நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...பண்ணை விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.
விருதுநகரில் இருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரலொட்டி கிராமத்திலிருக்கிறது தண்டபாணிக்குச் சொந்தமான 'சுமதி பழத்தோட்டம்’. நாம் அங்கே சென்றிருந்த நேரத்தில் ஆட்டுக்கு அகத்திக் கீரையைப் பறித்து கொடுத்துக் கொண்டிருந்தவர், அதைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''பி.காம் வரைக்கும் படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட எங்களுக்குச் சொந்தமான காய்கறிக் கடையில வியாபாரத்தைப் பார்க்க வந்துட்டேன். பரம்பரையாவே காய்கறிக் கடைதான்கிறதால, மிச்சமாகிற காய்கறி, பழங்களை எல்லாம் வீட்டுல வளர்க்கிற ஆடு, மாடுங்களுக்குப் போடுவோம். சின்னவயசுல இருந்தே கோழி, ஆடு, மாடுங்கனா ரொம்ப இஷ்டம். அதுங்கள வளர்க்கறதுல நிறைய ஈடுபாடு காட்டுவேன். இந்த ஆர்வம்தான், இப்ப இந்த 5 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தோட ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வளர்க்கவும் வெச்சிருக்கு'' என்று பெருமையோடு சொன்ன தண்டபாணி, தொடர்ந்தார்.
''இந்த நிலத்துல மூணடிக்கு கீழ சுக்காம் பாறை. அதனால, 'வேற எந்தப் பயிரும் போட முடியாது’னு சொல்லிட்டாங்க. கருவேல மரங்களும், மஞ்சனத்தி மரங்களும் சூழ்ந்து கிடந்த இந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, கல், மண்ணையெல்லாம் நிரவி, 2004-ம் வருஷத்துல ஒரு ஏக்கர் அளவுல காஞ்சன் ரக நெல்லி, ஒண்ணரை ஏக்கர்ல சப்போட்டா, ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரக கொய்யா போட்டேன். 2007-ம் வருஷத்திலிருந்து கோழிப் பண்ணை இருக்கு. ஒன்பது மாசத்துக்கு முன்ன 1 ஏக்கர்ல ரெட் லேடி ரக பப்பாளி நடவு செய்தேன்.
விருதுநகர்ல, 2013-ம் வருஷம் டிசம்பர் மாசம், 'பசுமை விகடன்’ நடத்தின வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அப்பத்தான் ஆட்டுப் பண்ணை அமைக்கணும்கிற எண்ணம் வந்துச்சு. என்னோட நண்பர் பாலமுருகன் கோயமுத்தூர்ல ஆட்டுப் பண்ணை வெச்சிருக்கார். அவரோட ஆலோசனைப்படியும், 'அம்மன் ஆட்டுப் பண்ணை' சதாசிவத்தோட வழிகாட்டுதல்படியும் ஆட்டுப் பண்ணை¬யை அமைச்சுட்டேன். 6 மாசமா ஆட்டுப் பண்ணையும் நடந்துட்டிருக்கு'' என்றபடியே நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளி சாகுபடி பற்றியும்... ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புப் பற்றியும் அழகாக அடுக்கத் தொடங்கினார். அதை, இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
இரண்டு ஆண்டுகளில் மகசூல்!
'நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளியை இளங்கன்றுகளாகவே நடவு செய்யலாம். இதற்கு, புரட்டாசியில் ஓர் உழவு போட்டு, 18 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். பப்பாளிக்கு 8 அடி இடைவெளியில் குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு தட்டுக்கூடை அளவு செம்மண் கொட்டி, ஒரு வாரம் வரை ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு தட்டுக்கூடை ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டுச்சாணத்தைப் போட்டு வைத்தால், ஐப்பசி மாதம் மழை பெய்யவும் சரியாக இருக்கும்.
1 ஏக்கரில் 125 நெல்லி, ஒன்றரை ஏக்கரில் 170 சப்போட்டா, ஒரு ஏக்கரில் 125 கொய்யா, ஒரு ஏக்கரில் 1,000 பப்பாளிக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். முதல் மூன்று மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர்விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும் (இவர், கொய்யா, பப்பாளி இரண்டுக்கும் வாரம் ஒரு முறையும்; சப்போட்டாவுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும்; நெல்லிக்கு 12 நாட்களுக்கு ஒரு முறையும் வாய்க்கால் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சி வருகிறார்). மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு அரைத் தட்டுக்கூடை என்கிற அளவில், ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரத்தை இட வேண்டும்
(இவரிடம் ஆடு, கோழிக் கழிவுகள் தாராளமாக இருப்பதால், அவற்றை குழியில் சேகரித்து தண்ணீரில் கரைத்து பாசன நீரில் கலந்து விடுகிறார்). முழு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. நெல்லி, சப்போட்டா மற்றும் கொய்யா ஆகியவை இரண்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். பப்பாளி ஒன்பது மாதங்களில் மகசூலுக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் வரை வருமானம் தரும்..
கோழிகளில் கொட்டும் வருமானம்!
கோழிகளுக்கு ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகிதத்தில் இடம் கொடுத்து... நாம் வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் 30 அடி நீளம், 18 அடி அகலம் அளவில் கொட்டகை அமைத்திருக்கிறோம். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவு என்பதால், 500 கோழிகளுக்கும் மேல் வளர்க்கலாம். இப்போது 250 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள் என 400 கோழிகளுடன் 15 வாத்துகள் மற்றும் 20 கின்னிக்கோழிகள் இருக்கின்றன. கோழி, வாத்து, கின்னிக்கோழிகள் ஆகியவற்றுக்கு வளர்ப்பு முறை ஓன்றுதான். இவற்றுக்கு காலை, மாலையில் பிண்ணாக்குக் கலந்த தவிட்டுக் கலவையை உணவாகக் கொடுக் கிறோம். 1 கிலோ தவிட்டுக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்கிற விகிதத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொட்டகைக்குள் ஆறு இடங்களில் வைத்து விடுவோம். முட்டைகோஸ் இலை, காலிஃபிளவர் இலை, என மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இதைத் தவிர புழு, பூச்சிகள், பல்லிகள், வண்டுகளை எல்லாம் கோழிகளே பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளும். இதனால், கொட்டகைக்குள் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கும் செலவு மிச்சம். கோழி மற்றும் வாத்து ஆகியவற்றின் எச்சங்கள்... தோட்டத்துக்கு உரம்தான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது.
அசத்தும் ஆட்டுப் பண்ணை!
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதுதான் நல்லது. கொட்டகை அமைக்கும்போது... பெரிய ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு பத்து சதுர அடி, குட்டி ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு 5 சதுர அடி என்ற அளவில் இடம் கொடுக்க வேண்டும். அதனால், நாம் வளர்க்க இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கொட்டகை இருக்க வேண்டும். நாங்கள், 80 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில், 8 அடி உயரத்தில் கொட்டில் அமைத்து பத்து பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு ஆனது.
ஒரு பிரிவில் பெரிய ஆடு என்றால் 10 முதல் 15 ஆடுகளையும், குட்டி என்றால் 25 முதல் 30 வரையிலும் அடைக்கலாம். இப்போது தலைச்சேரி-47, ஜமுனாபாரி-20, நாட்டு ஆடுகள்-60, பீட்டல் கிடா-1, பீட்டல் ஆடு-1, கோபார் கிடா-1, சேலம் கருப்பு-20, செம்மறி-15 என மொத்தம் 165 ஆடுகள் இருக்கின்றன. ஆடுகளின் எச்சம் கீழே விழுந்துவிடுவதால், சுத்தம் செய்வது எளிது. சாதாரண முறை ஆடு வளர்ப்பு என்றால், பராமரிப்புக்குக் குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர்கள் தேவைப்படும். ஆனால், கொட்டில் முறை என்பதால், 165 ஆடுகளை ஒரே ஆள் பராமரிக்க முடியும்.
தினமும் காலையில் பசுந்தீவனமாக அகத்தி, சோளத்தட்டை, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்கலாம் (இதற்காகவே அரை ஏக்கரில் அகத்தி போட்டிருக்கிறார் தண்டபாணி). மதியத்தில் அடர்தீவனமாக கருக்கா தவிடு, மக்காச்சோளம், சோளம், உளுந்தம்குருணை, துவரைக்குருணை, தாது உப்பு, அயோடின் உப்பு ஆகியவற்றைக் கலந்து, மெஷினில் திரித்து, ஒரு பெரியஆட்டுக்கு 300 கிராம், பெரிய குட்டிக்கு 200 கிராம், சின்ன குட்டிக்கு 150 கிராம் என்கிற அளவில் தினமும் கொடுக்கலாம்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும்போது ஆடுகளுக்கு சரியாகச் செரிமானம் ஆகாமல் கழிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, கொட்டிலுக்கு முன்பாக 100 அடி நீளம் 50 அடி அகலத்தில் வேலி அமைத்து, ஆடுகளைக் காலாற நடக்க வைக்கலாம். கொட்டிலை விட்டு இறங்கி, இந்த வேலிகளுக்குள் மட்டும் ஆடுகள் மேயும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலமாக, ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். குட்டிகள், செம்மறி ஆடுகள், சினையாடுகளை தனித்தனிக் கொட்டகையில் வளர்ப்பது நல்லது.
முயல் பத்தி சொல்லலையா?!
சாகுபடி மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி தண்டபாணி பேசி முடிக்க... ''முயல், புறா, மாடு பத்தியெல்லாம் சொல்லலையா..?'' என்று கேட்ட அவருடைய மனைவி சுமதி,
''ஒரு வருஷமா முயல் வளர்க்கிறோம். ஒரு ஜோடி முயல் 300 ரூபாயிலிருந்து விலை போகும். தனித்தனி கூண்டு வெச்சு, காலிஃபிளவர் இலை, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் இதையெல்லாம் உணவா கொடுக்கிறோம். நூத்துக்கணக்குல முயல்களை வளர்த்து வித்துட்டே இருக்கோம். இபபோதைக்கு 12 முயலுங்க இருக்கு. 80 புறாக்கள் இருக்கு. ஜோடி 160 ரூபாய் வரை விலை போகுது. ரெண்டு சிந்தி பசு வாங்கி ஒரு மாசம் ஆகுது. அடுத்ததா மாட்டுப் பண்ணை, லவ்பேர்ட்ஸ், நாய்ப் பண்ணைனு கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்'' என்று முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சொன்னார் சுமதி.
பழ மரம்... தரும் பலன்!
நிறைவாகப் பேசிய தண்டபாணி, ''இந்த மண் அத்தனை வளமில்லாத மண்ணா இருந்தாலும், நெல்லியைத் தவிர மத்ததெல்லாம் நல்லாவே வளர்ந்து வருது. நெல்லியில அந்த அளவுக்கு மகசூல் வரல. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ரெண்டு தடவை, அதாவது ஆறு மாசத்துக்கு ஒரு பறிப்பு. மூணு மாதம் வரை மகசூல் இருக்கும். சராசரியா தினமும் 40 கிலோ வீதம் மாசத்துக்கு 1,200 கிலோ. மூணு மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். கிலோ 25 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாய்; கொய்யா, வருஷத்துக்கு ரெண்டு தடவை பறிப்பு வரும். தினமும் 100 கிலோ வீதம், மாசத்துக்கு 3 ஆயிரம் கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால, 9 ஆயிரம் கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 30 ரூபாய் வீதம், 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்; சப்போட்டாவும் வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் கொடுக்குது. தினமும் 90 கிலோ வீதம் மாசத்துக்கு 2 ஆயிரத்து 700 கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால 8 ஆயிரத்து 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் வீதம் 1 லட்சத்தி 62 ஆயிரம் ரூபாய்; பப்பாளி தினமும் 120 கிலோ வீதம் மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா... 10 ஆயிரத்து 800 கிலோ. ஒரு கிலோ 25 ரூபாய் வீதம் 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் 7 லட்சத்தி 92 ஆயிரம் ரூபாய். இதை வருஷத்துக்கு கணக்குப் போட்டா... 15 லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் வரும். செலவைப் பொறுத்தவரை 2 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் வரும். இதைக் கழிச்சா... 13 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.
எனக்கு விருதுநகர் மார்க்கெட்ல கடை இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை. இயற்கைப் பழங்கள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்குறதால ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. தோட்டத்துக்கே வந்தும் வாங்கிட்டு போயிடுறாங்க. அதில்லாம, எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கும் மார்க்கெட்ல கடைகள் இருக்கு. அதனால அன்னன்னிக்கு பறிக்கிறது, அன்னன்னிக்கே வித்து தீந்துடுது. இருப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. புத்தம்புது இயற்கை பழங்கள்ன்றதால விற்பனை சுலபமாயிடுது'' என்று பழ மரங்களின் வருவாய் பேசியவர், கால்நடைகளின் வருவாய் பக்கம் வந்தார்.
''கிரிராஜா கோழி 150 இருக்கு. இது மொத்தமுமே முட்டைக்காக மட்டும்தான் வளர்க்கிறேன். நாட்டுக் கோழிகள்ல பெரிய பெட்டைகள் 100 தவிர, மீதியிருக்கிற 150 மட்டும் வளரவளர விற்பனை செஞ்சுடுவேன். தை முதல் பங்குனி வரைக்கும் 3 மாசத்துக்கு கிடைக்கிற முட்டைகளை விற்பனை செய்யுறது கிடையாது. இந்த மாசத்துல அடைக்கு வைப்போம். ஒரு நாட்டுக்கோழி 8 முதல் 10 முட்டை வைக்கும். 100 கோழிக்கு 1,000 முட்டை. இதுல 700 முதல் 750 குஞ்சுகள் வரை பொறிக்கும். 500 முதல் 600 குஞ்சுகள் பெரிய கோழியா வளரும். எப்படியும் மொத்தம் 500 கோழிகள் விற்பனையாகிடும். கோழி ஒண்ணுக்கு 400 ரூபாய் வீதம், 500 கோழிக்கு வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் வரும். கிரிராஜா, நாட்டுக் கோழிகள் மொத்தமா சேர்த்து 400 கோழிகள் இருக்கு. இதன் மூலமா சராசரியா தினமும் 120 முட்டை கிடைச்சுடும். மாசம் 3,600 முட்டை. ஒரு முட்டை பத்து ரூபாய் வீதம் விலை போகுது. இதன்படி பார்த்தா.. 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி ஒன்பது மாசத்துக்கு முட்டை விற்பனை மூலமாவே 3 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முட்டைகளையும் என்னோட கடையில வெச்சே வித்துடறேன்.
கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, மொத்த கோழிகளுக்கும் ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகும். 365 நாட்களுக்கு 54,750 ரூபாய் செலவு பிடிக்கும். கோழி விற்பனை, முட்டை விற்பனை மூலமா 5 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவுத் தொகையைக் கழிச்சா. 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 250 ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக, பழ மரங்கள், கோழி வளர்ப்பு மூலமாவே 18 லட்சத்துக்கு மேல லாபம் கிடைக்கும். முயல், புறா வருமானமெல்லாம் தனி. பழங்கள், கோழி, முட்டைனு எல்லாத்தையும் நான் நேரடியா விக்கிறதாலதான் இந்த விலைக்கு விற்பனை செய்ய முடியுது. இல்லாட்டி இதுல பாதி அளவு ரூபாய்க்குகூட விற்பனை செய்ய முடியாது. அந்த வகையில எனக்குக் கடை இருக்கிறது ஒரு வரப்பிரசாதம்.
வாத்து மற்றும் கின்னிக்கோழிகளை இதுவரை விற்பனை செய்யல. அதேமாதிரி ஆடுகளையும் இன்னமும் விற்பனை செய்ய ஆரம்பிக்கல. கிடைக்கிற குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இப்போதைக்கு நாட்டு ஆடு உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்க்கும், ஜமுனாபாரி கிலோ 350 ரூபாய்க்கும், தலைச்சேரி கிலோ 300 ரூபாய்க்கும் விலை போயிட்டிருக்கு. செம்மறி ஆடுகளை உருப்படிக் கணக்குலதான் வாங்குவாங்க. இன்னும் ஆறு மாசத்துல ஆடுகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சுடுவேன். எப்படி பார்த்தாலும் செலவெல்லாம் போக ஆடுகள் மூலம் மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்ற தண்டபாணி,
''இப்பவெல்லாம் கடும் வறட்சி ஆட்டிப்படைக்குது. 500 அடிக்கு மேல போர் போட்டாகூட தண்ணி வரமாட்டேங்குது. இதனால காய்கறி, பூ இதையெல்லாம் சாகுபடி செய்றது சாத்தியமில்லாம இருக்கு. இதுங்கள காட்டிலும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புல காசு கொட்டுது. இதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு செய்தா... லாபம் நிச்சயம்'' என்று நம்பிக்கைப் பகிர்ந்தார்.
தொடர்புக்கு, தண்டபாணி,
செல்போன்: 93674-11815
செல்போன்: 93674-11815
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக