View status

View My Stats

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பஞ்சகவ்யா - 11

பலாவுக்கு ருசி கூட்டிய பஞ்சகவ்யா...
இளம் விவசாயியின் இயற்கை விவசாயம்!
ஆரம்பகாலத்தில் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு சேர்த்தவர்கள் குறித்த பதிவுகள் இடம்பெறும் தொடர் இது. அந்தவரிசையில் தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார், ஈரோடு அடுத்துள்ள நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த இளம்விவசாயி எஸ்.சக்திவேல்.
தென்னை, பலா, முள்சீதா, நாவல், துரியன், ஜாதிக்காய், மிளகு என அடர்ந்து பரவிக்கிடக்கும் தோப்பு. உயிர்மூடாக்காக களைச்செடிகள் படர்ந்து கிடக்கின்றன. கிளுவைப் போத்துக்களால் வேலி அடைத்த தோப்பினுள் நாட்டுமாடுகள், செம்மறி ஆடுகள், நாட்டுக்கோழிகள், வாத்துக்கள் என மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆங்காங்கே தேனீ வளர்ப்புப் பெட்டிகள், ஒரு மீன் வளர்ப்புக் குளம் என ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கான அத்தனை அடையாளங்களும் அங்கு இருக்க... ஒரு வனத்துக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தியது, சக்திவேலின் பண்ணை.
தூறல்மழை விட்டுவிட்டு பெய்துகொண்டிருந்த ஒரு காலைவேளையில் மீன்களுக்கு பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துக் கொண்டிருந்த சக்திவேலைச் சந்தித்தோம். அப்பா சுப்பிரமணியன், அம்மா தங்கமணி ஆகியோரை நமக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
எங்க சொந்த ஊர் இதுதான். மொத்தம் நாலரை ஏக்கர் நெலம் இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு ஒருவாட்டி எல்.பி.பி. கால்வாய் தண்ணீர் கிடைக்கும். மத்த நாட்களில் கிணத்துப்பாசனம்தான். நான், வீட்டுக்கு ஒரே பையன்ங்கிறதால படிப்பு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். இப்போ 7 வருஷமாதான் இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன். நான் இயற்கைக்கு மாறுனதுக்குக் காரணம், ‘பஞ்சகவ்யா சித்தர்டாக்டர்.நடராஜன்தான்.
ஒரு முறை ஈரோட்டுல நடந்த மரம் வளர்ப்பு கருத்தரங்குல கலந்துகிட்டு எதேச்சையா டாக்டரைப் பார்த்துப் பேசினேன். அப்போ, எங்க தோட்டத்துல வெளையுற பலா ருசியாவே இல்லைனு சொன்னேன். உடனே அவர், தன் கையில வெச்சிருந்த பஞ்சகவ்யா புத்தகத்தை என்னிடம் கொடுத்து... ‘இதுல பஞ்சகவ்யா செய்முறை, அதை பயிர்களுக்குப் பயன்படுத்தற முறை குறித்து இருக்கு. இதுல உள்ளபடி பலா மரத்துக்கு கொடுத்துட்டு வாங்க. அடுத்த சீசன்ல காய்க்கிற பலா கண்டிப்பா ருசியா மாறிடும். அதுக்கப்பறம் வந்து என்னைப் பாருங்கனு சொன்னார்.
உடனே, பஞ்சகவ்யா தயாரிச்சு 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லினு கலந்து ஒவ்வொரு பலா மரத்துக்கும் நேரடியாகவே ஊத்துனேன். தொடர்ச்சியா ஒரு வருஷம் பஞ்சகவ்யா கொடுத்ததுல... அடுத்த சீசன்ல பழங்கள் வழக்கத்துக்கு மாறாக அபரிமிதமா காய்ச்சுச்சு. ஒரே சீரா நல்ல எடையோட பழங்கள் இருந்துச்சு. சுளைகளை ருசி பார்த்தப்போ தேன்ல முக்கி எடுத்து சாப்பிட்ட மாதிரி அவ்வளவு ருசி. சுளையெல்லாம் தங்க நிறத்துல இருந்துச்சு. அதுக்கு முந்தியெல்லாம் வெளுத்துப் போய் இருக்கும். அப்போதான் பஞ்சகவ்யாவோட அருமை எனக்குப் புரிஞ்சது.
டாக்டரைப் பார்த்து நன்றி சொன்னேன். உடனே தோட்டத்துக்கு வந்து சுளைகளை ருசிபார்த்தார், டாக்டர். தோட்டம் முழுக்க சுத்திப்பார்த்து நெறைய ஆலோசனைகளை சொல்லிட்டுப் போனார். அவர்தான் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாதசுதேசி விவசாயத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்னு சொன்னார். அதனாலதான் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைச்சேன்என்ற சக்திவேல், பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேசினார்.
விண்ணைப் பார்க்காத மண்ணுதான் இயற்கை விவசாயத்துக்கு அடையாளம். ‘நிலத்து மண் வெளியில தெரியக்கூடாதுனு நம்மாழ்வார் அய்யா அடிக்கடி சொல்வார். அதனாலதான், புல், பூண்டு, மரம், செடி, கொடினு உயிர்மூடாக்கு நிறைஞ்ச பூமியா நெலத்தை மாத்தினேன். நாலரை ஏக்கர் நிலத்துல 200 தென்னை, 27 பலா, 20 நாவல் மரங்கள் இருக்கு. உள்ளாற 5 அடி இடைவெளியில ஜாதிக்காய், துரியன், முள்சீதானு ஏகத்துக்கு வெச்சிருக்கேன். இதுபோக குதிரைமசால், வேலிமசால், மல்பெரி, கோ-3 பசுந்தீவனங்களும் பரவலா இருக்கு.
நெலத்துல களைகளை எடுக்கிறதே இல்லை. செம்மறி ஆடுகள் அந்த வேலைய செஞ்சிடும். 15 நாளைக்கு ஒரு தடவை பாசன தண்ணீர்ல பஞ்சகவ்யாவைக் கலந்து விட்டுடுவேன். முழுக்க செடி, கொடிகள் இருக்கிறதால எவ்வளவு வெயில் கொளுத்தினாலும்... என்னோட நெலம் மட்டும் ஈரப்பதத்தோடவே இருக்கும். ஒரு செடி கூட காயாது. 3 மாசத்துக்கு முன்னாடி கடுமையான வறட்சியில, பக்கத்து தோப்பு எல்லாம் காய்ஞ்சு வெம்பிக் கிடந்துச்சு, ஆனா, இங்க நாலரை ஏக்கர் நெலத்தில் அத்தனை பயிர்களும் செழிப்பா இருந்துச்சு. பார்த்தவங்கள்லாம் ஆச்சர்யப்பட்டாங்க. அதுதான் பஞ்சகவ்யாவின் மகிமைனு எல்லார்கிட்டயும் சொன்னேன்.
பயிர்களுக்கு மட்டுமில்லாம, ஆடு, மாடு, கோழி, மீன், நாய்னு அத்தனை ஜீவன்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கிறேன். அதனால, எல்லாமே நோய் எதிர்ப்புச் சக்தியோட திடகாத்திரமா வளருது. குறிப்பா நாட்டுக்கோழிகளுக்கு 15 நாளைக்கு ஒரு வாட்டி பஞ்சகவ்யாவை வாயில ஊத்தி விட்டுடுவேன். அதனால, கோழிகளுக்கு சளி, கழிச்சல் நோயெல்லாம் வர்றதேயில்லை. இங்க தென்னையில் சராசரியான விளைச்சல்தான் கிடைக்குது. ஆனா, கொப்பரையோட பிழிதிறன் அதிகமா இருக்கு. தேங்காய் எண்ணெய், புண்ணாக்கு ரெண்டோட வாசமும், தரமும் அதிகம்.
ஒரு காங்கேயம் மாடும் ஒரு உம்பளாச்சேரி மாடும் இருக்கு. இதுங்க மூலமா கிடைக்கிற பால், தயிர், நெய், சாணம், மாட்டுச் சிறுநீர் வெச்சுதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன்.
பஞ்சகவ்யாவுக்கு மாறின பிறகுதான் முழு இயற்கை விவசாயம் குறித்து தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ ஜப்பான் நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி புகோகாவோட முறைகளைப் பின்பற்றிகிட்டு இருக்கேன். இயற்கைக்கு மாறின பிறகுதான் நஷ்டமில்லாம இருக்குஎன்று சொல்லி புன்னகையுடன் விடைகொடுத்தார், சக்திவேல்.
-மணம் பரப்பும்
தொடர்புக்கு,
சக்திவேல்,
செல்போன்: 99761-13030.
பருவம் தவறாமல் சினை பிடிக்கும்!
கால்நடைகளுக்கு பஞ்சகவ்யா கொடுப்பது குறித்துப் பேசிய டாக்டர் நடராஜன், “கால்நடைகளுக்கு உரிய விதத்தில் பஞ்சகவ்யா கொடுத்துகிட்டு வந்தா சிறப்பாக வளர்ந்து வருமானம் கொடுக்கும்ங்கிறதை சக்திவேல் நிரூபிச்சிருக்கார். பஞ்சகவ்யாவில் உள்ள நுண்ணுயிரிகள் கால்நடைகளுக்கு செரிமான சக்தியை அதிகரிக்க வைக்குது. அதனால் ஆடு, மாடுகளுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வர்றதில்லை.
மாடுகளுக்கு தினமும் 200 மில்லி பஞ்சகவ்யா கொடுக்கலாம். ஆடுகளுக்கு 50 மில்லி போதுமானது. கால்நடைகளுக்கு பஞ்சகவ்யா கொடுக்கிறப்போ, தண்ணீர் கலக்கக்கூடாது. தினமும் பஞ்சகவ்யா கொடுக்கிறப்போ, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா கிடைக்குது. தவிடு, பிண்ணாக்குக் கரைசல், அடர்தீவனத்துலயும் 10 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து பிசைந்து கொடுக்கணும். பஞ்சகவ்யா சாப்பிடுற ஆடு, மாடுகள் பருவம் தவறாம சினை பிடிக்கும்என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக