View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

பேச்சு எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவை

 எதைப்பேச வேண்டுமோ, எப்படிப் பேசவேண்டுமோ அதை அப்படி, தாமதிக்காமல் பேசிவிடவேண்டும்.

2. மனித உறவுக்கு ஆதாரம் பேச்சும் பேசும் முறையும்தான்.

3. எதையும் செய்யலாம், முடியும். ஆனால் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

4. நெருங்கிய நண்பரோடு பேசும்போதுகூட அடுத்தவரைக் குறைகூறி பேசக்கூடாது.

5. பேச்சு உங்கள் நோக்கத்தைத் தூண்டவோ அழிக்கவோ செய்யலாம். எனவே தேவையற்ற பேச்சைத் தவிருங்கள். பேசினால், ஒரு நோக்கத்தோடுதான் பேசவேண்டும். விதிவிலக்கு: மக்களுக்காக பேசிக்காட்டலாம். நட்புக்காக சிகரட் பிடிப்பவன் வெறும் புகையைத்தான் ஊதுவான். 

6. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எம்மிடம் அழுத்தமான கணக்கு உண்டு என்கிறது திருமறை.

7. சமுதாய வாழ்வுக்கு முதுகெலும்பு பேச்சாகும். எனவே எப்போது பேச்சு சரியாக வருகிறதோ அப்போது வாய்ப்பும் தானாக வரும். 

8. அதிகமாகப் பேசுவது ஒரு பலவீனம். [பேசுவதைவிட வேறு காரணம் அதற்கு இருக்கும்.] எனவே ஒருவன் பேசுகிறான் என்பதைவிட, ஏன் பேசுகிறான் என்பதுதான் முக்கியம். 

9. குறிக்கோளில்லாமல் வாழ்பவன்தான் அதிகமாகப் பேசுகிறான்.

10. தங்கு தடையில்லாமல், தெளிவாகப் பேசுவது ஒரு சக்தியாகும். 

11. வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் வரும்போது வெளியே சொல்லாமலிருந்தால், சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று தெரியவரும்.

12. பேச்சில் ஏற்படும் சந்தோஷம் முன்னேற்றப் பாதையில் நமக்கொரு தடைக்கல்லாகும். அதில் ஏற்படும் ஒரு ரகசிய சந்தோஷம் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகும். நாலு பேர் அவன் பேச்சைக் கேட்பதன் மூலம் அந்த மனப்பான்மையை அவன் மாற்றிக்கொள்கிறான். 

13. நீங்கள் என்னிடம் பேசும்போது கேட்டால் சொல்லவேண்டுமே தவிர, மகிழ்ச்சி இல்லாமல் சொல்லவேண்டும். சொல்லும்போதுகூட மகிழ்ச்சி வந்துவிடக்கூடாது. 

14. மக்கள் பேசுவதற்கு இரண்டு காரணங்கள். 1. வளர்ந்துவிட்டேன் என்று காட்டும் ஒரு உயர்வு மனப்பான்மை. 2. அடுத்தவரிடமிருந்து பரிவை எதிர்பார்க்கும் குணம். இரண்டுமே வீண்.

15. நமது நோக்கத்துக்குத் தொடர்பில்லாத, அங்குமிங்கும் குதிக்கின்ற, எல்லா வகையான சிந்தனைகளும் உள் பேச்சுதான். இது கூடாது. 

16. ஒருவன் குனிந்த பின்பு அவன் கவனம் நம்மிடம் இல்லை என்று பொருள். அப்போது அவனிடம் பேசக்கூடாது. 

17. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் ….வழித்துக் காட்டுவது மாதிரி. 

18. நாம் அடுத்தவரைக் குறை கூறுவதற்கு மூன்று காரணங்கள். 1. நமக்கு வேறு வேலை இல்லை. 2. நம் குறைகளை நாம் பார்க்கவில்லை. 3. அவன் கெட்டுத்தான் போகவேண்டும் என்ற உள் மன ஆசை. அவன் வளர்ந்தால் முதலில் நாம்தான் பொறாமைப்படுவோம். 

19. வெயில் கொடூரமாக அடிக்கிறது என்று சொல்வதால் அதன் கொடூரம் குறையப்போகிறதா? சமுதாய சக்தியில் பெரும்பகுதி பேச்சில்தான் வீணாகிறது. 

20. அடுத்தவரின் கண்களைப் பார்த்துத்தான் பேசவேண்டும். நமது பார்வை அவரது பார்வைக்கு சற்று மேலே இருக்க வேண்டும்.

21. பேசும்போது ‘ஆனால், ‘அது வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது. 

22. எவன் பேச்சை சுத்தமாகப் பிசிறின்றிப் பேசுகிறானோ அவன் வாழ்வும் பிசிறின்றி சுத்தமாக ஓடும்.

23. பேசுவதற்கு முன்பு யோசிக்கவேண்டும், பேசிய பின்பு அல்ல. பேசுவதற்கு முன்பு பேச்சை கவனித்துப் பேசவேண்டும். பேசிவிட்டு, இப்படிப் பேசிவிட்டோமே என்று தூங்காமல் இருக்கக் கூடாது. பேசிவிட்டு வாபஸ் வாங்கக்கூடாது. பேசிவிட்டு ‘சாரி’ சொல்லக்கூடாது. சுற்றி வளைத்துப் பேசக்கூடாது. அதற்கு மேலாக, ஏன் இதைப்பேசுகிறோம் என்று புரிந்து பேசவேண்டும். பேச்சு இடையில் தடைப்பட்டால், அதைக்கவனித்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும். இப்படிச் செய்தால்தான் எண்ணிய லட்சியத்தை அடைய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக