View status

View My Stats

திங்கள், 4 ஜூலை, 2016

குட்டிக் காடு, அழகிய வீடு, நோயில்லா வாழ்வு... கேரளாவில் ஒரு சபாஷ் தம்பதி!

ரி - ஆஷாவின் திருமணத்தின்போது, வாழ்த்த வந்த விருந்தினர்களுக்கு ஒரு பழமும், கேரளாவின் பாரம்பர்ய பாயாசமும் மட்டுமே வழங்கப்பட்டது. திருமணம், என்ற ஒன்றைத் தாண்டி அந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒரு கூட்டமாகவே நிகழ்ந்தது. காரணம், இருவரும் சுற்றுச்சூழல் மேல் மாறாக் காதல் கொண்டவர்கள்!

கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த ஹரி- ஆஷா தம்பதி, சுற்றுச்சூழலின் மீதான தங்கள் காதலை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்துபவர்கள் அல்ல; வாழ்க்கையிலும் அதை பிரதிபலித்துக் காட்டியிருக்கிறார்கள். அதன் ஒரு அங்கமாகத்தான் தங்களின் வீடு, சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு வீடாக அமையவேண்டும் என இருவரும் முடிவெடுத்தனர்.  அவர்கள் விரும்பியபடியே மிக விரைவில், அப்படியொரு வீடு  அவர்களது முயற்சியில் உருவானது. 34 சென்ட் நிலப்பரப்பில், 960 சதுர அடி கொண்ட அந்த  வீடு மிகவும் வித்தியாசமானது.

வீட்டின் சுவர் மண்ணால் கட்டப்பட்டது. இக்காலத்தில் இது மிகவும் அபூர்வமானது. ஆனால், மண்ணால் கட்டியதால் பல பயன்களை இவர்கள் அடைந்துள்ளனர். இந்த சுவர் மூச்சு விடுகிறதாம்! ஆம், பகலில், சூரியனின் வெப்பம் இந்த சுவரின் வழியே வீட்டினுள் ஊடுறுவும். வீடு கதகதப்பாக மாறும்போது மணி மாலை 6. இந்த கதகதப்பிலேயே வீடு இரவு 11 மணி வரை இருக்கும். பிறகு, குளிர்ச்சி வீட்டினுள் வரும். இரவு முழுவதும் குளிர் காற்றால் வீடு நிரம்பும். மீண்டும், அடுத்த நாள் இதே நிலை தொடரும்.
இதனால், இவர்களுக்கு மின்விசிறி தேவைப்படுவதில்லை. வீட்டிற்கு மிகவும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படுகிறது. இயற்கை வெளிச்சம் வீட்டினுள் வரும்வகையில் வீடு கட்டப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிக்குப் பதிலாக, வீட்டில் ஒரு குழி தோண்டி அதில் ஒரு மண்பானையை வைத்து சுற்றி ஈரமண்ணை நிரப்பி வைத்திருக்கிறார்கள். இதன்மூலம், பல நாட்களுக்கு அதில் வைக்கப்படும் பொருள் கெடாமல் உள்ளது.

மேலும் வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை சோலார் மற்றும் பயோகாஸ் மூலமாகப் பெறுகின்றனர். வீட்டிலுள்ள குப்பைகளையே பயோகாஸ் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். சராசரியாக மற்ற வீடுகளில் 50 யூனிட் மின்சாரம் உபயோகிக்கப்படும் நிலையில், இவர்கள் வீட்டில் வெறும் 4 யூனிட் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது.  

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீட்டை கட்டியுள்ள ஹரி- ஆஷா தம்பதியரின் முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.
" நாங்கள் ஆதிவாசி வாழ்க்கையை வாழவில்லை. இயற்கையோட இயைந்த வாழ்க்கையை வாழ்கிறோம். எங்கள் வீட்டில் டிவி, ஃப்ரிட்ஜ் என சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. ஆனால், மின்சாரப் பயன்பாட்டை நாங்கள் பார்த்து பார்த்து செய்கிறோம்" என்கின்ற ஹரி- ஆஷா தம்பதியின் வீடு, இவர்களாலேயே உருவாக்கப்பட்ட ஒரு குட்டிக் காட்டின் நடுவே உள்ளது. 

மிருகங்கள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என அழகிய சுற்றுப்புறங்களினால் விளங்குகிறது அந்த காடு. இங்கு பல காய்கறிகளும் பழங்களும் விளைகின்றன. இந்த நிலம் உழப்படுவதே இல்லை. அனைத்தும் இயற்கையாகவே விளைவது ஆச்சர்யமளிக்கும் விஷயம். இவர்கள் உபயோகிக்கும் ஒரே ஆயுதம், மம்மட்டி மட்டுமே. அதுவும் செடிகளை நடும்போது மட்டுமே உபயோகிப்பார்கள்.
"நாம் விளைவிக்கும் பழங்கள், காய்களை விட காட்டில் வளர்பவை ருசியாக இருக்கும். அதற்கு காரணம், ஒரு பொருள் எப்படி வளரவேண்டும் என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்" என்கிறார் ஆஷா, முகத்தில் பெருமிதம் படர.

இவர்களுடைய இந்த வாழ்க்கை முறை நல்ல பலனளித்திருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக ஹரி- ஆஷா தம்பதியை எந்த நோய்களும் நெருங்கியதில்லை. இவர்களைப் போல நாமும் குட்டிக் காட்டை உருவாக்கி வாழ முடியவில்லை என்றாலும், இயற்கையோடு ஒத்து எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாமே!

1 கருத்து: