ஜீவாமிதம்(அமிர்தகரைசல்) என்பது இயற்கை விவசாயத்திற்கு உயிர் நாடி. இரசாயன விவசாயத்தால் பாதிக்கபட்டு மலடன மண்ணிற்கு உயிர் கொடுப்பது ஜீவாமித்த கரைசல்தான். எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஜீவாமிர்தம் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு விளைச்சல் அதிகமாகி கொண்டே போகும்.
இப்படிபட்ட ஜீவாமித்த கரைசலை சரியான முறையில் தயாரிப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
500 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் எடுத்து கொண்டு அதை வெய்யல், மழை நீர் படாத இடத்தில்( பாசனத்திற்கு ஏற்றவாறு ) இரண்டு அடிக்கு மேடை அமைத்து அதன் மேல் வைத்து விடுங்கள்.
தொட்டியின் அடிப்பகுதியில் ஒன்றரை இன்ச் அளவிற்க்கு துளையிட்டி அதில் பிவிசி பைப்பை பொருத்தி கொள்ளவும்.
அதில் ஒரு கேட்வால்வு பொருத்தி கொள்ளுங்கள். இந்த துளையின் வழியாகத்தான் ஜீவாமிர்தத்தை வடித்தது போக எஞ்சியுள்ள சாண கலவையை வெளியேற்ற வேண்டும்.
அப்படி வெளியேற்றபட்ட கலவையை நிழலில் சேகரித்து வைக்க வேண்டும். ஒரு மாதத்தில் அவை மக்கி கனஜீவாமிர்தமாக மாறி விடும்.
அதன்பின் அவற்றை விதையுடன் கலந்து விதைக்கவோ அல்லது நாற்று நடும்பொழுதோ பயன்படுத்தி பலன்பெறலாம்.
அடுத்ததாக சின்டெக்ஸ் டேங்க்கின் அடிப்பகுதியில் இருந்து அரை அடிக்கும் மேலாக ஒரு இன்ச் அளவிற்கு துளையிட்டு அதில் பிவிசி பைப் பொருத்தி அதற்க்கு ஒரு கேட்வால்வு பொருத்தி கொள்ளுங்கள்.
இதன் வழியாகத்தான் தயாரான ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்து விடவேண்டும்.
இனி ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை.
புதிய மாட்டு சாணம்( நாட்டு மாட்டு சாணமாக இருத்தல் நல்லது ) பத்து கிலோ எடுத்து வாளியில் தண்ணீர் விட்டு கரைத்து சின்டெக்ஸ் தொட்டியில் ஊற்றி விடுங்கள்.
அத்துடன் இருபது லிட்டர் கோமூத்திரம் சேர்க்கவும். அதில் ஒருகைப்பிடி மண் மற்றும் அரைக்கிலோ பயிர் மாவு சேர்க்கவும். சுத்தமான நாட்டு சர்க்கரை ஒருகிலோ அல்லது இரண்டாக கிழித்த கரும்பு ஐந்து கிலோ சேர்க்கவும். இனி மதிப்பு கூட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
இஎம் கால் லிட்டர்( இஎம் தயாரிப்பு- பப்பாளி, பூசணி, வாழைப்பழம், சுத்தமான நாட்டு சர்க்கரை, இவை அனைத்திலும் இரண்டிரண்டு கிலோ எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு வாளியில் இடவும். பழங்கள் முழுகும் அளவிற்கு தண்ணீர் நிரப்பவும்.
ஒரு நாட்டு கோழி முட்டையை உடைத்து ஓட்டுடன் நன்றாக கலக்கவும்.
காற்று புகாதவாறு கட்டி நிழலில் வைத்திருந்தால் இருபது நாட்களில் இஎம் தயாராகிவிடும். அதை வடிகட்டி பயன்படுத்தலாம். அப்படியே தண்ணீர் ஊற்றி மீண்டும் பயன்படுத்தலாம்.) சேர்க்கவும். அத்துடன் அசோஸ்பைரில்லாம் 1௦௦ கிராம், பாஸ்போபாக்டீரியம் 1௦௦ கிராம், பிரட்டூரியா 1௦௦ கிராம் ( இவை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கும்.) சேர்த்து கொள்ளவும். பஞ்சகாவியம் 1௦௦ மில்லி சேர்க்கவும்.
இவை அனைத்தையும் சின்டெக்ஸ் தொட்டியில் இட்டு தண்ணீர் கொண்டு நிரப்பவும்.
தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வையுங்கள். இப்படி அனைத்தையும் கலந்து ஜீவாமிர்தம் தயார் செய்வதால் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். ''ஒரு கல்லில் பல மாங்காய்கள்'' என்பது இதுதான்.
தினமும் காலை, மாலை இரு வேளைகளில் தொட்டியை திறந்து கலவையை ஒரு நிமிடம் கலக்கி விடுங்கள். இரண்டு நாட்களில் மதிப்பு கூட்டபட்ட ஜீவாமிர்த்த கரைசல் தயாராகி விடும்.
தொட்டியின் மேல் பகுதியில் நன்றாக நுரை ததும்பி நிற்கும். கரைசல் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதை துணியில் வடிகட்டி ஏக்கருக்கு 2௦௦ லிட்டர் வீதம் பாசன நீருடன் கலந்து விடலாம். பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து பயிருக்கு தெளித்தும் விடலாம்.
இதன் மூலம் பயிர்கள் அபாரமாக வளர்ச்சி அடைந்து நல்ல விளைச்சலை கொடுக்கும். ''இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை''.
ஜீவாமிர்தம் தயாரிப்பதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை- அளவிற்கு அதிகமாக சாணத்தை பயன்படுத்த கூடாது.
அதனால் எந்த பலனும் இல்லை. வெளியேற்றும் சாணகரைசலை மக்க வைத்துதான் பயன்படுத்த வேண்டும்.
நாட்டு மாட்டு சாணம், நாட்டு மாட்டு கோமூத்திரமாக இருந்தால் நல்லது.
சொட்டு நீர் பாசனம் செய்பவர்கள் பஞ்சகாவியம் கலப்பதை தவிர்க்கவும் அல்லது குறைவாக சேர்க்கவும்.
நுண்ணுயிர் கலவையை வாங்கும் பொழுது புதிதாக வந்ததா என கேட்டு வாங்கவும். தண்ணீர் வடிவில் வாங்க வேண்டாம்.
சர்க்கரைக்கு பதிலாக கரும்பை பயன்படுத்துவதால் அது மட்கும் வரைக்கும் திரும்பவும் பயன்படுத்தலாம்.
''மதிப்பு கூட்டபட்ட ஜீவாமிர்தம் தயாரித்து அதிக பலன் பெற வாழ்த்துகிறேன்''.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக