*பஞ்சகவ்யா கலந்த தீவனத்தில் நான்கு வகையான இனிப்புச் சுவைகள் இருக்கும்.
*பால் உற்பத்தி அதிகரிக்கும்.
*சரியான பருவத்தில் சினை பிடிக்கும்..
*குடல்புழு நீக்கம் செய்யலாம்.
பஞ்சகவ்யா உருவான விதம், ஆரம்ப காலத்தில் அதைப் பயன்படுத்திய விவசாயிகள் சிலரின் அனுபவங்கள் குறித்து கடந்த சில இதழ்களில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அடுத்து நாம் சந்திக்க இருக்கும் நபர், கால்நடை மருத்துவர் எம்.ஆறுமுகம். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் வசித்து வரும் 76 வயது நிரம்பிய ஆறுமுகம், கால்நடை மருத்துவத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஒய்வுபெற்றவர்.
‘வள் வள்’ நாய்களை வாலாட்ட வைத்த பஞ்சகவ்யா!
‘‘பஞ்சகவ்யா எனக்கு அறிமுகமானதே ஒரு சுவையான அனுபவம்தான். கிராமங்கள்ல இருக்கிற ஆடு, மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கிறதுதான் என்னோட வேலை. அப்படி கிராமங்களுக்குப் போகிற சமயத்துல, தெருநாய்ங்க தொல்லை அதிகமா இருக்கும். சிலசமயம் கடி வாங்கியதும் உண்டு. அப்படி ஒருமுறை நாய் துரத்தி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துட்டேன். அதுக்கு மருத்துவம் பார்க்கத்தான் டாக்டர். நடராஜன்கிட்ட போனேன். காயத்துக்கு வைத்தியம் பார்த்து ஆறுதல் சொன்னவர், ‘இனி எந்த நாயும் உங்களைக் கண்டால் குலைக்காது, கடிக்காது. உங்களைக் கண்டதும் வாலாட்டி வரவேற்கும். அந்த மந்திரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். அது கையில் இருக்கும் வரை எல்லா நாய்களும் உங்களுக்கு நல்ல நண்பன்தான்’னு சொன்ன டாக்டர், பஞ்சகவ்யா கரைசலைப்பற்றி விளக்கமா எடுத்துச் சொன்னதோட, ‘இந்த பஞ்சகவ்யாவில இருக்கிற இனிப்புச் சுவை நாய்ங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதோடு இதை தொடர்ந்து சாப்பிடும் நாய்கள் ஆரோக்கியமாவும் இருக்கும். சொறி நாய்கூட சில நாளில் குணமாகி விடும். இனி உங்களைத் துரத்திக்கிட்டு வர்ற நாய்களை, இந்தக் கரைசலில் 50 மில்லி அளவுக்குக் குடிக்க வையுங்க. அப்புறம் பாருங்க இதோட மகிமையை’ னு சொல்லியபடி, பஞ்சகவ்யா கரைசலையும் கொடுத்தனுப்பினார்.
அடுத்த நாள் ஒரு கிராமத்துக்குப் போனேன். வழக்கம் போலவே நாய்ங்க கூட்டமா வந்துச்சு. பயப்படாம, வண்டியைவிட்டிறங்கி, பெட்டியில் இருந்த பஞ்சகவ்யா கரைசலை எடுத்து தார் ரோட்டுல கொஞ்சமா ஊத்தி விட்டுட்டு, நின்னுக்கிட்டேன். முதல்ல ஒரு நாய் மட்டும் வாலை இடுக்கிக்கிட்டு, பம்மி பம்மி வந்து பஞ்சகவ்யா கரைசலை முகர்ந்து பார்த்துச்சு, மெதுவா நக்கி ருசி பார்க்க ஆரம்பிச்சுது. கொஞ்ச நேரத்துல வாலை ஆட்டியபடியே என்கிட்ட வந்து நின்னுது. இன்னும் கொஞ்சம் பஞ்சகவ்யாவை தார் ரோட்டுல ஊத்திவிட்டேன். மத்த நாலு நாய்களும் அதைக் குடிச்சுட்டு, என்னை சினேகமாய் பார்த்துச்சு. அடுத்து போன கிராமத்துலயும் கூட இதே மாதிரி செஞ்சேன். இதனால என்னைத் துரத்தின தெருநாய்ங்க, ஒரு கட்டத்தில வாலாட்டிக்கிட்டு, தோழமைகாட்ட ஆரம்பிச்சுதுங்க. எனக்கும் பஞ்சகவ்யா மேல, ஒரு விதமான ஈர்ப்பு உருவாச்சு.
இந்தக் காலக் காட்டத்துல, பயிர்களுக்கு பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்துறது சம்பந்தமா டாக்டர். நடராஜன் இரவு நேரத்துல, கூட்டங்களை நடத்திக்கிட்டு இருந்தார். ஆர்வம் காரணமா நானும் அதுல தொடர்ந்து கலந்துக்கிட்டேன். அப்போ ஒருநாள், கால்நடைத் தீவனப் பயிர்களுக்கும் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பார்க்கலாமேனு முடிவு செஞ்சோம். முத்துசாமிங்கிற விவசாயி தோட்டத்துல இருந்த தீவனப்பயிர்கள்லதான் முதல்ல பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தினோம். அந்த தீவனத்தைத் தின்கிற கால்நடைகள்ல சில மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டுபிடிச்சோம். வழக்கமான தீவனப் புல்லுல ரெண்டு இனிப்புச் சுவை இருக்கும். ஆனா, பஞ்சகவ்யா தெளித்த தீவனப்புல்லுல நாலு இனிப்பு இருந்துச்சு. செரிமானமும் கூட சீக்கிரமா நடந்துச்சு. கூடவே பால் அடர்வுத் தன்மையும் அதிகமாக இருந்துச்சு. மாடுங்க சரியான பருவத்துல சினை பிடிச்சு, ஆரோக்கியமான கன்னுக்குட்டியை கொடுத்துச்சு. கறவை மாடுகளோட பால் உற்பத்தியும் அதிகரிச்சது. இந்த சம்பவத்திலிருந்து தீவனப்பயிர்களுக்கும் பஞ்சகவ்யா கொடுங்கனு நான் எல்லோர்கிட்டயும் சொல்லிக்கிட்டு வர்றேன்.
நம்மாழ்வார் நடைப்பயணம்!
2000-ம் வருஷம் வாக்குல, ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையில இருந்து கொடுமுடி வரையிலும், இயற்கை விவசாய விழிப்பு உணர்வை வலியுறுத்தி நடைப்பயணமா வந்தாரு ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் அய்யா. அந்த நடைப்பயணத்துல நானும் கலந்துக்கிட்டேன். வழியில தென்படற விவசாயிகள்கிட்டயெல்லாம் பஞ்சகவ்யா பத்தின பெருமையைப் பேசிக்கிட்டே போவாரு அய்யா.
குடற்புழுவைக் குணமாக்கிய பஞ்சகவ்யா
நடைப்பயண வழியில, ஆட்டு மந்தைக்கூட்டம் எங்களைக் கடந்து போச்சு. ஆடுங்க இளைச்சு, முடி உதிர்ந்து இருந்துச்சு. அதில சில ஆடுங்க நடக்க தெம்பில்லாமலும் தென்பட்டது. அதைப் பார்த்த நம்மாழ்வார் அய்யா, ஆடு மேய்க்கிற நபரைக் கூப்பிட்டு, விசாரிச்சார். ‘‘ஆடுகளோட வயித்துல குடற்புழுங்க இருக்கு. அதனாலதான் ஆடுங்க இப்படி நோஞ்சானா இருக்குய்யா’’னு ஆட்டுக்காரர் பதில் சொன்னாரு.
‘‘சரி, குடற்புழு நீக்கம் செய்யவேண்டியதுதானே?’’னு அய்யா கேட்டார்.
‘‘குடற்புழு நீக்கம் செய்ய ஆடு ஒண்ணுக்கு 50 ரூபாய் செலவு பிடிக்கும். இப்ப கையில காசு இல்லை. காசு கைக்கு வந்ததும் மருந்து வாங்கி குடற்புழு நீக்கம் செய்யணும்’’ னு பதில் சொன்னாரு ஆட்டுக்காரர்.
பக்கத்துல இருந்த என்னைப் பார்த்த நம்மாழ்வார் அய்யா, ‘‘குடற்புழு நீக்கம் செய்ய பஞ்சகவ்யா கரைசலைக் கொடுத்துப் பார்க்கலாமா?’’னு கேட்டார். ‘‘தவறு ஒண்ணும் கிடையாது, கொடுத்துப் பார்க்கலாம்’’னு சொன்னேன்.
உடனே ஆடு மேய்க்கிறவரைக் கூப்பிட்டு, பஞ்சகவ்யா பத்தி பாடம் நடத்தின நம்மாழ்வார் அய்யா, குடல்புழு நீக்கம் செய்றதுக்கு அதையே கொடுக்கலாம்னு ஆலோசனையும் சொன்னாரு. ஆடு மேய்க்கிறவரும் சம்மதம் தெரிவிச்சாரு. உடனே 30 மில்லி பஞ்சகவ்யா கரைசலை சில ஆட்டுக்குட்டிங்க வாயில ஊத்திவிட்டோம்.
‘‘இன்னைக்கு ராத்திரி உங்கள் கிராமத்திலதான் தங்கப்போறோம். நாளை மதியம் வரை இருப்போம். பஞ்சகவ்யா குடிச்ச ஆடுங்க எப்படி இருக்குனு வந்து சொல்லணும்’’னு ஆட்டுக்காரருக்கு அன்புக் கட்டளையும் போட்டார் அய்யா நம்மாழ்வார்.
அடுத்த நாள், ஆட்டுக்காரர் வேகமாக ஓடிவந்தாரு. ‘என்னாச்சு?’னு பதட்டத்துடன் கேட்டோம். ‘‘ஒண்ணும் இல்லீங்க. நேத்து நீங்க கொடுத்த மருந்து நல்லா வேலை செஞ்சிருக்கு. அதைக் குடிச்ச ஆட்டுகுட்டிங்க வயித்தில இருந்த குடல்புழு எல்லாம் வெளியேறி வயிறு சுத்தம் ஆயிடுச்சுங்க. இன்னும் பாக்கி இருக்கிற ஆடுகளுக்கும் அதைக் கொடுக்கணும். மிச்சம் மீதி இருந்தா அந்த மருந்தைக் கொடுங்க?’’னு எங்க கிட்ட கேட்டார். என்கிட்ட மீதியிருந்த பஞ்சகவ்யாவை கொடுத்துவிட்டேன். மேலும், விவரம் வேணும்னா என் முகவரிக்கு வரச்சொல்லி, எழுதிக் கொடுத்தேன்.
அடுத்த ஊர்க்கூட்டத்தில இருந்து, ‘கால்நடைங்களுக்கு குடல்புழு நீக்கம் செய்ய பஞ்சகவ்யா அருமையான மருந்து’னு நம்மாழ்வார் அய்யா பேசத்தொடங்கிட்டாரு. நடைப்பயணம் முடிஞ்ச பிறகும், நான் வைத்தியம் பார்க்க போற கிராமங்களுக்கெல்லாம் வந்து பார்த்து, ஒவ்வொரு கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா கொடுக்க வேண்டிய அளவு எவ்வளவு இருக்கணும்னு இறுதி வடிவம் கொடுத்தது அய்யா நம்மாழ்வார்தான்’’ என்று மலரும் நினைவுகளைச் சொல்லி முடித்தார் கால்நடை மருத்துவர் ஆறுமுகம்.
-மணம் பரப்பும்
கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு!
ஒரு கால்நடைக்கு குடற்புழு நீக்கம் செய்ய 30 மில்லி பஞ்சகவ்யா.
பசு, எருமை மாடுகள் உடனே சினைப்பிடிக்க ஒரு மாட்டுக்கு 100 முதல் 250 மில்லி.
கோழி முட்டைகளின் மஞ்சள்கரு திடமாக இருக்கவும், முட்டை ஒரே அளவில் கிடைக்கவும், ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி பஞ்சகவ்யாவை கலந்து கோழிகளுக்குக் கொடுக்கவேண்டும். இது பத்து கோழிகளுக்கான அளவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக