ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன ?
ஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன ?
Appendix அதாவது ஒட்டு குடல் / குடல் வால் என்பது ஒரு வியாதி அல்ல.
மக்களிடையே அவ்வாறு ஒரு வார்த்தை வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது, சமயங்களில் மருத்துவரும் கூட அவ்வாறே உச்சரிப்பதுண்டு - காரணம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக.
அப்படியென்றால் சரியான உச்சரிப்பு முறை?
" ஒட்டுக்குடல் வீக்கம்" என்பது மிகச்சரியானது.
எங்கு அமைந்துள்ளது?:
அடிவயிற்றின் வலப்புறத்தில் (Right Lower Abdomen) உள்ளது. உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில அமைந்துள்ளது இந்த appendix எனப்படும் இருந்தும் பயனில்லா (Vestigial organ) உறுப்பு. இதன் அமைப்பு பார்பதற்கு ஒரு குடலை போலவே இருந்தாலும் அளவில் மிகச் சிறியது அதாவது 10 cm நீளமும் 1cm க்கும் குறைவான பருமனும் கொண்ட ஒரு விரல் போன்ற பகுதி.
ஒட்டுக்குடலில் என்னென்ன வியாதிகள் வரலாம்?
- வீக்கம்
- சீழ் கட்டி(Abscess ) - மிகவும் ஆபத்தானது, காரணம் கட்டி வெடித்து உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
- புற்று கட்டி - அரிதாக.
ஒட்டுக்குடல் வீக்கம் - எப்படி கண்டுகொள்வது?
டாக்டர் வயிற்றை அழுத்தி பரிசோதிக்கும் பொழுது - ஒரு மரப்பலகை போல் உணர்வார் - காரணம் வலியால் தன்னிச்சையாக வயிற்றின் சதைகள் இருக்கப்ப்டுவதால். வயிற்றை கை வைத்து அழுத்தும் பொழுது இருந்தததை விட கையை எடுக்கும் பொழுது வலி அதிகமாக உணரப்படும்(Rebound Tenderness).
எந்த வயதினர் பெறும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்?
விடலைப்பருவத்தினரே (Adolescent age) 10 - 20 வயதினர் பெரும்பாலும் பாதிக்கபடுவர்.
மழலையர் மிக அரிதாக பாதிப்புக்குள்ளாவார்கள் எனினும் நோயை கண்டறிய நிறைய சிக்கல்கள் உள்ளன. உ.ம் குழந்தையால் பெரியவர்கள் போல் நோயின் தன்மையை விவரிக்க தெரியாது அதனால் தாமதமாகத்தான் மருத்துவரை அணுக நேரிடுகிறது.குடல் வால் ஓட்டையும் இவர்களுக்கே அதிகம் காரணம் நோய் கண்டறிவதில் ஏற்படும் கால தாமதம்.
மேலும் குழந்தைகளின் வேறு சில வியாதிகள் இதைபோல் பாவிப்பது.
நோய் கண்டறிய என்னென்ன மருத்துவ ஆய்வுகள் (Investigations - Tests) உள்ளன?
மேல் குறிப்பிட்டுள்ள நோயின் அறிகுறிகளுடன்
- ரெத்த பரிசோதனை (Blood test) - ரெத்த வெள்ளையணுக்களின் (white bloodcells -WBC) எண்ணிக்கை அதிகரிப்பு.
- ஸ்கேன்: (Ultrasound Scan (USG) - மீயொலி சோதிப்பான் & CT SCAN- கணினி கதிரியக்க சோதிப்பான்)
- சிகிச்சைக்கு பிறகு ஒட்டுக்குடல் திசு பரிசோதனை நுண்ணோக்கி மூலம். - இதன் மூலம் தான் நாம் சரியான நோயை கண்டறிய முடியும். நீங்கள் கேட்கலாம -அந்த உறுப்பையே உடலிலிருந்து அகற்றிய பிறகு நோயினை கண்டறிய என்ன அவசியம் என்று!!! . ஏனென்றால் ஒருவேளை பரிசோதனையில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் முழு சிகிச்சை அதன் பிறகுதான் ஆரம்பிக்கும்.
தீர்வுதான் என்ன (Treatment) ?
அறுவை சிகிச்சைதான் தலைசிறந்ததாக கருதப்படுகிறது.
உடனடியாக வலியையும் காய்ச்சலையும் குறைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் சரியான தீர்வு அறுவை சிகிச்சை தான். ஏனெனில் ஆண்டிபயாடிக்ஸ் (நுன்ன்ன்னுயிர்கொல்லி - Antibiotics) கொடுக்கப்பட்டு வந்தாலும் முழுவதும் குணப்படுத்துதல் சந்தேகத்திற்குரியது. மேலும் ஒட்டுகுடலில் ஓட்டை விழும் வாய்ப்பும் அதனால் ஏற்படும் உயிர்சேதமும் இதை ஒரு மருத்துவ அவசர நிலமை (Medical Emergency) என்று பட்டியலிடுகிறது.
என்ன மாதிரியான அறுவை சிகிச்சைகள் உள்ளன?
(Appendicectomy) - ஒட்டுகுடல் அகற்றுதல்: இரண்டு முறைகள் உள்ளன.
1 ) ஓபன் சர்ஜரி (Open Surgery): மெக் பர்நிஸ் பாயிண்ட் என்ற இடத்தில் அல்லது வலி எங்கு அதிகமாக உணரப்படுகிறதோ அங்கு வயிற்றை கீரி உள்சென்று ஒட்டுக்குடலை அகற்றுதல்.
2) லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிசெக்டமி (Laprascopic appendicectomy): அதாவது வயிறு உள்நோக்கி கருவி (Laprascopy) கொண்டு வயிற்றின்மேல் சிறு கீரல் மூலம் அக்கருவியை உள்செலுத்தி அதில் உள்ள கேமராவை (Video camera) தொலைக்காட்சிபெட்டியில் இணைத்து வயிற்றின் உட்புறம் இருப்பதை காணமுடிகிறது. தேவைப்பட்டால் இன்னும் ஒன்றிரண்டு சிறு கீறல்கள் மூலம் மெல்லிய நீளமான அறுவை சகிச்சை உபகரணங்களை உட்செலுத்தி ஒட்டுக்குடலை அகற்றுதல்.
இது மருத்துவருக்கு வயிற்றின் நல்ல ஒரு உள்தோற்றத்தை வெளிக்கொணர்கிறது அதுவும் சிறு கீரல் மூலம்.
எது சிறந்தது ?
ஓபன் சர்ஜரி: இதில் வயிறு 6 முதல் 8 cm வரை கீரப்படுவதால் திசுக்கள் (Tissues) அதிகமாக நசுக்கப்பட்டு சேதமடைகின்றன ஆகவே அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அதிக வலி வர வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாள் அதிகமாக மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். தழும்பு பெரிதாக தெரிய வாய்ப்பு உள்ளது. எனினும் கைதேர்ந்த மருத்துவர்கள் செய்யும் பொழுது மேற்கண்ட அனைத்தும் குறைந்து ஏறத்தாழ ஒரு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை போல் செய்ய முடியும்.
லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிசெக்டமி (Laprascopic appendicectomy):
மிகச்சிறிய கீறல்கள் அதுவும் தொப்புளுக்கு அருகில் மற்றும் பிறப்பு உறுப்புக்கு சற்று மேலே உள்ள சருமம் நிறைந்த பகுதியில் - இதனால் சிறிய தழும்புகள் அதுவும் மறைவான பகுதியில் அதோடு வலியும் குறைவு - அறுவை சிகிச்சைக்கு பிறகு. குறைவான நாட்கள் மருத்துவமனையில் தங்குதல்.
இருப்பினும் ஓபன் சர்ஜறியே சிறந்தது என சில மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் சமயங்களில் ஒட்டுக்குடல் நன்றாக இருப்பதும் தொந்தரவு வயிற்றின் வேறு பகுதியில் இருப்பதும் வயிற்றை கீறிய பிறகு கண்டறியப்படுகிறது. அப்பொழுது ஓபன் சர்ஜரி மிக சிறப்பானதாக அமையும்.
அதிநவீன சிகிச்சை ஏதாவது உண்டா?
"NOTES" - நோட்ஸ் எனப்படும் அதிநவீன சிகிச்சைஐ தமிழ் மருத்துவர்கள் சிலர் ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த "NOTES" (Natural Orifice Transluminal Endoscopic Surgery) முறையால் உடலின் வெளிப்புறம் எந்த கீறலோ அதனால் தழும்போ ஏற்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு உள்நோக்கி கருவி மூலம் செய்யப்படுகிறது, அதாவது வளைந்துகொடுக்கும் குழாய் ஒன்று வாய் வழியாக செலுத்தப்பட்டு இரைப்பையில் ஒரு சிறு துளையிட்டு ஒட்டுக்குடலை அணுகி அகற்றப்படுகிறது (அதே வழியாக).
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மிகச்சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுகுடல் வீக்கம் ஏற்பட காரணம் என்ன?
ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற குடல் - அதாவது ஒருவழிப்பாதை தான். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டிக்கொண்டிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்வதுண்டு. திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒட்டுகுடலின் வாய் மூடப்படும்(அழுத்தப்படும்) நேரத்தில் ரெத்த ஓட்டம் தடைபட்டு ஒட்டுக்குடலின் திசுக்கள் இறக்க நேரிடும் அதோடு உமிழ்நீர் போன்ற திரவமும், கிருமிகளும் சுரக்கப்பட்டு ஒட்டுக்குடல் வீங்குகிறது(சீழ் பிடிக்கிறது). அப்படியே விட்டால் அது வெடித்து சீழ் முழு வயிற்றுக்கும் பரவி உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கல், திடப்பொருளை விழுங்குதல(Foreign body swallow), நார் சத்து குறைவான உணவை உண்பது, வயிற்றில் உள்ள சில ஒட்டுண்ணிகள் (Parasites) இவற்றில் எதாவது ஒன்று தான் ஒட்டுக்குடலின் வாய் மூடவும் அதனால் வீக்கம் ஏற்படவும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டி வரும்?
குறைந்தபட்சம் 2 முதல் 3 நாட்கள் இருக்க வேண்டி வரும். இது ஒவ்வொருவரின் நிலையை பொருது.
ஒட்டுக்குடல் வெடித்திருக்கும் பட்சத்தில் குறைந்தது ஒரு வாரம் இருக்க நேரிடும்.
எப்பொழுது தையல் பிரிப்பார்கள்?
பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் பிரிக்கப்பட்டுவிடும்.
சீழ் பிடித்தாலோ அல்லது விடாது இருமல்/ தும்மல் / வாந்தி வரும் பட்சத்தில் சிறிது தாமதம் ஆகலாம்.
என்ன விதமான மயக்க மருந்து கொடுக்கப்படும்?
முழு மயக்கம் என சொல்லப்படும் ஜென்றல் அனஸ்தீசியா (General Anesthesia)கொடுக்கப்படும்.
நாம் முற்றிலுமாக சுயநினைவை இழந்த பிறகு நமது ரெத்த ஓட்டம், சுவாசம் அனைத்தும் மயக்க மருந்தியியல் மருத்துவரால் சீற்படுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன் நாம் வெறும் வயிற்றில் இருப்பது கட்டாயம. சாப்பாடு, தண்ணீர் என 6 மணி முதல் 8 மணி நேரம் வரை எதுவும் சாப்பிட கூடாது.
சமயங்களில் முதுகு தண்டுவடத்தில் (Spinal Cord) மருந்து செலுத்தி வயிறு மற்றும் கால்களை மறுத்து போக வைப்பார்கள். இது பெரும்பாலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அதுவும் வெறும் வயிற்றில் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
நன்றி : தமிழில் மருத்துவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக