View status

View My Stats

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

80 ஆயிரம் வங்கிப் பணிகள்... எப்படித் தயாராவது?

ன்றைக்கு எல்லோரும் விரும்பும் ‘ஹாட் ஜாப்’பாக இருக்கிறது வங்கி வேலை. என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் முதல் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்  வரை வங்கி வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று விரும்பு கிறார்கள். இந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் வங்கித் துறையில் 80,000 பணியாளர்கள் ஓய்வுபெறப் போகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்த 80 ஆயிரம் பணியிடத்தில் உங்களுக்கான ஓர் இடத்தை உருவாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும், வங்கி வேலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் கல்வி ஆலோசகர் வீரபாகு.
வங்கிகளின் முக்கியத்துவம்!
‘‘ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் முக்கியப் பங்காக இருப்பது வங்கிகள்தான். அதாவது, அரசு வழங்கும் மானியம் முதல் வருமான வரி செலுத்துவதற்கான அத்தனை பணப் பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட வேலைகளும் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுகிறது. முன்பெல்லாம் மக்களிடம் இருக்கும் பணத்தை டெபாசிட் செய்யவும், தினசரி பயன்பாட்டுக்கு வெளியே எடுக்கவும் வங்கிகள் பயன்பட் டன. ஆனால், இன்று பணம் சார்ந்த அத்தனை பரிவர்த்தனைகளும் வங்கியின் மூலமாகவே நடக்கிறது. இதனால் வங்கியின் தொடர்பு இல்லாமல் எந்தவித மான வேலையும் நடக்காது  என்ற நிலை உருவாகி உள்ளது.
மேலும், நாட்டில் உள்ள முன்னணி வங்கிகள் அனைத்துமே தங்கள் கிளைகளை அனைத்து இடங்களிலும் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன. இதனால் புதிய வேலைவாய்ப்பு கள் இந்தத் துறையில் இருந்து கொண்டேதான் இருக்கும்.
புதிதாக உருவாகும் வங்கி வேலைக்குத் தேவையான பணியாளர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டித் தேர்வுகள் எப்படி நடத்தப்படுகின்றன, என்னென்ன பிரிவுகளின் கீழ் தேர்வுகள் நடைபெறும், யார் இதில் கலந்துகொள்ள முடியும் என்கிற கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம்.
முக்கியப் பொதுத் துறை வங்கிகளில் இந்த நிதியாண்டில் மட்டும் 39,756 ஊழியர்கள் ஓய்வுபெற இருக்கிறார்கள். இதில் 19,065 அலுவலர்கள், 14,669 எழுத்தர் பணியில் உள்ளவர்கள். இவர்களின் பணிகளைத் தொடர்ந்து செய்வதற்குப் புதிய பணியாளர்களைத் தேர்வு செய் வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
பதவி!
வங்கியில் எழுத்தர் மற்றும் அலுவலர்கள் மற்றும் சிறப்பு அலுவலர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. சிறப்பு அலுவலர்கள் என்பது கணினி பொறியாளர்கள், சட்ட ஆலோசகர், கணக்காளர் போன்ற பதவிகள் சிறப்பு அலுவலர் பதவிகள் ஆகும்.
வங்கியில் சட்ட ஆலோசனை என்பது கட்டாயம் தேவைப்படும். இதற்கு வெளியிலிருந்து தனியாக ஆலோசகர்கள் நியமிக்க முடியாது. இதேபோலதான் வங்கியில் உள்ள கணினிகளுக் கான வேலைகளைப் பார்ப் பதற்கு, வங்கியின் ஊழியர்களுக் கான சம்பளம், இதரச் செலவுகள் போன்றவற்றுக்கும், கணக்குகளைப் பராமரிப்பதற்கு தனியாக கணக்காளர்கள் போன்ற பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
கல்வித் தகுதி, சம்பளம்!
குறைந்தபட்சம் இளநிலை பட்டம் முடித்தவர்கள் இந்தப் போட்டித் தேர்வினை எழுத முடியும். இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐபிபிஎஸ்) என்ற அமைப்புதான் இதற்கான தேர்வுகளை நடத்துகிறது. எஸ்பிஐ தவிர்த்து, அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கான தேர்வையும் இந்த அமைப்புதான் நடத்துகிறது (எஸ்பிஐ வங்கி தனியாகத் தேர்வு நடத்துகிறது).
இந்தத் தேர்வில் கட் ஆஃப் தேதி என்று கூறப்படும், அதாவது,  ஆகஸ்டு 1-ம் தேதியன்று தேர்வு எழுதுபவர்களுக்கு 20 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்; மேலும், தேர்வு எழுதுபவர் களுக்கான அதிகபட்ச வயது 28 ஆகும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் சலுகை உள்ளது.
எழுத்தாளர் பதவிக்கு 25-30 ஆயிரம் ரூபாயும், அலுவலர் மற்றும் சிறப்பு அலுவலர் பதவிக்கு 40-45 ஆயிரம் ரூபாய் வரையும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பாடத் திட்டங்கள்!
இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு என நடைபெறும். இவை இரண்டுமே ஆன்லைன் மூலமாக நடைபெறும் தேர்வுகள் ஆகும்.
முதல் நிலைத் தேர்வுக்கு ஒரு மணி நேரமும், இரண்டாம் நிலைத் தேர்வுக்கு இரண்டு மணி நேரமும் கால அவகாசம் வழங்கப்படும்.
முதல் நிலைத் தேர்வை பொறுத்தவரை, ஆங்கிலம், கணிதம், தீர்வு கண்டுபிடித்தல் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும். இதில் பள்ளியில் படித்த ஆங்கிலம் (இலக்கணம் உட்பட) மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் இருக்கும்.
இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், தீர்வு கண்டுபிடித்தல் ஆகிய இவற்றோடு வங்கி சம்பந்தப்பட்ட பொது அறிவுக் கேள்விகளும் சமமாக இடம்பெறும். எனவே, பாடப் புத்தகத்தைப் படிப்பது டன் சமீபத்திய செய்திகள், பொதுவான விஷயங்கள் குறித்த அறிவும் அவசியம். வங்கி சார்ந்த கேள்விகளுக்கு தயார் செய்ய, நிதி சார்ந்த தினசரி செய்திகளைப் படிப்பது அவசியம்.
மதிப்பெண்!
முதல் நிலைத் தேர்வு 100 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம் நிலைத் தேர்வு 200 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கும். எனவே, அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ச்சி பெறுவது அவசியம். அதுதவிர, மொத்த கட் ஆஃப் மதிப்பெண்களும் இருக்கும். இந்த மதிப்பெண்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் வித்தியாசப்படும். அதேவேளை யில் தவறாக விடையளிக்கும் கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்களும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எப்படித் தயார் ஆவது?
வங்கி தேர்வில் வெற்றி பெற பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பது கட்டாயம் என்று அவசியம் இல்லை. நீங்களே இந்தத் தேர்வுக்கு தனிப்பட்ட முறையில் எளிதாகத் தயாராக முடியும். தொடர்ந்து பயிற்சி செய்வது மூலமாக இதை எளிதாகச் செய்ய முடியும்.
இந்தத் தேர்வைப் பொறுத்த வரை, சரியான பதில் மட்டும் முக்கியம் இல்லை. கேள்விகளுக்கு எவ்வளவு வேகமாகப் பதில் அளிக்கிறீர்கள் என்பதும் இதில் மிகவும் முக்கியமானது.
மேலும், இந்தத் தேர்வு ஆன்லைன் தேர்வு என்பதால், ஆன்லைனில் தேர்வு எழுதிப் பழகுவதும் அவசியம்.
உங்களின் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் அதே வேளையில், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடப் பிரிவுகளில் பாடப் புத்தங்களில் இருப்பதை விடக் கொஞ்சம் அட்வான்ஸாகப் படித்து வைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விரைவாகப் பதிலளிக்க முடியும். தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் தேர்வு என்பது மிகவும் எளிமையானதாக இருக்கும்.
இப்போது பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் அடுத்து வங்கி வேலைக்கு படிக்கத் தொடங்கினால், வங்கி வேலை கிடைப்பது நிச்சயம்!
படம்:  சொ.பாலசுப்ரமணியன்
இரா.ரூபாவதி
நன்றி
விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக