View status

View My Stats

திங்கள், 27 மே, 2013

தமிழகத்தில் புதிதாக 17,138 காவலர்கள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 17,138 காவலர்கள், 1,091 காவல் உதவி ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள், 292 சிறைக் காவலர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2013-2014 ஆம் ஆண்டிற்கான காவல் மற்றும்  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு  பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது

காவல்துறைகளில் காலிப் பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவது அத்தியாவசியமான தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, இனி ஆண்டுதோறும் காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் ஏற்படும் காலியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 17,138 காவலர்கள், 1,091 காவல் உதவி ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் 292 சிறைக் காவலர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர்.

காவலர்களுக்கு 4,800 புதிய குடியிருப்புகள்:

காவலர்களின் சேவை எந்நேரமும் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே அவர்களின் குடியிருப்புத் தேவைகளை 100 விழுக்காடு பூர்த்தி செய்ய  உறுதி பூண்டுள்ள எனது தலைமையிலான அரசு அதற்கான அரசாணையை 13.12.2011 அன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, குடியிருப்புகளுக்கு தேவையான நிலம் கண்டறியப்பட்டு அனைத்து காவலர்களுக்கும் குடியிருப்பு வசதி செய்து தரப்படும். தேசிய சராசரியை விட இரு மடங்கிற்கும் அதிகமாக தமிழ்நாட்டில் காவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது 49,863 குடியிருப்புகள் இருக்கின்றன.

மேலும் 6,078 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் தற்போது நடைபெற்று வருகின்றன. 2013-2014-ஆம் ஆண்டில் மேலும் 4,800 குடியிருப்புகள் 575 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்கப்படும்.

30 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்  நியமனம்:

துணை கண்காணிப்பாளர் நிலையில் போதுமான அளவு அதிகாரிகள் இல்லாததால், அந்தப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 30 துணைக் கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்.

10,500  சிறப்புக் காவல் இளைஞர்கள் நியமனம்:

பயிற்சி அளிக்கப்பட்ட காவலர்கள் செய்து வரும் சில கீழ்மட்ட பணிகளை செய்வதற்கும் மற்றும் காவல் படைக்கு உதவுவதற்கும் தமிழ்நாடு  சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்று ஏற்படுத்தப்படும் என்று 29.10.2012 அன்று நான் அறிவித்தேன்.  இது தொடர்பான மசோதா 7.2.2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு,  சட்டமாக இயற்றப்பட்டு, 25.2.2013  அன்று  அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் செயற்பணிகள் மற்றும் கடமைகள் பின்வருமாறு:

காவல் துறையின் வாகனங்களை ஓட்டுதல், தபால் விநியோகம் மற்றும் கணினிப் பதிவுகளை மேற்கொள்ளுதல், காவல் குடியிருப்புகளை பராமரித்தல் மற்றும் விபத்திற்குள்ளான நபர்களின் உயிரிழப்பை தடுப்பதில் காவல் துறைக்கு உதவுதல்.

இந்த ஆண்டு, முதல் கட்டமாக 10,500 இளைஞர்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர்.

100 புதிய நவீன உயிர் காக்கும் ஊர்தி:

விபத்தில் சிக்கியவர்களை "பொன்னான நேரம்" என்று சொல்லப்படுகின்ற நேரத்திற்குள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டில் அவசர விபத்து நிவாரண சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன.
2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 100 அவசர விபத்து நிவாரண சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த 100 மையங்களில் 38 மையங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 62 மையங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2012 ஆம் ஆண்டு 67,757 விபத்துகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன.  இவற்றில் 15,072 உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது விபத்தினால் பாதிப்பு அடைபவர்கள் அவசர மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் தற்போது இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

விபத்துகள் ஏற்படும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் இதற்கென தனியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தால் தான், காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இயலும். எனவே, இதற்கென 100 புதிய நவீன உயிர்காக்கும் ஊர்திகள் வழங்கப்படும். இதன் மூலம், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு குறைக்கப்படும்.

காவலர் பயிற்சிப் பிரிவின் கீழ் காவலர் உயர் பயிற்சியகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, காவலர் தேர்வு பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.  இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பயிற்சிப் பள்ளியில் 22 வாரங்களுக்கு மட்டுமே அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.  விரிவான பயிற்சி திட்டத்திற்கு குறைந்தது 7 மாத கால அளவு அடிப்படை பயிற்சியும், 1 மாத கால செயல்முறை பயிற்சியும் தேவைப்படுவதால் பயிற்சிக் காலத்தை நீட்டித்து 7.3.2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை கருத்திற்கொண்டு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி, திருச்சி, வேலூர், கோயம்புத்தூர்,  ஆவடி, விழுப்புரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பரங்கிமலை, புதுப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களின் கட்டுமான வசதிகள் 38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக