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து

 எங்கள் ஞானாசிரிய ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து

==========================================

செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் / Dos and Don’ts

Don’ts

1. நான் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு வருகின்ற எண்ணங்களை வைத்து எனக்கு உதாரணம் காட்டுவதோ, ஒத்து ஊதுவதோ கூடாது. 

2. ஒருவரிடம் கேட்கும்போது இன்னொருவர் அதற்கு பதில் சொல்லக்கூடாது.

3. என்னைப் பாராட்டிப் பேசுவது கூடாது.

4. ஆச்சரியப்படக்கூடாது, அதிகமாக  சந்தோஷமும் படக்கூடாது.

5. அவசரப்படக்கூடாது.

6. எரிச்சல் / பொறாமை கூடாது

7. தக்க காரணம் இல்லாமல் எந்தச் செயலையும் [பாதியில்] விட்டுவிடக்கூடாது. அலுப்பு காரணமாக விட்டால் போச்சு. 

8. எந்த விளைவுக்கும் – நல்லதோ கெட்டதோ – இதுதான் காரணமென்று முடிவு செய்துவிடக் கூடாது. 

9. குரு வந்த பிறகு, சொந்த புத்திக்கு இடம்தரக்கூடாது. 

10. எதிர்பார்ப்பு கூடாது.

11. கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்காமல் இருக்கக்கூடாது. அந்தப் பணத்தை rotation-லும் விடக்கூடாது. 

12. Bed-coffee, tea எல்லாம் குடிக்கக்கூடாது.

13. நிர்வாணமாகக் குளிக்கக்கூடாது.

14. கையை நீட்டக்கூடாது. அது திருட்டு அல்லது பிச்சை.

15. ’என்னவோ நினைத்தேன்’ என்பது போலெல்லாம் பேசக்கூடாது. 

16. ஒரு காரியத்தில் வெற்றியடைய நேர்மறையான உணர்வைத்தான் உந்து சக்தியாக வைக்கவேண்டும். பொறாமை, பழி உணர்ச்சி போன்ற எதிர்மறை எண்ணங்களை வைக்கக்கூடாது. 

17. சாப்பிடும்போது பேசக்கூடாது.

18. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் கூடாது.

19. தொட்டுப்பேசக்கூடாது. அது பெண்மை. 

20. Rationlaisation [செய்த செயலை நியாயப்படுத்துவது], Projection [ஒருவர்மேல் கொண்ட எதிர்மறை உணர்ச்சியை, வெறுப்பை, கோபத்தையெல்லாம் இன்னொருவர் மேல் காட்டுவது], Inhibition [இது கூடாது, அது கூடாது என்று நம்மை நாமே தடை செய்துகொள்ளும் தேவையற்ற தடையுணர்ச்சி] – இம்மூன்றும் [நமது பாதையில்] கூடாது. 

21. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனுக்குடன் செய்துவிடக்கூடாது.

22. பேசும்போது கையசைப்பது, சாப்பாட்டுத் தட்டில் உள்ள அப்பளத்தை எடுத்து கடித்துப் பார்ப்பது, இனிப்பை எடுத்து சுவைத்துப் பார்ப்பது – இதெல்லாம் கூடாது. 

23. அரித்தால் உடனே சொரியக்கூடாது. அரிப்பு போகாவிட்டால் மெதுவாக, உணர்ந்து சொரியலாம். இப்படியெல்லாம் செய்தால் நம்மை தொந்தரவு செய்வதை நம்முடைய Conscious விட்டுவிடும். Sub-conscious வேலை செய்ய ஆரம்பிக்கும். 

24. பேசும்போது நம் கண் அலையக்கூடாது. எதிராளியின் கண்ணையும் அலையவிடக்கூடாது.

25. தன்னை மறந்து சிரிப்பதும், அரட்டையடிப்பதும் கூடாது. அது வெற்றியின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதாகும்.

26. பேசும்போது, ‘ஆனால், ‘வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது.

27. ஒரு காரியத்தை ஆரம்பித்து அரைகுறையாக நிறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் அது மற்ற காரியங்களையும் முடிக்க விடாமல் செய்துவிடும்.

28. நெருங்கிய நண்பர்களிடம் பேசினாலும், அடுத்தவர்கள் மீது பழிகூறிப் பேசக்கூடாது.

29. வேதனையான, வெறுப்பை உமிழும் உணர்வுகளையெல்லாம் [unpleasant emotions] வெளிப்படுத்தக்கூடாது. 

30. லாடம் கிடைத்தவுடன் குதிரை வாங்க நினைக்கக்கூடாது. [புறத்தூண்டுதலின் பேரில் ஒரு ஆசையை வளர்த்துக்கொள்ளக்கூடாது].

31. நேரம் கெட்ட நேரத்தில் ஃபோன் பேசுவது, விஜயம் செய்வதெல்லாம் கூடாது. அது தோல்வியைத்தரும். 

32. அடுத்தவர் பணம் எண்ணும்போது பார்க்கக்கூடாது. அது நமக்கு உரிமையில்லாத அழகான பெண்ணை ரசிப்பதைப் போன்றது. நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடும்.

33. கடைப்பேச்சை வீட்டுக்கும், வீட்டுப்பேச்சை கடைக்கும் கொண்டு போகக்கூடாது. [கடை என்பது அலுவலகம் / தொழிலுக்கான குறியீடு].

34. ஒரு விஷயத்தில், ‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று அடுத்தவருடைய கருத்தைக் கேட்கக் கூடாது. 

35. மக்களிடம் காட்டுவதற்காக செலவு செய்யக்கூடாது.

36. மனைவிக்கு ஆலோசனை வார்த்தையால் சொல்லக்கூடாது. 

37. மகிழ்ச்சி வருவது தவறல்ல. ஆனால் பத்து வினாடிகளுக்கு மேல் அதை அனுமதிக்கக்கூடாது.

38. உணர்ச்சிவசப்படாமல் / ரொம்ப சந்தோஷப்பட்டுவிடாமல் வரவிட்ட பணத்தை ஏற்கனவே போட்ட திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும். கூடுதலாக, புதிதாக எதுவும் செய்யக்கூடாது.

39. டென்ஷனாக உள்ளபோது அசையக்கூடாது.

40. இஸ்முகளை / மந்திரங்களை மெட்டு போட்டும், அர்த்தம் பார்த்தும் ஓதக்கூடாது. 

41. அடுத்தவரின் சாப்பாட்டைப் பார்க்கக் கூடாது.

42. குழப்பத்தோடு வெளியில் போகக்கூடாது. [அதை நீக்கிவிட்டுப் போகலாம்].

43. எதற்கெடுத்தாலும் ஆண்டவனைக் கூப்பிடக்கூடாது. அது அவனுக்கே சலிப்பை ஏற்படுத்தும்.

44. வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி உற்சாகத்தோடு வெளியில் சொல்லக்கூடாது. அடுத்த காரியம் நடக்காது.

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து
===========================================
மூச்சு
======
எல்லா நி’அமத்தையும் [அருட்கொடையையும்] ஆண்டவன் எண்ணத்துக்கு அடுத்தபடியாக மூச்சோட்டத்தில்தான் வைத்துள்ளான். மூச்சை கட்டுப்படுத்தினால் எதையும் செய்யலாம். 
ஒருவரிடம் ஒரு காரியமாகப் பேசும்போது அவருடைய மூச்சோட்டத்தை கவனித்தே செய்யவேண்டும். இல்லையெனில் நம் முயற்சி தோல்வி அடைந்துவிடும். ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால், தொடர்ந்து தோல்வி அடையும். 
நமது மூச்சோட்டத்தின் frequency-க்கு [அலைவரிசைக்கு] அடுத்தவரைக் கொண்டுவந்து பேசினால் நமது காரியம் வெற்றி அடையும். இது ஒரு வழி. 
இன்னொரு வழி, மனதளவில் நாம் நம்மை அடுத்தவரைவிட உயர்வானவராக ஆக்கிக்கொண்டோமெனில், நாம் ஒரு ஆளைப் பார்த்த உடனேயே நமது மூச்சோட்டம் அவருக்கு வந்துவிடும். நாம் அவரை எளிதாக கட்டுப்படுத்திவிடுவோம் / நமது விருப்பத்துக்கு ஏற்ப பணிய வைத்துவிடுவோம். 
[ஆனால் இதில் நேர்மையாக இருக்கவேண்டியது அவசியம். அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டியவர்களாக நாம் உள்ளோம்]. 
ஒவ்வொரு 2 மணி 24 நிமிடங்களுக்கொருமுறை மூச்சு வலம் இடமாக மாறிமாறி ஓடும். ஒவ்வொரு 14 நாட்களுக்கு மாறிமாறி ஓடும். வளர் பிறைக்கும் தேய் பிறைக்கும் மாறி மாறி வரும். 
நோய், கடன் இவை தீர மூச்சு வலது பக்கமாக ஓடும்போது நினைக்கவேண்டும். வீடு கட்டுதல் / வாங்குதல் திருமணம் செய்தல் போன்ற நிரந்தரமானதைப் பற்றி மூச்சு இடது பக்கமாக ஓடும்போது நினைக்க வேண்டும். 
சாய்ந்துகொண்டு, வலது பக்கமாக மூச்சு ஓடும்போது, ஓடாத சரக்கைப் பற்றி நினைத்தால் அது விற்கும். 
வலது பக்கமாக ஓட வேண்டிய மூச்சு இடதாகவோ, இடது பக்கமாக ஓடவேண்டிய மூச்சு வலதாகவோ ஓடினால், அன்று ஏதோ நடக்கப் போகிறது, உடலில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். 
இந்த இடத்தில் உடல் என்பது நம் உடலை மட்டுமின்றி, நம் குடும்பத்தையும் குறிக்கும். 
Auto-suggestion, hypnotism, தரீக்கா [ஆன்மிகப்பாதை] எல்லாவற்றிற்கும் மூச்சோட்டத்துக்கும் தொடர்புள்ளது. எனவே மூச்சை கட்டுப்படுத்தித்தான் ஆகவேண்டும். 
மெல்லிய நூல் போன்றதுதான் மூச்சு. அதை கட்டுப்படுத்துவது எளிது. பேச்சு, கோபம், செக்ஸ் முதலியவற்றில் மூச்சோட்டம் மாறுபடும். 
இபாதத் [இறைவணக்கம், இறைவனை நினைத்து ஓதுதல், தியானம் முதலிய காரியங்கள் செய்தல்] செய்யும்போது Sex-ல் உள்ள மூச்சோட்டத்தை உண்டாக்கினால் இபாதத் Sex ஆக மாறிவிடும். 
அதேபோல Sex-ல் இபாதத் செய்யும்போது உள்ள மூச்சோட்டத்தைக் கொடுத்தால் Sexகூட ஒரு இபாதத்தாக மாறிவிடும்.
ஒருமுறை மூச்சோட்டம் ஒரு குறிப்பிட்ட அலைவரிடைக்கு வந்துவிட்டால் அதற்குரிய ஆன்மிக சக்தி தானாகவே வந்துவிடும். 
மூச்சு இடது வலதாக ஓடாமல் இரண்டுக்கும் மத்தியில், அதாவது இரண்டு பக்கமும் ஒரேவிதமாக, ஓடினால் அப்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் இருப்பது நல்லது. 
Relaxed-ஆக இருக்கும்போது விடும் மூச்சு வேறு. டென்ஷ்டனாக இருக்கும்போது விடும் மூச்சு வேறு. 
ரஹ்மானியத்தான [தெய்வீகமான] மனநிலையின் அடையாளங்களில் ஒன்று அமைதியான மூச்சோட்டம். 
அமைதியான உள்ளம், சரியான உடல் / சரியான குடும்ப உறவு முறைகள் அனைத்திற்கும் மூச்சுப் பயிற்சி அவசியம். 
மூச்சோட்டத்தை மிகச்சரியாகச் செய்யும்போது தெய்வத்தன்மை மேலே வரும். மூச்சை ஏன் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அது சரியாக இல்லை. 
மூச்சை கட்டுப்படுத்துவதுதான் மற்ற விஷயங்களைக் கட்டுப் படுத்துவதைவிட எளிது. அதே நேரத்தில் அந்த லகானைப் பிடித்து இழுத்துவிட்டால் எல்லாம் control ஆகிவிடும். 
மூச்சை full extent-க்கு விடவேண்டும். Relaxed-ஆக அமர வேண்டும். படுத்தும் கொள்ளலாம். குறைந்தது ஒரு கால் மணி நேரம். 
ஒரு பத்து நாளைக்கு மூச்சை control பண்ணிப்பாருங்க. உங்கள் நடை, உடை, பேச்சு etc எல்லாம் மாறிவிடும். உங்களால் எதையும் கட்டுப்படுத்திவிட முடியும். 
ஒருவருடைய மூச்சின் frequency-யை மாற்ற முடிந்தால் அவரது உள்ளத்தை மாற்றலாம். [இந்த பயிற்சி பழக்கமானவுடன்] எல்லா சூழ்நிலைகளிலும் Relaxed-ஆக மூச்சுவிட ஆரம்பித்துவிடுவீர்கள். 
ஆழ்ந்த மூச்சோட்டம் பழக்கமாக வேண்டும். எப்ப ரியாலத் automatic-ஆக ஆகிவிட்டதோ, அதனால் வரக்கூடிய பயன்களும் automatic-ஆக வர ஆரம்பிக்கும். 
மூச்சு ஓர் அற்புதமான கருவி. ஆனால் அதை நாம் தவறாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளோம். 
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள். அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி செய்யலாம். 
மூச்சுப் பயிற்சிதான் ஆன்மிகத்தில் முதல் பயிற்சி. ஆடாமல் அசையாமல் உட்கார வேண்டும். 
மூச்சென்னும் உணவானது மற்ற உணவுகளைக் கொடுக்கும். செல்வத்துக்கு மேல் செல்வம். ஒளிக்கு மேல் ஒளி.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னது
======================================
ஆசை
=====
Something for nothing என்பது கிடையாது. எதையாவது கொடுக்கவேண்டும். பணம், உழைப்பு, ஆசை இப்படி. ஆசையென்றால் 24 மணி நேரமும் பின்னிப் பின்னி அதையே நினையுங்கள். ரெண்டு நாள் நினையுங்கள். மூன்றாவது நாள் உங்கள் மனசு டான்ஸ் ஆடும். அவ்வளவு சக்தி நம்மிடம் உள்ளது. 
இரவில் படுக்கப்போகும்போது உள்ள நினைப்பு விழித்தவுடன் முதல் எண்ணமாக வரவேண்டும். அப்போதுதான் நீங்கள் ஆசைப்படுவதாக அர்த்தம். 
24 மணி நேரமும் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்ப உடல் கெட்டுப்போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசையின் தரத்தைப் பொறுத்து சீக்கிரமாகவோ தாமதமாகவோ கிடைக்கும். 
உங்கள் ஆசை பலமாக இருந்தால் தனக்குத்தானாகவே எல்லாம் நடக்கும். நேர்மையாக ஆசைப்பட்டால் உங்கள் பக்குவத்திற்கேற்ப குரு வந்து சேர்வார். 
முயற்சி என்றால் என்ன? ஆசைப்படுவது. ஆனால் ஆசை உங்களுக்கு நன்மை செய்வதாகவும், அடுத்தவனுக்கு கெடுதல் செய்யாததாகவும் இருக்கவேண்டும். 
எந்தப் பொருளை எவ்வளவு அடைந்தாலும் மேலும் மேலும் அடைய ஆசை கொடுக்கிறதோ, அந்தப் பொருளில் தெய்வீகத்தன்மை கலந்துள்ளது என்று அர்த்தம். 
ஆசை specific-ஆக இல்லாதவரை வளராது. அதாவது இன்னதுதான் வேண்டும் என்று தெளிவாகத் தெரியாத வரையில் அது வளராது. 
மனிதனுக்கு வருகின்ற ஆசையெல்லாம் ஆண்டவனிடமிருந்து வருவதுதான். மலத்தைத் தின்னவேண்டும் என்று யாருக்காவது ஆசை வருகிறதா? 
அப்படியானால், எதில் ஆசை வருகிறதோ அது முடியும் என்று அர்த்தம். 
ஆனால் அதற்கான விலையை எப்படிக் கொடுப்பது என்று நமக்குத் தெரியவில்லை. 
நாம் பௌதீக உடலில் இருப்பதனால் சிலவற்றுக்கு விலை அதிகமாகவும், சிலவற்றுக்கு விலை குறைவாகவும் கொடுக்க வேண்டியுள்ளது. 
நாம் வளர வளர கொடுக்க வேண்டிய விலையும் குறைந்துகொண்டே போகும். 
நமக்கு ஆசை இருப்பதால், நமக்கு எந்த மனப்பான்மை தேவையோ அது நமக்கு வருவது மட்டுமல்லாமல், அந்த மனப்பான்மை உள்ளவர்களோடு நட்பு ஏற்படும்.  
எந்த மனப்பான்மை நம்மைக் கெடுக்குமோ, அது நமக்கு வராமலிருப்பதோடு, அது உள்ளவர்மீது வெறுப்பு ஏற்படும். 
இதெல்லாம் ரியாலத் (ஆன்மிகப் பயிற்சி) செய்வதனால் வரும். 
ஆசையை வளர்ப்பது எப்படி? எது வேண்டுமோ, அதை வைத்து என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் கற்பனை செய்யுங்கள். 
எதைப்பற்றிப் பேசுகிறீர்களோ அதில் ஆசை உள்ளது என்று அர்த்தம். 
கஷ்டப்பட்டதைச் சொல்லிக் காட்டிக்கொண்டிருந்தால் கஷ்டப்படுவதில் ஆசை உள்ளது என்றுதான் அர்த்தம். 
நீ நானாக மாறும் வரை நீ என்னைச் சேர்ந்தவனல்ல என்பது நிஜமாக ஆசை அவசியம். ஆசை இல்லாமல் அது முடியாது. 
ஆசைதான் துஆ.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
===============================
• நம்மிடம் அறிவிருக்கிறது என்று காட்டுவதும் வழித்துக்கொண்டு காட்டுவதும் ஒன்று. 
• நீங்கள் சாய்ந்து கொண்டிருப்பது அல்லாஹ்வின் முதுகில் என்று உங்களுக்குத் தெரியவில்லை.
• வாழ்க்கையில் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் வெற்றி அடைந்துவிடலாம். 
[அதாவது, தேவைக்கு அதிகமான சக்தியை தவறான திசையில் செலவழிப்பதன் விளைவாக நாம் நம் முயற்சிகளில் தோற்றுக்கொண்டுள்ளோம்].  
• வாழ்வில் உங்களுக்குப் பிரச்சனைகள் உள்ளதா? நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். [அப்போதுதானே பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி உங்களிடம் உள்ளதை உணர்ந்துகொள்ளலாம்]. 
• அடைந்து இழந்த ஒன்றை திரும்ப அடைவது முதன் முதலாக அடைவதைவிட கஷ்டம். 
• அமைதி என்பது உணர்ச்சி கலக்காமல் இருப்பதுதான்.
• ஓதும்போது, அர்த்தம் பார்த்தும், மெட்டுப் போட்டும் ஓதக்கூடாது. 
[அப்படி ஓதினால் கவனம் / மனம் நமக்கு அர்த்தம் தெரிகிறது என்ற அகந்தையிலும், ராகம் பாடுவதிலும் சென்று ஓதும் நோக்கத்தையே கெடுத்துவிடும்]. 
• மூன்று ‘ஷன்’கள் கூடாது. Procrastination, Projection and Rationalization. 
ஒத்திப்போடுவது, 
ஒருவர் மீது உள்ள கோபத்தை (எதிர்மறை உணர்ச்சியை) இன்னொருவர்மீது காட்டுவது, 
செய்த தவறை நியாயப்படுத்துவது 
– இந்த மூன்றும் ஆன்மிகப் பாதையில் ஹராம் [செய்யவே கூடாதவை] ஆகும்.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
============================================

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையவில்லை நாம். நெய்யை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைந்துகொண்டிருக்கிறோம்.

வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் வரும்போது வெளியே சொல்லாமலிருந்தால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று தெரியவரும்.

எண்ணிவிட்டோம் என்றாலே சக்தியை அனுப்பி விட்டோம் என்று பொருள்

கேட்காதது கிடைக்காது, கேட்பதும், கேட்பது மாதிரி முறைப்படி கேட்காவிட்டால் கிடைக்காது.

வைரக்கல்லுக்கும் பனித்துளிக்கும் உள்ள வித்தியாசம் வைரத்தின் உறுதிதான்.

அடுத்த வீட்டு ஃபேன் காற்றில் உட்காருகிறவரை, அந்த மகிழ்ச்சி உள்ளவரை, நீ ஃபேன் வாங்க முடியாது.

முதல் நோட்டு மாதிரியே கடைசி நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் பரக்கத் (செல்வ வளம்). ஐயையோ இன்னும் ஒரு நோட்டுதானே உள்ளது, இதுவும் கடைசி நோட்டாயிற்றே என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் உங்களுக்கு வறுமை மனநிலை உள்ளது என்று அர்த்தம். முதல் நோட்டை செலவு செய்ய வெளியே எடுக்கும்போது எந்த மனநிலை இருந்ததோ அதே மனநிலை கடைசி நோட்டை உருவும்போதும் இருக்கவேண்டும். அதுதான் மீண்டும் மீண்டும் பணத்தை உங்களை நோக்கி இழுக்கக்கூடிய செல்வ மனநிலை.  
எந்த நி’மத்தும் (அருட்கொடையும்) வருமுன்பே அது வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். [தயார் படுத்துவது என்பது உடல் தொடர்பானது அல்ல. மனம், அறிவு தொடர்பானது. உதாரணமாக ஒரு கம்பனி இண்டர்வ்யூவுக்கு போகவேண்டுமெனில், அதற்கு முன்பாகவே அந்தக் கம்பனி பற்றிய எல்லா தகவல்களையும், எதிர்பார்ப்புகளையும், அதற்கான உங்களுடைய தீர்வுகளுடன் முடிந்தவரை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும்.]

நாகூர் பெரிய மினாராவில் சில தட்டுக்கள் ஏறினால் தர்கா மண்டபம் தெரியும். மேலே போகப்போக கடலும் அதைத்தாண்டியும் கூடத்தெரியும். [அதைப்போல நம் தகுதியைக் கூட்டிக்கொண்டே போகப்போக, அதிகமான வாய்ப்புகளைக் காண முடியும்].
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
=============================================

(ஒரு பொருளின்மீது படும்) ஒளி அதிகமாக ஆக நிழலே இல்லாமல் போகும். அதேபோல, உங்கள் பாசிடிவிட்டி டெவலப் ஆக ஆக, நீங்கள் தகுதியை மட்டும் வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் பொருளெல்லாம் உங்களைத் தேடி அடையும். நீங்கள் அதை (முயற்சி செய்து) அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி (அது) வரும்.

உனக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம் பற்றி தப்பும் தவறுமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் வாயைத்திறக்காமல் உட்கார்ந்திருக்க முடியுமா? முடிந்தால் அது self-control-ஆகும். வாயினால் மட்டும்மல்லாமல், இப்படி உளறுகிறார்களே என்று மனசாலும் பேசாமல் இருக்கவேண்டும்.

நினைத்த சூழ்நிலை நடக்காமல் நேரம் விரயமாகும்போது மனம் நெகடிவ்-ஆக யோசிப்பதும், நேரு ஜெயிலில் ’டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ எழுதாமல் ஜெயில் கம்பியை எண்ணிக் கொண்டிருப்பதும் ஒன்றுதான். மனதை ஒரேநிலையில் எப்போதும் வைக்க முடிந்தால்தான் சாதனைகள் செய்வது சாத்தியப்படும்.

நரம்பு சக்தியைத் திரட்டுவது என்றால் ‘ரிலாக்ஸ்’ பண்ணுவது என்று அர்த்தம். நரம்பு சக்தியைச் செலவு செய்வது என்பது focus செய்வதாகும். ஆனால் நாம் பொதுவாக திரட்ட வேண்டிய நேரத்தில்தான் செலவு செய்துகொண்டிருக்கிறோம்.  

(நான் பேசிக்கொண்டிருக்கும்போது) உங்களுக்கு வருகின்ற எண்ணங்களை வைத்து எனக்கு உதாரணம் காட்டுவதோ, ஒத்து ஊதுவதோ கூடாது. இது first rule. நான் பேசிக்கொண்டு இருக்கும்போது பேச்சை மட்டும் கேட்கவேண்டும்.  (உதாரணமாக), நான் மினாராவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு நாகையில் உள்ள லைட் ஹவுஸ் ஞாபகம் வரலாம். அதைப்பற்றி நீங்கள் சொல்லவும் கூடாது, நினைத்துக் கொண்டிருக்கவும் கூடாது.

இதற்கு என்ன அர்த்தம்? இது ஒரு குறையின் வெளிப்பாடு. குறையின் நிழல் அல்லது விளைவு. அது என்ன குறை? (சீடர்கள் பல பதில்களைச் சொல்கிறார்கள்). எந்த சூழ்நிலையில் ஒருவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தை கவனித்துக்கொண்டு (இருக்கும்போது மனதில்) மற்ற எது வந்தாலும் தட்டி விட்டுக்கொண்டே இருப்பீர்கள்? எந்தக் குறையினால் நோக்கத்துக்கு மாறுபட்ட சிந்தனை வருகிறது?

1) முதலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை. 
2) ஆசை உறுதியாக இல்லை. 
3) வாழ்க்கைக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று நீங்கள் (இன்னும்) நம்பவில்லை.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
=============================================
நம்மிடம் நெகடிவிட்டி [எதிர்மறை எண்ணங்கள் / உணர்வுகள்] நிறைய இருப்பதனால் அது தானாகவே வளரும். பாசிடிவிட்டி [நேர்மறை எண்ணங்கள் / உணர்வுகள்] குறைவாக இருப்பதனால், அதை முயற்சி செய்துதான் வளர்க்கவேண்டும்.
நம் அசைவு, பேச்சு, பார்வை, எண்ண ஓட்டம் இவை சரியாக வந்துவிட்டதா என்று தெரிந்துகொள்ள, எந்த செயலையும், இடையில் வரும் குறுக்கீட்டை கவனித்த பிறகு, விட்ட இடத்திலிருந்து தொடர முடிகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படித்தொடர முடிந்தால் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கள்ளத்தனமான இன்பச் செயல்கள் அவற்றை rationalize செய்யும்  [நியாயப்படுத்தும்] மனப்பான்மையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
Self-Consciousness என்றால் நம்மிடமுள்ள குறைகளை அடுத்தவர் பார்க்கிறார் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருப்பது. உதாரணம்: நம் சட்டையில் ஒரு பித்தானில்லாததை அடுத்தவர் பார்க்கிறார் என்ற உணர்வுடனேயே இருப்பது. இது கூடாது.
Conscious of the Self: என்பது தன்னை உணர்வது. நம்மிடமுள்ள பலம் எது, பலவீனம் எது என்று அவற்றை அறிந்து வைத்திருப்பது. இது வேண்டும். 
அவனை மாதிரி வளரணும், இவனை மாதிரி வளரணும் என்று முயன்றால், அவனையும் இவனையும் விட ஒரு ’இன்ச்’கூட அதிகமாக வளரமுடியாது. மாறாக, அவன் வளர்ச்சிக்கு என்ன காரணம், இவன் வளராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்தால், அவனையும் இவனையும் விட ஆயிரம் மடங்கு அதிகமாக நீங்கள் வளரலாம்.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து:
===============================================
தன்னைப் பார்ப்பது -- 
ஒரு பிரச்சனையை எடுத்து வைத்துக்கொண்டு நேருக்கு நேராக அதனோடு மோதுவதுதான் தன்னைப் பார்ப்பதென்பதாகும். [கையில் ஏற்படும் வலியை எப்படி குணப்படுத்துவது என்ற பயிற்சியை உதாரணம் காட்டுகிறார்கள்]. 
ஒத்திப் போடுதல் – 
எந்தக் காரியத்தை இப்போது செய்ய வேண்டாமென்று ஒருவன் ஒத்திப் போடுகிறானோ அந்தக் காரியத்தில்தான் அவனது வெற்றி இருக்கிறது. 
ஏன் சுவைக்கிறோம்? – 
இன்பமோ துன்பமோ வரும்போது அதை ஏன் நாம் சுவைக்கிறோம்? [அதில் சந்தோஷமோ துக்கமோ அடைகிறோம்]. எல்லாவற்றையும்விட நான் பெரியவன் என்பதில் போதிய நம்பிக்கை இன்னும் வரவில்லை என்பதால்தான். 
இரண்டு காரணங்கள் – 
ஒரு மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றி திரும்பத்திரும்பப் பேசுவதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று சந்தோஷம், இரண்டு, நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். 
பேச்சு – 
எவன் பேச்சை பிசிறின்றி சுத்தமாகப் பேசுகிறானோ அவன் வாழ்வும் பிசிறின்றி சுத்தமாக ஓடும்.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து கொஞ்சம்
======================================================

தெய்வத்தன்மைக்கு வளர்ச்சியில்லை என்று இதற்குமுன் சொல்லியிருக்கிறேன் – அப்படியானால் எப்படி வளருமென்று கேட்டால், இப்போது நம்மிடம் உள்ளது fully developed தெய்வத்தன்மைதான். அப்ப ஒவ்வொரு ஆளிடமும் குறிப்பிட்ட அளவுதான் தெய்வத்தன்மை இருக்கிறதென்று எந்த அர்த்தத்தில் சொன்னேன்? Fully developed-ஆக perfect தெய்வத்தன்மைதான் இருக்குமென்றால், ஒவ்வொரு மனிதரிடமும் குறிப்பிட்ட சதவீதம்தான் தெய்வத்தன்மை இருக்குமென்று நான் எப்படிச் சொன்னேன்? 

அவனவன் நெஞ்சில் இருக்கின்ற குப்பைகளின் அளவைப் பொறுத்து தெய்வத்தன்மை மறைந்திருக்கும் (என்று அர்த்தம்). 

எல்லாரிடத்திலும் நெருப்பிருக்கிறது. ஆனால் உங்களிடம் பூத்திருக்கும் நீரு இரண்டு இஞ்ச்சுக்கு மொத்தம். நெருப்பு இருக்கிறதென்று ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. இவருக்கு உள்ள குப்பைகளோ இரண்டரை அடிக்கு இருக்கிறது. அதைத்தாண்டி தெய்வத்தன்மையை (இருப்பதை) பார்க்க முடியவில்லை. அது தெய்வத்தன்மையின் பலவீனமல்ல. மனிதனுக்குள் அடைபட்டதன் காரணமாக, அதன் விதிகளுக்கு உட்பட்டு அது நிற்கிறது. 
 
நீங்கள் செய்யக்கூடிய conscious பயிற்சிகளின் காரணமாக, அந்த குப்பைகளெல்லாம் தனக்குத்தானாகவே நீங்க ஆரம்பிக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே பரிபூரண நிலையில் இருக்கும் தெய்வத்தன்மை வெளிவர ஆரம்பிக்கும். 

அப்படியானால், ஆன்மிகப் பயிற்சி என்பது புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கல்ல. மறைந்து கிடப்பதை வெளிக்கொண்டுவருவதுதான். தோண்டி எடுப்பதுதான். Inventionக்கும் discoveryக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல. முன்னது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பது / உருவாக்குவது. பின்னது ஏற்கனவே உள்ளதை / மறைந்துள்ளதை மீண்டும் கண்டெடுப்பது.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
==============================================

நீங்கள் நினைப்பதுதான் நடக்கிறது, நினைக்காதது எதுவும் நடக்கவில்லை என்று தோன்றுகிறதா? 
1. நினைத்தது நடக்கிறது, 
2. நினைத்ததுதான் நடக்கிறது, 
3. நினைக்காதது எதுவும் நடக்கவில்லை என்று தோன்றுகிறதா? 

இந்த மூன்றில் எது நடக்கிறது (உங்கள் வாழ்வில்)?  நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு எது எது தடையாக, சுவராக அமைந்திருக்கிறது? எண்ணத்தில், பேச்சில், செயலில், அசைவில், உணவில், உடையில் – analyse பண்ணி classify பண்ணுங்க (என்று கேட்கிறார்கள். சிலர் பதில் சொல்கிறார்கள்).

உங்கள் பேச்சு எப்படி உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
ஒரு சகோதரர் ஒரு பதில் சொல்கிறார். பேச்சில் நான் என்னை இழந்துவிடுகிறேன் என்கிறார். உடனே ஹஸ்ரத், அதாவது நீங்கள் (ஒரு பொருளை) அடைய ஆரம்பிப்பதற்கு முன் இருந்த மனநிலை நீங்கள் பேச ஆரம்பித்தவுடன் கெட்டுவிடுகிறது என்கிறீர்களா என்று கேட்கிறார்கள். (உங்கள் நினைப்பு நீங்கள் விரும்புமொன்றை உங்களை நோக்கி இழுத்து வருகிறது). Silver cord மாதிரி. உங்கள் பேச்சினால் அந்த cord cut ஆகிவிடுகிறது என்கிறீர்களா? நீங்கள் பேசும் காரணத்தினால் உங்களிடம் உள்ள force குறைகிறது என்று நினைக்கிறீர்களா? 

இன்னொரு சகோதரரைப் பார்த்து கூறுகிறார்கள்: சும்மா இருக்கிறவன் பேச ஆரம்பித்தவுடன் அவனது வெற்றி கெட்டுப் போகிறது என்று சொன்னால், பேச்சில் பக்குவம் கெட்டு, முதலில் இருந்த தெளிவான பாதையில் சுவர் எழும்பிவிடுகிறது. சுவர் விழாமல் பேசுவதானால், எதை வேண்டுமானாலும் பேசுங்கள். 

தள்ளுவண்டி கடலைக் கடைக்காரருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்து அவர் அதை முற்றிலுமாக வீண் செலவு செய்து பின்பு மீண்டும் வந்து கடலைக்கடை வைத்த கதையைச் சொல்கிறார்கள். அதே உடை, அதே மனப்பான்மை. அவருக்கு எப்படி பரிசு விழுந்தது? 

நான் சொல்லியிருக்கிறேன் everything has a reason. Nothing is accidental.  பரிசை இழுத்த மனப்பான்மை, அது வந்த உடன் கெட்டுவிடுகிறது. ( என் உறவினர் ஒருவரின் உதாரணமும் சொல்கிறார்கள்). மூன்று நாள் பட்டினியாக இருந்தவனுக்கு கோழி பிரியாணி வைத்தால் என்ன நடக்கும்? அதுக்குத்தான் posture-ஐக் கூட மாற்றக்கூடாது என்கிறேன். 
ஒரு பொருளை அடையும் முன்னர் எந்த ஆற்றல் / மனநிலை இருந்ததோ, அதே ஆற்றல் / மனநிலை அது வந்த பிறகும் இருக்க வேண்டுமென்றால் அந்த பொருளைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது. ஏன் அப்படி இருக்கவேண்டும்? அந்தப் பொருளின் தூண்டுதலால் உங்கள் எண்ண ஓட்டம் மாறிவிடக்கூடாது. 

(நீங்கள் நினைத்த) பணம் வந்த பிறகுகூட அதை மறக்கிறமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் என்ன நன்மை? அந்த ஆற்றல் இருப்பதனால் மீண்டும் மீண்டும் பணம் வந்துகொண்டே இருக்கும். 

சில பொருளை சின்னதாக நீங்கள் நினைத்ததனால் அது உங்களை வந்தடைந்தது. சில பொருளை பெரிதாக நீங்கள் நினைத்ததால் அது உங்களை வந்தடையவில்லை. திரும்பத் திரும்ப நினையுங்கள். அது சின்னதாகிவிடும். பின்பு உங்களை வந்தடையும்.

ஆண்டவனுடைய கஜானாவில் சிறு பிள்ளைகள் விடும் பட்டத்துக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் வித்தியாசமில்லை. நீங்கள்தான் வித்தியாசப்படுத்துகிறீர்கள்.  பத்து ரூபாய் பெற்றுக்கொண்டாலே கைகால் உதறுகிறது என்றால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கேட்டால் கொடுப்பானா? நீங்கள் பார்க்கிற பார்வை, பேசும் பேச்சு இதிலேயே பணத்தை வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும். 

‘நினைப்பதென்பது ஒரு இபாதத் (வணக்கம்) என்று தெரியாதா? கீழே சொரிந்துகொண்டே சிந்தனை செய்வீர்களா? காற்று பிரியும்போது சிந்தனை செய்தால், அதன் துர்நாற்றம் சிந்தனையிலும் கலந்து எண்ணத்தின் சக்தி போய்விடும். சிந்தனை செய்யும்போது நேராக அமர்ந்து, தலை, முதுகுத்தண்டு எல்லாம் நேராக இருக்குமாறு அமர்ந்துதான் அசையாமல் சிந்திக்க வேண்டும். அசைந்துகொண்டு, சாய்ந்துகொண்டெல்லாம் சிந்தித்தால் சக்தி விரயமாகிவிடும்.
எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்ன சில முத்துக்கள்
=========================================
மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம்.  
இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும்.  We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும். 
சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்). 
உங்களிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால், ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவது எளிது. 
உங்களிடம் ஒரு பைசா கூட இல்லாமலிருந்தால் நூறு ரூபாய்கூட கடன் வாங்க முடியாது 
(காரணம் பணம் இருக்கும்போது உள்ள மனநிலை, பணம் இல்லாதபோது இருக்காது). 
தீர்ந்த ஆசை இருந்தால், தீர்ந்த எண்ணம் இருக்கும், தீர்ந்த எண்ணம் இருந்தால் தீர்ந்த குரலிருக்கும். 
அப்படி இருக்குமானால், ஒரு பொருளை எண்ணியவுடன் அது (எங்கிருக்கிறதோ) அங்கிருந்து கிளம்பி வருவது தெரியும். 
அதனால்தான் வெற்றி அடைவதற்கு சக்தி கொஞ்சம்தான் தேவை, தோல்வி அடைவதற்குத்தான் சக்தி அதிகமாகத் தேவை என்று சொன்னேன்.
என் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து 

உங்களுக்கு என்ன வேண்டும் என்று crystal clearஆகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் தமிழிலேயோ அரபியிலேயோ வசனம் பேசினால் அல்லாஹ்வுக்குப் புரியாது. உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? (என்று முடிவு செய்துவிட்டு) மனதை அப்படி (அதன் பக்கம்) செலுத்துங்கள். You have the privilege of thinking what you want which is the greatest privilege. நமக்கு எது வேண்டுமோ, அதை நினைக்க, அதற்கு ஆசைப்படும் சக்தி, எப்போது வரும்? ஆசைப்பட்டால் கிடைக்கும் என்று இருந்தால்தான் வரும். 

பெரிய மினாரா மேல் ஏற வேண்டும் என்ற ஆசை பெரிய மினாரா இல்லாவிட்டாலோ, அதன் கடைசி கும்பம் இல்லாவிட்டாலோ வராது. எனவே, உங்களின் தாழ்வு மனப்பான்மை ‘கட்’ ஆகும்போதுதான் அடைய முடியும் என்ற நம்பிக்கையே வரும். 

ஆசைப்படுவது

உங்கள் வாழ்க்கைக்கு சமீப காலத்தில் என்ன வேண்டுமோ அதைப் பற்றிக் குழப்பமில்லாமல், பயப்படாமல், அவசரப்படாமல், அதை விளக்கமாக கற்பனை செய்யுங்கள். அப்படிச் செய்வதற்கு முன்னால் நீங்கள் சாய்ந்துகொண்டு, கோணிக்கொண்டெல்லாம் இருக்கக்கூடாது. ஏனெனில் நீங்கள் அடைய நினைப்பதை பற்றி ஆசைப்படுவதுதான் பெரிய இபாதத். ஆசையும் ஒரு வகையான பிரார்த்தனைதான் என்று ஒரு நூலில் எழுதியிருக்கிறேன். உலமாக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களென்றுதான் அப்படி எழுதினேன். உண்மையில், பிரார்த்தனை என்று சொன்னாலே ஆசை என்றுதான் அர்த்தம். ஆசைப்பட்டாலே அது துஆவாக மாறிவிடும்.
என் ஞானாசிரியர் சொன்னவற்றிலிருந்து  ஹஸ்ரத் மாமா
மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம்.  இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும்.  We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும். 

சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்). 
: