View status

View My Stats

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பஞ்சகவ்யா - 12

‘மகிழ்ச்சி விவசாயம்’ செய்யவைத்த பஞ்சகவ்யா!

*இனிப்புச் சுவைக்கு பப்பாளி

*சொட்டுநீரில் பஞ்சகவ்யா

*நுண்ணுயிரிகளுக்குத் தீனியாக சத்துமாவு

ஆரம்ப காலத்தில் பஞ்சகவ்யா பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும் தொடர் இது. அந்த வரிசையில் இந்த இதழில் இடம் பிடிக்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள கல்லம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ‘ஓஷோ’ பழனிச்சாமி.

“நான் இயற்கை விவசாயத்தை ‘மகிழ்ச்சி விவசாயம்’ என்றுதான் சொல்வேன். மகிழ்ச்சியோடு இருப்பவனுக்கு மருத்துவமனை தேவையில்லை. எது மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அதை மட்டும்தான் செய்யவேண்டும். எனக்கு இயற்கை வேளாண்மைதான் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதனால்தான்  அதை நான் மகிழ்ச்சி விவசாயம் என்றே சொல்லி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார், பழனிச்சாமி.

மண்ணை மலடாக்கிய ரசாயனம்!

“எங்களுக்கு 10 ஏக்கர் விவசாய நெலம் இருக்கு. முழுக்க கிணத்துப்பாசனம்தான். போட்டது வெளையக்கூடிய செம்மண் பூமி. ஒரு காலத்துல புகையிலை விவசாயம் கொடிகட்டிப் பறந்த ஊரு. பருவமழை பட்டம் தவறாம பேஞ்சு, கம்பு, ராகி, தினை, சோளம்னு மானாவாரி வெள்ளாமையும் கொறையில்லாம கொழிச்ச பூமி. ஆனா, இன்னிக்கு நிலைமை மாறிப்போச்சு. பருவமழை தவறி கிணறுகளில் தண்ணீர் வத்திப்போச்சு. 700 அடிக்கு போர்வெல் போட்டாதான் சொம்பு தண்ணீரைப் பார்க்க முடியுது. ஆடியில வெதைச்சு ஐப்பசியில மழை பேஞ்சு கார்த்திகையில களையெடுத்து உரம் வெச்சு, தை மாசம் அறுவடை செஞ்ச சுழற்சிமுறை விவசாயம் எல்லாம் இப்போ இல்லை. சாணம், இலைதழைகளை விட்டுட்டு ரசாயன உரத்தை காசு கொடுத்து வாங்கிப் போட்டு மண்ணை மலடாக்கிட்டோம்.

விவசாயத்திலிருந்து ஆன்மிகத்துக்கு!

ஒவ்வொரு முறையும் கடையில போய் விதை, உரம், பூச்சிக்கொல்லினு பணம் கொடுத்து வாங்கும்போதெல்லாம் எனக்கு மனசாட்சி உறுத்திட்டே இருக்கும். அப்பறம்தான் விவசாயத்து மேல ஆர்வம் குறைஞ்சு ஓஷோ பாதையில் போக ஆரம்பிச்சேன். தியானம், ஆட்டம், பாட்டம், பிரசங்கம், வாசிப்புனு மனசு மடை மாறிடுச்சு. அப்புறம் கரூர் மாவட்டம், கடவூர்ல இருக்கிற ‘இன்பசேவா சங்கம்’ங்கிற அமைப்புல என்னை இணைச்சிகிட்டேன். மலைச்சாரல்ல பல நூறு ஏக்கர் பரப்புல இயற்கை வாழ்வியல் முறையில் இயங்கிச்சு அந்த சங்கம். அங்கு முழுநேர ஊழியரா இருந்து ஆயிரம் பனைமரங்களை நடவு செஞ்சிருக்கேன். ஒரு கட்டத்துல அங்கிருந்து விலகி, ஊருக்கு வந்து பூர்விக நிலத்துல பாரம்பர்ய விவசாயத்தை ஆரம்பிச்சேன்” என்ற பழனிச்சாமி பஞ்சகவ்யா தனக்கு அறிமுகமானது குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

பத்திரிகை அறிமுகப்படுத்திய பஞ்சகவ்யா!

“சில வருஷத்துக்கு முன்னாடி, ஒரு பத்திரிகையில் ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜனோட பஞ்சகவ்யா குறித்து படிச்சேன். அடுத்தநாளே பைக்கில் கொடுமுடிபோய் டாக்டரைப் பார்த்து பேசுனப்போ, பஞ்சகவ்யா தயாரிக்கிற முறை, அதை பயிருக்குக் கொடுத்தா கிடைக்கிற நன்மைகள் எல்லாத்தையும் விவரமா சொன்னார். பஞ்சகவ்யா பயன்படுத்துற சில விவசாயிகளோட முகவரியையும் கொடுத்தார். அதோட, 5 லிட்டர் பஞ்சகவ்யாவையும் கொடுத்தனுப்பினார். அதை அந்த போக தக்காளிக்கு நடவிலிருந்து அறுவடைவரை தெளிச்சேன். பூ உதிராமல் செடி நெறைய காய் பிடிச்சு நல்ல மகசூல் கிடைச்சது. தொடர்ந்து, எல்லா பயிருக்கும் பஞ்சகவ்யாவைக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

வழிகாட்டிய நம்மாழ்வார்!

அதுக்கப்பறம் கோபிச் செட்டிப்பாளையத்துல நடந்த ஒரு கருத்தரங்குல கலந்துகிட்டேன். அதுல நம்மாழ்வார் அய்யா பேசுனார். அது என்னை ரொம்பவும் ஈர்த்திடுச்சு. தொடர்ந்து, அய்யா கலந்துக்குற நிகழ்வுகள் எல்லாத்துலயும் நானும் கலந்துக்கிட்டு இயற்கை விசாயம் குறித்து முழுசா கத்துக்கிட்டு பண்ணையில நடைமுறைப்படுத்துனேன். எங்க பகுதிக்கு அய்யாவை அழைச்சுகிட்டு வந்து இரண்டு கூட்டங்களையும் நடத்தினேன்.

ஒரு தடவை நம்மாழ்வார் அய்யாகிட்ட பேசிட்டிருந்தபோது, என்னோட 10 ஏக்கர் வெள்ளாமையைப் குறித்து பேச்சு வந்திச்சு. குறைவான தண்ணீர் வசதிதான் இருக்குனு ஆதங்கப்பட்டேன். அப்போதான், அவர் பண்ணைக்குட்டை குறித்து சொன்னார். ‘நம்ம நெலத்துல விழுகிற ஒவ்வொரு மழைத்துளியும் விலைமதிப்பு இல்லாதது. அது வீணா வெளியில போக விடக்கூடாது. ஒவ்வொரு மழைத்துளியையும் நம்ம நெலத்துல சேமிக்கணும்.  வெளியில் இருந்து உள்ளே வரும் மழைநீரை பண்ணைக்குட்டைகள் அமைச்சு புடிச்சு வெச்சுக்கணும். தேவைக்கு அதிகமான தண்ணீர் வழிஞ்சு போக,  வடிகால் வசதியும் செஞ்சிடணும்’னு சொன்னார். அதன்படி, 70 அடி நீளம் 40 அடி அகலம் 10 அடி ஆழத்துல  பண்ணைக்குட்டை அமைச்சேன். அடுத்த மழையிலேயே பண்ணைக்குட்டை நெறைஞ்சு தளும்பிச்சு. அதனால, கிணறுகள்ல நீர்மட்டம் கூடிடுச்சு” என்ற பழனிச்சாமி பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேசினார்.

பத்து ஏக்கருக்கும் பஞ்சகவ்யா!

“மூணு வருஷத்துக்கு முன்னாடி, 2 ஆயிரம் மலைவேம்புக் கன்னுகளை நட்டேன். அதுக்கு சொட்டு நீர் அமைச்சிருக்கேன். மலைவேம்பு கூடவே ஏகத்துக்கும் கொழுக்கட்டைப்புல் மண்டிக்கிடக்கு. இங்க இருக்கிற 9 மாடுகளும் அதை விரும்பி சாப்பிடும். அதனால களை எடுக்குற செலவு மிச்சம். மேயும்போது போடுற சாணி உரமாகிடும். மரங்களுக்கு 15 நாளைக்கு ஒரு முறை சொட்டுநீர்ல பஞ்சகவ்யாவைக்  கலந்து விட்டுடுவேன். அதனால, மரங்கள் நல்லா செழிப்பா இருக்கு. இன்னும் நாலு வருஷத்துல நல்ல லாபத்துக்கு விற்க முடியும்.

இப்போ, 400 தென்னை மரங்கள் பாளை விடுற பருவத்தில இருக்கு. தென்னைக்கும் சொட்டு நீர்ப்பாசனத்துல மாசம் ரெண்டு தடவை பஞ்சகவ்யா கொடுத்துடுவேன். அரை ஏக்கர்ல காய்கறிகளை சுழற்சிமுறையில் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். இதில்லாம, பப்பாளி, சப்போட்டா, சீத்தானு பழமரங்களும் வெச்சிருக்கேன்.

10 ஏக்கர் நெலத்துலயும் இப்ப வெள்ளாமை இருக்கு. எல்லாத்துக்கும் பஞ்சகவ்யா கொடுக்கிறப்போ, ரொம்ப நல்லா திடமா சுவையா இருக்கு” என்ற பழனிச்சாமி நிறைவாக,

“பஞ்சகவ்யா மூலமாதான் எனக்கு நம்மாழ்வார் அய்யாவோட அறிமுகம் கிடைச்சது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்தை முழுமையா செய்ய ஆரம்பிச்சேன். இப்போ மனநிறைவா மகிழ்ச்சி விவசாயத்தைச் செஞ்சுகிட்டு இருக்கேன். கண்டிப்பா இயற்கை விவசாயம் மகிழ்ச்சி விவசாயம்தான். இது விவசாயிகளை கடனாளியாக்குறதில்லை. தற்கொலைக்குத் தூண்டுறதில்லை” என்று அழுத்தம் கொடுத்து சொன்னார்.

-மணம் பரப்பும்

தொடர்புக்கு,
‘ஒஷோ’ பழனிச்சாமி,
செல்போன்: 98657-07172

சர்க்கரைக்குப் பதிலாக பப்பாளி!

பழனிச்சாமி, பஞ்சகவ்யாவில் சர்க்கரைக்கு பதிலாக பப்பாளிப் பழங்களைப் பயன்படுத்தி வருகிறார். அது குறித்துப் பேசியவர், “நம்மாழ்வார் அய்யா, எப்பவுமே வயலை சோதனைக்களமாவே வெச்சிருக்கணும்னு சொல்வார். அதுபடிதான், நான் பஞ்சகவ்யா தயாரிப்பில் சர்க்கரைக்கு பதிலா கனிஞ்ச பப்பாளி பழங்களைச் சேர்த்து தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுத்தேன். அது சிறப்பா  இருந்துச்சு. அதுல இருந்து அதையே கடைப்பிடிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்கிறார்.

பப்பாளி சேர்ப்பதில் தவறில்லை!

‘பஞ்சகவ்யாவில் பப்பாளி சேர்ப்பது குறித்து, ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் கேட்டபோது,

“செலவைக் குறைக்கிறதுக்காக சர்க்கரைக்கு பதிலாக அவரோட தோட்டத்தில் வெளையுற பப்பாளியைச் சேர்க்க ஆரம்பிச்சார் பழனிச்சாமி இதுல தவறு ஏதும் இல்ல. கனிஞ்ச பழங்கள்ல இருந்து இனிப்புத்தன்மை பஞ்சகவ்யாவுக்குக் கிடைச்சுடுது. அதேமாதிரி அவர் நுண்ணுயிர்களுக்கு தீனியா சத்துமாவு கலப்பார். அதுலயும் தவறு இல்லை.

நாளுக்கு நாள் பஞ்சகவ்யா பரிணாம வளர்ச்சி அடையுறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனா, அதேநேரத்துல இப்படி ஆராய்ச்சி பண்றவங்க  பயிர்களுக்கு பயன்படுத்திப் பார்த்து, முழுதிருப்தி ஏற்பட்டாதான் மத்த விவசாயிகளுக்கு பரிந்துரைக்கணும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக