உலாவு தளத்துடன் கூடிய கூண்டுமுறை:
இந்த நவீன நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, குஞ்சு பொரித்த காலத்திலிருந்து அவைகளின் தினசரி வளர்ச்சி, அப்போது அவைகளின் உயிர் பாதுகாப்பு என்பனவற்றிற்கும், தட்பவெப்ப கால மாறுபாட்டால் உண்டாகும் வைரஸ் நோய்களினின்றும், வருமுன் காப்பு என்ற கவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுஎல்லாவித நோய் களிலிருந்தும் செல், பேன் மற்றும் வயிற்றுப்பூச்சி முதலிய ஒட்டுண்ணிகளிலிருந்தும் காப்பாற்றி தொழிலில் தோல்வியில்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளது.
உலாவு தளத்தின் உட்புறத்தளம், காரைகள், மண் போன்றவைகளால் நிரப்பப்பட்டு கெட்டிக்கப்பட்டு பசுஞ்சாணியால் மெழுகிவிடப்படும். மழை காலங்களில் தரை, நனையாத முறையில் பாலிதீன் அல்லது உரச்சாக்கு மேல் கூரையாக தற்காலிகமாக மறைக்கப்படும். உலாவு தளத்தின் நாட்புறமும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோழிக் கூண்டுகள் அருகில் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டால் நோய்கள், காற்று, வெயில் என்பனவற்றினின் றும் கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக் கும்.பாம்புகள் வராமல் தடுக்க, நாகதாளிச் செடியையும் வசம்புச் செடியையும்ஓரமாகப் பாத்தியமைத்து வளர்த்தால் மேலும் நல்ல பயனைத் தரும்.
கோழிகள் சில வேளைகளில் கீரைகள், பசும்புல் என்பனவற்றையும் உணவாக உட்கொள்ளும். அத்தேவையைப் பூர்த்தி செய்ய மண் சட்டிகளில் உரத்தோடு கலந்த மண்ணை நிரப்பிக் கீரைகளை வளர்த்து, வளர்ந்த பின் சட்டியுடன் உலாவு தளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் வைக்க, அவை ஒரு இயற்கை சூழலை உருவாக்கி, கோழிகளின் இனவிருத் தித்திறனை அதிகப்படுத்தும். கோழிகளும் சில வேகைளில் மாமிச பட்சணியே. மேற்படி தேவையைப் பூர்த்திசெய்ய சிறு பெட்டிகளில் ஓடு தளத்தில் தினசரி கூட்டி சுத்தம் செய்யும் கோழிக்கழிவுகள், இறைக்கப் பட்ட தீவன தானியங்களின் கழிவுகள் ஆகியவற்றை நல்ல மண்ணுடன் கலந்து நிழலில் ஈரப் பதத்துடன் இருக்கும்படி செய்து நான்கைந்து மண்புழுக்களை விடலாம். அவைஅக்கழிவுகளை நல்ல உரமாக்குவதுடன் பல்கிப்பெருகி கோழிகளுக்கு ஏற்ற மாமிசத் தீவனமாகவும் மாறும். மேலும் பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் மண்புழு உரம் அரை கிலோ 10 முதல் 15 ரூபாய் வீதம் விற்கப்பட்டு மேல் வருமானத்தைப் பெருக்கும்.
உலாவு தளத்தின் உட்புற, வெளிப்புற வலைகளில் அமைக்கப்படும் இன்னும் ஒரு முக்கிய பெட்டி உள்ளது. அது முட்டையிடும் பெட்டி அல்லது கூண்டு என்பது நான்கு பக்கமும், கோழிச்சல்லடையால் சுற்றி வளைத்து அடிக்கப்படுகிறது. இது தரையிலிருந்து இரண் டரை, மூன்றரை அடி உயரத்தில் கீழிருந்து கீரிப் பிள்ளை, நரி, நாய் மட்டுமின்றி பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும் தாக்கப்படா வண்ணம் காத்துக் கொள்கிறது. சவுக்குச் சட்டங் கள் பொருத்தப்பட்டு இரவில் பனி, மழை, காற்று இவைகளால் பாதிக்கப்படாமல் நல்ல உறுதியான மேல் கூரை அமைக்கப்பட்டுஅமைதியுடன் கோழிகள் ஓய்வுபெற வசதியளிக்கிறது.
மேற்கண்ட முறையில் ரன் எனப்படும் உலாவுதளம் ஒரு கோழிக்கு 3 க.அடி என்ற முறைப்படி இடம் ஒதுக்கப்பட்டு நல்ல உறுதியான சவுக்கு கம்புகள் நடப்பட்டு, பூமியிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயர 4 பக்கம் அகலமான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, அதன் மேல் சட்டங்கள் பொருத் தப்பட்டு, நான்கு பக்கமும் கோழிச்சல்லடையால் தரையிலிருந்து சுமார் ஆறரை முதல் ஏழு அடி உயரமும், அளவுக்கு அரை அங்குல கோழிச்சல்லடையால் சுவர் போன்ற அமைப்பும், அவைகளுக்கு மேல் கோழிகள் பறந்துவிடாமல் தடுக்க மேற்பகுதியும் சல்லடையால் வேயப்படுகிறது. கோழி வளர்ப்போர் உள்ளே சென்றுவரக் கதவும் அமைக்கப்படுகிறது.
தூசிக்குளியல்: மேற்படி அமைப்பினுள் கோழிகளின் தீவனப் பாத்திரம், குடிநீர் பாத்திரம் என்பன வெயில் தாக்காத வண்ணம் சிறுசிறு ஓலைக் கூரைகளுடன் அமைக்கப்படுகின்றன. கோழிகளுக்கு டஸ்ட் பாத் செய்யக்கூடிய குறுமணல், சாம்பல், பூச்சிக்கொல்லி பவுடர் கொண்ட கலவையுடன் அகன்ற வாய் கொண்ட குழியமைப்பும் அமைக்கப்படுகிறது.இது கோழியின் மேல் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பெரிதும் உதவுகிறது.
தீவன பாத்திரம்: தீவன பாத்திரம் எப்போதும் கோழிகள் விரும்பி உண்ணும்தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாணம், சோளம், வெ.சோளம், தவிடு,பிண்ணாக்கு போன்ற உணவுகளால் நிரப்பப்பட வேண்டும்.
குடிநீர் பாத்திரம்: குடிநீர் பாத்திரம் கோழிகள் குடிக்கும் தண்ணீர் அசுத்தமடையா முறையிலும் அதே நேரத்தில் குடிநீர் குறைவில்லாமல் கிடைக்கவும் வகை செய்யும் முறையில் அமைக்கப்பட வேண்டும். மேற்படி பாத்திர அமைப்பு முறை குடிக்க குடிக்க குறையா வண்ணம் தண்ணீர் வர வசதியுடையதாக இருக்க வேண்டும்.
முட்டையிடும் பெட்டி: 10 கோழிகள் கொண்ட பண்ணைக்கு ஒரு அடி அகலமும், ஒண்ணேகால் அடி நீளம், ஒன்றரை அடி ஆழம் கொண்ட அரை அங்குலப் பலகைகளான 6 முதல் 7 பெட்டிகள் நடுவில் பிரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பூட்டு போட்டு பூட் டக் கூடியவையும்,பாதுகாப்பான முறையிலும் வெளியிலிருந்து திறந்து முட்டைகளைசேகரிக்கக்கூடிய முறையில் அமைய வேண் டும். உலாவு தளத்தின் சுவரின் மேல் உறுதியாக நிற்கவும் வளைச்சுவர் மற்றும் சட்டங்களுடன் இடைவெளி விடாமலும் அமைக்கப்பட வேண்டும். நாள்தோறும் இடப்படும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும் வேண்டும்.
முட்டைகள் பாதுகாப்பு: ஒரு புது மண்பானையில் பாதிக்குமேல் வரை குறுமணலால் நிரப்பப் பட்டு அதன்மேல் முட்டைகள் வைக் கப்பட வேண்டும். பானை அகல வாய் கொண் டதாகவும் அதன் வாயை அரை வளை மூடி போடப்பட வேண்டும். காற்றோட்டமும், ஈரப் பதமும் உள்ள இருண்ட இடத்தில் மேற்படி முட்டைகள் அடை வைக்கப்பட்டுநல்லவிதமாக குஞ்சுகள் பொறிக்கப்பட வேண்டும்.
கோழிகள் தேர்வு: நல்ல ஆரோக்கியமானகோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக் காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட் டம்,தேவைக் கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாக சேவல்கள்இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாக இருக்கும். நல்ல அகலமான நெஞ்சும், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டையில் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக் கோழிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இயற்கை முறை அடைவைப்பு: இயற்கை முறை அடை வைப்புக்கு லேசான பாரமுள்ள, அகன்ற நெஞ்சும், இறகுகள் அடர்ந்தும், அடையில் படுத்தபடி இருக்கும் நாட்டு பெட்டை கோழிகள் ஏற்றவை. சிறகுகள் அடர்ந்தும் அகலமாகவும் இருப்பது முட்டைகளை சுழற்றவும், நல்ல அரவணைப்புக்கும் உகந்தவை.
முட்டை அடைவைத்த 7வது நாளிலேயே முட்டை கருக்கூடிய முட்டையா இல்லையா எனக்கண்டறிந்து கருக்கூடா முட்டையை சாப்பிட பயன்படுத்தலாம். இதனைக் கண்டறிய ஒரு நோட்டு அட்டையில் முட்டை அளவுக்கு ஓட்டை போட்டு அட்டையின் மேற்பகுதியில் டார்ச் அடித்தோ (அ) மின் விளக்கினை வைத்தோ பார்க்கும்போது வெளிச்சத்தில் முட்டையின் கரு கறுப்பாகவும், அதிலிருந்து ரத்தக்குழாய்கள் சிவப்புக்கோடுகள் போன்றும் தோன்றும். கரு வளர்ச்சி இல்லாத முட்டைகளில் வெளிச்சம் அப்படியே வெளியேறுவதால் மஞ்சள் நிறமாக இருக்கும். அடை முட்டைகளின் எண்ணிக்கை அந்தந்த கோழிகளின் உடல் எடைக்குத் தகுந்தாற்போல் 10முதல் 12 முட்டைகள் வரை மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு அதிகமாக இருந்தால் கரு கூடாமல் போய்விடும்.
அடைவைக்க ஏற்ற முட்டைகள்: மிகச்சிறியதும், மிகப்பெரியதுமான முட்டைகள் பொறிப் புக்கு ஏற்றவை அல்ல. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அளவே நல்லது. அவற்றின் எடை ஏறத்தாழ 55 கிராமிலிருந்து58 கிராம் இருக்கலாம். கோழிகளில் வெள்ளை முட்டை இடுபவை, லேசான காவிநிற முட்டை இடுபவை என இரு வகைகள் உள்ளன. அடைவைக்கும்போது எல்லா முட்டைகளும் ஒரே நிறமாக இருப்பது நல்லது. காவி நிற முட்டைகளில் மிதமான காவி முட்டைகளும், வெகு காவி முட்டைகளும் பொறிப்புக்கு ஏற்றவை. கோழி லேசாகக் கீறலிட்ட முட்டைகள், லேசாக உடைந்தவை மற்றும் ஓடில்லா முட்டைகள் பொறிப்பதற்கு ஏற்றவையல்ல. முட்டைகளை அளவுக்கு மீறி குலுக்குவதால் முட்டையினுள் காற்றுக்குமிழ்கள் உருவாகி பொறிப்பைப் பாதிக்கும்.
அழுக்கடைந்த முட்டைகள்: அழுக்கடைந்த முட்டைகளை ஏதாவது தட்டையான கருவியால் சுரண்டி சுத்தம் செய்யவும். சுத்தமில்லாத முட்டைகளை அடை வைக்க வேண்டாம். இட்ட முட்டைகளைப் பாதுகாத்து சீக்கிரமே அடை வைக்க வேண்டும். நாள் கடத்த வேண்டாம்.
அடைவைக்க ஏற்ற காலம்: தமிழகத்தில் வருடத்தில் அதிக சூடான மூன்று மாதங்களைத் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களிலும் அடை வைக்கலாம்.
அடை வைக்க சிறந்த நேரம்: அந்தி சாயும் நேரம், மாலை 7 மணிக்கு மேல் நல்லது. முதல் நாளிலேயே அதிக அளவு நேரம் அடை படுக்க வைப்பது நல்லது. மேற்கண்ட நேரத்தில் வைக்கப்படும் முட்டைகள் 21ம் நாள் மாலை வேளை பொரிப்பதால் இரவு முழுக்க தாயுடன் இருப்பதும், அதிக நேரம் தங்குவதும் குஞ்சுகளுக்கு பலத்தையும் நல்ல உடல் நிலையும் தரும்.
அடை வைக்கும் கூடை அல்லது பெட்டி: 8 அங்குல உயரமும் (ஆழமும்) 15அங்குல விட்டமும் உள்ள பிரம்பு கூடைகள், மரப் பெட்டிகள், மண்பானைகள் என்பன அடை வைக்க ஏற்றவை. முதலில் மேற்கண்ட பாத்திரங்களில் முக்கால் பங்கு மணலாலும், அடுப்புச் சாம்பலாலும் நிரப்பப்பட வேண்டும். அவைகளுக்கு மேல் மெத்தென்ற வைக்கோல், காய்ந்த இலை, தழைகள், புல் போன்றவை நிரப்பப் பட்டு நன்கு அமுக்கி விடப்பட வேண்டும். இப்போது அகன்ற குழி போன்ற அமைப்பு உருவாகும். பின் பீஎச்சி 10மூ அல்லது எறும்பு மருந்து ஏதாவதொன்று தூவப்பட வேண்டும். அதன்பின் முட்டைகளை முட்டை ஒன்றுக்கும் மற்ற முட்டைக்கும் கால் அங்குலம்இடைவெளி விடப்பட்டு முட்டைகள் வைக்க வேண்டும். அதன்பின் அடைவைக்கவிருக்கும் கோழியின் உடல் சாம்பல் கலந்தசோடியம் புளோரைட்,பவுடர் போன்றவற்றால் தூசிக்குளியல் செய்யப்பட்டு முட்டைகளின் மேல் இருத்த வேண்டும். முட்டையின் அகலமான பகுதி மேல் நோக்கியும் கூர்மையான பகுதி கீழ்நோக்கியும் அடுக்க வேண்டும்.
அடை வைக்குமுன்னர், அடை வைக்கப்படும் கோழிக்கு நல்ல தீவனம், குடிநீர் நிறைவாக அளிக்கப்பட வேண்டும். அடை காக்கவிருக்கும் கோழி ஒழுங்காக அடை காக்குமா என்பதை கண்டறிய நல்ல வழியொன்று உள்ளது. முதல் இரண்டு மூன்றுநாட்களுக்கு டம்மி முட்டைகளை வைத்து அடைகாக்க வைக்கலாம். கோழி ஒரே நிலையில் தொடர்ந்து இருந்துவிட்டால் கவலை வேண்டாம். டம்மி முட்டைகளை அகற்றிவிட்டு நல்ல முட்டைகளை வைக்கலாம். கோழிக்குத் தினசரி இருமுறை நல்ல குடிநீரும்தானியங்களும் கொடுக்கப்பட வேண்டும். தானியங்களுடன் சுண்ணாம்புக்கல் கொடுக்கப்பட வேண்டும். கொழகொழப்பான ஆகாரம் கொடுக்கக்கூடாது. ஏனெனில் கோழி வயிற்றுப் போக்கால் அவதிப்படும். இது முட்டைகளை அழுக்காக்கிவிடும். அடைகாக்கும் கோழிக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது வெளியில் வந்து கால்களை, இறக்கைகளை அடித்து ஓடியாட வழி வகுக்க வேண் டும். இது கோழிகளுக்கும் நல்லது, காக்கப்படும் முட்டைகளுக்கும் நல்லது. இந்தப்பயிற்சி தினசரி 20 நிமிடங்கள் தேவை. சில நேரங்களில் கோழிகள் பிடிவாதமாக நகர மறுக்கும். அப்போது கோழியின்அடிவயிற்றில் கையை விட்டுமுட்டைகள் இறக்கைகளுக்கு அடியில் இருக்கிறதா என கவனித்து, இருந்தால் மெதுவாக நீக்கி கோழியை வெளியே விடவேண்டும்
|