View status

View My Stats

சனி, 29 மே, 2021

 எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவை

======================================

Dos – செய்ய வேண்டியவை

1. அசையும்போது உணர்ந்து அசைய வேண்டும்.

2. எந்த வேலை செய்தாலும் கவனித்து செய்யவேண்டும்.

3. வரும் உதிப்புகளையெல்லாம் அவ்வப்போது எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

4. பேச்சு, பார்வை, அசைவு முதலியவற்றினால் நாம் நமது நரம்பு சக்தியை அதிகமாக வீணடித்துக்கொண்டிருக்கிறோம். எனவே எப்போதுமே உடலும் மனமும் தளர்ச்சியுடன் இருக்கும்போதுதான் [ரிலாக்ஸ்டாக] ஒரு காரியத்தைச் செய்யவேண்டும்.

5. எண்ணத்தின் போக்கு [thought habit] மாறினால் செயல் மாறும். எதையும் செய்யலாம் / அடையலாம். ஒரு விஷயம் முடியாது என்று தோன்றுகிறதா, படுத்து ரிலாக்ஸ் பண்ணவும். திரும்பத் திரும்ப அவ்விஷயம் பற்றி நினைத்துக்கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் சாத்தியம்தான் என்று தோன்றும்.  பின்பு நம் reach-க்குள்தான் [அடையக்கூடிய தூரத்தில்தான்] என்று தோன்றும். பின்பு reach-க்கே வந்துவிடும். 

6. சிரமம் வரும்போது அதில் என்ன நன்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். 

7. ஒரு பிரச்சனை வந்தால், வந்துவிட்டதே என்று கவலைபடாமல், அமைதியாக, relaxed-ஆக அமர்ந்து சிந்திக்க வேண்டும். முடிந்தால் அப்பிரச்சனை பற்றி சிந்திப்பதை வேண்டுமென்றே ஒத்திப்போட வேண்டும். கொஞ்ச நேரம் கழித்துக்கூட சிந்திக்கலாம். சிந்திக்கணும்.

8. ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையாகத்தான் தீர்க்க வேண்டும். சமயங்களில் ஒன்றைச் சமாளித்தாலே அதிலேயே 10/15 விஷயங்கள் சரியாகிவிடும்.

9. ஒரு விஷயத்தைப் பற்றி நாமே யோசித்து நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் உள்ளது எனினும் அதில் நிறைய சக்தி இருக்கிறது. எதையும் நாமே செய்ய வேண்டும். 

10. ஒரு கோட்டையைக் கட்டப் போகிறீர்களா? அதைப்பற்றி நினைக்கத் தேவையில்லை. அதைக் கட்டவிடாமல் எந்த சின்ன செயல் தடுக்கிறது என்று பாருங்கள். 

11. ஒரு காரியத்தை எடுத்தால் முடித்துவிட வேண்டும். இல்லையெனில் எடுக்கக் கூடாது. 

12. ஒரு பொருளை தர யாராவது கையை நீட்டினால் உடனே வாங்கிக்கொள்ள வேண்டும். கையை நீட்டிக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், [பிச்சைக்காரன் மாதிரி] ஏந்திக்கொண்டே இருப்பாய் என்று அர்த்தம். இப்படியே இருந்தால் நினைத்ததை அடைய முடியாது. 

13. Budget your time and money. ஆனால் இந்த செலவு இந்த அளவு, இப்போது சரியா என்று ‘செக்’ பண்ணிக்கொள்ள வேண்டும். கவனம் செலவு செய்யப்படும் காசில் இருக்கக்கூடாது. ஒரு குழந்தைக்கு இனிப்பு / பிரியாணி போன்றவை எவ்வளவு தரவேண்டுமோ அதைப்போல செலவு செய்யவேண்டும். கவனம் பொருளில்தான் இருக்க வேண்டும். பணத்தில் அல்ல. 

14. நேராக உட்கார வேண்டும். சாய்ந்துகொண்டால், மனசும் சாய்வதாக அர்த்தம். [ரிலாக்ஸ் செய்வதற்காக சாய்ந்துகொள்வது வேறு]. 

15. ஒரு வருடத்துக்கான திட்டம் போட்டுவிட வேண்டும். அவை நிறைவேற ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம், தப்பில்லை. 

16. உடை, ஆரோக்கியம், குடும்ப மகிழ்ச்சி, செல்வம், தர்மாம், சம்பாத்தியாம் எல்லாவற்றிலும் உன்னை நீ வெளிப்படுத்துவதான self-expression-க் காட்டவேண்டும். எதிலும் உனது முத்திரை இருக்க வேண்டும். 

17. செய்யும் வேலைய அதன் பலன் கருதிச் செய்யாமல், வேலையை வேலைக்காகவே செய்யவேண்டும்.

18. கோபம் அல்லது வேதனை வரும்போது முகம் கழுவினால் / இரு கைகளாலும் முகத்தைத் தடவிக்கொண்டால் அந்த உணர்வு மாறிவிடும். 

19. Breaking-point-ல்தான் சக்தி உற்பத்தியாகிறது. ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும்போது போதும் என்று மனம் சொன்னால் அதுதான் Breaking-point. முடியாது என்று ஒரு பத்துப்பதினைந்து வினாடிகள் வேண்டுமென்றே சிந்தித்து Breaking-point-ஐ உடைக்க வேண்டும்.

20. கை குலுக்கும்போது grip-ஆகச் செய்ய வேண்டும்.

21. ஒரு பிரச்சனையை பற்றி மனம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போதுதான் சிந்திக்கவேண்டும்.

22. இரு தோள்களிலும் உள்ள மலக்குகளின் – வானவர்களின் – சிபாரிசு பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். 

23. அவ்வப்போது ஒரு பத்துப் பதினைந்து வினாடிகள் ரிலாக்ஸ் செய்யவேண்டும். அது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாக வந்துவிடும்.

24. நாம் சொல்வது கேட்பவரின் நெஞ்சுக்குள் இறங்க வேண்டுமெனில் அவரது கண்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். 

25. தினமும் குளிக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் ஷேவ் செய்ய வேண்டும். எப்போதும் ‘ட்ரிம்’மாக இருக்க வேண்டும். 

26. இரவில் படுக்கப்போகுமுன், இன்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று பார்க்க வேண்டும். அதாவது எந்த வகையில் முன்னேற்றம் தேவை என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

27. எந்த ஒரு எண்ணத்துக்காவது நீங்கள் அடிமையாக இருக்கிறீர்களா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதைவிட்டு வெளியில் வர முடியும். 

28. விரைந்து முடிவெடுக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும் சரியே. 

29. வரும் உதிப்புகளை குறித்துக்கொள்ள ஒரு பேனாவும் தாளும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 

30. நமக்கு நன்றாகத் தெரிந்த செய்தியை ஒருவர் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் நாம் ஒரு கல்லைப்போல சும்மாதான் இருக்க வேண்டும். 

31. ஒருவரிடம் ஒரு காரியம் பற்றிப் பேசும்போது அவருடைய மூச்சோட்டத்தை கவனித்தே பேச வேண்டும். அதாவது இருவருடைய மூச்சோட்டத்தையும் synchoronise செய்த பிறகு [ஒரே மாதிரியான போக்குக்குக் கொண்டு வந்த பிறகு] பேச வேண்டும். இல்லையெனில் நம் முயற்சி தோல்வியடைந்துவிடும். ஒரு முறை தோல்வியடைந்து விட்டால், தொடர்ந்து தோல்வியடையும். 

32. ஒரு காரியம் தோல்வி அடைந்ததும் மீண்டும் உடனே அதைத் தொடங்காமல், கொஞ்சம் இடைவெளி கொடுத்து மீண்டும் முயல வேண்டும். 

33. நீ யார் என்று காட்டக்கூடிய ஒரு தொழில் + வருமானம் + கௌரவம் இந்த மூன்றும் உள்ளது எதுவோ அதை [உப தொழிலாகச்] செய்யுங்கள்.

34. உடம்புக்கு முடியாமல் இருக்கும்போது அமைதியான, அலைகளற்ற கடலை கற்பனை செய்துவிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டாக இருங்கள். 

35. பாலுணர்வு வந்த உடனேயே அதை நிறைவேற்றப் புறப்படாமல், இப்போது வேண்டாம், இந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு வேலையை எடுத்துக்கொள்வதனால், அந்த செக்ஸ் சக்தி பூராவும் அந்த வேலைக்குப் பயன்படும். அந்த வேலை முடிந்த உடன் செக்ஸ் சக்தி காலியாகிவிடாது. தேக்கி வைத்துச் செய்வதனால் வேகம் அதிகமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தடவையும் அந்த உணர்வு வரும்போது தேக்கி வைத்து, வேறு வேலையை முடித்துவிட்டுச் செய்யலாமா என்றால் தாராளமாகச் செய்யலாம். வேண்டுமென்றே ஒத்தி வைத்துச் செய்வதனால், மனதை இங்கு எனில் இங்கும், அங்கு எனில் அங்கும் வைக்கின்ற தகுதியும் வரும். 

36. சம்பாதிப்பதைவிட குறைவாகத்தான் செலவு செய்ய வேண்டும். 

37. பணம் வரும்போது ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும்.

38. வாரத்திற்கு ஒரு நாள் நல்ல கறி ஆக்கச் சொல்லிவிட்டு அன்று அதை நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

39. நோயுற்றிருக்கும்போது அதில்லாத மாதிரி நடக்க ஆரம்பித்தால் – நடிக்க அல்ல – அந்த நோய் நீங்கிவிடும். 

40. எந்தக் காரியம் நீங்கள் செய்தது, எந்தக் காரியம் தானாக நடந்தது என்று குறித்து வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக