‘அதிர்ஷ்டத்துடன் பிறந்தவன், வளர்க்கும் ஆண்கோழி கூட முட்டையிட்டு பணம் ஈட்டிக் கொடுக்கும்‘ என்பது ரஷ்ய தேசத்தின் நாட்டுப்புறப் பழமொழி. ஆனால், ‘அதிர்ஷ்டமும் வேண்டாம்… ஆண்கோழி முட்டையிடவும் வேண்டாம்… பொறுமையும், திறமையும் இருந்தால் போதும் வான்கோழி வளர்த்து வாழ்வில் செழிக்கலாம்’ என்கின்றனர் தமிழக வான்கோழி பண்ணையாளர்கள்.
தென்மாவட்ட அசைவப்பிரியர்களுக்கு தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது வான்கோழி பிரியாணிதான். இந்தப்பகுதிகளில் ஏறத்தாழ 80% அசைவ உணவகங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ் சமயங்களில் வான்கோழி பிரியாணி தயாரிக்கப்படுகிறது. கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களின் ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் வான்கோழி இறைச்சிக்கு தனி கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. இந்தச் சந்தை வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, வான் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு போதுமான லாபம் பார்த்து வருகின்றனர் வான்கோழி பண்ணையாளர்கள்.
அவர்களில் ஒருவராக திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் வான்கோழி வளர்ப்பில் ஈடு பட்டு வரும் பாலு (அலைபேசி 94435-30802), பண்ணை முறையிலான வான்கோழி வளர்ப்புப் பற்றி விளக்குகிறார்.
மூன்று வழி வளர்ப்பு!
”மேய்ச்சல் முறை, கொட்டகை மற்றும் மேய்ச்சல் முறை, கொட்டகை முறை அப்படினு மூணு விதமான முறைகள்ல வான்கோழிகளை வளர்க்கலாம். அப்படியே தோப்புல மேயவிட்டு வளர்க்கறதுக்கு மேய்ச்சல் முறையினு பேர். மழை, வெயில் நேரத்துல ஒதுங்குறதுக்கு மரத்தடி, சின்னதா கொட்டகை இருந்தாபோதும். இந்த முறையில வளர்க்கும்போது நாய் மாதிரியான விலங்குகளால பாதிப்பு அதிகம் இருக்கும். அதுல கொஞ்சம் கவனம் செலுத்தணும். அதேசமயம், தோட்டத்துல இருக்குற களைகள், பூச்சிகளை வான்கோழிகளே சாப்பிட்டுக் கட்டுப்படுத்திடும். இப்படிப்பட்ட தீவனங்கள் கிடைச்சுடறதால தனியா அடர் தீவனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா, ஒரு கோழிக்கு 75 சதுர அடி மேய்ச்சல் இடம் இருக்குற மாதிரி பாத்துக்கணும்.
பகல்ல மட்டும் நான்கைந்து மணி நேரம் மேயவிட்டு, கொட்டகைக்குள் அடைச்சி வெச்சி, ராத்திரியில அடர்தீவனம் கொடுத்து வளக்கறது கொட்டகை மற்றும் மேய்ச்சல் முறை. சின்னதா தோட்டம், சின்னதா இடவசதி இருக்கறவங்க இது மாதிரி வளர்க்கலாம். காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இந்த ரெண்டு முறையிலும் வான்கோழி வளர்ச்சி பெரிய அளவுல இருக்காது. முழு வளர்ச்சி அடைய எட்டு, ஒன்பது மாதங்கள் ஆகும். எடையும் அதிகமா கூடாது.
நல்ல காற்றோட்டம் இருக்குற மாதிரி கம்பி வலை, கீத்துக்களை வெச்சி, கொட்டகை அமைச்சி, முழுக்க முழுக்க அடர்தீவனம் மட்டுமே கொடுத்து வளர்க்கறது கொட்டகை முறை. தரையில அரையடி உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பி வெச்சி, அதுல வான்கோழிகளை விட்டு அடைச்சிடணும். கடலைபொட்டை மூணு மாசத்துக்கு ஒரு தடவை மாத்தினா போதும். இந்த மாதிரி வளர்த்தா, வான்கோழிகளின் வளர்ச்சி வேகம் அதிகமா இருக்கும். பாதுகாப்பாவும் இருக்கும். லாபமும் கூடும்.
மத்த ரெண்டு முறைகளைக் காட்டிலும் கொட்டகைமுறையில நடைமுறைச் செலவு கொஞ்சம் கூடுதலாத்தான் இருக்கும். இருந்தாலும் கொட்டகைமுறையிலதான் தமிழ்நாட்டுல பெரும்பாலான பண்ணைகள் அமைஞ்சிருக்கு. இந்த வகை வளர்ப்புக்கு ஒரு வான்கோழிக்கு நாலு அல்லது ஐந்து சதுர அடி இடம் இருந்தாலே போதும்.
நாலுபெட்டை… ஒரு சேவல்!
ஒரு மாசத்திலிருந்து இரண்டு மாசம் வரைக்குமான குஞ்சுகளை வாங்கி வந்து கொட்டகையில் அடைச்சு வெச்சு வளக்க ஆரம்பிக்கலாம். நாலு பெட்டைக்கு ஒரு சேவல்ங்கிற விகிதத்துல இருக்குற மாதிரி பாத்துக்கணும். நல்ல அடர்தீவனமும் தேவையான அளவு சுத்தமான தண்ணீரும் கொடுத்து வளர்த்தா, எட்டு மாசத்துல முட்டையிட ஆரம்பிக்கும். மூணு நாளைக்கு 2 முட்டைங்கிற கணக்குல முட்டை போடும். தொடர்ந்து 13 முட்டை வரை போடும்.
இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் முட்டை போட ஆரம்பிக்கும். வருஷத்துக்கு 120 முட்டை வரை இடும். அடைகாக்குறது பரம்பரை பழக்கத்தைப் பொறுத்தது. பல சமயங்களில் வான்கோழி அடைகாக்காது. அதனால செயற்கை முறையில (இன்குபேட்டர்) முட்டையை பொறிக் கிறதுதான் நல்லது. அப்பதான் அதிகமான குஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும்.
முதல் வருடத்தில் இடும் முட்டைகளுக்கு 70% பொரிப்புத்தன்மை இருக்கும். அடுத்தடுத்த வருடம் 45% அளவுக்குத்தான் பொரிப்புத்தன்மை இருக்கும். அதனால முதல் வருடம் முட்டையிட்ட பெட்டை கோழியை வித்துட்டு, அடுத்த கோழியை முட்டைக் காக தயார்படுத்திக்கணும். வளர்ந்த சேவல்கள் தேவைக்கு அதிகமா இருந்தா, அதையும் அப்பப்ப கழிச்சுடணும்.
கதகதப்பு!
செயற்கை முறையில் பொரிச்ச குஞ்சுகளுக்கு ஒரு மாசம் வரைக்கும் வெப்பம் கொடுக்கணும். இரண்டடிக்கு இரண்டடி கம்பிவலை கூண்டுல அறுபது வாட்ஸ் பல்பு மூலமா வெப்பம் கொடுக்கணும். பருவநிலையைப் பொறுத்து வெப்பத்தை கூட்டிக் குறைச்சிக் கொடுக்கணும். அதுக்கு தகுந்த மாதிரி பல்புகளை மாத்திக்கலாம். கம்பிவலையைச் சுத்தி குளிர்காத்து அடிக்காம அட்டைகளைக் கட்டி வைக்கலாம். வெப்பம் கொடுத்தாத்தான் குஞ்சு நல்லா வளரும். இல்லேனா, இறந்து போற அபாயம் இருக்கு.
நோய்த்தடுப்பு!
குஞ்சு பொரிச்ச 7 முதல் 9-ம் நாளுக்குள்ள குஞ்சுகளுக்கு ஆர்.டி.எஃப்-1 மருந்தை மூக்கிலும், கண்ணிலும் ஒரொரு சொட்டு விடணும். 21 முதல் 23-ம் நாளுக்குள்ள அம்மைக்கான தடுப்பூசி போடணும். 27 முதல் 29 நாளுக்குள்ள லசோட்டா சொட்டு மருந்து கொடுக்கணும். அதுக்குப் பிறகு ரெண்டு மாசம் கழிச்சு ஆர்.டி.வி.கே. இல்லனா ஆர்.2. பி. மருந்தை இறக்கைகளுக்கு அடியில ஊசி மூலம் போடணும். அதுக்கடுத்து ஒவ்வொரு பருவம் தொடங்குறப்பயும் இந்த ஊசி போட்டுட்டா… எந்த நோயுமே வான்கோழிக்கு வராது. இதுல சில மருந்துகள் மட்டும்தான் கடையில கிடைக்கும். சில மருந்துகளை சொல்லி வெச்சுதான் வாங்கணும். சரியா தடுப்பு மருந்துகளை கொடுக்காம விட்டு, நோய் தாக்கிட்டா, அதைக் குணப்படுத்தறதுக்கான மருந்துகளை பத்தியும் தெரிஞ்சு வெச்சுக்கணும்.
அம்மை தாக்கினா, மஞ்சளையும் வேப்பெண்ணை யையும் கலக்கி காலையில தீவனம் கொடுத்தபிறகு ஒன்பது மணிக்கு மேல அம்மை கொப்புளம் உள்ள இடத்துல, தினமும் ஒருவேளை தடவிவிடணும். அப்படியே குணமாயிரும்.
வெள்ளைக்கழிச்சல் வந்தா… சீரகம், சின்ன வெங்காயம் ரெண்டையும் தயிர் ஊத்தி அரைச்சி, மோர்ல கலக்கி தினமும் ரெண்டு வேளை கொடுத்தா சரியாயிடும்.
எதையாவது சாப்பிட்டு, ஈரல் வீக்கம் வந்துட்டா (இந்த நோய் வெளியில் தெரியாது. கோழி இரை எடுக்காமச் சுணங்கி படுத்திருக்கும். மருத்துவர்தான் கண்டுபிடிக்க முடியும்), கீழாநெல்லியை அரைச்சி மிளகு அளவுக்குக் கொடுத்தா சரியாயிடும்” என்று வளர்ப்பு முறைகளை பற்றி விரிவாக விளக்கிய பாலு, விற்பனை மற்றும் வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
குஞ்சுகள் தேடும் கோவா!
“முன்னயெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ் இதுக்கு மட்டும்தான் வான்கோழி விற்பனை சூடா இருக்கும். இப்பல்லாம் வருசம் முழுக்கவே தேவை ஏற்பட ஆரம்பிச்சுட்டுது. தேவைக்கு ஏற்ப வான்கோழிகள் இல்லைங்கிறதுதான் உண்மை. போன தீபாவளிக்கு முணாயிரம் கிலோ வரை எனக்கு ஆர்டர் இருந்துச்சு. என்னால ஐநூறு கிலோ வரைதான் கொடுக்க முடிஞ்சது. மூணு வருசமாவே ஒவ்வொரு வருசத்துக்கும் கிலோவுக்கு இருபது ருபா விலை ஏறிகிட்டேதான் இருக்கு. முன்னாடி பத்து ரூபாய்க்கு வித்துகிட்டிருந்த முட்டை, இப்போ இருபது ரூபாய் வரைக்கும் வித்து கிட்டிருக்கு.
கறிக்கு வாங்குறதை விட, வளர்க்கறதுக்காக குஞ்சாவே என்கிட்ட வாங்கிட்டு போயிடு றாங்க. ஒரு மாச குஞ்சுகளை வித்தாலே, ஒரு குஞ்சுக்கு நூறு ரூபா கிடைக்கும். அதில்லாம, தந்தூரிக்காக ரெண்டு மாத வயசுள்ள குஞ்சுகளுக்கு சமீபகாலமா நல்ல கிராக்கி இருக்குது. கோவா மாநிலத்துல இருந்து கூட ஆர்டர்கள் வர ஆரம்பிச்சிருக்கு. அந்த வயசுடைய குஞ்சுகளுக்கு இருநுறு ருபா வரை கிடைக்கும். பெரிசா வளத்து வித்தா உயிர் எடைக்கு கிலோ நூற்றி முப்பது ரூபாய் வரைக்கும் நம்ம பண்ணை யிலேயே வந்து எடுத்துக்குறாங்க. பெங்களுர், சென்னைனு ஆர்டர் பிடிச்சி நாமளே எடுத்துக்கிட்டு போனா, கிலோ நூத்தியம்பது ருபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைக்கும் விக்கலாம்.
காத்திருந்தால் கைகொடுக்கும்!
இருபது சென்ட் இடத்துல ஒரு எழுபத் தஞ்சு குஞ்சுகளோட பண்ணை ஆரம்பிச்சா, ரெண்டு வருசத்துல கட்டாயம் ரெண்டு லட்சம் வரைக்கும் சம்பாதிக்கலாம். அதுக் கடுத்து மாசம் பத்தாயிரத்துக்கு குறையாம நிரந்தர வருமானம் கிடைக்கும். ஆரம்பத்தில் என் பண்ணைக்கு மட்டும்தான் வான்கோழி தீவனம் தயாரிச்சுக்கிட்டிருந்தேன். என்கிட்ட குஞ்சுகளை வாங்கறவங்க தீவனமும் கேட்க ஆரம்பிக்கவே, இப்ப தீவனம் தயாரிச்சு விக்கிறதையும் முழுநேர தொழிலாக்கி கிட்டேன். அதனால எனக்கு கூடுதல் வருமானம் கிடைக்குது” என்று பெருமை யாகச் சொன்னவர்,
”வான்கோழி வளர்ப்பு பத்திக் கேக்கறவங் களுக்கு இலவச ஆலோசனை கொடுத்துகிட்டி ருக்கேன். என் மூலமாவே நிறைய பண்ணையாளர்கள் உருவாகியிருக்காங்க. சிலபேரு பண்ணை வெச்சதுமே வருமா னத்தை எதிர்பார்க்கறாங்க. அது தவறு. ரெண்டு வருசமாவது பொறுமையா காத்தி ருந்து, அதிக அளவுல கோழிகளை உற்பத்தி பண்ணி விற்கும்போதுதான் நல்ல லாபம் எடுக்க முடியும். ஏற்கெனவே வான்கோழிப் பண்ணைகளை ஆரம்பிச்சி கைவிட்டவங்கள கேட்டா, விற்பனை வாய்ப்பு குறைவுனுதான் சொல்வாங்க. ஆனா, மிதமான விற்பனை வாய்ப்பு தொடர்ந்து இருந்துகிட்டேதான் இருக்குது. விற்பனை விஷயத்துல உதவ றதுக்கு நான் தயாரா இருக்கேன்” என்றும் தெம்பு கொடுத்தார்.
அடர்தீவன தயாரிப்பு முறை 100 கிலோவுக்குமக்காசோளம் 50 கிலோ, கடலை அல்லது சோயா புண்ணாக்கு 22 கிலோ, அரிசி தவிடு 14 கிலோ, தாது கலவை 3 கிலோ, நுண்ணூட்டச் சத்துக்கள் 1 கிலோ, மீன் தூள் 10 கிலோ. எல்லா வற்றையும் தனித்தனியாக அரைத்து, பின் ஒன்றாகக் கலந்து கொடுக்கவேண்டும். குஞ்சுகளைப் பொறுத்த வரை அடர்தீவனத்தை நன்றாக அரைத்துக் கொடுக்கவேண்டும். பெரிய கோழிகளுக்கு ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை. முட்டையிடும் கோழிகளுக்கு, கிளிஞ்சல்களையும் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம். அசோலா வையும் சேர்த்துக் கொடுத்தால் அடர்தீவனத்தின் அளவை 30% வரை மிச்சப்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலங்களில் ஈரமான அசோலாவை தீவனத்துடன் கலந்து கொடுக்கக்கூடாது.
அரிசியை நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறிவிடும். நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவ தில்லை. கொழுப்பு கூடினால் முட்டை வைக்காது. கறிக்காக வளர்ப்பவர்கள் அடர்தீவனத்துடன், காய்கறிக் கழிவுகள், கீரை வகைகள் போன்ற வைகளைக் கொடுக்கலாம். ஐந்து முதல் ஆறு மாத வயதுள்ள ஆண் வான்கோழி 6 கிலோ எடையும் பெட்டை 4 கிலோ எடையும் இருக்கும்.
| ||||||||||
இனிமையான இயற்கை முறை”இயற்கையான மேய்ச்சல் முறையில் வான்கோழிகளை வளர்த்தாலும் நல்ல லாபம் பார்க்க முடியும்” என்று அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார் கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அருகில் உள்ள வெங்கடபுரத்தை சேர்ந்த இளைஞர் ரவி. மிக எளிய முறையில் முருங்கைத்தோப்புக்குள் இயற்கையாக மேய்ச்சல் முறையில் வான்கோழிகளை வளர்த்து வருகிறார்.
லேசான மழைத் தூறலுடன் கூடிய அற்புதமான சூழலில், நாம் அந்த வலைக்குள் நுழையும்போதே ‘லகலக’வென கெக்கலியான சத்தத்துடன் மிரள்கின்றன வான்கோழிகள். முருங்கை மரக் கிளைகளில் சில கோழிகள் அமர்ந்திருக்க, ஒன்றிரண்டு ஆண் வான்கோழிகள் சிறகு விரித்து சிங்காரமாக நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன.
“வான்கோழி வளக்கணும்னு ஆசை வந்ததும் தெளிவா விசாரிச்சிட்டுத்தான் அதுல இறங்கினேன். கொட்டகை அமைக்கிறதுக்கான செலவு ரொம்ப அதிகம். பேங்க்ல கடனெல்லாம் வாங்கி கொட்டகை அமைச்சா சரிப்பட்டு வராதுனு புரிஞ்சுது. செலவை எப்படி குறைக்கறதுனு யோசிச்சேன். ‘வான்கோழிங்கிறதே காட்டுப் பறவைதான். இயற்கையாவே வளர்த்தாலென்ன’னு நானே தீர்மானிச்சிக்கிட்டு, வான்கோழிகளை வாங்கி தோட்டத்துலயே விட்டுட்டேன்.
ஆனா, அதுக்குப்பிறகுதான் அதிலிருக்கிற கஷ்ட, நஷ்டம் தெரிய ஆரம்பிச்சுது. நெல்லு பயிர்ல மணி பிடிக்கற சமயத்துல, வயல்ல புகுந்து சரம்சரமாய் நெல்லைக் கபளீகரம் செய்ய ஆரம்பிச்சுட்டுதுங்க நம்ம வான்கோழிங்க. இது ஒரு பக்கம்னா.. நாய், கீரிப்பிள்ளை, காட்டுப் பூனை, பருந்துனு பல எதிரிகள் வான்கோழி கறிக்காக இன்னொரு பக்கம் அலைய ஆரம்பிச்சிட்டுதுங்க. உடனடியா பழைய மீன் வலைகளை வாங்கிகிட்டு வந்து, ஒண்ணே கால் ஏக்கர் நிலத்துல சவுக்கு குச்சிகளை ஊன்றி வலை போட்டேன். மொத்தமா மூவாயிரத்து முந்நூறு ரூபாய்ல விஷயம் முடிஞ்சி போச்சி. ரொம்பக் கம்மியான செலவுல பக்காவான வேலி தயாராகிடுச்சு. ஒரு ஒரத்துல மட்டும், 8 அடிக்கு 20 அடி கூரை கொட்டகை மட்டும் போட்டிருக்கேன்.
முருங்கைத் தோப்பில் இருக்குற சின்னச்சின்ன கம்பளிப்பூச்சி, புழுக்களை யெல்லாம் வான்கோழி சாப்பிட்டுடும். இடையில இருக்குற அருகு, கோரை, பார்த்தீனியம் மாதிரியான களைகளையும் அதுங்க சாப்பிட்டுடும். அதனால களை எடுக்குற செலவுமில்ல. வான்கோழி எச்சமும் நேரடியா நிலத்துக்கே கிடைச்சுடறதால, முருங்கை மகசூலும் அதிகமா கிடைக்குது. அடர் தீவன செலவும் மூணுல ஒரு பங்கா குறையுது. முட்டையோட எண்ணிக்கையும் கூடுது. அளவும் பெரிசாயிருக்கு. இனப்பெருக்கமும் சுதந்திரமாயிருக்கறதால முட்டை நல்லாவே கருவுருது. தோட்டத்திலுள்ள மணலையும் கொத்திச் சாப்பிடுறதால ஜீரணத் தன்மையும் அதிகரிக்குது. கால்சியம் கூடி, முட்டை ஓடும் பலமா இருக்குது. இதுல ஒரு சிரமம்… இயற்கையா உலவுறதால முட்டையை எங்கேயாவது போட்டுட்டு வந்துடும். அதைத் தேடி எடுக்கணும்.
சமயத்துல ஒரு முட்டை வெச்சதுமே அப்படியே அடைகாக்க உக்காந்துடும். அதனால தினசரி முட்டையை எடுத்துடணும். அப்பதான் திரும்பவும் முட்டை வைக்கும். தீவனத்தோட அளவுல ரெண்டு மடங்கு தண்ணீ கொடுக்கணும். தோட்டத்துல அங்கங்க மண்கலயம் வெச்சு தண்ணீர் நிரப்பி வெச்சுடுவேன். பெரும்பாலும் வான்கோழிங்க மரக்கிளையிலதான் தங்கும். மழை அதிகமாயிருந்தா மட்டும்தான் கொட்டகைக்கு வரும். குஞ்சுகளா இருக்கும்போதே, மேய்ச்சலுக்கு அனுப்பிடாம, கொஞ்சம் பெரிசா வளர்ற வரை காத்திருக்கணும்.
பிறந்த குஞ்சுக்கு முதல் நாள் குடிநீர் மட்டும்தான் கொடுக்கணும். அதுக்கப்பறம் அடர் தீவனத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துச் சாப்பிடப் பழக்கணும். தினசரி அதுகளோட நடவடிக்கைகளை கண்காணிக்கணும். தீவனத்தோட பொரிகடலை, அரிசி குருணை, பொரிச்ச முட்டை இதையெல்லாம் உணவா கொடுக்கலாம். சின்ன அளவுலதான் பண்ணையை நான் தொடங்கினேன். இப்போ நிறைய அனுபவத்தோட, கொஞ்சம் கொஞ்சமா விரிவாக்கி, 120 தாய்ப் பறவைகள் வரை வெச்சிருக்கேன்” என்கிறார்.
| ||||||||||
பழைய மீன் வலை எங்கே கிடைக்கிறது?தூத்துக்குடி, பூபாலராயர்புரம், அருள்ராஜ் (98429-17858) பழைய மீன் வலை வியாபாரம் செய்கிறார். ஐந்து முதல் ஆறு வருடம் உழைக்கக் கூடிய வலைகள் கிலோ 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்கிறார். ஒரு வருடம் வரை உழைக்கக் கூடியவை கிலோ 25 ரூபாய். | ||||||||||
கரு கண்காணிப்புகருச்சிதைவடையாமல் இருக்க, எப்போதும் முட்டையின் அகன்ற பாகம் மேலே உள்ளவாறு வைக்கவேண்டும். அடை வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வரை சேகரிக்கலாம். அடை வைத்த எட்டாவது நாளுக்குப் பிறகு, முட்டையை இருட்டு அறைக்குக் கொண்டு சென்று அதன் அகலமான பகுதியில் பேனா டார்ச் லைட் வைத்துப் பார்த்தால்.. மஞ்சள் கருவில் கலங்கலாக வளர்ச்சி தெரியும். நாளாக நாளாக குஞ்சுகளின் அசைவும் தெரியும். கரு வளரும் முட்டையை மட்டும் கண்டறிந்து அடையில் தொடர்ந்து வைக்கலாம். கூடாத முட்டையை பொரித்து, கோழிக்கே தீவனமாக கொடுக்கலாம். | ||||||||||
60 பெட்டைகளின் மூலம் இரண்டு வருடத்தில் 8,000 முட்டைகள் கிடைக்கும். அதில் 5,000 முட்டைகள் மட்டுமே பொரிப்புதிறனுடன் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் இரண்டு வருடத்தில் 5,000 குஞ்சுகள். இதில் 15% இழப்பு இருக்கும். அதைக் கழித்தால் 4,250 குஞ்சுகளை விற்க முடியும்.
1 மாத குஞ்சுகளாக விற்றால் (ரூ 100 வீதம்)… 4,25,000 வரவு
5 மாத கோழிகளாக விற்றால் (17,000 கிலோ * ரூ. 120) 20,40,000 வரவு
வளர்த்து விற்பதாக இருந்தால் ஐந்து மாதம் வரை தீவனம் மருந்து செலவாக பத்து லட்ச ரூபாய் வரை செலவாகும். அதற்கான கொட்டகைகள் தனியே அமைக்கவேண்டும். அதனால் விற்பனை மற்றும் சந்தை வாய்ப்பைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு அவ்வப்போது கோழிகளை விற்று விடுவது நலம். குஞ்சுகள் பெருகப்பெருக அதற்கான வலைக் கூண்டுகள், கொட்டகைகள், மருந்து, தீவனம் என வருடா வருடம் நடைமுறைச் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதிகபட்சம் 100 தாய்க்கோழிகள், 25 சேவல்கள் என்ற விகிதத்தில் பராமரித்து, மற்றவற்றை விற்று வந்தால், குறைந்தது
|
எனக்கு வான்கோழி வேண்டும்
பதிலளிநீக்குஎனக்கு வான்கோழி வேண்டும்
பதிலளிநீக்குவான்கோழி கோழி வேண்டும் 9585344004
பதிலளிநீக்கு