View status

View My Stats

புதன், 29 ஜூலை, 2015

நோய்களைத் தடுக்கும் தாய்ப்பால்!


கஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் மகத்துவம் பற்றியும், தாய்ப்பால் தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களையும் வழங்குகிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் இரா.நளினி.
‘‘குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்களில் தாய்க்கு சுரக்கும் சீம்பால் கொழுப்பு, புரதம், விட்டமின் சத்துகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, சளி, நோய்த்தொற்று ஏற்படாது என்பதுடன், வளர்ந்ததும் சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் போன்றவையும் ஏற்படுவதில்லை.
சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், மனச்சோர்வு, அதிக உடல் எடை போன்றவை வராமல் இருப்பதுடன் தாய்க்கும் சேய்க்கும் இடையில் பிணைப்பு அதிகமாகும்.
அமர்ந்த நிலையிலோ அல்லது சாய்ந்தவாக்கில் படுத்த நிலையிலோ தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழித்தால் மட்டுமே குழந்தை சரியான முறையில் பசியாறுகிறது எனக் கொள்ளலாம்.
 
தாய்ப்பால் சுரக்க சரிவிகித உணவுடன் வெள்ளைப்பூண்டை சேர்த்துக் கொள்வது அவசியம். தாயின் பால்சுரப்பு குழந்தைக்குப் போதவில்லை எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இன்னும் சில பிரத்யேக உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பிரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து, இரண்டு நாட்கள் வரை கூட குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குழந்தைக்குப் புகட்டலாம். அப்படி வைக்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் வைத்து அதை வெந்நீர் கொண்ட மற்றொரு பாத்திரத்துக்குள் வைத்து, குளிர்ச்சி அடங்கி இயல்பான சூட்டுக்கு பால் வந்ததும், குழந்தைக்குக் கொடுக்கலாம்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு காம்பு புண்ணானால்... வெதுவெதுப்பான நீரில் கழுவுவதுடன், லோஷன் மற்றும் எண்ணெய் தடவலாம்.
மார்பகங்களில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு பால் கட்டி வலி ஏற்பட்டால் வெந்நீர் அல்லது பனிக்கட்டியை தேய்த்து பாலை பீய்ச்சி எடுப்பது உடனடி தீர்வைத் தரும்.
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் தருவதே, குழந்தைக்கு ஆரோக்கியமான வளர்ச்சி தரும். புட்டியில் பால் கொடுப்பது நோய்த் தொற்றை உருவாக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்’’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக