View status

View My Stats

செவ்வாய், 19 ஜூலை, 2016

காத்திருக்கும் லாபம் கைகொடுக்கும் வான்கோழி!

“வானம், காய்ந்தும் கெடுக்கும்… பேய்ந்தும் கெடுக்கும். ஆனால், கால்நடைகள் ஒரு நாளும் விவசாயிகளைக் கை விட்டதில்லை…” என்பார்கள். அத்தகைய கால்நடை வளர்ப்புக் குறித்து தமிழக விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேலையைக் கையில் எடுத்திருக்கிறது பசுமை விகடன்.
முதல்கட்டமாக திண்டுக்கல், கோட்டை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி இரண்டு தடவை திண்டுக்கல்லில் நடத்தப்பட்டது. அடுத்தக் கட்டமாக வான்கோழி வளர்ப்புப் பற்றிய பயிற்சி டிசம்பர் 5-ம் தேதியன்று திண்டுக்கல்லில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த செய்தி, கடந்த இதழில் வெளியிடப்பட்டது. பயிற்சி குறித்த முழுவிவரங்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.
பயிற்றுநராக மேடையேறியவர்… வான்கோழி வளர்ப்பில் முன்னோடி பண்ணையாளராக இருக்கும் கே.வி. பாலு (94435-30802). இவர் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். வான்கோழி வளர்ப்பில் தனக்கிருக்கும் அனுபவங்களை பசுமை விகடனில் முன்பே பதிவு செய்திருக்கும் இந்த பாலு, மிகமிக விரிவாக பயிற்சியை ஆரம்பிக்க, அத்தனையையும் தங்களுடைய குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டனர் விவசாயிகள். அவர்களில் ஒருவராக நாம் பதிவு செய்த விவரங்கள் இதோ-
“ஆயிரங்காலத்துக்கு முன்னாடியே, கான மயிலாட, கண்டிருந்த வான்கோழியும் சிறகை விரித்து ஆடியது போலனு நம்ம அவ்வையார் பாடி வெச்சிருக்காங்க. வான்கோழிங்கறது பல்லாயிரக்கணக்கான வருஷமா நம்ம நாட்டுல வாழ்ந்துக்கிட்டிருக்கற ஒரு இனம்கிறது இதிலிருந்தே உறுதியாகுது. ஆனா, ‘இது வெளிநாட்டிலிருந்து வந்தது. நம்ம தட்ப-வெப்ப நிலைக்குச் சரியா வளராது’ அப்படினு ஒரு செய்தியைப் சிலர் பரப்பி விட்டுட்டாங்க. ஆனா, அவங்க மட்டும் இந்தக் கோழியை வளர்த்து, பெரிய அளவுல பணம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. வான்கோழி வளர்ப்பு தொடர்பான விஷயங்கள வேற யாருக்கும் சொல்லிக் கொடுக்காம, ரகசியமாவே வெச்சிக்கிட்டாங்க. இன்னும் சிலரோ… அரைகுறையா சொல்லிக் கொடுத்து, வான்கோழி வளர்ப்புங்கறதையே நாசமாக்கிட்டாங்க. அதனாலதான் வான்கோழி மேல நம்ம விவசாயிங்களுக்கு பெரிசா ஆர்வம் இல்லாம போயிடுச்சி.
வான்கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை எனக்கு நிறைய அனுபவம் இருக்கு. என்னோட அனுபவத்துல… வான்கோழி மூலமா நிச்சயமா லாபத்தை ஈட்ட முடியும். நான் எப்படியெல்லாம் வான்கோழிகளை பராமரிச்சி, லாபம் பார்க்கிறேனோ… அதையெல்லாம் உங்க முன்னாடி வைக்கிறேன். முழுசா கேட்ட பின்னாடி… வான்கோழி வளர்க்கறது பத்தின முடிவுக்கு நீங்க வரலாம்…” என்று முன்னுரை கொடுத்த பாலு, பயிற்சிக்குள் புகுந்தார்.

கறுப்புதான் நம்ம நாட்டு ரகம்!
“வான்கோழியில பல ரகங்கள் இருக்கு. கறுப்பு நிறத்துல இருக்கறது நம்ம நாட்டு ரகம். இதை நம்ம விவசாயிக இன்னமும் வளர்த்துக்கிட்டுதான் இருக்கறாங்க. இதோட வெளிநாட்டு ரகங்களான அகலமான மார்பு கொண்ட பிரான்ஸ் ரகம், அதேமாதிரி உடலமைப்புக் கொண்ட பெரிய வெள்ளை, சிறிய வெள்ளை ரகம் இதையெல்லாம் விவசாயிங்க அதிக அளவுல வளர்க்கறாங்க. இதுல வெள்ளை நிற றெக்கை உள்ள வான் கோழிங்களுக்கு கிராக்கி அதிகம். இப்படிப்பட்ட கோழிங்க வேகமா வளர்றதோட, நம்ம தட்ப -வெப்ப சூழ்நிலைக்கும் ரொம்ப ஏத்ததாவும் இருக்கும்.
வான்கோழி வளர்க்க முடிவு செஞ்சிட்டா, குஞ்சு உற்பத்தியா, கறிக்கோழி உற்பத்தியா?னு முதல்ல முடிவு செய்யணும். பிறகு, அதுக்கேத்த மாதிரி இடத்தைத் தேர்வு செய்யணும். மேய்ச்சல் முறை… கொட்டகை மற்றும் மேய்ச்சல் முறை… கொட்டகை முறைனு மூணு முறைகள்ல வான்கோழிங்கள வளர்க்கலாம்.
மேய்ச்சல் முறைனா… பெரிய தென்னந்தோப்பு, பழத்தோட்டம், பூந்தோட்டம் இருக்கிறவங்க வான்கோழியை தோட்டத்துலயே மேயவிட்டு வளக்கலாம். ராத்திரியில தங்குறதுக்கும்… மழை, வெயில் சமயத்துல ஒதுங்கறதுக்கு மட்டும் கொஞ்ச செலவுல சின்னதா ஒரு கொட்டகை அமைச்சா போதும். ஒரு கோழிக்கு அஞ்சி சதுரடி இடம்னு கணக்குப் பண்ணி கொட்டகை அமைக்கலாம்.
தோட்டத்துலயே மேய விடுறதால… தனியா தீவனம் கொடுக்கத் தேவையில்ல. ஆனா, கொட்டகையில அடைச்சி வெச்சி வளர்க்குற வான்கோழிகளை விட, தோட்டத்துல மேயவிட்டு வளர்க்கற கோழிங்க எடை கம்மியாத்தான் இருக்கும். அதேசமயம், தோப்புல இருக்கிற புல், பூடு, பூச்சியையெல்லாம் வான்கோழிங்க கொத்தியே காலி செய்துடும். கோழிங்களோட கழிவு, நிலத்துல சேர்ந்து உரமா மாறிடும். இதனால… களை, பூச்சிக் கொல்லி, உரச் செலவு இதெல்லாம் குறையும். மொத்தத்துல மேய்ச்சல் முறையில வளர்க்கும்போது செலவு குறைஞ்சி, வரவு அதிகரிக்கும். நாய், நரி, கீரி மாதிரியான பிராணிங்க கிட்ட இருந்து கோழிகளைப் பாதுகாக்கறதுல போதிய கவனம் செலுத்தறது முக்கியம்.

கொட்டகை மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளை வளர்க்கறவங்க, தினமும் ஆறு மணி நேரம் வெளியில மேயவிட்டு, அப்புறம் கொட்ட கையில அடைச்சி தீவனம் கொடுத்து வளர்க்கறாங்க. இதுல தீவனச் செலவு கொஞ்சம் கூடுதலாகும். இந்த முறையிலயும் பெருசா எடை கூடாது.
மூணாவது முறை… கொட்டகை முறை. இட வசதி குறைச்சலா இருக்கறவங்க இந்த முறையில வளர்க்கலாம். இதுக்குக் கொஞ்சம் செலவாகும். நல்ல காத்தோட்டமா கொட்டகை போட்டு, அடர் தீவனம் கொடுத்து வளர்க்கணும். மத்த ரெண்டு முறைகளையும் விட, இப்படி வளர்க்கறப்ப எடை அதிகரிக்கும். வணிகரீதியா வான்கோழி வளர்க்கறவங்க பெரும்பாலும் இந்த முறையிலதான் வளர்க்கறாங்க.
பண்ணை அமைப்பது எப்படி?
பொதுவா வான்கோழி பண்ணைக்கு… தண்ணி தேங்காத, உயரமான இடமா இருக்கணும். கிழக்கு, மேற்கா நீண்டிருக்கற மாதிரி கொட்டகை அமைக்கணும். அப்பத்தான்… காத்தோட்டமா இருக்கறதோட, வெயிலும் நேரடியா உள்ளே வராம இருக்கும். கொட்டகையோட அகலம் இருபதடிக்குக் குறையாம இருக்கணும். கீத்து, ஆஸ்பெஸ்டாஸ், தார் அட்டைனு ஏதாவது ஒண்ணைப் பயன்படுத்தி கூரை போட்டுக்கலாம். நாலு பக்கமும் செங்கல்லை வெச்சி சுத்து சுவர் வைக்கணும். மண்ணை வெச்சிக்கூட இதைக் கட்டலாம். இந்தச் சுவரோட உயரம்… ஒண்ணரை அடிக்கு இருக்கணும். அதுக்கு மேல கோழி வலை, மீன் வலைனு ஏதாவது ஒரு வலையைப் பயன்படுத்தி அடைக்கணும். கூரையில இருந்து மழைத் தண்ணி விழுகுற இடம், சுத்துச்சுவர்ல இருந்து மூணடி தள்ளி இருக்கறது நல்லது.
கொட்டகைக்குள்ள மூணடி உயரத்துல குச்சிகளைக் கட்டி விட்டா, கோழிங்க உட்கார்றதுக்கு வசதியாயிருக்கும். அடிக்கடி கூட்டி அள்ளுறதுக்கு வசதியா தரையை சொரசொரப்பா அமைக்கணும். கடலைப் பொட்டை தூளாக்கி அரையடி உயரத்துக்கு தரையில போடலாம். மரத்தூளைப் போடக்கூடாது.
வெப்பம் முக்கியம்!
குஞ்சுகளுக்காக வான்கோழிகளை வளர்க்கறவங்க… அஞ்சி கோழிக்கு ஒரு சேவல்ங்கற கணக்குல வளர்க்கணும். சேவல், பெட்டை இதுல எது அதிகமானாலும், கூமுட்டை அதிகமா வரும். கறிக்காக வளர்க்கறவங்களுக்கு இந்த அளவு பொருந்தாது.
குஞ்சுகளுக்கு சூட்டைக் கொடுக்கிற புரூடர்ல பல்பைப் போட்டு வெச்சி, உள்ளே விட்டுட்டா, பல்புக்கு கீழே நடந்து போயிட்டு வந்துகிட்டிருக்கும். பல்பு பக்கத்துல அஞ்சாறு குஞ்சுக அடைச்சுக்கிட்டு நின்னா, வெப்பம் பத்தலைனு அர்த்தம். பல்பு பக்கமே அதுக வராம இருந்தா, சூடு அதிகமாயிருக்குனு அர்த்தம். இதை மனசுல வெச்சி பல்புகளோட வாட்ஸைக் கூட்டி, கொறைச்சா போதும். சராசரியா ஒரு குஞ்சுக்கு ஒரு வாட்ஸ் வெப்பம் வேணும். போதுமான வெப்பம் கிடைக்கலனா… குஞ்சு செத்துடும். பிறந்து முப்பது நாள் வரைக்கும் இந்த அளவு வெப்பத்தைக் கொடுக்கறது முக்கியம்.
குஞ்சுகளுக்கு புரோட்டீன் சத்துதான் அதிகமா தேவைப்படும். முதல் நாள் குஞ்சுகளுக்கு ரவையைக் கொடுக்கலாம். இது சீக்கிரமா ஜீரணமாகும். உடைச்ச கோதுமையையும் கொடுக்கலாம். அடுத்த நாள்ல இருந்து பொட்டுக் கடலையை தூள் பண்ணி, அரிசி வடிச்ச கஞ்சியில கலந்து கொடுத்தா, அதைக் கொத்திக் கொத்திச் சாப்பிடும். முதல் ரெண்டு நாளைக்கு தண்ணி குடிக்காது. அதுகளுக்காக தண்ணி வெக்கிற தட்டுல உடைஞ்ச கண்ணாடி வளையல் துண்டு, கோலிக் குண்டுனு எதையாவது போட்டு வெச்சா, அதைப் பார்த்துட்டு ஆர்வமா தண்ணியைக் குடிக்க ஆரம்பிச்சிடும். தண்ணியில மஞ்சளை கலந்தும் கொடுக்கலாம்.
எத்தனை கிலோ எடை தேறும்?
கோழிகளோட வளர்ச்சி கம்மியா இருந்தா, ரெண்டு மாசத்துக்கு பிறகு குடற்புழு நீக்கம் செய்யணும். இதுக்குத் தனியா மருந்து இருக்கு. சித்த வைத்திய முறைனா… வேப்பெண்ணெய் மட்டுமே போதும். நாக்குல படாம கொஞ்சம்போல எண்ணெயை உள்ளே விட்டா போதும். புழு வெல்லாம் தன்னால வெளியில வந்துடும். ரெண்டு மாச குஞ்சுக்கு பசுந்தீவனம் அதிகமாகக் கொடுக்கணும். ரெண்டு மாசத்துக்கு மேலதான் உடல் எடை கூடுற பருவம். இந்த நேரத்துல அடர் தீவனம் கொடுக்கணும். மூணு கிலோ தீவனம் சாப்பிட்டா… ஒரு கிலோ எடை கூடும். அடர் தீவனம் கொடுத்து வளர்க்கறப்ப அஞ்சி மாசத்துல… ஆறு கிலோ எடை கிடைக்குது (மேய்ச்சல் முறையில் ஏழு மாதங்களில் இந்த எடை கிடைக்கும்). இந்தப் பருவத்துல கொடுக்க வேண்டிய அடர் தீவனத்தை நாமளே தயாரிச்சுக் கிட்டா செலவைக் குறைக்கலாம். அதோட காய்கறிக் கழிவுகளையும் போடலாம்.
நோய் பராமரிப்பு!
வான்கோழியில அதிகமா உயிரிழப்பு ஏற்படுறது குஞ்சுகள்லதான். பிறந்த ஏழாவது நாள்ல ரானிக்கட் நோய்க்கு எதிரான ‘ஆர்.டி.வி.எஃப்.’ சொட்டு மருந்தை கோழியோட கண்ணுல ஒரு சொட்டு, மூக்குல ஒரு சொட்டு ஊத்தணும். முதல் பத்து நாள் வரைக்கும் ரொம்ப கவனமா பார்த்துக்கணும். இருபத்தியோரு நாள்ல அம்மை ஊசியை றெக்கையில போடணும். முப்பதாவது நாள்ல மறுபடியும் ரானிக்கட் நோய்க்கு எதிரா வேலை செய்யக்கூடிய ‘லசோட்டா’ சொட்டு மருந்தை கண், மூக்குல ஊத்தணும். பிறந்த 60 நாள் கழிச்சி ரானிக்கட் நோய்க்கு எதிரான ஆர்.டி.வி.கே. மருந்தை கண், மூக்குல போடணும்.
வான்கோழியை அதிகம் பாதிக்கிறது அம்மை நோய்தான். மூணு மாசம் வரைக்கும் இது தாக்கும். அதுக்கு மேல தாக்காது. அம்மை தாக்குனா, வேப்பெண்ணையையும், மஞ்சளையும் கலந்து உடம்புல தேய்ச்சி விடணும். காலையில தீவனம், தண்ணி வச்சிட்டு, வெயில் நேரத்திலதான் உடம்புல நல்லா தேய்ச்சி விடணும். பதினைஞ்சி நாளைக்கு இப்படித் தேய்ச்சிவிட்டா… அம்மை கொப்புளம் உதிர்ந்துடும். அம்மை தாக்குன சமயத்துல வேப்பிலையை அரைச்சி பத்து லிட்டர் தண்ணியில கலந்து கொட்டகை, சுவர், வெளிப்பக்கம்னு எல்லா பக்கமும் தெளிக்கணும். இப்படித் தெளிக்கும்போது… கோழி, தீவனம், குடிக்கிற தண்ணி இது மூணும் கொட்டகையில இருக்கக் கூடாது.
வெள்ளைக் கழிசல் நோய் வந்தா… சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு ஏழு, சின்ன வெங்காயம் பத்து, மஞ்சள் தூள் நாலு சிட்டிகை, புளிக்காத தயிர் அரை கரண்டி இதையெல்லாம் ஒண்ணா வெச்சி அரைச்சி, மோருல கலக்கி ஒரு கோழிக்கு ஒரு இங்க் பில்லர், குஞ்சுக்கு அரை பில்லர் அளவுங்கற விகிதத்துல கொடுத்தா போதும். முடிஞ்சா ரெண்டு வேளை கொடுக்கலாம்.
ரத்தக் கழிசல் நோய்க்கு… ஒரு மடல் சோத்துக் கத்தாழையை அரைச்சி, இருபத்தஞ்சி லிட்டர் தண்ணியில கலந்து, குடிக்கிற தண்ணியோட சேர்த்து விடலாம்.
பேன் தொல்லைக்கு வசம்புக் குச்சிகள் பத்து எண்ணிக்கைக்கு எடுத்து தூள் பண்ணி, அஞ்சி லிட்டர் தண்ணியில கலந்துக்கணும். கழுத்துக்குக் கீழே நனையிற மாதிரி கோழிகளை அந்தத் தண்ணியில முக்கி எடுத்து விட்டா போதும்.
உணவில் எச்சரிக்கை!
முப்பது நாளைக்கு அப்புறம் கீரை, செடி, கொடி, அருகம்புல்னு எல்லாத்தையும் நறுக்கிக் கொடுக்கலாம். அருகம்புல் அதிகமா கொடுத்தா நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதோட, வயித்துல இருக்கிற எல்லாக் கழிவுகளையும் வெளியில கொண்டு வந்துடும்.
கோழிகளுக்கு மட்டுமில்ல, எந்தக் கால்நடைக்கும் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் இலைங்களை போடக்கூடாது. இதையெல்லாம் அதிக அளவுல ரசாயனம் தெளிச்சி விளைய வைக்கிறதால, அந்த இலைகள்ல இருக்கற ரசாயனம், கோழிகளோட இறப்பு விகிதத்தை அதிகப்படுத்திடும். குஞ்சுகளுக்கு தேவையான அடர் தீவனத்தை நாமளே தயாரிச்சிக்கலாம். தயாரிக்க முடியாதவங்க கடையில விக்கிற நூறு கிலோ கறிக்கோழித் தீவனத்தோட ஒரு கிலோ உப்பில்லாத மீன் தூள், ஒரு கிலோ எள்ளு பிண்ணாக்கு இதையெல்லாம் கலந்து கொடுக் கலாம்.
‘அப்ளோடாக்சின்’ங்கிற பூஞ்சண விஷம் கடலை பிண்ணாக்குல இருக்கும். நிறம் மங்கி, பூஞ்சணம் பிடிச்ச தானியங்கள்லயும் இது இருக்கும். அதனால, இதுமாதிரியான உணவுங்களை கோழிங்களுக்கு கொடுக்காம இருக்கறது நல்லது. மீறி கொடுத்தா… உயிருக்கே ஆபத்து வரலாம். நமக்குத் தெரியாம அதைக் கொடுத்திருந்து, அதனால கோழிங்க பாதிக்கப்பட்டா… அரையடி உயரத்துல வளர்ந்திருக்கற நடுத்தரமான கீழாநெல்லிச் செடியை அரைச்சி, குடிக்கிற தண்ணியில கலந்து கொடுத்தா போதும்.
பசுந்தீவனத்தைப் பொறுத்தவரை புல், செடினு எல்லாத்தையும் கொடுக்கலாம். அசோலாவையும் தயாரிச்சிக் கொடுக்கலாம். ஒரு கோழிக்கு 50 கிராம் அசோலாவைக் கொடுக்கலாம். இதைத் தீவனத்தோடு கலந்து கொடுக்கக் கூடாது. தனியாத் தான் கொடுக்கணும். ஒருங்கிணைந்த பண்ணையத் திலும் வான்கோழியின் பங்கு அதிகம். வான்கோழி களோட கழிவை மீனுக்கு தீவனமா கொடுக்கலாம். இருபது வான்கோழி ஒரு வருஷத்துல 5 டன் எருவை கொடுக்கும். இதை விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கலாம். இந்த எருவுல 5.9% நைட்ரஜன் சத்து, 2.7% பொட்டாஷ் சத்து இருக்கு” என்று சொன்னவர், அடுத்து சொன்ன ஒரு விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள்
“அரசாங்கம் சட்டம் போட்ட பின்னாடியும் மழைநீர் சேகரிப்பை பல பேரு ஒழுங்கா செய்த மாதிரி தெரியல. ஆனா, வான்கோழிங்க ரொம்ப அருமையா மழைநீர் சேகரிப்பு வேலையைச் செய்துகிட்டிருக்குதுங்க. ஒரு வான்கோழி மண் குளியலுக்காக தோண்டுற குழியோட அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம் இருக்கும். அதேமாதிரி நாலஞ்சி இடத்துல குழிகளைத் தோண்டி விளையாடும். மழை பெய்றப்ப ஒவ்வொரு குழியிலயும் ரெண்டு லிட்டர் தண்ணி தேங்கி நிக்கும். அஞ்சி குழியில பத்து லிட்டர். வருஷத்துக்குப் பத்து தடவை மழை பெஞ்சா, நூறு லிட்டர் தண்ணி! நூறு வான்கோழி இருந்தா… பத்தாயிரம் லிட்டர் தண்ணி உங்க நிலத்துல சேகரமாகும்” என்று அதிசயச் செய்தியைச் சொன்னவர்,
“தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்… மாதிரியான பண்டிகை காலத்துல வான்கோழிங்களுக்கு கிராக்கி அதிகம் அந்த மாதிரி நேரத்துல விலைக்குக் கொடுக்கற மாதிரி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்கணும். வான்கோழி இறைச்சியில 20% அளவுக்குதான் கழிவு. அதனாலதான் உயிர் எடை கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகுது. இனிமே உங்கபாடு… வான்கோழி பாடு” என்று பயிற்சியை முடித்தவரை விவசாயிகள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை வீசினார்கள். அனைத்துக் கும் பதில் பொறுமையாக பதில்களை கொடுத்து முடித்த பிறகு பயிற்சி நிறைவுக்கு வந்தது.
முட்டைப் பருவத்தில் அதிக எச்சரிக்கை தேவை!முட்டையிடும் பருவத்தில் இருக்கும் கோழி களுக்கு கால்சியம் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அந்தப் பற்றாக்குறை இருந்தால்… கோழிகளின் கால்கள் வளையும். அதுமட்டுமல்ல.. முட்டைகளும் கூட ஓடு இல்லாமல் தோல் முட்டையாக இடவும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்க, ஆறு மற்றும் குளங்களில் கிடைக்கும் கிளிஞ்சல்கள், நத்தையோடுகளைக் கழுவி, பெரிய ரவை வடிவத்தில் தூளாக்கி கிண்ணத்தில் போட்டு வைக்கலாம். கோழிகள் இதை நன்றாகக் கொத்திச் சாப்பிடுவதன் மூலம் அவற்றுக்குப் போதுமான கால்சியம் கிடைத்துவிடும்.
வான்கோழி ஏழாவது மாதம் முட்டையிடும். குடற்புழுக்கள், கோழியின் கருவைச் சாப்பிடக்கூடிய ஆபத்து உண்டு என்பதால், ஆறாவது மாதத்திலேயே குடற்புழு நீக்கம் செய்துவிடவேண்டும்.
கோழிகள் இடம் விட்டு இடம் தாவினாலோ… புதர்களில் போய் உட்கார்ந்து கொண்டாலோ… முட்டை வைக்கும் பருவத்துக்கு வந்துவிட்டது என்பதைக் கண்டு பிடித்துவிடலாம். கொஞ்சம் இருள் சூழ்ந்த இடத்தில் பழைய சாக்கு, குப்பைக் கூளங்களைப் போட்டு மெத்தை மாதிரி அமைத்து அதற்குள் வான்கோழிகளை மூன்று நாட்களுக்கு விட்டுவிடவேண்டும். அந்த இடத்தில் இரண்டடிக்கு இரண்டடி அளவுள்ள மரப்பெட்டி ஒன்றையும் வைத்துவிட்டால்… தானாக அந்தப் பெட்டிக்குள் சென்று முட்டையிடும். ஒரு கோழி ஆண்டுக்கு 130 முட்டைகள் வரை இடும். ஒரு முட்டை 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உங்களுடைய இடத்துக்கே தேடி வந்து வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இருக்கின்றனர். முட்டைக்கு அந்தளவு கிராக்கி இருக்கிறது. நல்ல முட்டை 70 முதல் 80 கிராம் எடை கொண்டதாக இருக்கும். மேல்பாகத்தில் புள்ளிபுள்ளியாக இருக்கும்.
நூறு வான்கோழிகள் இருந்தால், அதில் இருபது கோழிகள்தான் அடைகாக்கும். குறிப்பிட்ட அளவு முட்டைகளை அவற்றுக்கு வைத்துவிட்டு, மீதியை இன்குபேட்டர் மூலமாகவும் பொறிக்கலாம். இருபத்தி எட்டு நாட்களில் குஞ்சுகள் வெளி வந்துவிடும்.
தீவனத் தயாரிப்புமக்காச்சோளம் 50 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 25 கிலோ, உப்பில்லாத மீன் தூள் 10 கிலோ, தானியங்கள் (கம்பு, சோளம், ராகி, கோதுமை போன்றவை சம அளவில்) 10 கிலோ, அரிசித் தவிடு 3 கிலோ, தாது உப்பு 1 கிலோ, வைட்டமின் மற்றும் மினரல் மிக்சர் 1 கிலோ இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு குஞ்சுக்கு ஒரு நாளைக்கு 10 கிராம் வீதம் கொடுக்கலாம். குஞ்சுகளின் வளர்ச்சியைப் பொறுத்து இந்த அளவைக் கூட்டிக் கொள்ளலாம். தீவனத் தயாரிப்புக்காக சொல்லப்பட்டிருக்கும் பொருட்களின் அளவை, குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டவோ… குறைக்கவோ செய்யலாம்.
வான்கோழிகளுக்கான தீவனத் தயாரிப்பு முறை… மக்காச் சோளம் 50 கிலோ, கடலை அல்லது எள்ளு பிண்ணாக்கு 23 கிலோ, உப்பில்லாத மீன் தூள் 15 கிலோ, தவிடு 8 கிலோ, தாது உப்புக் கலவை 3 கிலோ, வைட்டமின் மற்றும் மினரல் மிக்சர் 1 கிலோ ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் வீதம் கொடுக்கலாம்.
நஷ்டப்பட்ட என்னை கரை சேர்த்த வான்கோழி!தேனியைச் சேர்ந்த வான்கோழி பண்ணையாளர் ராஜாமணி (99526-79788), பயிற்சி மேடையில் தனது அனுபவத்தை விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
“பலவிதமான தொழில்களை செஞ்சி, நஷ்டத்தால நொடிஞ்சிப் போனவன் நான். அந்தச் சந்தர்ப்பத்துலதான் தேனி உழவர் பயிற்சி மையத்துல வான்கோழி வளர்ப்பு பயிற்சி நடத்தினாங்க. நானும், என் வீட்டம்மாவும் அதுல கலந்துகிட்டோம். பயிற்சிக்கு பின்னாடி கடனுதவிக்கும் ஏற்பாடு செஞ்சி கொடுத்தாங்க. நாங்க கொட்டகைக்கு அதிகமா செலவு செய்யல. வீட்டுக் கொல்லையில இருந்த ரெண்டு மரங்களுக்கு இடையில கம்பியைக் கட்டி வளர்த்தோம். வெயில், மழைக்காக சின்னதா ஒரு செட் போட்டுக்கிட்டோம்… அவ்வளவுதான்.
காசு கொடுத்து தீவனம் வாங்கிப் போடல. வீட்டுப் பக்கத்துல வயல், வரப்புகள்ல இருக்கற புல்லு, செடிகளை அறுத்துட்டு வந்து போடுவோம். சந்தையில வீணாப்போய் கிடக்கற தக்காளியையும் வாங்கிட்டு வந்து போடுவோம். ஓட்டல்கள்ல தூக்கி வீசுற முட்டை ஒடுகளையும் வாங்கிட்டு வந்து போடுவோம். இப்படியெல்லாம் வளர்த்த எங்க வான்கோழிகளோட முட்டைக்கு பொறிப்புத் தன்மை அதிகமாயிருக்கிறதா நந்தனத்துல இருக்கற தமிழ்நாடு கோழியின ஆராய்ச்சி நிலையம் சான்றிதழ் கொடுத்திருக்கு.
ஆரம்பத்துல முட்டை, கோழி இதையெல்லாம் விற்பனை செய்றதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். இப்ப அது சுலபமா ஆகிடுச்சி. வான்கோழி, முட்டைகளை விற்பனை செய்ய நினைக்கறவங்களுக்கு வியாபாரிகளோட தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். சமயத்துல நானே விலை கொடுத்தும் வாங்கிக்கிறேன்” என்றார்.
வான்கோழிக் குஞ்சுகள் எங்கு கிடைக்கும்?
ஒரு நாள் வயதுடைய கறுப்பு நிற வான்கோழிக் குஞ்சுகள் 50 ரூபாய்; கறுப்பு-வெள்ளைக் குஞ்சுகள் 55 ரூபாய்; வெள்ளைநிறக் குஞ்சுகள் 60 ரூபாய் என்ற விலையில் சென்னை, நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பறவையின ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கின்றன. குஞ்சுகள் தேவைப்படுவோர் 044-24363513 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக