View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து

 நரம்பு, உடம்பு, தோல், சதை, முக்கோண எலும்பு, நாற்கோண எலும்பு – [இப்படியெல்லாம் கடினமான அமைப்புடன்] மனிதனை மசால் வடை சாப்பிடவா படைத்தான் ஆண்டவன்?

நீ நானாக மாறும் வரை நீ என்னைச் சேர்ந்தவனல்ல. நீ நானாக மாறிவிட்டால் நீயும் நானும் ஒன்று. எனக்கு யார் குருவோ அவரே உனக்கும் குரு. நீ எனக்கு மேலே போய்விட்டால் நீ எனக்கு குருவாகிவிடுவாய். 

யாரையும் கட்டுப்படுத்தி எனக்குக் கீழேதான் வைக்கவேண்டும் என்றெல்லாம் நம்ம சிஸ்டத்தில் இல்லை. உன்னை தூக்கிக்கொண்டே வருகிறேன். என் அளவுக்கு நீ வந்துவிட்டால் என்னையும் உன்னையும் நமக்கு மேலே உள்ளவர்கள் தூக்குவார்கள்.

எவ்வளவுதான் நம் சக்தியை நாம் மறைத்தாலும் அது வெளிவரத்தான் செய்யும். கிராம்பையும் கருவாட்டையும் மறைக்க முடியாது. 

ஒரு பொருளை அடையும் முன்னர் எந்த ஆற்றல் / மனநிலை இருந்ததோ, அதே ஆற்றல் / மனநிலை அது வந்த பிறகும் இருக்க வேண்டுமென்றால் அந்த பொருளைத் திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது. 

ஏன் அப்படி இருக்கவேண்டும்? அந்தப் பொருளின் தூண்டுதலால் உங்கள் எண்ண ஓட்டம் மாறிவிடக்கூடாது. (நீங்கள் நினைத்த) பணம் வந்த பிறகுகூட அதை மறக்கிறமாதிரி இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் என்ன நன்மை? அந்த ஆற்றல் இருப்பதனால் மீண்டும் மீண்டும் பணம் வந்துகொண்டே இருக்கும். 

சில பொருள சின்னதாக நீங்கள் நினைத்ததனால் அது உங்களை வந்தடைந்தது. சில பொருளை பெரிதாக நீங்கள் நினைத்ததால் அது உங்களை வந்தடையவில்லை. திரும்பத் திரும்ப நினையுங்கள். அது சின்னதாகிவிடும். பின்பு உங்களை வந்தடையும். 

ஆண்டவனுடைய கஜானாவில் பட்டத்துக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் வித்தியாசமில்லை. நீங்கள்தான் வித்தியாசப்படுத்துகிறீர்கள்.  

பத்து ரூபாய் பெற்றுக்கொண்டாலே கைகால் உதறுகிறது என்றால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கேட்டால் கொடுப்பானா? நீங்கள் பார்க்கிற பார்வை, பேசும் பேச்சு இதிலேயே பணத்தை வாங்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும். 

முதல் நோட்டு மாதிரியே கடைசி நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் பரக்கத் (செல்வ வளம்) [ஐயையோ இன்னும் ஒரு நோட்டுதானே உள்ளது, இதுவும் கடைசி நோட்டாயிற்றே என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் உங்களுக்கு வறுமை மனநிலை உள்ளது என்று அர்த்தம். 

முதல் நோட்டை செலவு செய்ய வெளியே எடுக்கும்போது எந்த மனநிலை இருந்ததோ அதே மனநிலை கடைசி நோட்டை உருவும்போதும் இருக்கவேண்டும். அதுதான் மீண்டும் மீண்டும் பணத்தை உங்களை நோக்கி இழுக்கக்கூடிய செல்வ மனநிலை].  

ஒரு சக்தி நம்மிடம் இல்லை என்றால் அது நம்மிடம் இல்லை என்று பொருளல்ல. அந்த சக்தியை இதுவரையிலும் பயன்படுத்தவில்லை – அதை நாம் இன்னும் உணரவில்லை என்று பொருள்.

நம்மிடம் அறிவிருக்கிறது என்று காட்டுவதும் நம்மிடம்….உள்ளது என்று வழித்துக்கொண்டு காட்டுவதும் ஒன்று. 

வாழ்வில் சில நேரங்களில் கான்செண்ட்ரேஷன் பயன்படுத்த வேண்டும். இன்னும் சில நேரங்களில் ரிலாக்சேஷன் பயன்படுத்த வேண்டும். இரண்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது. 

பக்குவம் உள்ளவன் மாதிரி நடித்தால் கொஞ்ச நாளில் பக்குவம் வந்துவிடும். தொழுகையில் இஹ்லாஸ் உள்ள மாதிரி நடித்தால் இஹ்லாஸ் வந்துவிடும். கோபம் உள்ள மாதிரி நடித்தால் கோபம் உண்மையிலேயே வந்துவிடும். எனவே மனம் கனிந்தவன் நினைத்ததெல்லாம் துஆவாக மாற ஆரம்பிக்கும். 

நாம் உடலை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் உள்ளம் சுத்தமாகாது. எனவே நாம் தொடங்கவேண்டிய செண்ட்ரல் பாய்ண்ட் உள்ளம்தான். எனவே எண்ணத்தை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

மனதில் கண்ட்ரோல் வந்தால் அது தானாகவே வெளியில் வரும். செயலில் வரும். இதனால்தான் ஒரு மனிதன் யோசிக்கத் தொடங்கியவுடன் சாய்ந்து கொண்டிருந்தவன் நேராக உட்கார ஆரம்பிக்கிறான். படுத்திருப்பவன் உடனே எழுந்துகொள்கிறான். பாசிடிவ் எண்ணம் வந்த உடனேயே செயலில் இத்தகைய மாற்றங்கள் எற்பட்டுவிடும். 

மாறாக, நெகடிவ் எண்ணம் வந்தால், நேராக உட்கார்ந்திருந்தவன் சாய்ந்து கொள்வான். ஒரு பேச்சு கேட்டுக்கொண்டிருக்கும்போது உட்கார்ந்திருப்பவன் லேசாக சாய ஆரம்பித்தால் அவனுக்குள் நெகடிவிட்டி புக ஆரம்பித்துவிட்டது என்று பொருள். 

சாய்ந்திருப்பவன் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தால், அது நெகடிவ்வான சூழ்நிலையாக இருந்தாலும் அவனுக்குள் பாசிட்டிவிட்டி வந்துவிட்டது என்று அர்த்தம்.

இதிலிருந்து ஒரு கோட்பாட்டை உருவாக்கலாம். நேராக உட்கார்ந்திருப்பவனுக்கு குழப்பம் வராது. அல்லது குழப்பமடைந்த மனதைத் தெளிவு படுத்துவதற்கு நேராக உட்கார வேண்டும். இது ஒரு நடிப்பு. இதை மனம் செய்யவிடாது. சாயச் சொல்லும், படுக்கச் சொல்லும். ஆனால் சிரமம் பாராமல், மனதைத் தளரவிடாமல் உட்கார்ந்தால் மனம் சிறிது நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளும். 

ஒரு விஷயம் பற்றி நாம் நினைப்பதற்கும், மனதுக்குள் ஒரு எண்ணம் தானாக புகுவதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்களாக நினைத்தால் நேராக உட்கார்ந்திருப்பீர்கள். கரெக்ட்டாகப் பேசுவீர்கள். எதிர்மறை எண்ணங்களை உள்ளே விட மாட்டீர்கள். நாம் செயலை கவனிக்காமல் செய்வதுபோல, மனதும் கவனிக்காமல் எண்ணுகிறது. எந்த எண்ணத்தையும் தனக்குத்தானாகவே நுழைய விடக்கூடாது. 

தலையாய கோளாறு dominating feeling-ல் இருந்துதான் தொடங்குகிறது. எனவே உங்களை ஆட்டி வைக்கும் உணர்ச்சி எது என்று பார்க்க வேண்டும். அது செக்ஸா, கௌரவமா, பொருளாதார பாதுகாப்பா என்றெல்லாம் பார்க்க வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 

Dominating feeling என்றால் என்னவென புரிகிறதா? எந்த உணர்ச்சி இருந்தால் வாழ முடியுமோ, எந்த உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ முடியாதோ அதைச் சொல்கிறேன். அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். இது மிகமிக அவசியம். சரி, இது எப்படி இருக்க வேண்டும்?

முதலில் குடும்பத்தில் செல்வாக்கு ஏற்பட வேண்டும். மனைவியைத் திருப்திப் படுத்த வேண்டும். பிள்ளைகளைத் திருப்திப் படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தை அரவணைத்துக் கொண்டே போகவேண்டும். அந்த மகிழ்ச்சியும் பரக்கத்தும் சமூக வாழ்க்கையில் வரும். 

ஆசைப்பட்டுக்கொண்டே இருங்க. அது உண்மையாக இருந்தால் அது உண்ணும் போதும், உறங்கும் போதும், மனைவியைக் கொஞ்சும்போதும் வரவேண்டும். ஒரு நாளின் முதல் எண்ணமும் கடைசி எண்ணமும் ஒன்றாக இருக்குமானால் ஆசை இருப்பதாக அர்த்தம். எண்ணத்தின் வலிமையைப் பொறுத்து சீக்கிரமாகவோ தாமதமாகவோ கிடைக்கும்.

சிகார் லைட்டைக் கொளுத்தாமலிருந்தால் அது வீணாகாது. உங்கள் கார் ஓடாமலிருந்தால் டயர் தேயாது. ஆனால் மனம் அப்படியல்ல. சும்மா இருந்தால் எல்லா நெகட்டிவ்வான விஷயங்களும் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக