View status

View My Stats

ஞாயிறு, 12 ஜூன், 2016

தொழிலில் தோல்வியைத் தவிர்க்க 10 வழிகள்!

திகரித்துவரும் வேலைப் பளு, உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை, சுதந்திரமாக செயல்பட முடியவில்லை போன்ற பல காரணங்களால் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வேலைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் தோன்றுவது சாதாரண விஷயமாகிவிட்டது. முருகேஷ், அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான்.

ஐடி நிறுவனத்தில் புரோகிராமிங் பணியில் இருந்த முருகேஷ் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று நினைத்து ராஜினாமா செய்துவிட்டு, புத்தகக் கடை ஒன்றை தொடங்கினார். கடை என்னவோ ஐடி நிறுவன அலுவலகம் போல கண்ணாடி பளபளக்க ஆடம்பரமாகத்தான் இருந்தது. ஆனால் கடை அழகாக இருக்கிறதே என்பதற்காகக் கூட மக்கள் கடைக்குள் நுழையவில்லை. சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் இதற்காக செலவு செய்துவிட்ட முருகேஷ் இறுதியில் கடையை காலி செய்துவிட்டு புத்தகங்களைப் பாதி விலைக்கு பழைய புத்தகச் சந்தையில் விற்றுவிட்டு மீண்டும் வேலை தேட தொடங்கிவிட்டார்.

முருகேஷ் மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ பேர் திட்டமிடல் ஏதுமில்லாமல் தொழில் செய்ய நினைத்து தோல்வியடைந்திருக்கிறார்கள். வேலைக்கு எப்படி கல்வித் தகுதி, அனுபவம் தேவைப்படுகிறதோ, அதைப்போலவே ஏன் அதைவிட இன்னும் பல தகுதிகள் தொழில் செய்வதற்கு அவசியமாக உள்ளன. ஏனெனில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது எளிது, ஆனால் அதில் நிலைத்து நிற்பதும் வளர்வதும்தான் கடினம்.

தொழிலில் தோல்வியைத் தவிர்க்கவும் வெற்றிகரமான வளர்ச்சிக்கும் இந்த 10 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். 

1. தெளிவான திட்டம்!

எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, ஆரம்பிக்கும் முன்னரே தெளிவான திட்டத்தோடு தொடங்க வேண்டும். நாம் செய்யப் போகிற தொழில் குறித்து நமக்கு என்ன தெரியும்? வாய்ப்புகளும் சவால்களும் என்ன? எவ்வளவு முதலீடு தேவைப்படும். நம்மிடம் அதற்கான மூலதனம் இருக்கிறதா? இந்தத் தொழிலை ஆரம்பிக்க எத்தனை பேர் தேவை? அவர்களுக்கான வேலைகள் என்ன? தகுதிகள் என்ன? எவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும்? இழப்புகளையும் தோல்விகளையும் தாங்கிக் கொள்ளும் மனதிடம் நமக்கு இருக்கிறதா? தொழிலின் விஷன், மிஷன் என்ன? ஆகிய அனைத்தும் தெளிவாகிய பின்னரே தொழில் தொடங்குவதற்கான வேலையில் இறங்க வேண்டும். எப்போதுமே தொடக்கம் ஒரு சோதனைக் காலம் என்பதால் முதல் அடியே அகலக்கால் வைக்காமல் சிறிய அளவில் தொடங்குவது நல்லது. பிறகு வளர வளர தொழிலின் அளவையும் அமைப்பையும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

2. முதலீடும் பிசினஸும்!

பிசினஸுக்கான முதலீடு எவ்வளவு என்று மதிப்பிட்ட பிறகு, அந்தத் தொகையை எப்படித் திரட்டப் போகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். கையில் இருப்பு எவ்வளவு இருக்கிறது, கடன் எவ்வளவு வாங்க வேண்டும், கடனை எங்கு வாங்குவது, சொத்துகளை அடமானம் வைக்க/விற்க வேண்டி வருமா போன்ற கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும். பின்னர் முழுவதும் கடன்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அரசு வழங்கும் சிறப்பு கடன்களை குறைந்த வட்டிக்கு வாங்கி முதலீடு செய்யலாம், மற்றபடி தனிநபரிடமோ நிதி நிறுவனங்களிடமோ பிசினஸுக்கான முழு தொகையையும் கடனாக வாங்கி தொழில் தொடங்குவது சரியான முடிவல்ல. 

3. கடன் தவிர்க்க!

முடிந்த வரையிலும் கடன் வாங்கித் தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமலோ, தேவைக்கு மீறியோ கடன் வாங்கக் கூடாது. கடனை அடைக்க வேண்டும், வட்டி கட்ட வேண்டும் என்ற எண்ணம் உளைச்சலை ஏற்படுத்துவதோடு, உங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாது. எனவே, பிசினஸ் குறித்த திட்டம் தெளிவானதும் மூலதனத்தைத் தயார் செய்யும் வேலைகளில் இறங்க வேண்டும். மேலும் பிசினஸில் நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக கையிருப்பில் எப்போதும் கணிசமான தொகை இருக்க வேண்டும். அதன் மூலம் மேலும் மேலும் கடன் வாங்கும் சூழலைத் தவிர்க்கலாம் என்பதோடு மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையுடன் உற்சாகமாக பிசினஸ் செய்யலாம். 

4. அனுபவம் அத்தியாவசியம்!

தொடங்கப் போகிற பிசினஸ் குறித்த அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏற்கெனவே அந்தத் தொழில் சார்ந்த இடங்களில் சில ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் வெற்றிகரமாக பிசினஸை திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான ஆலோசனைகளை துறை சார்ந்த ஆலோகர்களிடம் கேட்டுப் பெற வேண்டும். சாதக பாதகங்களையும், வாய்ப்புகள் மற்றும் சவால்களை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எம்எஸ்எம்இ போன்ற அரசு அமைப்புகள் நடத்தும் தொழில்முனைவு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தொழில் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிசினஸ் தொடர்பான கருத்தரங்குகளில் கலந்துகொள்ள வேண்டும். 

செய்யும் தொழில் மீது ஆர்வமும் அதற்கான தொடர்ச்சியான அறிவுத் தேடலும் இருக்க வேண்டும். ஆனால் ஆர்வக்கோளாறாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையில் செயல்படுவதைத் தவிர்த்து, தெரியாத விஷயங்களைத் தெரிந்தவர்களிடமோ பிசினஸ் ஆலோசகர்களிடமோ கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி பெறும் ஆலோசனைகளையும் நன்கு யோசித்து செயல்படுத்த வேண்டும்.

5. சரியான தேர்வு!

தொழிலைத் தனியே செய்யப் போகிறீர்களா அல்லது கூட்டு முயற்சியில் தொடங்கப் போகிறீர்களா என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். எல்லோருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்காது. பிசினஸ் என்பது எப்போதும் கூட்டு முயற்சியில் உருவாவதுதான். எனவே கூட்டு வைப்பதாக இருக்கட்டும் அல்லது முக்கிய பொறுப்புகளுக்கு நிபுணர்களை நியமிப்பதாக இருக்கட்டும் பலமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும். தகுதியானவர் யாராக இருந்தாலும் தவறவிடக் கூடாது. அதேசமயம் தகுதியற்றவர் யாராக இருந்தாலும் அருகே சேர்க்கக் கூடாது. மேலும் ஆரம்பத்திலேயே நிறைய ஆட்களை வேலைக்கு நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழிலின் அளவுக்கேற்ப தேவையான சரியான ஆட்களை மட்டுமே வேலைக்கு வைக்க வேண்டும்.
6. சந்தையைப் படியுங்கள்! 

உங்கள் பிசினஸுக்கான சந்தையைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். சந்தையின் ட்ரெண்ட் மற்றும் தேவை எப்படி இருக்கிறது, உங்களுடைய வாடிக்கையாளர்கள் யார், போட்டியாளர்கள் யார் யார், அவர்களிடமிருந்து எப்படி நீங்கள் வேறுபடப் போகிறீர்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்ப தொழில் உத்திகளை வகுக்க வேண்டும். இவற்றிற்கு கணிசமான பொருட்செலவு ஆகும். அதற்காகவே சிறு தொழில்முனைவோர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிடுகிறார்கள். அப்படி இருந்தால் வளர்ச்சியைக் கனவில் கூட காண முடியாது. எப்போதும் தயாரிக்கும் பொருள் மக்களோடு தொடர்புடையவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிசினஸில் சரியான இலக்கை அடைவது மட்டுமின்றி, விற்பனையையும் பெருக்க முடியும்.

7. விளம்பரமும் பிராண்டும்!


விளம்பரம் என்பதும் விற்பனையை அதிகரிக்கும் காரணிகளில் முக்கியமானதொரு அம்சம்.  மக்கள் மனதில் ஒரு பொருள் பிராண்டாகப் பதியும் வரை அதற்கான விளம்பரங்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். தொழில்முனைவோர்கள் சில வருடங்களுக்குப் பணத்தைச் சேர்த்து வைக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு தொடர்ந்து தனது பொருளின் புரமோஷனுக்காக செலவு செய்ய வேண்டும். ஒரு சிறந்த பிராண்டை மக்களிடையே நீங்கள் உருவாக்கிவிட்டால், பிறகு நீங்கள் உங்கள் பொருளைப் பற்றி யாரிடமும் போய் சொல்ல தேவையில்லை, மக்களே அந்த வேலையைச் செய்வார்கள். ஆனால் என்ன சொல்கிறோம் எப்படி சொல்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் வேண்டும். மேலும் சொல்லும் விஷயத்தைத் தெளிவாகவும், புதுமையாகவும், தொடர்ச்சியாகவும் சொல்ல வேண்டும். 

8. தரமும் விலையும்!


எப்போதும் ஒரு பிசினஸானது அதனுடைய வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதனைத் தரம் மற்றும் விலையிலும் மட்டுமே மக்கள் கண்டடைவார்கள். எனவே மக்களின் வாங்கும் திறனுக்கேற்ற வகையிலும், பிசினஸ் நஷ்டமடையாமல் இருக்கும் வகையிலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேசமயம்,  தரத்தில் எந்தவித சமசரமும் இருக்கக் கூடாது. இதனை மனதில் கொண்டால் மக்கள் மனதை வெல்வதும், விற்பனை அதிகரிப்பதும் சுலபம். 

9. மேலாண்மை திறன்!

ஒரு தொழிலில் மிக முக்கியமானது நிர்வாகத் திறன். தொழிலை நடத்துபவருக்கு எத்தனை திறன்கள் இருந்தாலும் இது இல்லாவிட்டால் அந்த பிசினஸ் வெற்றியடைய வாய்ப்பில்லை.  

அதேபோல் திறமையான நபர்களை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே அக்கவுன்டிங், மேனேஜ்மென்ட், வாடிக்கையாளர்கள் நலச் சேவை ஆகிய துறைகள் ஒரு பிசினஸ்க்கு மிகவும் அவசியம். 

10. பொறுமையும் புத்திசாலித்தனமும்!

தொழிலைப் பொறுத்தவரை பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். பேராசையின் காரணமாக சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளை நோக்கி ஓடாமல், படிப்படியாக இலக்குகளை நிர்ணயித்து உழைக்க வேண்டும்.  

ஒரு தொழில்முனைவோர் தான் செய்யும் தொழில் சார்ந்த அரசின் மானியங்கள் மற்றும் வரிச் சலுகை திட்டங்களைப் பற்றி தெரிந்திருப்பதும் அவற்றைப் பயன்படுத்துவதும் தான் புத்திசாலித்தனம்.  

இந்த பத்து விஷயங்களை மனதில் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டால்,  தொழில் தொடங்கும் அனைவருமே தோல்வியைத் தவிர்த்து தொழிலில் வெற்றி நடைபோடலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக