View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

பேச்சு எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவை

 எதைப்பேச வேண்டுமோ, எப்படிப் பேசவேண்டுமோ அதை அப்படி, தாமதிக்காமல் பேசிவிடவேண்டும்.

2. மனித உறவுக்கு ஆதாரம் பேச்சும் பேசும் முறையும்தான்.

3. எதையும் செய்யலாம், முடியும். ஆனால் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

4. நெருங்கிய நண்பரோடு பேசும்போதுகூட அடுத்தவரைக் குறைகூறி பேசக்கூடாது.

5. பேச்சு உங்கள் நோக்கத்தைத் தூண்டவோ அழிக்கவோ செய்யலாம். எனவே தேவையற்ற பேச்சைத் தவிருங்கள். பேசினால், ஒரு நோக்கத்தோடுதான் பேசவேண்டும். விதிவிலக்கு: மக்களுக்காக பேசிக்காட்டலாம். நட்புக்காக சிகரட் பிடிப்பவன் வெறும் புகையைத்தான் ஊதுவான். 

6. பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எம்மிடம் அழுத்தமான கணக்கு உண்டு என்கிறது திருமறை.

7. சமுதாய வாழ்வுக்கு முதுகெலும்பு பேச்சாகும். எனவே எப்போது பேச்சு சரியாக வருகிறதோ அப்போது வாய்ப்பும் தானாக வரும். 

8. அதிகமாகப் பேசுவது ஒரு பலவீனம். [பேசுவதைவிட வேறு காரணம் அதற்கு இருக்கும்.] எனவே ஒருவன் பேசுகிறான் என்பதைவிட, ஏன் பேசுகிறான் என்பதுதான் முக்கியம். 

9. குறிக்கோளில்லாமல் வாழ்பவன்தான் அதிகமாகப் பேசுகிறான்.

10. தங்கு தடையில்லாமல், தெளிவாகப் பேசுவது ஒரு சக்தியாகும். 

11. வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் வரும்போது வெளியே சொல்லாமலிருந்தால், சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று தெரியவரும்.

12. பேச்சில் ஏற்படும் சந்தோஷம் முன்னேற்றப் பாதையில் நமக்கொரு தடைக்கல்லாகும். அதில் ஏற்படும் ஒரு ரகசிய சந்தோஷம் ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகும். நாலு பேர் அவன் பேச்சைக் கேட்பதன் மூலம் அந்த மனப்பான்மையை அவன் மாற்றிக்கொள்கிறான். 

13. நீங்கள் என்னிடம் பேசும்போது கேட்டால் சொல்லவேண்டுமே தவிர, மகிழ்ச்சி இல்லாமல் சொல்லவேண்டும். சொல்லும்போதுகூட மகிழ்ச்சி வந்துவிடக்கூடாது. 

14. மக்கள் பேசுவதற்கு இரண்டு காரணங்கள். 1. வளர்ந்துவிட்டேன் என்று காட்டும் ஒரு உயர்வு மனப்பான்மை. 2. அடுத்தவரிடமிருந்து பரிவை எதிர்பார்க்கும் குணம். இரண்டுமே வீண்.

15. நமது நோக்கத்துக்குத் தொடர்பில்லாத, அங்குமிங்கும் குதிக்கின்ற, எல்லா வகையான சிந்தனைகளும் உள் பேச்சுதான். இது கூடாது. 

16. ஒருவன் குனிந்த பின்பு அவன் கவனம் நம்மிடம் இல்லை என்று பொருள். அப்போது அவனிடம் பேசக்கூடாது. 

17. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் ….வழித்துக் காட்டுவது மாதிரி. 

18. நாம் அடுத்தவரைக் குறை கூறுவதற்கு மூன்று காரணங்கள். 1. நமக்கு வேறு வேலை இல்லை. 2. நம் குறைகளை நாம் பார்க்கவில்லை. 3. அவன் கெட்டுத்தான் போகவேண்டும் என்ற உள் மன ஆசை. அவன் வளர்ந்தால் முதலில் நாம்தான் பொறாமைப்படுவோம். 

19. வெயில் கொடூரமாக அடிக்கிறது என்று சொல்வதால் அதன் கொடூரம் குறையப்போகிறதா? சமுதாய சக்தியில் பெரும்பகுதி பேச்சில்தான் வீணாகிறது. 

20. அடுத்தவரின் கண்களைப் பார்த்துத்தான் பேசவேண்டும். நமது பார்வை அவரது பார்வைக்கு சற்று மேலே இருக்க வேண்டும்.

21. பேசும்போது ‘ஆனால், ‘அது வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது. 

22. எவன் பேச்சை சுத்தமாகப் பிசிறின்றிப் பேசுகிறானோ அவன் வாழ்வும் பிசிறின்றி சுத்தமாக ஓடும்.

23. பேசுவதற்கு முன்பு யோசிக்கவேண்டும், பேசிய பின்பு அல்ல. பேசுவதற்கு முன்பு பேச்சை கவனித்துப் பேசவேண்டும். பேசிவிட்டு, இப்படிப் பேசிவிட்டோமே என்று தூங்காமல் இருக்கக் கூடாது. பேசிவிட்டு வாபஸ் வாங்கக்கூடாது. பேசிவிட்டு ‘சாரி’ சொல்லக்கூடாது. சுற்றி வளைத்துப் பேசக்கூடாது. அதற்கு மேலாக, ஏன் இதைப்பேசுகிறோம் என்று புரிந்து பேசவேண்டும். பேச்சு இடையில் தடைப்பட்டால், அதைக்கவனித்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும். இப்படிச் செய்தால்தான் எண்ணிய லட்சியத்தை அடைய முடியும்.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

வெளியே போய் ஆர அமர அமர்ந்து பேசிவர நாம் ஆசைப்படுகிறோம். இது சாப்பிட ஒன்றுமில்லை என்பதற்காக வெளியே போய் மண்ணை அள்ளித் தின்பதைப் போன்றது. சாப்பிட ஒன்றுமில்லாமல் இருப்பதால் வயிறு கெட்டுப்போகாது. ஆனால் மண்ணை அள்ளித் தின்றால் கெட்டுப்போகும். 


ஏன் உனக்கென்ன பிரச்சனையா இல்லை? அதைப்பற்றி திரும்பத் திரும்ப யோசி, ஆராய்ந்து பார். எதைப்பற்றியாவது சிந்தித்துப் பார். சிந்திக்க வரவில்லையா? சிந்தனை வராமலிருப்பதற்குக் காரணமென்ன என்பதைப்பற்றி சிந்தி.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஆன்மிகப் பயிற்சி

ரியாலத் (ஆன்மிகப் பயிற்சி) பண்ணுவது புதிய பொருளாக மாறுவதற்கல்ல. 

நமக்கு உள்ளே உள்ளதை வெளியே கொண்டுவரத்தான். 

செங்கல்லைத் தேய்த்தால் கண்ணாடியாகாது. 

கருங்கல்லைத் தேய்த்தால்தான் மாறும்.

ஹஸ்ரத் மாமா

 நீங்கள் நினைத்ததனால் அது உங்களை வந்தடைந்தது. சில பொருளை பெரிதாக நீங்கள் நினைத்ததால் அது உங்களை வந்தடையவில்லை. திரும்பத் திரும்ப நினையுங்கள். அது சின்னதாகிவிடும். பின்பு உங்களை வந்தடையும். ஆண்டவனுடைய கஜானாவில் பட்டத்துக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கும் வித்தியாசமில்லை -- ஹஸ்ரத் மாமா

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 குழப்பம், பயம் வந்தால் எப்படி மாற்றுவது ? 

குழப்பமோ பயமோ வந்தால் உங்கள் posture-ஐ / இருக்கை நிலையைக் கொஞ்சம் மாற்ற வேண்டும்.  

பல் வலிக்காரன் பல்வலி பற்றியே யோசிப்பதால் அது கூடுவதைப் போலத்தான் பயமும் குழப்பமும். 

சில அச்சம் உள்ளதை உள்ளமாதிரிக் காட்டுவதற்காக வந்திருக்கலாம். 

சில குழப்பம் தெளிவை ஏற்படுத்துவதற்காக வந்திருக்கலாம்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 மனிதனை மனிதனாக ஆக்குவதே அவனது கவலையும் பொறுப்புணர்ச்சியும்தான். கவலையும் பொறுப்பும் இல்லாத மனிதனின் மனம் ஒன்றுமில்லாமல் blank ஆக இருக்கும். Blank ஆக உள்ள மனதில் என்ன வரும்? எதிர்மறைச் சிந்தனைகள்தான் வரும். அதற்குத்தான் அரபியில் ஷைத்தானியத் என்று பெயர்.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஒருநாள் ஹஸ்ரத் மாமா சொன்னார்கள்:


கோபம் என்பது ஒரு நி’அமத் (அருட்கொடை) ஆகும்.


எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். கோபம் ஒரு அருட்கொடையா? கோபப்படக்கூடாது என்றுதானே எல்லாரும் சொல்வார்கள். ஆனால் மாமா ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!


எப்படி கோபம் ஒரு அருட்கொடையாகும் என்று கேட்டோம். 


கோபம் வந்தால்தானே கோபத்தை அடக்க முடியும்? கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பு எப்போது வருகிறது? கோபம் வரும்போதுதானே? 


நீ காட்டிலே போய் தனியாக இருந்தால் உனக்குக் கோபம் வருமா? 


சமுதாயத்தில், குடும்பத்தில் இருக்கும்போதுதானே அந்த வாய்ப்பு வரும்? 


அப்படியானால் கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பை கோபம்தானே கொடுக்கிறது? அதனால்தான் கோபம் ஒரு நிஅமத் (அருட்கொடை) என்று சொன்னேன் என்றார்கள்!


கோபம் ஒரு அருட்கொடையோ இல்லையோ ஹஸ்ரத் மாமா எங்களுக்குகெல்லாம் கிடைத்த ஒரு அருட்கொடைதான்!