என் குருநாதர் ஞானி ஹஸ்ரத் மாமா அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் சொன்னவைகளில் இருந்து சில முத்துக்கள்:
உங்களுடைய அரிப்புக்கு அடுத்தவனை சொரியச் சொன்னால்கூடத் தவறில்லை. ஆனால் உங்களுக்காக சிந்திப்பதை மட்டும் நீங்கள்தான் செய்ய வேண்டும்.
உங்கள் அழுக்கை நீக்கினால் நீங்கள் யார் என்பது தெரிய வரும்
கிணற்றை உற்றுப்பார் என்றால் அதன் பொருள் போய் உற்றுப்பார்த்துவிட்டு வந்துவிடு என்பதல்ல. தூர் எடுத்து தூய்மைப்படுத்து என்பதுதான்.
எண்ணுவதைச் செய்யவேண்டும். செய்ய முடிந்ததைத்தான் எண்ண வேண்டும்
முதல் நோட்டு மாதிரியே கடைசி நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் பரக்கத் (செல்வ வளம்)
எந்த நி’மத்தும் (அருட்கொடையும்) வருமுன்பே அது வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு சக்தி நம்மிடம் இல்லை என்றால் அது நம்மிடம் இல்லை என்று பொருளல்ல. அந்த சக்தியை இதுவரையிலும் பயன்படுத்தவில்லை – அதை நாம் இன்னும் உணரவில்லை என்று பொருள்.
எல்லா பணக்காரனுக்கும் பணக்காரன் என்ற பெயர் பொருந்தாது. பணம் வைத்திருப்பவன் அவ்வளவுதான்.
எல்லா நி’மத்தையும் (அருட்கொடைகளையும்) எண்ணத்திற்கு அடுத்தபடியாக ஆண்டவன் மூச்சோட்டத்தில் வைத்துள்ளான்.
அறிவென்பது கற்றுக்கொள்வதல்ல. தானாக வருவது. கற்றுக்கொள்வதெல்லாம் குப்பைதான்.
குழந்தைக்கு பட்டம் வாங்க வேண்டுமே என்ற கவலையும் எட்டாவது பென்ஸ் கார் வாங்கவேண்டும் என்ற டென்ஷனும் ஒரேமாதிரியானதுதான்.
எதிர்பார்ப்பது தவறா என்பது மலம் துர்நாற்றமடிக்குமா என்று கேட்பதைப் போன்றது.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையவில்லை நாம். நெய்யை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைந்துகொண்டிருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக