View status

View My Stats

திங்கள், 25 ஜூலை, 2016

”புறா வளர்க்க விரும்புகிறேன். என்ன வகையான புறாக்களை வளர்க்கலாம்?”

காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். பிரேமலதா பதில் சொல்கிறார்.
”மனிதனுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் செல்லப் பிராணிகளில், புறாவும் ஒன்று. பறவை இனங்களில் தொடர்ந்து 16 மணி நேரம் பறக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் நம் முன்னோர்கள் கடிதத் தொடர்புக்கு புறாவை அனுப்பினார்கள். தற்சமயம், இறைச்சி, பொழுதுபோக்கு மற்றும் அழகு என இரண்டு காரணங்களுக்காக வளர்க்கப்படுகிறது. புறா இறைச்சி மருத்துவத் தன்மை கொண்டது என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், புறா இறைச்சிக்கு எப்போதும் கிராக்கி இருந்துகொண்டே இருக்கிறது. வெள்ளை ராஜா, வெள்ளி ராஜா, டெக் ஸோனா கோலா… போன்ற ரகங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பொழுதுபோக்கு மற்றும் அழகுக்காக மாயுர் பொங்கி, ஷிராசி, லஹோர், பாண்டேல், ஜகோபின், ப்ரிஸ்பாக், மொன்டேனா, லோடல்… போன்ற இனங்கள் வளர்க்கப்படு கின்றன.
அழகுப் புறாக்களின் விலை, அதன் கவர்ச்சியைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. புறாக்கள் எப்போதும் ஜோடி அளவில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஜோடிப் புறா, குறைந்தபட்சம் 1,500 தொடங்கி, 15,000 ரூபாய் வரையில்கூட விற்பனை செய்யப்படுகிறது. புறா வளர்ப்பு ஆத்மார்த்தமான உணர்வை ஏற்படுத்தும். புறாக் கூண்டுகள் அமைப்பதில் முக்கிய கவனம் தேவை. உயரமான இடத்தில் கூண்டுகள் இருக்க வேண்டும். கூண்டுக்கு வெளியே, கொஞ்சம் வைக்கோல் வைத்துவிட்டால் போதும். புறாக்கள் தங்களுக்குத் தேவையான மெத்தை போன்ற இருக்கையை உருவாக்கிக் கொள்ளும். புறா வளர்ப்பில் ஈடுபடும் முன்பு, அருகில் உள்ள புறா வளர்ப்புப் பண்ணைகளைப் பார்வையிடவும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூரைச் சுற்றி உள்ள ஊர்களில் நிறைய புறா பண்ணைகள் உள்ளன.
விவசாயத்துடன் பகுதி நேரத் தொழிலாக புறா வளர்ப்பைச் செய்பவர்கள் அதிகம். புறாக்களின் எச்சம் மிகச்சிறந்த இயற்கை உரம். இறைச்சி மற்றும் அழகுப் புறா வளர்ப்பு இரண்டுக்கும் தேவை அதிகமாக உள்ளது. ஆகையால், உங்களுக்கு எது ஏற்றது என்பதை பண்ணைகளைப் பார்வையிட்ட பிறகு தேர்வு செய்யவும்.”
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27529548.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக