பொதுவாக மனிதர்கள் பலவிதமான பழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். குடி பழக்கத்திற்கு அடிமை, போதை மருந்துகளுக்கு அடிமை மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமை போன்றவையே பொதுவாக வெளியில் பேசப்படுகின்றன. ஆனால் வெளியில் பேசப்படாத இன்னும் ஏராளமான அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய அடிமைப் பழக்கங்கள் சாதாரணமாகத் தான் இருக்கும். உதாரணமாக, ஹெட்செட் மூலம் பாட்டு கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல.
இத்தகையவை இல்லாவிட்டால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுவது போலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறும் ஆகிவிடும். மேலும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ சில அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன. இப்போது அவ்வாறு வெளியில் பேசப்படாத 14 வகையான அடிமைப் பழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
வலியை விரும்பி தேடுதல்
இந்த உலகில் யாருமே வலியை விரும்புவதில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் வலியை விரும்பித் தேடுகிறவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் மூலம் இந்த உலகின் யதார்த்தங்களிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவ்வாறு தங்கள் மீது வலியை உருவாக்க பல வழிமுறைகளைக் கையாள்கின்றனர். இவ்வாறு வலியை விரும்புபவர்களின் மனநிலை இறுதியில் அவர்களை தற்கொலை செய்யுமளவிற்கு இட்டுச் செல்கிறது.
இன்டர்நெட் அடிமைகள்
இன்டர்நெட்டுக்கு அடிமைகளா என்று நாம் நம்பாமல் வியப்படையலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இன்டர்நெட்டின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் இல்லை. ஆனால் தற்போது இந்தியாவின் இன்டர்நெட் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. அதாவது நீண்ட நேரம் இன்டர்நெட்டில் இருப்பது, தூங்கி எழுந்தவுடன் இன்டர்நெட்டுக்குள் சென்று மெயில்களைப் பார்ப்பது மற்றும் புதிய செய்திகளை வாசிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால், இன்டர்நெட்டுக்கு அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று பொருள்.
சமூக தொடர்பு சாதனங்கள்
பொதுவாக மனிதர்கள் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மனித உறவுகளை மேம்படுத்துவதற்காக தற்போது ஏராளமான சமூகத் தொடர்பு சாதனங்கள் இருக்கின்றன. குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்கள் நமக்கு உலக உளவில் நண்பர்களையும், உறவினர்களையும் பெற்றுத் தருகின்றன. ஆனால் அடிக்கடி பேஸ்புக்கில் இருந்தால், பேஸ்புக்கிற்கு அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று பொருள்.
அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுதல்
பேராசை மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுதலும் அடிமைப் பழக்கமாகும். அதிகமான உண்ணுவதன் மூலம் ஒரு சிலர் தங்கள் உணர்வுகளை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு அளவுக்கு அதிகமாக உண்ணுவதால் அவர்கள் உயிருக்கும் உடலுக்கும் ஆப்பு தான் வைக்கின்றனர்.
அன்புக்கு அடிமை
* இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றின் மீது அதிக மோகம் இருக்கிறதா? * ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ உங்களுக்கு சரியான நண்பராகவோ அல்லது காதலியாகவோ இருக்கமாட்டார்கள் என்று தெரிந்த பின்பும் அவர்களை வற்புறுத்தி உங்கள் உறவு வட்டாரத்துக்குள் இணைக்க முயற்சி செய்கிறீர்களா? * வலுக்கட்டாயமாக யாரையாவது அன்பு செய்ய முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் அன்புக்கு அடிமையாக இருக்கிறீர்கள் என்று பொருள்.
செக்ஸ் அடிமை
செக்ஸூம் ஒரு சிலருக்கு அடிமைத் தனமாக இருக்கிறது. அதாவது ஒருவர் அடிக்கடி பாலியல் சம்பந்தமான சிந்தனைகளைக் கொண்டிருந்தால் அல்லது எதிர் பாலினரைப் பார்த்த உடன் அவர்களை அவருடைய பாலியல் சிந்தனைகளுக்குள் புகுத்தினால், அவர் செக்ஸூக்கு அடிமையாக இருக்கிறார்.
சைபர் செக்ஸ் அடிமை
சைபர் செக்ஸ் என்பது கம்யூட்டர் செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இன்டர்நெட் இணைப்பு மூலமாக ஏராளமான ஆண் மற்றும் பெண் நண்பர்கள் மிக எளிதில் கிடைத்துவிடுகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல் இன்டர்நெட் மூலம் செக்ஸ் செய்திகளை அல்லது தங்களது செக்ஸ் அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொண்டால், அவர்கள் சைபர் செக்ஸூக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஆனால் இந்த பழக்கம் பழ தீய பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும். மேலும் திருமணமானவர்களின் வாழ்க்கைக்கும் உலை வைத்துவிடும்.
உடற்பயிற்சிக்கு அடிமை
உடற்பயிற்சி, உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும், அதே நேரத்தில் மனதிற்கு அமைதியையும் வழங்குகிறது. ஆனால் நீண்ட நேரம் ஜிம்மில் செலவழிப்பது மற்றும் வெறுப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மறப்பதற்காக உடற்பயிற்சி செய்வது போன்றவை அடிமைத் தனமாகும்.
வீடியோ கேம்
தற்போது வீடியோ கேம்கள் உலக அளவில் பலரை அடிமைகளாக மாற்றி வருகிறது. எப்படியாவது கேமின் எல்லா லெவல்களையும் முடித்து, அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதற்காக வீடியோ கேமே கதி என்று டீன் ஏஜ் பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன் கிடக்கின்றனர். இது ஒரு மிகப் பெரிய அடிமைத் தனமாகும்.
ஷாப்பிங் அடிமைகள்
பொதுவாக வீடியோ கேம்களுக்கு பெரும்பாலான ஆண்களும், ஷாப்பிங் செய்வதில் பெரும்பாலான பெண்களும் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு சாதாரண பொருளை வாங்க வேண்டும் என்றாலும் ,அதை விரும்பி தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர். ஆனால் ஷாப்பிங் செய்தால் தான் இயல்பான நிலைக்கு வருவேன் என்று ஒருவர் அடம் பிடித்தால், அவர் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறார் என்று பொருள்.
பைரோமேனியா
பைரோ என்றால் கிரேக்க மொழியில் நெருப்பு என்று பொருள். ஒரு சிலர் தங்களின் மன இறுக்கத்திலிருந்து வெளியில் வருவதற்காக, தங்களுடைய வெறுப்பு மற்றும் கோபம் ஆகியவற்றை எழுதி நெருப்பில் சுட்டெரிப்பர். அதன் மூலம் இயல்பான நிலைக்கு வருவர். ஆனால் இந்த பழக்கம் அடிக்கடி தொடர்ந்தால் அது ஒரு அடிமைப் பழக்கமாக மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக இது போன்ற பழக்கமுள்ளவர்கள் அவ்வளவாக இல்லை.
க்ளப்டோமேனியா
அறிந்தோ அறியாமலோ திருடும் பழக்கத்தைக் கொண்டவர்களும் அடிமைப் பழக்கத்தைக் கொண்டவர்களே.
வேலையில் அடிமைகள்
பெரும்பாலும் அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரம் வேலை செய்து விட்டு விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால் ஒரு சிலர் அலுவலகம் முடிந்த பின்பும் தங்களை மறந்து வேலையில் ஈடுபடுவர். அவ்வாறு தாங்கள் செய்யும் வேலைகளில் அடிமைகளாக இருப்பவர்கள் விரைவில், குடும்ப உறவுகளைப் பிரிய நேரிடும்.
அதீத பக்தி
சமயமும், கடவுள் நம்பிக்கையும் மனிதர்களை நெறிப்படுத்தும் முக்கிய சாதனங்கள் ஆகும். ஆனால் அளவுக்கு அதிகமான சமய நம்பிக்கையும், அளவுக்கு அதிகமான கடவுள் நம்பிக்கையும், அதாவது எந்த ஒரு சாதாரண செயலையும் தங்களின் கடவுள் நம்பிக்கை மற்றும் சமய நம்பிக்கை ஆகியவற்றோடு எப்போதும் இணைத்துப் பார்த்தால் அதுவும் ஒரு அடிமைத் தனமாக மாறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக