View status

View My Stats

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

’ஆயுசு 100 வேண்டுமா?!’ - ஸ்வாமி சிவானந்தா சொல்லும் ரகசியம்

'நூறாண்டு காலம் வாழ்க... நோய்நொடி இல்லாமல் வாழ்க!’ என்ற பாடல் வரிகளைப்போல பலருக்கும் நூறாண்டுகள் வாழவேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும். இருந்தாலும், என்னவோ இந்தியர்களின் சராசரி வயது இப்போதுதான் 65-ஐ எட்டியிருக்கிறது. அதற்குள் எத்தனையோ டென்ஷன்கள், பிரச்னைகள், டெட்லைன் பிரஷர்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஆனால், இங்கு ஒருவர் 120 வயதைத் தாண்டியும் ஜாலியாக... அதேநேரத்தில், மிகவும் கட்டுக்கோப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவர் பெயர் ஸ்வாமி சிவானந்தா. வாரணாசியில் வசித்து வருகிறார். ஆகஸ்ட் 8,1896-ல் பிறந்தார் என்பது அவர் பாஸ்போர்ட் தரும் தகவல். அதன்படி, பார்த்தால் இன்றைய தேதிக்கு அவரது வயது 120. எப்படி இத்தனை ஆண்டுகள் வாழமுடியும் என்ற கேள்விக்கு அவரது பதில் என்ன தெரியுமா?
''உங்களாலும் 100 ஆண்டுகள் வாழமுடியும். என்னுடைய வாழ்க்கையின் ரகசியமாக நான் சொல்வது மூன்றே விஷயங்கள்தான். அவை யோகா, தனிமனித ஒழுக்கம், பிரம்மச்சர்யம். இவற்றை நீங்கள் சரியாகக் கடைப்பிடித்தால் உங்களுக்கும் வாழ்நாள் அதிகரிக்கும்'' என்கிறார்.
இதில் என்ன பெரிய ஆச்சர்யம்? நான் தினமும் அதிகாலை எழுகிறேன், உடற்பயிற்சி செய்கிறேன், எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருக்கிறேன். அப்படியானால்,  'நானும் 100 ஆண்டுகள் வாழமுடியும்' என்கிறீர்களா? கொஞ்சம் அவசரப்படாமல் இதை முழுதாகப் படியுங்கள்.
மேற்சொன்ன வழிமுறைகளோடு இன்னும் சில விஷயங்களையும் கடைப்பிடித்தால் போதும். அவைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவைகூட. மசாலா உணவுகளையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ சாப்பிடக் கூடாது. அடுத்து, மிக முக்கியமாக செக்ஸ் கூடவே கூடாது. இதை மட்டும் பின்பற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு நூறு ஆண்டுகள் கியாரண்டி. மசாலா உணவுகள் மட்டுமில்லாது பால், பழம்  ஆகியவற்றைக்கூட உண்ணமாட்டாராம். அவை எல்லாம் அலங்கார உணவுப் பொருட்கள் என்று சொல்லும் சிவானந்தா, வேகவைத்த பருப்பு மற்றும் காய்கறிகளை மட்டுமே உணவாகக்கொள்கிறார். தனது சீடர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதே இவரது பணி. அதோடு தனக்குத் தேவையான எல்லாவற்றையும் இவரே செய்துகொள்கிறாராம்.
தற்போது 120 வயதாகும் ஸ்வாமி சிவானந்தாதான் உலகிலேயே அதிக வயதானவராம். இதற்குமுன் ஜப்பானில் வாழ்ந்துவந்த ஜிரோயிமோன் கிமோரா, தனது 116 வயதில் 2013-ல் இறந்துவிட்டார். அதற்கடுத்து, இவர்தான். எனவே, கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பிக்க இருக்கிறார். இவருக்கு பாஸ்போர்ட் கொடுக்கும்போதுகூட, மிகப் பழமையான கோயில் குறிப்பேட்டில் இருந்து இவரது வயது சரிபார்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மூன்று தலைமுறைகளைத் தாண்டி வாழும் இவர், மின்சாரம், கார் போன்ற சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்தவராம். ''அப்போது எல்லாம் மக்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கினார்கள். போட்டி, பொறாமை, குற்றம் போன்ற உணர்வுகள் எல்லாம் இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது எல்லா மக்களும் நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லாமல் வாழ்கிறார்கள். போட்டி, பொறாமை, நேர்மையின்மை போன்றவை அதிகரித்துவிட்டன. அது எனக்குத் துயரமளிக்கிறது'' என்று வருந்துகிறார் இந்த ‘எவர்கிரீன் தாத்தா’வான ஸ்வாமி சிவானந்தா.
சரியாச் சொன்னீங்க தாத்தா..!
link 

நன்றி .... விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக