View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
============================================

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையவில்லை நாம். நெய்யை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைந்துகொண்டிருக்கிறோம்.

வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் வரும்போது வெளியே சொல்லாமலிருந்தால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று தெரியவரும்.

எண்ணிவிட்டோம் என்றாலே சக்தியை அனுப்பி விட்டோம் என்று பொருள்

கேட்காதது கிடைக்காது, கேட்பதும், கேட்பது மாதிரி முறைப்படி கேட்காவிட்டால் கிடைக்காது.

வைரக்கல்லுக்கும் பனித்துளிக்கும் உள்ள வித்தியாசம் வைரத்தின் உறுதிதான்.

அடுத்த வீட்டு ஃபேன் காற்றில் உட்காருகிறவரை, அந்த மகிழ்ச்சி உள்ளவரை, நீ ஃபேன் வாங்க முடியாது.

முதல் நோட்டு மாதிரியே கடைசி நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் பரக்கத் (செல்வ வளம்). ஐயையோ இன்னும் ஒரு நோட்டுதானே உள்ளது, இதுவும் கடைசி நோட்டாயிற்றே என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் உங்களுக்கு வறுமை மனநிலை உள்ளது என்று அர்த்தம். முதல் நோட்டை செலவு செய்ய வெளியே எடுக்கும்போது எந்த மனநிலை இருந்ததோ அதே மனநிலை கடைசி நோட்டை உருவும்போதும் இருக்கவேண்டும். அதுதான் மீண்டும் மீண்டும் பணத்தை உங்களை நோக்கி இழுக்கக்கூடிய செல்வ மனநிலை.  
எந்த நி’மத்தும் (அருட்கொடையும்) வருமுன்பே அது வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். [தயார் படுத்துவது என்பது உடல் தொடர்பானது அல்ல. மனம், அறிவு தொடர்பானது. உதாரணமாக ஒரு கம்பனி இண்டர்வ்யூவுக்கு போகவேண்டுமெனில், அதற்கு முன்பாகவே அந்தக் கம்பனி பற்றிய எல்லா தகவல்களையும், எதிர்பார்ப்புகளையும், அதற்கான உங்களுடைய தீர்வுகளுடன் முடிந்தவரை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும்.]

நாகூர் பெரிய மினாராவில் சில தட்டுக்கள் ஏறினால் தர்கா மண்டபம் தெரியும். மேலே போகப்போக கடலும் அதைத்தாண்டியும் கூடத்தெரியும். [அதைப்போல நம் தகுதியைக் கூட்டிக்கொண்டே போகப்போக, அதிகமான வாய்ப்புகளைக் காண முடியும்].

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக