View status

View My Stats

செவ்வாய், 19 ஜூலை, 2016

நாட்டுக் கோழி வளர்ப்பு- வெற்றிக் கூட்டணி


agriஅசைவ உணவு என்பது பெரும்பாலோரின் விருப்பமாகவே இருந்து வருகிறது.  இன்று இந்த அசைவ உணவில் பெரிதும் இடம்பிடித்திருப்பது கறிக்கோழியே (ப்ராய்லர் கோழி). இதில் சதைப்பற்று அதிகமாக இருப்பதால் பலரும் கறிக்கோழியை விரும்புகின்றனர்.

கிராமங்களில் உறவினர் வீடுகளுக்குச் சென்றால் நாட்டுக் கோழி விருந்து தடபுடலாக நடைபெறும், சலிப்பிடித்தால் நாட்டுக் கோழி, புறக்கடை வளர்ப்புக்கு ஏற்றது, முட்டை, எரு… இப்படி நாட்டுக் கோழி பல ரூபத்தில் கிராம மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இதன் ருசி நகர மக்களையும் சென்றடையவே நாட்டுக் கோழி பண்ணைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.  அதில் ஒன்று தான் கோவை மாவட்டம், G.N. மில்ஸ் (PO), சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இருக்கும் யமுனை நாட்டுக் கோழிப் பண்ணை.  மகளிர் சுய உதவிக் குழுவில் ஒன்றாக இருந்த திருமதி. அம்முக்குட்டி, மகாதேவி, சரோஜா, காவேரி, ரேணுகா, மற்றும் ஜெயலட்சுமி ஆகிய ஆறு பெண்களும் யமுனை நாட்டுக் கோழிப் பண்ணையின் உரிமையாளர்கள் ஆவார்கள்.  இனி திருமதி.அம்முக்குட்டி அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

முதலீடு

பொதுவாக மகளிர் சுய உதவிக் குழுவில் (12 நபர்கள் சேர்ந்தால் மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பிக்கலாம்) இருப்பவர்கள் டெய்லரிங், துணி வியாபாரம்… போன்ற தொழில்கள் செய்வார்கள். நாங்கள் புதிய மற்றும் சந்தையின் தேவை அறிந்து தொழில் தொடங்க முடிவு செய்து நாட்டுக் கோழிப் பண்ணையை ஆரம்பிக்க முடிவெடுத்தோம். இதில், ஒவ்வொருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலிடு செய்துள்ளோம். நாங்கள் பண்ணையில் வளர்ப்பது நாட்டுக் கோழி, வான் கோழி, கினி கோழி, கிரி ராஜா, கடக்நாத் மற்றும் காடை வகைகள் என சுமார் மூன்று வருடங்களாக வளர்ப்பிலும், நேரடி விற்பனையிலும் உள்ளோம் என்கிறார்.

நாட்டுக் கோழி

நாட்டுக் கோழி குஞ்சுகளை சுமார் 3 இடங்களில் இருந்து வாங்கி வருகிறோம், கரடிவாவி, பொங்கலூர் மற்றும் ஈரோடு. ஒவ்வொரு கோழி குஞ்சின் விலையும் பருவ காலத்திற்கேற்ப இருக்கும், சுமார் ரூபாய்.15/- முதல் ரூபாய்.22/- வரை இது அன்றைய சந்தை விலையே. இந்தக் குஞ்சுகளை 90 நாட்கள் (3 மாதம்) நன்கு பராமரிப்பு செய்தால் ஒரு கோழி சுமார் 1 1/2 கிலோ வரை எடை வரும்.  சுத்தம் செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுக் கோழியின் விலை ரூபாய்.300/-க்கு என்று வாடிக்கையாளர்களுக்கு நேரடியான விற்பனை செய்கிறோம்.

கிரிராஜா மற்றும் கடக்நாத் கோழிகள்

கிரிராஜா கோழி ப்ராய்லர் போல் சீக்கிரம் வளர்ந்து விடும், அதன் ருசியும் ப்ராய்லர் கோழியை போன்றே இருக்கும். இதை நாங்கள் கறிக்காக வளர்ப்பதில்லை முட்டை உற்பத்தி செய்வதற்காகவே கிரிராஜா கோழிகளும் கடக்நாத் சேவல்களும் வளர்த்து வருகிறோம். இதன் ஒரு முட்டையின் விலை ரூபாய்.10/-க்கு விற்பனை செய்து வருகிறோம்.  வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.  முட்டையின் விலை அதிகமாக உள்ளது என்று கேட்ட பொழுது கிரிராஜா மற்றும் கடக்நாத் இனம் சேர்த்து கிடைக்கப்பெற்ற முட்டைகள் இதன் ருசியும், உண்பதால் கிடைக்கக் கூடிய சத்தும் பலமும் அதிகம் என்பதால் தான் இந்த விலைக்கு காரணம் என்றார்.

காடை

காடை குஞ்சுகள் நாமக்கல், பொங்கலூர்… போன்ற இடங்களில் இருந்து ஒரு நாள் குஞ்சாக பிடித்து வருவோம்.  ஒரு நாள் காடைக் குஞ்சின் விலை ரூபாய்.7/-. காடைக் குஞ்சுகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், குஞ்சுகள் கொட்டாரத்தில்  (ய­ட்) விடுவதற்கு முன்பு சுத்தமாக இருப்பது அவசியம் இதில் 100 வாட்ஸ் குண்டு பல்பு 4 (இது சுமார் 25 காடைகளுக்கு) பயன்படுத்தி வெப்பத்தினை உருவாக்கிட வேண்டும். இதனை வளர்க்கும் காலம் 30 நாட்களாகும்.  காடை விற்பனை என்பது மொத்தமாகவும் மற்றும் சில்லரை வியாபாரத்திலும் செய்து வருவதாக கூறுகிறார்.  சில்லரை வணிகத்தில் சுத்தம் செய்யப்பட்ட ஒரு முழுக் காடையின் விலை ரூபாய்.30/- என்றார்.

வான்கோழி

வான்கோழி ஒரு நாள் குஞ்சு கரடிவாவியில் இருந்து ரூபாய்.60/-க்கு வாங்கி வருவோம். பண்ணையில் 6 மாத காலம் வளர்த்தால் 5 முதல் 7 கிலோ வரை எடை வரும்.  தீவனத்தை பற்றிக் கூறும் பொழுது 1 மாதம் முதல் 2 மாதம் வரை நாட்டுக் கோழிக்கு கொடுக்கும் தீவனங்களே இதற்கும் கொடுப்போம். 2 மாதத்திற்கு மேல் அதன் உணவு பட்டியல் என்பது அரிசி தவிடு, (ரைஸ் மில்லில் கிடைக்கும்) கோதுமை தவிடு மற்றும் நிறைய காய்கறிகள் இவை அனைத்தையும் நன்கு நறுக்கி வேக வைத்து தீவனமாக கொடுப்போம். சுத்தம் செய்யப்பட்ட வான்கோழியின் விற்பனை விலை ரூபாய்.350/- என்றார்.

தீவனம்

அங்காடிகளில் விற்பனையாகும் கம்பனி தீவனங்களையே பயன்படுத்துகிறோம் இதனுடன் நெல் தவிடும் சேர்த்துக் கொள்வோம். மேலும் வாரச் சந்தைகளில் கிடைக்கும் இலைகள் மற்றம் வீணடிக்கப்பட்ட காய்கறிகள் (முட்டைகோஸ், காலிப்ளவர், சின்னவெங்காயம்…போன்ற கழிவுகள்) போன்றவைகளும் சேர்த்துக் கொள்வோம். பண்ணைக்கு வெளியே இருக்கும் களைச் செடிகளை அறுத்து போடுவோம். கோழிகளை களைகள் இருக்கும் இடத்தில் விட்டால் அனைத்துச் செடிகளையும் கொத்தி தின்று அழித்துவிடும். கோழி வளர்ப்பில் தீவன செலவுகளே அதிகம் என்கிறார்.

ஒவ்வொரு கொட்டாரத்திலும் சுமார் 400 கோழிகள் விடப்படும் (அதிக நெருக்கடியில் கோழிகளை விடுவதால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது). சொட்டு மருந்து முறையே  (குஞ்சிலிருந்து) 7ம் நாள், 14ம் நாள் மற்றும் 21ம் நாள் ஒரு முறை கொடுக்க வேண்டும் (மருந்து கொடுக்கும் அளவு / முறையை கால்நடை ஆராய்ச்சி மைய (கோவை மாவட்டம் – சரவணம்பட்டி) கால்நடை மருத்துவர்கள் எங்களுக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது).ஒவ்வொரு கோழியையும் பிடித்து சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.கோழிகளுக்கு மூக்கு தேய்ப்பதென்பது எரிவாயு அடுப்பில் (கேஸ்) மேல் இரும்பு தகரத்தை வைத்து சூடான பின்பு ஒவ்வொரு கோழியாக பிடித்து அதன் மூக்கினை தேய்த்து விட (சண்டையிட்டு) இறப்பு விகிதாச்சாரம் இருக்காது. சிலர் மூக்கினை வெட்டி விடுகிறார்கள் இதை பின்பற்றும் பொழுது இரத்தம் வெளியேறுவதால் கோழிகளுக்கு இரத்த கசிவு நிற்பதில்லை மேலும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

நான்கு கொட்டாரங்கள்

(வான் கோழி)    1  கொட்டாரம் – 70 அடி நீளம், அகலம் – 16 அடி,
(நாட்டுக் கோழி, கினி, கிரிராஜா மற்றும் கடக்நாத் கோழிகள்)3 கொட்டாரம் – 56 அடி நீளம், அகலம் – 16 அடி.1 சதுர அடிக்கு ஒரு கோழி என்கிற விகிதம். வான் கோழி குஞ்சுகளுக்கு 1 சதுர அடி,  (2 மாதம் முதல்) பெரியதாகும் பொழுது கூடுதல் 2 சதுர அடிக்கு ஒரு வான் கோழி என்பதை கடைபிடிக்க வேண்டும்.

பண்ணைகளுக்கு தரையில் நார்க் கழிவு (COIR PITH) பரப்பி விட வேண்டும்.  ஒரு கொட்டாரத்திற்கு சுமார் 4 மூட்டை நார்க் கழிவு தேவைப்படும்.  ஒரு மூட்டையின் விலை சுமார் ரூபாய்.40/- ஆகும். ஒவ்வொரு 30 நாட்களுக்கும் நார்க் கழிவுகள் மாற்றிட வேண்டியது அவசியம் (கோழியின் எச்சத்தினை சேகரிக்கவே இந்த நார்க் கழிவுகள் இதை சரிவர பராமரித்தல் அவசியம் இது கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். இதில் முக்கியக் குறிப்பாக திருமதி.அம்முக்குட்டி அவர்கள் கூறியது இந்த உரத்தினை (கோழிக்  கழிவுள்ள நார்க் கழிவுகள்) விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறோம் என்றார்).

உப்புத் தண்ணீரை வெளியில் இருந்து வாங்குகிறோம் 2000 லிட்டர் தண்ணீர் ரூபாய்.300/-. இது சுமார் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு. கோழிகளை சுத்தம் செய்து, மஞ்சள் தடவி கறிகளை வெட்டி (வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பிரியாணி, வருவல்… போன்ற) 1 கிலோ ரூபாய்.300/- என்று விற்பனை செய்து வருகிறோம். ஆரம்ப காலங்களில் வேலை ஆட்கள் வைத்து கறி வெட்டினோம் ரூபாய்.400/- கூலி வாங்கியவர்கள் ரூபாய்.1000/- கேட்கத் தொடங்கினார்கள். அன்று முதல் நாங்களே கறி வெட்டப் பழகி வேலையாட்கள் தயவின்றி எங்கள் கூட்டு முயற்சியிலேயே பண்ணையை லாபகரமாக நடத்தி வருகிறோம். மேலும் கொட்டாரம் சுத்தம் செய்யும் பொழுதும் ஞாயிறு மற்றும் விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கும் நாட்களில் ஆறு பேறும் கூட்டு பணியில் ஈடுபடுவோம் மற்ற நாட்களில் டைம் டேபிள் அமைத்து பணியாற்றுவோம் என்று உழைப்பை ரசித்தவராக  திருமதி.அம்முக்குட்டி அவர்கள் கூறினார். கோவை மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் ம்r.லு.சிவக்குமார் அவர்கள் எங்களுக்கு கோழி வளர்ப்பு பயிற்சி அளித்து நேரடி விற்பனை வாய்ப்பு மிகுந்த லாபகரமானது என்று கூறி உற்சாகமூட்டியதற்காக அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார்.
மேலும் தொடர்புக்கு:
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மற்றும் பயிற்சி மையம்
நம்பர்.63, காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டி,
கோயமுத்தூர் – 641 035.
0422 – 2669965.
coimbatorevutrc@tanvus.org..in

சில தகவல்கள்…
வனங்களில் சுற்றித் திரியும் கோழிகள் (காட்டுக் கோழிகள்) மழை காலங்களிலும், கோடைக் காலங்களிலும் முட்டையிடும். பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் பராமரிப்பு (தீவனம் வழங்குதல்) குறைவு, அழுத்தம் மற்றும் நோய் தொற்று போன்ற காரணங்களினால் முட்டை வைக்கும் திறன் குறைந்து காணப்படும்.
பண்ணை மற்றும் புறக் கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நாய், பூனை, பாம்பு, எலி… மற்றும் பறவைகளில் வல்லூறு / இராஜாளி, கழுகு, ஆந்தை… போன்றவைகளால் அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் தொடர்புக்கு
யமுனை நாட்டுக் கோழிப் பண்ணை
98943 97576
97156 14834
99768 29818

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக