View status

View My Stats

வியாழன், 29 செப்டம்பர், 2022

Positivity development

 (ஒரு பொருளின்மீது படும்) ஒளி அதிகமாக ஆக நிழலே இல்லாமல் போகும். அதேபோல, உங்கள் positivity develop ஆக ஆக, நீங்கள் தகுதியை மட்டும் வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் பொருளெல்லாம் உங்களைத் தேடி அடையும். நீங்கள் அதை (முயற்சி செய்து) அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி (து) வரும். Hazrat Mama

சந்தேகங்கள்

 அய்யா, வணக்கம் 

எனக்கு மூன்று சந்தேகங்கள் இருக்கிறது அய்யா. உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனக்கு பதில் அனுப்புங்கள் அய்யா தயவுசெய்து..


1. என் மாணவர்களிடம் நான் இரகசியம் புத்தகத்தை பற்றி சொல்லிக்கொடுக்கையில் ஒரு மாணவன் கேட்டான். நமது எண்ணங்களை இந்த பிரபஞ்சம் கேட்கிறது என்றால் நமக்குள் எழும் எதிர்மறை மற்றும் கெட்ட எண்ணங்கள் பலிக்குமா? அப்படி வரும் எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது இல்லை எப்படி கையாள்வது ?


2. அய்யா , நீங்கள் சொன்னது போல் ப்ரஷர் மற்றும் சுகர் போன்றவை நோய்கள் கிடையாது அது ஆங்கில மருத்துவம் ஏற்படுத்தியது என்று சொன்னால் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர் கேட்கிறார் . அப்படி அது நோய் இல்லை என்றால் ஏன் மக்கள் இறக்கிறார்கள் ?


3. என் சக நண்பர்கள் இன்னும் வாழ்க்கையில் ஒரு நிலையில்லாத நிலைமையை நினைத்து வருந்துகிறார்கள். பிடித்த வேலையை செய்தால் வருமானம் குறைவாகிறது. வருமானம் வரும் என்றால் வேலை பிடிக்கவில்லை என்றும், எதிர்கால பயம், பொருளாதார பயம் , வாழ்க்கை பயம் இதனாலேயே நோய் பயம் , என்று 25 மற்றும் 27 வயதுகளிலே பயப்படுகிறார்கள்


இவர்களுக்கு என்ன பதில் அய்யா நான் சொல்வது.. ஒரு தெளிவான விளக்கம் இந்த கேள்விகளுக்கு சொல்லுங்கள் அய்யா. இதனால் பலபேர் நன்மையடைவார்கள். நன்றி அய்யா

[27/09, 10:59 am] Nagore Rumi / Mohd Rafee: 1. அழுத்தமாக இருந்தால் எல்லா எண்ணமும் பலிக்கும். நமக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நாம் பயப்படுவதுதான். அதாவதுநம் எதிர்மறை எண்ணங்கள்தான். 


2. சுகர் நோயால் மக்கள் இறப்பதற்கு முக்கியமான காரணமே டாக்டர்கள் கொடுக்கும் இன்சுலின் போன்ற  மருந்துகள்தான். முழுமையாக குணப்படுத்தப்பட்ட ஒரு சுகர் நோயாளியையாவது ஆங்கில மருத்துவம் காட்ட முடியுமா? சுகர் பற்றி யூட்யூபில் நல்ல வீடியோக்கள் உள்ளன. பார்க்கலாம். மனசாட்சி உள்ள டாக்டர் ஒருவர் மாம்பழ ஜூசைக் குடித்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து சுகர் டெஸ்ட் எடுத்துக்காட்டுகிறார். அப்போது சுகர் லெவல் குறைந்துள்ளது. 



3. நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். பணம் என்பது உடல் உழைப்பால் மட்டும் வருவதல்ல. அது ஒரு சின்ன ஆற்றல். நாம் ஒரு பெரிய ஆற்றல். அதை நாம் நம்மை நோக்கி இழுக்க வேண்டும். அதற்கு நம்மிடம் செல்வ மனநிலை வேண்டும். பணத்தை மதிக்காத மனநிலை வேண்டும். என் அடுத்த விநாடி நூலைப் படித்துப் பார்க்கவும். உலகில் இன்று வாழும் / வாழ்ந்த பல கோடீஸ்வரர்கள் ஒரு கருத்தைக்கொண்டு பணத்தை இழுத்தவர்கள். உதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ், அல்லது கேஎஃப்சி சிக்கன் முதலாளி. அல்லது ஹென்றி ஃபோர்டு. அவர்களது வாழ்க்கையை ஆழமாகப் படிக்கச் சொல்லுங்கள். அல்லது என் அடுத்த விநாடி, இந்த விநாடி, சிலையும் நீ சிற்பியும் நீ போன்ற நூல்களை வாசிக்கச் சொல்லுங்கள்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இன்றைய சிந்தனை : தொழுவதும்

ஒருமுறை எங்கள் ஞானாசிரியர் மர்ஹும் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள், “கொஞ்ச நாளைக்கு தொழுதுவிட்டு துஆ கேட்காமல் இருக்கப் பழகுங்கள்” என்று சொன்னார்கள். 

தொழுதுவிட்டு துஆ கேட்காமல் இருப்பதா? கேட்டால் என்ன தவறு என்றெல்லாம் யோசித்தேன். ஆனாலும் குரு சொன்ன வார்த்தையை மீறக்கூடாது. எனவே அப்படியே செய்தேன். 

என்ன ஆச்சரியம்! நான் கேட்காமலேயே என் பிரச்சனைகளெல்லாம் தீர ஆரம்பித்தன! கேட்டிருந்தால்கூட அவை தீர கொஞ்சம் காலமாகியிருக்கும்போல. இது எப்படி என்று யோசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. 

தொழுவது கடமை. கலிமாவுக்குப் பிறகான உடல் ரீதியான முதல் கடமை. கடமையைச் செய்வதற்கு பிரதிபலனை யாராவது எதிர்ப்பார்ப்பார்களா?! 

இரண்டு நிமிஷத்தில் ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு இருபது நிமிஷத்துக்கு எனக்கு இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்டுக்கொண்டிருப்பதில் என்ன நியாயம் உள்ளது?

தொழுகை என்ன கொடுக்கல் வாங்கல் வணிகமா? இதோபார் இறைவனே, உனக்கான கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன். எனக்கு இன்னின்ன பிரச்சனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நீ தீர்த்துவைக்க வேண்டும். ஏனெனில் நான் இரண்டு ரக்’அத் தொழுதுவிட்டேன்!

அப்படித்தான் நான் அத்தனை ஆண்டுகளாகச் செய்துகொண்டிந்தேன்! தொழுகையை தொழுகைக்காக மட்டும் செய்ததில்லையே! கேட்டால்தான் அல்லாஹ் கொடுப்பானா? உள்ளத்தில் உள்ளதையெல்லாம் அறிந்தவனல்லவா? 

அப்படியானால் இறைவனிடம் எப்போதுதான் கேட்பது? மனம் வேதனையில், பிரச்சனையில் இருக்கும்போது பிரத்தியேகமாகக் குறைந்தது இரண்டு ரக்’அத் தொழுது விட்டுக் கேட்கலாமே! தன்னை நோக்கி உயர்த்தப்பட்ட கைகளை வெறும் கையாக அனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிமொழியே உள்ளதே!

இது ரொம்ப நுட்பமான உளவியல் ரீதியானது. நான் சொல்வதுதான் சரி என்று சொல்லமாட்டேன். ஆனால் ஹஸ்ரத்மாமா சொன்னபடி செய்து பலன் அடைந்த என் அனுபவம் இது. 

இறைவன் கொடுப்பவன். அவன் கொடுப்பான். அவன் கொடுத்தால் நல்லது. ஒருவேளை கொடுக்காவிட்டால் அது நமக்கு இன்னும் நல்லதாக இருக்கும். ஏனெனில் எதை எப்போது கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கக்கூடாது என்று அவன் அறிவான். எனவே நம் தொழுகை தொழுகையாக மட்டும் இருந்தால் சிறப்பு.

திங்கள், 7 மார்ச், 2022

கற்பனை

 கற்பனை என்பது நிஜம்தான். திரைபோடப்பட்ட நிஜம். திரையைக் கிழித்துவிட்டு கற்பனை செய்யுங்கள். 

பெரிய காரியத்தை அலட்சியப்படுத்த முடியுமெனில் அதை எளிதாகப் பெறமுடியும். அப்படிச் செய்ய கற்பனையின் ஆற்றல் வளர வேண்டும். 

மனித மனதால் எதை கற்பனை செய்ய முடியவில்லையோ அதை அடைய முடியாது. 

எந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை மன ஓர்மையுடன் செய்யவேண்டும். 

அதற்கு அந்த வேலையில் ஆர்வம், உற்சாகம் எல்லாம் வேண்டும். 

உற்சாகம் வருவதற்கு முதலில் கற்பனை வேண்டும். எனவே கற்பனையில்தான் நாம் தொடங்கவேண்டும். 

நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும். 

கற்பனை செய்யும்போது இல்லாத பொருளை இருப்பதாகவே செய்யவேண்டும். 

இதற்கு என்ன அர்த்தமெனில், இதுவரை நாம் அனுபவித்து வந்த இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணம், இல்லாத, நடக்காத ஒன்றை இருப்பதாகவும் நடப்பதாகவும் நாம் நினைத்ததுதான். 

நினைவாற்றல் வளர்ச்சியடைந்திருந்தால் இது நன்றாக விளங்கும். எந்த நேரத்தில் நினைத்த எந்த நினைப்பு எந்த விளைவை உண்டாக்கி இருக்கிறதென விளங்கும். 

Supernatural Forces என்று சொல்லப்படும் அற்புத சக்திகள் அனைத்துமே கற்பனைதான். ஆனால் அது நம்மைப் பொறுத்தவரை நிஜமாக மாறிவிடும். அப்போதுதான், நம்மைச்சுற்றி, நமக்குள்ளேயே இவ்வளவு சக்திகள் உள்ளனவா என்பது விளங்கும். 

எந்தெந்த வகையிலெல்லாம் இச்சக்திகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எல்லையே கிடையாது. நம்முடைய கற்பனையை கிண்டல் செய்கிறவனும் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த கற்பனையைத்தான் செய்துள்ளான்.

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து

 நரம்பு, உடம்பு, தோல், சதை, முக்கோண எலும்பு, நாற்கோண எலும்பு – [இப்படியெல்லாம் கடினமான அமைப்புடன்] மனிதனை மசால் வடை சாப்பிடவா படைத்தான் ஆண்டவன்?

நீ நானாக மாறும் வரை நீ என்னைச் சேர்ந்தவனல்ல. நீ நானாக மாறிவிட்டால் நீயும் நானும் ஒன்று. எனக்கு யார் குருவோ அவரே உனக்கும் குரு. நீ எனக்கு மேலே போய்விட்டால் நீ எனக்கு குருவாகிவிடுவாய். 

யாரையும் கட்டுப்படுத்தி எனக்குக் கீழேதான் வைக்கவேண்டும் என்றெல்லாம் நம்ம சிஸ்டத்தில் இல்லை. உன்னை தூக்கிக்கொண்டே வருகிறேன். என் அளவுக்கு நீ வந்துவிட்டால் என்னையும் உன்னையும் நமக்கு மேலே உள்ளவர்கள் தூக்குவார்கள்.

எவ்வளவுதான் நம் சக்தியை நாம் மறைத்தாலும் அது வெளிவரத்தான் செய்யும். கிராம்பையும் கருவாட்டையும் மறைக்க முடியாது. 

ஒரு பொருளை அடையும் முன்னர் எந்த ஆற்றல் / மனநிலை இருந்ததோ, அதே ஆற்றல் / மனநிலை அது வந்த பிறகும் இருக்க வேண்டுமென்றால் அந்த பொருளைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது. 

ஏன் அப்படி இருக்கவேண்டும்? அந்தப் பொருளின் தூண்டுதலால் உங்கள் எண்ண ஓட்டம் மாறிவிடக்கூடாது. (நீங்கள் நினைத்த) பணம் வந்த பிறகுகூட அதை மறக்கிறமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் என்ன நன்மை? அந்த ஆற்றல் இருப்பதனால் மீண்டும் மீண்டும் பணம் வந்துகொண்டே இருக்கும். 

சில பொருள சின்னதாக நீங்கள் நினைத்ததனால் அது உங்களை வந்தடைந்தது. சில பொருளை பெரிதாக நீங்கள் நினைத்ததால் அது உங்களை வந்தடையவில்லை. திரும்பத் திரும்ப நினையுங்கள். அது சின்னதாகிவிடும். பின்பு உங்களை வந்தடையும். 

ஆண்டவனுடைய கஜானாவில் பட்டத்துக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் வித்தியாசமில்லை. நீங்கள்தான் வித்தியாசப்படுத்துகிறீர்கள்.  

பத்து ரூபாய் பெற்றுக்கொண்டாலே கைகால் உதறுகிறது என்றால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கேட்டால் கொடுப்பானா? நீங்கள் பார்க்கிற பார்வை, பேசும் பேச்சு இதிலேயே பணத்தை வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும். 

முதல் நோட்டு மாதிரியே கடைசி நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் பரக்கத் (செல்வ வளம்) [ஐயையோ இன்னும் ஒரு நோட்டுதானே உள்ளது, இதுவும் கடைசி நோட்டாயிற்றே என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் உங்களுக்கு வறுமை மனநிலை உள்ளது என்று அர்த்தம். 

முதல் நோட்டை செலவு செய்ய வெளியே எடுக்கும்போது எந்த மனநிலை இருந்ததோ அதே மனநிலை கடைசி நோட்டை உருவும்போதும் இருக்கவேண்டும். அதுதான் மீண்டும் மீண்டும் பணத்தை உங்களை நோக்கி இழுக்கக்கூடிய செல்வ மனநிலை].  

ஒரு சக்தி நம்மிடம் இல்லை என்றால் அது நம்மிடம் இல்லை என்று பொருளல்ல. அந்த சக்தியை இதுவரையிலும் பயன்படுத்தவில்லை – அதை நாம் இன்னும் உணரவில்லை என்று பொருள்.

நம்மிடம் அறிவிருக்கிறது என்று காட்டுவதும் நம்மிடம்….உள்ளது என்று வழித்துக்கொண்டு காட்டுவதும் ஒன்று. 

வாழ்வில் சில நேரங்களில் கான்செண்ட்ரேஷன் பயன்படுத்த வேண்டும். இன்னும் சில நேரங்களில் ரிலாக்சேஷன் பயன்படுத்த வேண்டும். இரண்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது. 

பக்குவம் உள்ளவன் மாதிரி நடித்தால் கொஞ்ச நாளில் பக்குவம் வந்துவிடும். தொழுகையில் இஹ்லாஸ் உள்ள மாதிரி நடித்தால் இஹ்லாஸ் வந்துவிடும். கோபம் உள்ள மாதிரி நடித்தால் கோபம் உண்மையிலேயே வந்துவிடும். எனவே மனம் கனிந்தவன் நினைத்ததெல்லாம் துஆவாக மாற ஆரம்பிக்கும். 

நாம் உடலை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் உள்ளம் சுத்தமாகாது. எனவே நாம் தொடங்கவேண்டிய செண்ட்ரல் பாய்ண்ட் உள்ளம்தான். எனவே எண்ணத்தை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

மனதில் கண்ட்ரோல் வந்தால் அது தானாகவே வெளியில் வரும். செயலில் வரும். இதனால்தான் ஒரு மனிதன் யோசிக்கத் தொடங்கியவுடன் சாய்ந்து கொண்டிருந்தவன் நேராக உட்கார ஆரம்பிக்கிறான். படுத்திருப்பவன் உடனே எழுந்துகொள்கிறான். பாசிடிவ் எண்ணம் வந்த உடனேயே செயலில் இத்தகைய மாற்றங்கள் எற்பட்டுவிடும். 

மாறாக, நெகடிவ் எண்ணம் வந்தால், நேராக உட்கார்ந்திருந்தவன் சாய்ந்து கொள்வான். ஒரு பேச்சு கேட்டுக்கொண்டிருக்கும்போது உட்கார்ந்திருப்பவன் லேசாக சாய ஆரம்பித்தால் அவனுக்குள் நெகடிவிட்டி புக ஆரம்பித்துவிட்டது என்று பொருள். 

சாய்ந்திருப்பவன் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தால், அது நெகடிவ்வான சூழ்நிலையாக இருந்தாலும் அவனுக்குள் பாசிட்டிவிட்டி வந்துவிட்டது என்று அர்த்தம்.

இதிலிருந்து ஒரு கோட்பாட்டை உருவாக்கலாம். நேராக உட்கார்ந்திருப்பவனுக்கு குழப்பம் வராது. அல்லது குழப்பமடைந்த மனதைத் தெளிவு படுத்துவதற்கு நேராக உட்கார வேண்டும். இது ஒரு நடிப்பு. இதை மனம் செய்யவிடாது. சாயச் சொல்லும், படுக்கச் சொல்லும். ஆனால் சிரமம் பாராமல், மனதைத் தளரவிடாமல் உட்கார்ந்தால் மனம் சிறிது நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளும். 

ஒரு விஷயம் பற்றி நாம் நினைப்பதற்கும், மனதுக்குள் ஒரு எண்ணம் தானாக புகுவதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்களாக நினைத்தால் நேராக உட்கார்ந்திருப்பீர்கள். கரெக்ட்டாகப் பேசுவீர்கள். எதிர்மறை எண்ணங்களை உள்ளே விட மாட்டீர்கள். நாம் செயலை கவனிக்காமல் செய்வதுபோல, மனதும் கவனிக்காமல் எண்ணுகிறது. எந்த எண்ணத்தையும் தனக்குத்தானாகவே நுழைய விடக்கூடாது. 

தலையாய கோளாறு dominating feeling-ல் இருந்துதான் தொடங்குகிறது. எனவே உங்களை ஆட்டி வைக்கும் உணர்ச்சி எது என்று பார்க்க வேண்டும். அது செக்ஸா, கௌரவமா, பொருளாதார பாதுகாப்பா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 

Dominating feeling என்றால் என்னவென புரிகிறதா? எந்த உணர்ச்சி இருந்தால் வாழ முடியுமோ, எந்த உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ முடியாதோ அதைச் சொல்கிறேன். அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். இது மிகமிக அவசியம். சரி, இது எப்படி இருக்க வேண்டும்?

முதலில் குடும்பத்தில் செல்வாக்கு ஏற்பட வேண்டும். மனைவியைத் திருப்திப் படுத்த வேண்டும். பிள்ளைகளைத் திருப்திப் படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தை அரவணைத்துக் கொண்டே போகவேண்டும். அந்த மகிழ்ச்சியும் பரக்கத்தும் சமூக வாழ்க்கையில் வரும். 

ஆசைப்பட்டுக்கொண்டே இருங்க. அது உண்மையாக இருந்தால் அது உண்ணும் போதும், உறங்கும் போதும், மனைவியைக் கொஞ்சும்போதும் வரவேண்டும். ஒரு நாளின் முதல் எண்ணமும் கடைசி எண்ணமும் ஒன்றாக இருக்குமானால் ஆசை இருப்பதாக அர்த்தம். எண்ணத்தின் வலிமையைப் பொறுத்து சீக்கிரமாகவோ தாமதமாகவோ கிடைக்கும்.

சிகார் லைட்டைக் கொளுத்தாமலிருந்தால் அது வீணாகாது. உங்கள் கார் ஓடாமலிருந்தால் டயர் தேயாது. ஆனால் மனம் அப்படியல்ல. சும்மா இருந்தால் எல்லா நெகட்டிவ்வான விஷயங்களும் வளரும்.

எங்கள் ஞானாசிரிய ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து

 செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் / Dos and Don’ts

Don’ts

1. நான் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு வருகின்ற எண்ணங்களை வைத்து எனக்கு உதாரணம் காட்டுவதோ, ஒத்து ஊதுவதோ கூடாது. 

2. ஒருவரிடம் கேட்கும்போது இன்னொருவர் அதற்கு பதில் சொல்லக்கூடாது.

3. என்னைப் பாராட்டிப் பேசுவது கூடாது.

4. ஆச்சரியப்படக்கூடாது, அதிகமாக  சந்தோஷமும் படக்கூடாது.

5. அவசரப்படக்கூடாது.

6. எரிச்சல் / பொறாமை கூடாது

7. தக்க காரணம் இல்லாமல் எந்தச் செயலையும் [பாதியில்] விட்டுவிடக்கூடாது. அலுப்பு காரணமாக விட்டால் போச்சு. 

8. எந்த விளைவுக்கும் – நல்லதோ கெட்டதோ – இதுதான் காரணமென்று முடிவு செய்துவிடக் கூடாது. 

9. குரு வந்த பிறகு, சொந்த புத்திக்கு இடம்தரக்கூடாது. 

10. எதிர்பார்ப்பு கூடாது.

11. கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்காமல் இருக்கக்கூடாது. அந்தப் பணத்தை rotation-லும் விடக்கூடாது. 

12. Bed-coffee, tea எல்லாம் குடிக்கக்கூடாது.

13. நிர்வாணமாகக் குளிக்கக்கூடாது.

14. கையை நீட்டக்கூடாது. அது திருட்டு அல்லது பிச்சை.

15. ’என்னவோ நினைத்தேன்’ என்பது போலெல்லாம் பேசக்கூடாது. 

16. ஒரு காரியத்தில் வெற்றியடைய நேர்மறையான உணர்வைத்தான் உந்து சக்தியாக வைக்கவேண்டும். பொறாமை, பழி உணர்ச்சி போன்ற எதிர்மறை எண்ணங்களை வைக்கக்கூடாது. 

17. சாப்பிடும்போது பேசக்கூடாது.

18. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் கூடாது.

19. தொட்டுப்பேசக்கூடாது. அது பெண்மை. 

20. Rationlaisation [செய்த செயலை நியாயப்படுத்துவது], Projection [ஒருவர்மேல் கொண்ட எதிர்மறை உணர்ச்சியை, வெறுப்பை, கோபத்தையெல்லாம் இன்னொருவர் மேல் காட்டுவது], Inhibition [இது கூடாது, அது கூடாது என்று நம்மை நாமே தடை செய்துகொள்ளும் தேவையற்ற தடையுணர்ச்சி] – இம்மூன்றும் [நமது பாதையில்] கூடாது. 

21. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனுக்குடன் செய்துவிடக்கூடாது.

22. பேசும்போது கையசைப்பது, சாப்பாட்டுத் தட்டில் உள்ள அப்பளத்தை எடுத்து கடித்துப் பார்ப்பது, இனிப்பை எடுத்து சுவைத்துப் பார்ப்பது – இதெல்லாம் கூடாது. 

23. அரித்தால் உடனே சொரியக்கூடாது. அரிப்பு போகாவிட்டால் மெதுவாக, உணர்ந்து சொரியலாம். இப்படியெல்லாம் செய்தால் நம்மை தொந்தரவு செய்வதை நம்முடைய Conscious விட்டுவிடும். Sub-conscious வேலை செய்ய ஆரம்பிக்கும். 

24. பேசும்போது நம் கண் அலையக்கூடாது. எதிராளியின் கண்ணையும் அலையவிடக்கூடாது.

25. தன்னை மறந்து சிரிப்பதும், அரட்டையடிப்பதும் கூடாது. அது வெற்றியின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதாகும்.

26. பேசும்போது, ‘ஆனால், ‘வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது.

27. ஒரு காரியத்தை ஆரம்பித்து அரைகுறையாக நிறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் அது மற்ற காரியங்களையும் முடிக்க விடாமல் செய்துவிடும்.

28. நெருங்கிய நண்பர்களிடம் பேசினாலும், அடுத்தவர்கள் மீது பழிகூறிப் பேசக்கூடாது.

29. வேதனையான, வெறுப்பை உமிழும் உணர்வுகளையெல்லாம் [unpleasant emotions] வெளிப்படுத்தக்கூடாது. 

30. லாடம் கிடைத்தவுடன் குதிரை வாங்க நினைக்கக்கூடாது. [புறத்தூண்டுதலின் பேரில் ஒரு ஆசையை வளர்த்துக்கொள்ளக்கூடாது].

31. நேரம் கெட்ட நேரத்தில் ஃபோன் பேசுவது, விஜயம் செய்வதெல்லாம் கூடாது. அது தோல்வியைத்தரும். 

32. அடுத்தவர் பணம் எண்ணும்போது பார்க்கக்கூடாது. அது நமக்கு உரிமையில்லாத அழகான பெண்ணை ரசிப்பதைப் போன்றது. நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடும்.

33. கடைப்பேச்சை வீட்டுக்கும், வீட்டுப்பேச்சை கடைக்கும் கொண்டு போகக்கூடாது. [கடை என்பது அலுவலகம் / தொழிலுக்கான குறியீடு].

34. ஒரு விஷயத்தில், ‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று அடுத்தவருடைய கருத்தைக் கேட்கக் கூடாது. 

35. மக்களிடம் காட்டுவதற்காக செலவு செய்யக்கூடாது.

36. மனைவிக்கு ஆலோசனை வார்த்தையால் சொல்லக்கூடாது. 

37. மகிழ்ச்சி வருவது தவறல்ல. ஆனால் பத்து வினாடிகளுக்கு மேல் அதை அனுமதிக்கக்கூடாது.

38. உணர்ச்சிவசப்படாமல் / ரொம்ப சந்தோஷப்பட்டுவிடாமல் வரவிட்ட பணத்தை ஏற்கனவே போட்ட திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும். கூடுதலாக, புதிதாக எதுவும் செய்யக்கூடாது.

39. டென்ஷனாக உள்ளபோது அசையக்கூடாது.

40. இஸ்முகளை / மந்திரங்களை மெட்டு போட்டும், அர்த்தம் பார்த்தும் ஓதக்கூடாது. 

41. அடுத்தவரின் சாப்பாட்டைப் பார்க்கக் கூடாது.

42. குழப்பத்தோடு வெளியில் போகக்கூடாது. [அதை நீக்கிவிட்டுப் போகலாம்].

43. எதற்கெடுத்தாலும் ஆண்டவனைக் கூப்பிடக்கூடாது. அது அவனுக்கே சலிப்பை ஏற்படுத்தும்.

44. வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி உற்சாகத்தோடு வெளியில் சொல்லக்கூடாது. அடுத்த காரியம் நடக்காது.

பேச்சு எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவை

 எதைப்பேச வேண்டுமோ, எப்படிப் பேசவேண்டுமோ அதை அப்படி, தாமதிக்காமல் பேசிவிடவேண்டும்.

2. மனித உறவுக்கு ஆதாரம் பேச்சும் பேசும் முறையும்தான்.

3. எதையும் செய்யலாம், முடியும். ஆனால் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

4. நெருங்கிய நண்பரோடு பேசும்போதுகூட அடுத்தவரைக் குறைகூறி பேசக்கூடாது.

5. பேச்சு உங்கள் நோக்கத்தைத் தூண்டவோ அழிக்கவோ செய்யலாம். எனவே தேவையற்ற பேச்சைத் தவிருங்கள். பேசினால், ஒரு நோக்கத்தோடுதான் பேசவேண்டும். விதிவிலக்கு: மக்களுக்காக பேசிக்காட்டலாம். நட்புக்காக சிகரட் பிடிப்பவன் வெறும் புகையைத்தான் ஊதுவான். 

6. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எம்மிடம் அழுத்தமான கணக்கு உண்டு என்கிறது திருமறை.

7. சமுதாய வாழ்வுக்கு முதுகெலும்பு பேச்சாகும். எனவே எப்போது பேச்சு சரியாக வருகிறதோ அப்போது வாய்ப்பும் தானாக வரும். 

8. அதிகமாகப் பேசுவது ஒரு பலவீனம். [பேசுவதைவிட வேறு காரணம் அதற்கு இருக்கும்.] எனவே ஒருவன் பேசுகிறான் என்பதைவிட, ஏன் பேசுகிறான் என்பதுதான் முக்கியம். 

9. குறிக்கோளில்லாமல் வாழ்பவன்தான் அதிகமாகப் பேசுகிறான்.

10. தங்கு தடையில்லாமல், தெளிவாகப் பேசுவது ஒரு சக்தியாகும். 

11. வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் வரும்போது வெளியே சொல்லாமலிருந்தால், சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று தெரியவரும்.

12. பேச்சில் ஏற்படும் சந்தோஷம் முன்னேற்றப் பாதையில் நமக்கொரு தடைக்கல்லாகும். அதில் ஏற்படும் ஒரு ரகசிய சந்தோஷம் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகும். நாலு பேர் அவன் பேச்சைக் கேட்பதன் மூலம் அந்த மனப்பான்மையை அவன் மாற்றிக்கொள்கிறான். 

13. நீங்கள் என்னிடம் பேசும்போது கேட்டால் சொல்லவேண்டுமே தவிர, மகிழ்ச்சி இல்லாமல் சொல்லவேண்டும். சொல்லும்போதுகூட மகிழ்ச்சி வந்துவிடக்கூடாது. 

14. மக்கள் பேசுவதற்கு இரண்டு காரணங்கள். 1. வளர்ந்துவிட்டேன் என்று காட்டும் ஒரு உயர்வு மனப்பான்மை. 2. அடுத்தவரிடமிருந்து பரிவை எதிர்பார்க்கும் குணம். இரண்டுமே வீண்.

15. நமது நோக்கத்துக்குத் தொடர்பில்லாத, அங்குமிங்கும் குதிக்கின்ற, எல்லா வகையான சிந்தனைகளும் உள் பேச்சுதான். இது கூடாது. 

16. ஒருவன் குனிந்த பின்பு அவன் கவனம் நம்மிடம் இல்லை என்று பொருள். அப்போது அவனிடம் பேசக்கூடாது. 

17. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் ….வழித்துக் காட்டுவது மாதிரி. 

18. நாம் அடுத்தவரைக் குறை கூறுவதற்கு மூன்று காரணங்கள். 1. நமக்கு வேறு வேலை இல்லை. 2. நம் குறைகளை நாம் பார்க்கவில்லை. 3. அவன் கெட்டுத்தான் போகவேண்டும் என்ற உள் மன ஆசை. அவன் வளர்ந்தால் முதலில் நாம்தான் பொறாமைப்படுவோம். 

19. வெயில் கொடூரமாக அடிக்கிறது என்று சொல்வதால் அதன் கொடூரம் குறையப்போகிறதா? சமுதாய சக்தியில் பெரும்பகுதி பேச்சில்தான் வீணாகிறது. 

20. அடுத்தவரின் கண்களைப் பார்த்துத்தான் பேசவேண்டும். நமது பார்வை அவரது பார்வைக்கு சற்று மேலே இருக்க வேண்டும்.

21. பேசும்போது ‘ஆனால், ‘அது வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது. 

22. எவன் பேச்சை சுத்தமாகப் பிசிறின்றிப் பேசுகிறானோ அவன் வாழ்வும் பிசிறின்றி சுத்தமாக ஓடும்.

23. பேசுவதற்கு முன்பு யோசிக்கவேண்டும், பேசிய பின்பு அல்ல. பேசுவதற்கு முன்பு பேச்சை கவனித்துப் பேசவேண்டும். பேசிவிட்டு, இப்படிப் பேசிவிட்டோமே என்று தூங்காமல் இருக்கக் கூடாது. பேசிவிட்டு வாபஸ் வாங்கக்கூடாது. பேசிவிட்டு ‘சாரி’ சொல்லக்கூடாது. சுற்றி வளைத்துப் பேசக்கூடாது. அதற்கு மேலாக, ஏன் இதைப்பேசுகிறோம் என்று புரிந்து பேசவேண்டும். பேச்சு இடையில் தடைப்பட்டால், அதைக்கவனித்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும். இப்படிச் செய்தால்தான் எண்ணிய லட்சியத்தை அடைய முடியும்.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

வெளியே போய் ஆர அமர அமர்ந்து பேசிவர நாம் ஆசைப்படுகிறோம். இது சாப்பிட ஒன்றுமில்லை என்பதற்காக வெளியே போய் மண்ணை அள்ளித் தின்பதைப் போன்றது. சாப்பிட ஒன்றுமில்லாமல் இருப்பதால் வயிறு கெட்டுப்போகாது. ஆனால் மண்ணை அள்ளித் தின்றால் கெட்டுப்போகும். 


ஏன் உனக்கென்ன பிரச்சனையா இல்லை? அதைப்பற்றி திரும்பத் திரும்ப யோசி, ஆராய்ந்து பார். எதைப்பற்றியாவது சிந்தித்துப் பார். சிந்திக்க வரவில்லையா? சிந்தனை வராமலிருப்பதற்குக் காரணமென்ன என்பதைப்பற்றி சிந்தி.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஆன்மிகப் பயிற்சி

ரியாலத் (ஆன்மிகப் பயிற்சி) பண்ணுவது புதிய பொருளாக மாறுவதற்கல்ல. 

நமக்கு உள்ளே உள்ளதை வெளியே கொண்டுவரத்தான். 

செங்கல்லைத் தேய்த்தால் கண்ணாடியாகாது. 

கருங்கல்லைத் தேய்த்தால்தான் மாறும்.

ஹஸ்ரத் மாமா

 நீங்கள் நினைத்ததனால் அது உங்களை வந்தடைந்தது. சில பொருளை பெரிதாக நீங்கள் நினைத்ததால் அது உங்களை வந்தடையவில்லை. திரும்பத் திரும்ப நினையுங்கள். அது சின்னதாகிவிடும். பின்பு உங்களை வந்தடையும். ஆண்டவனுடைய கஜானாவில் பட்டத்துக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் வித்தியாசமில்லை -- ஹஸ்ரத் மாமா

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 குழப்பம், பயம் வந்தால் எப்படி மாற்றுவது ? 

குழப்பமோ பயமோ வந்தால் உங்கள் posture-ஐ / இருக்கை நிலையைக் கொஞ்சம் மாற்ற வேண்டும்.  

பல் வலிக்காரன் பல்வலி பற்றியே யோசிப்பதால் அது கூடுவதைப் போலத்தான் பயமும் குழப்பமும். 

சில அச்சம் உள்ளதை உள்ளமாதிரிக் காட்டுவதற்காக வந்திருக்கலாம். 

சில குழப்பம் தெளிவை ஏற்படுத்துவதற்காக வந்திருக்கலாம்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 மனிதனை மனிதனாக ஆக்குவதே அவனது கவலையும் பொறுப்புணர்ச்சியும்தான். கவலையும் பொறுப்பும் இல்லாத மனிதனின் மனம் ஒன்றுமில்லாமல் blank ஆக இருக்கும். Blank ஆக உள்ள மனதில் என்ன வரும்? எதிர்மறைச் சிந்தனைகள்தான் வரும். அதற்குத்தான் அரபியில் ஷைத்தானியத் என்று பெயர்.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஒருநாள் ஹஸ்ரத் மாமா சொன்னார்கள்:


கோபம் என்பது ஒரு நி’அமத் (அருட்கொடை) ஆகும்.


எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். கோபம் ஒரு அருட்கொடையா? கோபப்படக்கூடாது என்றுதானே எல்லாரும் சொல்வார்கள். ஆனால் மாமா ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!


எப்படி கோபம் ஒரு அருட்கொடையாகும் என்று கேட்டோம். 


கோபம் வந்தால்தானே கோபத்தை அடக்க முடியும்? கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பு எப்போது வருகிறது? கோபம் வரும்போதுதானே? 


நீ காட்டிலே போய் தனியாக இருந்தால் உனக்குக் கோபம் வருமா? 


சமுதாயத்தில், குடும்பத்தில் இருக்கும்போதுதானே அந்த வாய்ப்பு வரும்? 


அப்படியானால் கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பை கோபம்தானே கொடுக்கிறது? அதனால்தான் கோபம் ஒரு நிஅமத் (அருட்கொடை) என்று சொன்னேன் என்றார்கள்!


கோபம் ஒரு அருட்கொடையோ இல்லையோ ஹஸ்ரத் மாமா எங்களுக்குகெல்லாம் கிடைத்த ஒரு அருட்கொடைதான்!