கணக்கு என்றாலே காத தூரம் ஓடும் மாணவர்கள் காலங்காலமாய் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆசிரியை ஜோ.ரூபி கேத்தரின் தெரசாவை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா. வீடியோ பதிவாக இவர் உருவாக்கியிருக்கும் ‘எளிய முறையில் கணிதம் கற்பித்தல்’ இப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கணித ஆசிரியர்களின் மடிக் கணினிகளில் பேசிக் கொண்டிருக்கிறது.
எளிய உத்திகள் இதோ!
ரூபி உருவாக்கியிருக்கும் எளியமுறையில் வாய்ப்பாடு எழுதும் முறையைப் பின்பற்றினால் ஒன்று முதல் இருபது வரையிலான வாய்ப்பாடுகளைத் தங்கு தடையின்றி நிமிடங்களில் எழுதி முடித்துவிடலாம். எண்களைக் கூட்டுவதற்காக இவர் சொல்லித் தரும் உத்தியைக் கையாண்டால், எத்தனை இலக்க எண்ணையும் எளிதில் கூட்டி விடை சொல்லிவிட முடியும். இதேபோல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளுக்கும் எளிய உத்திகளை பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனாக தருகிறார் ரூபி.
எண்களின் வகுபடு தன்மை, எண்களை வர்க்கப்படுத்துதல் உள்ளிட்டவைகளையும் எளிமையாகப் புரிந்துகொள்ள வழிகளைக்காட்டும் இவர், 1986-ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். கடந்த முப்பது ஆண்டுகளில் இவரிடம் கணக்குப் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர்கூடக் கணிதத்தில் தேர்ச்சியைத் தவறவிட்டதில்லை.
கணிதம் கற்றுத் தரும் வீடியோக்கள்
“ஆரம்பத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் வேலைபார்த்தபோது எளிய முறையில் கணிதம் கற்பிக்கப் பயிற்சி எடுத்தேன். ஆனால், மதிப்பெண்ணை மட்டுமே குறியாகக் கொண்டு தனியார் பள்ளிகள் செயல்படுவதால் அங்கே, நான் கற்ற கணிதப் பயிற்சி பயன்படவில்லை. அரசுப் பள்ளிக்கு வந்தபிறகுதான் அதற்கான தேவை ஏற்பட்டது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் கணிதத்தின் அடிப்படைச் செயல்பாடுகளே தெரியாமல் தடுமாறியபோதுதான் எனக்குள்ளும் ஒரு தேடல் ஏற்பட்டது. இந்தக் குழந்தைகளுக்காக எதையாவது செய்தாக வேண்டுமே என நினைத்தேன். நான் எடுத்துக்கொண்ட பயிற்சிக்குச் செயல்வடிவம் கொடுத்தேன்” எனப் பெருமிதம் கொள்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.
பத்தாம் வகுப்புக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதம் கற்றுத் தர 60 வீடியோக்களையும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 70 வீடியோக்களையும் உருவாக்கி அதைத் தனது ‘பிளாக் ஸ்பாட்’ பக்கங்களில் பேசவைத்திருக்கிறார் ரூபி. அடுத்த கட்டமாக, பிளஸ் டூ மாணவர்களுக்கும் எளிய முறையில் கணிதம் கற்கும் உத்திகளை வடிவமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இது போதாது என்பேன்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மெத்தனமாகத்தான் இருப்பார்கள் என்ற பொதுக்கருத்தையும் தகர்த்திருக்கிறார் இவர். பள்ளிவிட்டுச் சென்றதும் எளிய முறை கணிதப் பயிற்சியை முறையாக அனைவருக்கும் கொண்டு செல்வதற்காக வீட்டிலும் தினமும் மூன்றரை மணி நேரம் உழைக்கிறார். ‘சென்னை ட்ரீம்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட ரூபியின் எளிய முறை கணிதப் பயிற்சி வீடியோவை மட்டுமே இதுவரை 1.85 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். கணித ஆசிரியர் குழுக்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேர் இவரது எளியமுறை கணிதப் பயிற்சி முறையைக் கையில் வைத்திருக்கிறார்கள்.
“இது போதாது, அரசுப் பள்ளிகளை நம்பிவரும் ஏழைக் குழந்தைகளுக்காக ஆசிரியர்கள் இன்னும் அர்ப்பணிப்போடு சேவை செய்யவேண்டும் அதற்காகத்தான் இரவு பகல் பாராது உழைத்துக் கொண் டிருக்கிறேன்” என்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.
தொடர்புக்கு: 94432 36930