குறைவான வேலையாட்கள், எளிதான பறிப்பு ஆகிய காரணங்களால்தால்தான் சமீபகாலமாக விவசாயிகளின் பார்வை, பந்தல் காய்கறிகள் பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளரி, பாகல், புடலை, பீர்க்கன் போன்ற காய்கறிகள் பந்தல் முறையில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அப்படி சாகுபடி செய்யும் பலரும் இயற்கை முறையில் இக்காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இயற்கை காய்கறி சாகுபடியாளர்களை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, 'பசுமை விகடன்’. அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார், விருதுநகர் மாவட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர், பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, அச்சம்தவிழ்த்தான். ஊருக்குள் நுழைந்தவுடனேயே பச்சைப் பசேலென படர்ந்திருக்கும் பந்தல், ராதாகிருஷ்ணனின் தோட்டத்தை அடையாளம் காட்டி விடுகிறது. கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த புடலங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
'நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பூர்வீக விவசாயக் குடும்பம்தான். எல்லாருமே தாராளமா ரசாயனம் தூவி மகசூல் எடுத்தவங்க. அப்பா காலத்துல மிளகாய், பருத்தி, கத்திரியைத்தான் அதிகம் சாகுபடி செஞ்சாங்க. நானும் அப்பா கூட ரசாயன முறையிலதான் விவசாயம் செய்தேன். என்னதான் உரம் போட்டாலும், பூச்சிக்கொல்லி தெளிச்சாலும் நோய்கள் கட்டுப்படலை. அதுக்கேத்தாப்புல வேலையாட்களும் கிடைக்கலை. கிடைச்சாலும் கூலி அதிகமா கேட்டாங்க. போதுமான விளைச்சலும் இல்லை. என்ன செய்யலாம்னு யோசனையில இருந்தப்பத்தான்... ஒரு நண்பர், இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லி, பசுமை விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்துல வில்லிபுத்தூருக்கு நம்மாழ்வார் ஐயா வந்திருந்தாங்க. அந்தக்கூட்டத்துல கலந்துக்கிட்டேன். அங்கதான், இயற்கை விவசாயத்துனால மண்ணுக்கு, விவசாயத்துக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்ட சொன்னேன். 'இயற்கை இயற்கைனு சொல்லுவாங்க. ஆனா, மகசூல் வராது. ரசாயன விவசாயம்தான் நல்லது’னு இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாமப் பேசினார், அப்பா.
ஆனாலும், நான் விடுல. இயற்கை விவசாயத்துல ஏதாவது சாகுபடி செஞ்சு மகசூல் எடுத்துக் காட்டணும்னு முடிவு செஞ்சு... முதல் கட்டமா ரெண்டு ஏக்கர்ல டீலக்ஸ் பொன்னி விதைச்சேன். ஏக்கருக்கு 42 மூட்டை வீதம் 2 ஏக்கர்ல மொத்தம் 84 மூட்டை விளைச்சல் கிடைச்சது. அது, ரசாயனத்துக்கு இணையான மகசூல்தான். இயற்கையில விளைவிக்கிறப்போ நாத்து வளர்ச்சி, நெல் மணிகள் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் தெரிஞ்சுது. அரிசியின் சுவையும் வித்தியாசமா இருந்துச்சு. அடுத்ததா, நாட்டுக்கத்திரியை இயற்கை முறையில 2 ஏக்கர்ல சாகுபடி பண்ணினேன். வீரியமான ரசாயனப் பூச்சிக்கொல்லி அடிச்சாலே கட்டுப்படாத பூச்சிகள் கூட... இஞ்சிபூண்டுக் கரைசல், வேப்பெண்ணெய் ஸ்பிரே பண்ணுனதுல கட்டுப்பட்டுச்சு. காய்களும் திரட்சியா காய்ச்சுச்சு. மகசூலும் நல்லா இருந்துச்சு. அதுக்கப்பறம்தான் எங்க வீட்டுலயே இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை வந்துச்சு. அதுல இருந்து இயற்கை விவசாயம்தான் செய்றேன்' என்று முன்கதை கூறிய ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்.
'கத்திரியில நல்லா மகசூல் கிடைச்சாலும், தினப்பறிப்புக்கு கூலி ஆள் கிடைக்கலை. அதனால, கத்திரியை விட்டுட்டு, வேற என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு தேடுதலை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல, (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) ஹைதராபாத்ல இருக்கிற சொந்தக்காரர் தோட்டத்துக்குப் போக வேண்டியிருந்துச்சு. அங்க, அவர் பந்தல் அமைச்சு புடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தார். தோட்டம் முழுக்க கொடி படர்ந்து தோரணம் கட்டுனது மாதிரி புடலங்காய் காய்ச்சுத் தொங்கிக்கிட்டிருந்ததைப் பார்க்கும்போதே, அடுத்ததா புடலைதான் போடணும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். ஊருக்கு வந்ததும் அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். முன் அனுபவம் இல்லாததால கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும், முதல் அறுவடையிலேயே நல்ல மகசூல். இப்போ ரெண்டு வருஷமா புடலை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர் புடலை இப்போ அறுவடையில இருக்கு. ஒரு ஏக்கர்ல இன்னும் கொஞ்சம் நாள்ல அறுவடை பண்ணலாம்' என்ற ராமகிருஷ்ணன், மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார்.
45 பறிப்புகள்... 11,250 கிலோ!
'புடலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் பறிக்கிறேன். காலையில 6 மணியில இருந்து 8 மணிக்குள்ள பறிப்பு முடிஞ்சிடும். பந்தல் முறைங்கிறதுனால, காய்கள் பார்வைக்கு நல்லா தென்படும். ஒரு ஏக்கர் பறிக்க ரெண்டு ஆள் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு பறிப்புனு 45 பறிப்புல இருந்து 50 பறிப்புகள் வரை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 250 கிலோவுல இருந்து 300 கிலோ வரை காய் கிடைக்கும். சிலசமயம் அதுக்கு அதிகமாவும் கிடைக்கும். சராசரியா 45 பறிப்பு, ஒரு பறிப்புக்கு 250 கிலோனு வெச்சுக்கிட்டாலே... மொத்தம் 11 ஆயிரத்து 250 கிலோ புடலங்காய் கிடைக்குது. ஒரு கிலோ 12 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரை விற்பனையாகுது.
இயற்கை முறை புடலைனு தனியால்லாம் விற்பனைக்கு அனுப்புறதில்லை. காய்கறி மார்கெட்டுக்குத்தான் அனுப்புறேன். ஆனா, மத்தவங்க கொண்டு வர்ற புடலையை விட என்னோட புடலை நீளமாவும், தரமாவும் இருக்கிறதால மத்தவங்களுக்குக் கொடுக்கிற விலையை விட கிலோவுக்கு 3 ரூபா வரை கூடுதல் விலை கொடுக்கிறாங்க, வியாபாரிகள். குறைஞ்சபட்சமா கிலோ 12 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 11 ஆயிரத்து 250 கிலோவுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடும்' என்ற ராமகிருஷ்ணன்,
'காய்கறிகள்ல எப்பவுமே பந்தல் காய்கறிகளுக்கு நிலையான மார்க்கெட்டும் கட்டுப்படியான விலையும் இருக்குது. அதனால, எப்பவும் பந்தல் காய்கறி விவசாயிகளைக் கைவிடாது. மரம், இரும்பு, கல்னு பல முறையில் பந்தல் அமைக்கலாம். ஆனா, கல்தூண் அமைச்சிட்டா ரொம்ப வருஷம் தாக்குப்பிடிக்கும். பந்தல் அமைக்கிறதுக்கான ஆரம்பகட்ட செலவுகளைப் பார்த்து மலைக்காம இருந்தா, தொடர்ந்து பல வருஷங்களுக்கு லாபம் பார்க்க முடியும்' என்று ஆலோசனை சொன்னார்.
தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 9486588859.
சாகுபடிப்பாடம்!
ஒரு ஏக்கர் பரப்பில் பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்யும் விதம் குறித்து ராதாகிருஷ்ணன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 180 கல்தூண்கள்!
பந்தல் காய்கறிகளுக்குப் பட்டம் கிடையாது. அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். புடலை 150 நாள் பயிர். தேர்வு செய்த நிலத்தில், 15 அடி இடைவெளியில் 10 அடி உயரமுள்ள கல்தூண்களை ஓர் அடி ஆழத்துக்குக் குழிபறித்து ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 180 கல்தூண்கள் தேவைப்படும். பிறகு, கம்பி கொண்டு பந்தல் அமைத்து... 4 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி மினி டிராக்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வரிசையிலும் 2 அடி இடைவெளியில் கையால் குழி பறிக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த புடலை விதைகளை விதைத்து மண் கொண்டு மூடி பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும்.
விதைத்த மறுநாள் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். 5ம் நாள் முதல் 10ம் நாளுக்குள் தளிர் எட்டிப் பார்க்கும். 15ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, 20 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல தெளிக்க வேண்டும்.
18ம் நாள் முதல் 20ம் நாளுக்குள் கொடி படரும். கொடி படர்ந்ததும், கொடிமுனையில் கயிறு கட்டி கயிற்றின் மறு முனையைப் பந்தலில் கட்ட வேண்டும். 35ம் நாளுக்குள் கொடி வளர்ந்து பந்தலை அடைந்து விடும்.
40ம் நாளுக்கு மேல் பூக்கத்தொடங்கும். 50ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60ம் நாளில் இருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 75ம் நாளுக்கு மேல் அதிகளவில் காய்கள் காய்க்கும். 150ம் நாள் வரை காய் பறிக்கலாம்.
20, 40, 60 மற்றும் 80ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்... 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் வைக்க வேண்டும்.
ஒரே சந்தையை நம்பக்கூடாது!
'ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசினு மூணு ஊரு சந்தைகளுக்கும் நான் காய் அனுப்புறேன். எப்பவுமே ஒரே சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. ஒரே சந்தையில மொத்தக் காயையும் விற்கும்போது விலையைக் குறைச்சிடுவாங்க. 'இதுதான் விலை... இல்லை வேண்டாம்னா எடுத்துக்கிட்டுப் போங்க’னு ஈஸியா சொல்லிடுவாங்க. காய்களைப் பறிச்சு மூட்டைக் கட்டி, அவ்வளவு தூரம் கொண்டு போய் விலைக்குப் போடும்போது, வியாபாரி வேண்டாம்னு சொன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால எப்பவுமே, குறைஞ்சது இரண்டு சந்தைகளையாவது கையில வச்சிருக்கணும். அப்பத்தான் ஒரு சந்தையில விலை இல்லாட்டாலும், இன்னொரு சந்தையில விலை கிடைக்கும். விலையில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் வராது' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
முயல்கள், எலிகள் தொல்லைக்கு கூமுட்டைக் கரைசல்!
'இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
சிவப்பு வண்டுத் தாக்குதலுக்கு இஞ்சிபூண்டுக் கரைசல்!
கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுகள் தாக்கலாம். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு தென்பட்டாலும், உடனே பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 250 கிராம் இஞ்சி, 250 கிராம் பூண்டு ஆகியவற்றை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையிலிருந்து 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
புடலங்காயின் பயன்கள்!
புடலங்காய் நம் உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது. தண்ணீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் தன்மை கொண்டிருக்கிறது. புடலை இலைச்சாறுடன், கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க வைத்த தன்ணீரை தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும். புடலங்காயில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பிஞ்சு அல்லது நடுத்தர காயைத்தான் சாப்பிட வேண்டும்.
பூஞ்சண நோயைக் கட்டுப்படுத்தும் விதைநேர்த்தி!
100 மில்லி பஞ்சகவ்யாவை, 300 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் புடலை விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை எடுத்து, அவற்றின் மீது, 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து தூவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால், பூஞ்சண நோய் வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக