திருநெல்வேலிக்கு அல்வா என்றால், புளியங்குடிக்கு ‘எலுமிச்சை’தான் அடையாளம். அந்தளவுக்கு இந்த ஊரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இப்பகுதிகளில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை எலுமிச்சை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. கரும்பு, நெல் ஆகியவையும் இப்பகுதிகளில் விளைந்தாலும், தினசரி வருமானம் தரும் எலுமிச்சையையே இங்கு பணப்பயிராகக் கருதுகிறார்கள். எலுமிச்சைக் கன்றுகளை குழந்தைகளைப் போல பராமரிக்கும் இப்பகுதி விவசாயிகள், எலுமிச்சைத் தோப்புக்குள் செருப்புகூட அணிந்து செல்வதில்லை. அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய விரத நாட்களில் எலுமிச்சைத் தோப்புக்கு சாம்பிராணி காட்டும் அளவுக்கு, தெய்வமாகவும் போற்றுகிறார்கள்!
லெமன் சிட்டி!
இப்பகுதியின் ‘முன்னோடி இயற்கை விவசாயி’ அந்தோணிசாமியிடம் எலுமிச்சை பற்றிப் பேசினோம். ”இந்த ஏரியாவுக்கு புளியங்குடிதான் முக்கியமான எலுமிச்சைச் சந்தை. கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் தூரத்துல இருந்துகூட இங்க எலுமிச்சை வரும். ராஜபாளையம், சுரண்டை, கடையம், அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, பண்பொழி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் மற்றும் கோவில்பட்டினு கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் ஏக்கர்ல நாட்டு எலுமிச்சை சாகுபடி நடக்குது. இதுல, புளியங்குடியில் மட்டும் பத்தாயிரம் ஏக்கர்ல நடக்குது. அதனாலதான், இந்த ஊரை ‘லெமன்சிட்டி’ங்கிறாங்க. மத்த ஊர் பழங்களைவிட இந்த ஊர் எலுமிச்சைக்கு நல்ல கிராக்கி இருக்கு. இது, அளவுல பெரிசா இருக்கும். அதிக சாறு வரும். பறிச்சதுல இருந்து 5 நாள் கழிச்சுதான் பழுக்கும். ரொம்ப நாள் வரை தாக்குப் பிடிக்கும். அதனால் போக்குவரத்துக்கும், வெச்சு விக்கிறதுக்கும் ஏதுவா இருக்கும். இதெல்லாம்தான் இத்தனை கிராக்கி இருக்கிறதுக்குக் காரணம்” என்ற அந்தோணிசாமி, சாகுபடி செய்யும் முறையைச் சொன்னார். அது இங்கே பாடமாக…
20 அடி இடைவெளி!
”20 அடி இடைவெளியில் 3 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலம் இருக்கும்படி குழிகள் தோண்ட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 90 முதல் 100 குழிகள் வரை தோண்டலாம். ஒவ்வொரு குழியிலும்
15 கிலோ திருகுக்கள்ளியைப் போட்டு, அதன் மீது 20 கிலோ கொழிஞ்சி, ஆவாரை இலைகளைப் போட வேண்டும். பிறகு, 30 கிலோ தொழுவுரம், 2 கிலோ வேப்பங்கொட்டை, 1 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு, 25 நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும் (கொழிஞ்சி, ஆவாரை, திருகுக்கள்ளி போடமுடியாதவர்கள்… தொழுவுரம், மண்புழு உரம் மட்டும் போடலாம்). பிறகு, குழியின் நடுவில் ஒன்றரை அடி ஆழத்துக்குத் தோண்டி எலுமிச்சை நாற்றை நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தால், மகசூல் சீராக இருக்கும். கன்று நடவு செய்த 10 நாட்கள் வரை, கன்றின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்துவிட வேண்டும். போதுமான அளவுக்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
15 ஆண்டுகள் வருமானம்!
40 முதல் 45 நாட்களில் புதுத் தளிர்கள் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கலாம். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தெளிப்பான் மூலமோ அல்லது வேப்பிலை மூலமோ செடிகளின் மீது தெளித்தால், வண்ணத் துப்பூச்சிகள் வராது. 20 நாட்கள் இடைவெளியில் இக்கரைசலைத் தொடர்ந்து தெளிக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை மரத்தின் மூட்டில் இருந்து, ஓர் அடி தள்ளி 20 கிலோ ஆடு அல்லது மாட்டு எரு, 1 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து வைக்க வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. இரண்டாம் ஆண்டில் இருந்து காய்கள் காய்க்கத் தொடங்கும். தொடர்ந்து, 15 ஆண்டுகள் வரை காய்க்கும்.’
சாகுபடிப் பாடம் முடித்த அந்தோணிசாமி, ”ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு சராசரியா 300 காய் வரை கிடைக்கும். எங்க ஊர்லயே சந்தை இருக்கிறதால, விற்பனைக்குப் பிரச்னையில்லை. சொல்லப்போனா, எலுமிச்சைக்குனு தனி மார்க்கெட் இங்கதான் இருக்கு. தமிழ்நாடு மட்டுமில்லாம ஆந்திரா, கர்நாடகா, கேரளானு இங்கிருந்து எலுமிச்சை போகுது. திருவனந்தபுரத்துல இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. பழத்தோட அடிப்படையில மூன்று ரகமா பிரிச்சு விலை வெப்பாங்க” என்றவர், நம்மை எலுமிச்சைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
சைக்கிள், பைக், தள்ளுவண்டி என மூட்டை, மூட்டையாக எலுமிச்சை வந்து இறங்கிக்கொண்டே இருக்க… திரும்பியப் பக்கமெல்லாம் எலுமிச்சை ஏலம் நடந்து கொண்டேயிருக்க… எலுமிச்சை மார்க்கெட் துணைத்தலைவர் திருமலைசாமியிடம் பேச்சுக் கொடுத்தோம்.
”முப்பது வருஷத்துக்கு முன்ன எல்லாரோட வீட்டுலயும், தோட்டத்துலயும் எலுமிச்சை காய்க்கும். வீடு வீடா போயி, ‘எலுமிச்சை இருக்கா?’னு கேட்டு, பேரம் பேசி மூடை போடுவோம். அதுல நிறைய சிக்கல்கள் இருந்துச்சு. அப்பறம்தான், புளியங்குடி மெயின் பஜார்ல எலுமிச்சைக்காக சந்தை ஏற்படுத்தலாம்னு விவசாயிகள் கேட்டாங்க. 89-ம் வருஷம், சின்ன அளவுல கூரை செட் போட்டு ஆரம்பிச்சோம். அப்பறம் 30 கடைகள் வந்துருச்சு. இங்க திறந்தவெளி ஏலம்தான்.
மூடை கட்டி வர்ற எலுமிச்சைகளைக் கொட்டி பரப்பி ஏலம் விடுவோம். பருமன், நிறத்தை வெச்சு விலை கேப்பாங்க. நூத்துக்கு பத்து காய் சேர்த்து மூடை பிடிக்கணும். அப்பதான், பொட்டுக்காய், சொத்தைக்காய், வெம்பியக்காய்னு கழிக் கிறப்போ சரியா இருக்கும். ஏலம் விட்டதும் காய்களை எண்ணித்தான் மூடை போடுவோம். எடை கணக்குலயும் காய் ஏலம் விடலாம்.
சனிக்கிழமை தவிர, வாரம் முழுக்க சந்தை உண்டு. சாதாரணமா காலையில 11 மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் 3 மணிக்கு ஏலம் முடியும். சீசன் சமயங்கள்ல சாயங்காலம் 5 மணி வரைக்கும்கூட நடக்கும். ஜனவரி மாசத்துல இருந்து ஜூன் மாசம் வரைக்கும் சீசன். இதுல, ஏப்ரல் கடைசியில இருந்து, ஜூன் வரைக்கும் உச்சக்கட்ட சீசன். இந்த சமயத்துல, ஒரு நாளைக்கு 80 லாரி லோடு வரை (8 லட்சம் கிலோ அளவு) வரும். மத்த சமயங்கள்ல தினமும் 20 ஆயிரம் கிலோ வரத்து இருக்கும்” என்றார்.
புளியங்குடி, முகைதீன் அப்துல் காதர், ”30 வருசமா 6 ஏக்கர்ல எலுமிச்சை விவசாயம் செய்றேன். மொத்தம் 600 மரம் இருக்குது. சராசரியா ஒரு நாளைக்கு 120 கிலோவுல இருந்து 180 கிலோ வரை சந்தைக்குக் கொண்டு வருவேன். ஒரு கிலோ 50 ரூபாய்ல இருந்து, 60 ரூபாய் வரை விலை போகுது. தினமும் குறைஞ்சது 6 ஆயிரம் ரூபாய்க்குக் காய் போடுவேன். இதுல பத்து சதவிகிதம் கமிஷன் போக 5 ஆயிரத்து 400 ரூபாய் கையில கிடைக்கும்” என்றார்.
திருவேட்டைநல்லூர், பெருமாள், ”நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே எலுமிச்சை சாகுபடிதான். 4 ஏக்கர்ல எலுமிச்சை இருக்கு. நான், எண்ணிக்கை முறையிலதான் விற்பனை செய்றேன். சாதாரண சமயத்துல 1 ரூபாய்ல இருந்து, 1 ரூபாய் 50 காசு வரைக்கும் ஒரு பழத்துக்கு விலை கிடைக்கும். சீசன் சமயத்துல 3 ரூபாய்ல இருந்து, 5 ரூபாய் வரை கிடைக்கும். போன சீசன்ல 7 ரூபாய் அளவுக்கு விலை கிடைச்சுது. எடையைவிட எண்ணிக்கை முறைதான் லாபமா இருக்கு. தினசரி வருமானம், உடனடிப் பணம், திறந்தவெளி ஏலம், அதனால விக்கிறவர், வாங்குறவர் ரெண்டு பேருக்குமே நஷ்டம் இல்லை” என்றார்.
தொடர்புக்கு,
திருமலைச்சாமி, செல்போன்: 94435-55936, அந்தோணிசாமி, செல்போன்: 99429-79141 முகைதீன் அப்துல்காதர், செல்போன்: 99409-26911 பெருமாள், செல்போன்: 94424-90253
திருமலைச்சாமி, செல்போன்: 94435-55936, அந்தோணிசாமி, செல்போன்: 99429-79141 முகைதீன் அப்துல்காதர், செல்போன்: 99409-26911 பெருமாள், செல்போன்: 94424-90253
சேதி கேட்டீங்களா!
சொட்டு நீர்க்குழாய் அடைப்புக்குத் தீர்வு!
சொட்டு நீர்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் அத்தனை விவசாயிகளுக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை சொட்டு நீர்க் குழாய்களில் உப்பு அடைப்பு. இதை சரி செய்வதற்கு சொட்டு நீர் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் ‘சல்பியூரிக் ஆசிட்’டைதான் பயன்படுத்தச் சொல்கின்றனர். அந்த ஆசிட் பயிர்களில் படும்போது, பயிர் கருகி போய்விடுகிறது. இந்தப் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு இதோ…ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கும் சொட்டு நீர்க் குழாய்களுக்கு 20 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீரைக் கலந்துகொள்ள வேண்டும். பாசனம் செய்து முடிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, உரம் செலுத்தும் குழாய் வழியாக இந்தக் கரைசலைச் செலுத்தி, ஐந்து நிமிடம் மட்டும் ஓடவிட்டு மோட்டரை நிறுத்திவிட வேண்டும். மீண்டும் 24 மணி நேர இடைவெளி கொடுத்து, எல்லா கேட் வால்வுகளையும் திறந்துவிட்டு பாசனம் செய்தால், சொட்டு நீர்க் குழாயில் இருக்கும் அடைப்புகள் முழுக்க வெளியேறிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக