View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 குழப்பம், பயம் வந்தால் எப்படி மாற்றுவது ? 

குழப்பமோ பயமோ வந்தால் உங்கள் posture-ஐ / இருக்கை நிலையைக் கொஞ்சம் மாற்ற வேண்டும்.  

பல் வலிக்காரன் பல்வலி பற்றியே யோசிப்பதால் அது கூடுவதைப் போலத்தான் பயமும் குழப்பமும். 

சில அச்சம் உள்ளதை உள்ளமாதிரிக் காட்டுவதற்காக வந்திருக்கலாம். 

சில குழப்பம் தெளிவை ஏற்படுத்துவதற்காக வந்திருக்கலாம்

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 மனிதனை மனிதனாக ஆக்குவதே அவனது கவலையும் பொறுப்புணர்ச்சியும்தான். கவலையும் பொறுப்பும் இல்லாத மனிதனின் மனம் ஒன்றுமில்லாமல் blank ஆக இருக்கும். Blank ஆக உள்ள மனதில் என்ன வரும்? எதிர்மறைச் சிந்தனைகள்தான் வரும். அதற்குத்தான் அரபியில் ஷைத்தானியத் என்று பெயர்.

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஒருநாள் ஹஸ்ரத் மாமா சொன்னார்கள்:


கோபம் என்பது ஒரு நி’அமத் (அருட்கொடை) ஆகும்.


எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். கோபம் ஒரு அருட்கொடையா? கோபப்படக்கூடாது என்றுதானே எல்லாரும் சொல்வார்கள். ஆனால் மாமா ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!


எப்படி கோபம் ஒரு அருட்கொடையாகும் என்று கேட்டோம். 


கோபம் வந்தால்தானே கோபத்தை அடக்க முடியும்? கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பு எப்போது வருகிறது? கோபம் வரும்போதுதானே? 


நீ காட்டிலே போய் தனியாக இருந்தால் உனக்குக் கோபம் வருமா? 


சமுதாயத்தில், குடும்பத்தில் இருக்கும்போதுதானே அந்த வாய்ப்பு வரும்? 


அப்படியானால் கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பை கோபம்தானே கொடுக்கிறது? அதனால்தான் கோபம் ஒரு நிஅமத் (அருட்கொடை) என்று சொன்னேன் என்றார்கள்!


கோபம் ஒரு அருட்கொடையோ இல்லையோ ஹஸ்ரத் மாமா எங்களுக்குகெல்லாம் கிடைத்த ஒரு அருட்கொடைதான்!

சனி, 29 மே, 2021

 எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவை

======================================

Dos – செய்ய வேண்டியவை

1. அசையும்போது உணர்ந்து அசைய வேண்டும்.

2. எந்த வேலை செய்தாலும் கவனித்து செய்யவேண்டும்.

3. வரும் உதிப்புகளையெல்லாம் அவ்வப்போது எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

4. பேச்சு, பார்வை, அசைவு முதலியவற்றினால் நாம் நமது நரம்பு சக்தியை அதிகமாக வீணடித்துக்கொண்டிருக்கிறோம். எனவே எப்போதுமே உடலும் மனமும் தளர்ச்சியுடன் இருக்கும்போதுதான் [ரிலாக்ஸ்டாக] ஒரு காரியத்தைச் செய்யவேண்டும்.

5. எண்ணத்தின் போக்கு [thought habit] மாறினால் செயல் மாறும். எதையும் செய்யலாம் / அடையலாம். ஒரு விஷயம் முடியாது என்று தோன்றுகிறதா, படுத்து ரிலாக்ஸ் பண்ணவும். திரும்பத் திரும்ப அவ்விஷயம் பற்றி நினைத்துக்கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் சாத்தியம்தான் என்று தோன்றும்.  பின்பு நம் reach-க்குள்தான் [அடையக்கூடிய தூரத்தில்தான்] என்று தோன்றும். பின்பு reach-க்கே வந்துவிடும். 

6. சிரமம் வரும்போது அதில் என்ன நன்மை இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். 

7. ஒரு பிரச்சனை வந்தால், வந்துவிட்டதே என்று கவலைபடாமல், அமைதியாக, relaxed-ஆக அமர்ந்து சிந்திக்க வேண்டும். முடிந்தால் அப்பிரச்சனை பற்றி சிந்திப்பதை வேண்டுமென்றே ஒத்திப்போட வேண்டும். கொஞ்ச நேரம் கழித்துக்கூட சிந்திக்கலாம். சிந்திக்கணும்.

8. ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையாகத்தான் தீர்க்க வேண்டும். சமயங்களில் ஒன்றைச் சமாளித்தாலே அதிலேயே 10/15 விஷயங்கள் சரியாகிவிடும்.

9. ஒரு விஷயத்தைப் பற்றி நாமே யோசித்து நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் உள்ளது எனினும் அதில் நிறைய சக்தி இருக்கிறது. எதையும் நாமே செய்ய வேண்டும். 

10. ஒரு கோட்டையைக் கட்டப் போகிறீர்களா? அதைப்பற்றி நினைக்கத் தேவையில்லை. அதைக் கட்டவிடாமல் எந்த சின்ன செயல் தடுக்கிறது என்று பாருங்கள். 

11. ஒரு காரியத்தை எடுத்தால் முடித்துவிட வேண்டும். இல்லையெனில் எடுக்கக் கூடாது. 

12. ஒரு பொருளை தர யாராவது கையை நீட்டினால் உடனே வாங்கிக்கொள்ள வேண்டும். கையை நீட்டிக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால், [பிச்சைக்காரன் மாதிரி] ஏந்திக்கொண்டே இருப்பாய் என்று அர்த்தம். இப்படியே இருந்தால் நினைத்ததை அடைய முடியாது. 

13. Budget your time and money. ஆனால் இந்த செலவு இந்த அளவு, இப்போது சரியா என்று ‘செக்’ பண்ணிக்கொள்ள வேண்டும். கவனம் செலவு செய்யப்படும் காசில் இருக்கக்கூடாது. ஒரு குழந்தைக்கு இனிப்பு / பிரியாணி போன்றவை எவ்வளவு தரவேண்டுமோ அதைப்போல செலவு செய்யவேண்டும். கவனம் பொருளில்தான் இருக்க வேண்டும். பணத்தில் அல்ல. 

14. நேராக உட்கார வேண்டும். சாய்ந்துகொண்டால், மனசும் சாய்வதாக அர்த்தம். [ரிலாக்ஸ் செய்வதற்காக சாய்ந்துகொள்வது வேறு]. 

15. ஒரு வருடத்துக்கான திட்டம் போட்டுவிட வேண்டும். அவை நிறைவேற ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம், தப்பில்லை. 

16. உடை, ஆரோக்கியம், குடும்ப மகிழ்ச்சி, செல்வம், தர்மாம், சம்பாத்தியாம் எல்லாவற்றிலும் உன்னை நீ வெளிப்படுத்துவதான self-expression-க் காட்டவேண்டும். எதிலும் உனது முத்திரை இருக்க வேண்டும். 

17. செய்யும் வேலைய அதன் பலன் கருதிச் செய்யாமல், வேலையை வேலைக்காகவே செய்யவேண்டும்.

18. கோபம் அல்லது வேதனை வரும்போது முகம் கழுவினால் / இரு கைகளாலும் முகத்தைத் தடவிக்கொண்டால் அந்த உணர்வு மாறிவிடும். 

19. Breaking-point-ல்தான் சக்தி உற்பத்தியாகிறது. ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும்போது போதும் என்று மனம் சொன்னால் அதுதான் Breaking-point. முடியாது என்று ஒரு பத்துப்பதினைந்து வினாடிகள் வேண்டுமென்றே சிந்தித்து Breaking-point-ஐ உடைக்க வேண்டும்.

20. கை குலுக்கும்போது grip-ஆகச் செய்ய வேண்டும்.

21. ஒரு பிரச்சனையை பற்றி மனம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போதுதான் சிந்திக்கவேண்டும்.

22. இரு தோள்களிலும் உள்ள மலக்குகளின் – வானவர்களின் – சிபாரிசு பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். 

23. அவ்வப்போது ஒரு பத்துப் பதினைந்து வினாடிகள் ரிலாக்ஸ் செய்யவேண்டும். அது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாக வந்துவிடும்.

24. நாம் சொல்வது கேட்பவரின் நெஞ்சுக்குள் இறங்க வேண்டுமெனில் அவரது கண்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். 

25. தினமும் குளிக்க வேண்டும். ஒருநாள் விட்டு ஒரு நாள் ஷேவ் செய்ய வேண்டும். எப்போதும் ‘ட்ரிம்’மாக இருக்க வேண்டும். 

26. இரவில் படுக்கப்போகுமுன், இன்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று பார்க்க வேண்டும். அதாவது எந்த வகையில் முன்னேற்றம் தேவை என்று தெரிந்துகொள்ள வேண்டும். 

27. எந்த ஒரு எண்ணத்துக்காவது நீங்கள் அடிமையாக இருக்கிறீர்களா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதைவிட்டு வெளியில் வர முடியும். 

28. விரைந்து முடிவெடுக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும் சரியே. 

29. வரும் உதிப்புகளை குறித்துக்கொள்ள ஒரு பேனாவும் தாளும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 

30. நமக்கு நன்றாகத் தெரிந்த செய்தியை ஒருவர் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் நாம் ஒரு கல்லைப்போல சும்மாதான் இருக்க வேண்டும். 

31. ஒருவரிடம் ஒரு காரியம் பற்றிப் பேசும்போது அவருடைய மூச்சோட்டத்தை கவனித்தே பேச வேண்டும். அதாவது இருவருடைய மூச்சோட்டத்தையும் synchoronise செய்த பிறகு [ஒரே மாதிரியான போக்குக்குக் கொண்டு வந்த பிறகு] பேச வேண்டும். இல்லையெனில் நம் முயற்சி தோல்வியடைந்துவிடும். ஒரு முறை தோல்வியடைந்து விட்டால், தொடர்ந்து தோல்வியடையும். 

32. ஒரு காரியம் தோல்வி அடைந்ததும் மீண்டும் உடனே அதைத் தொடங்காமல், கொஞ்சம் இடைவெளி கொடுத்து மீண்டும் முயல வேண்டும். 

33. நீ யார் என்று காட்டக்கூடிய ஒரு தொழில் + வருமானம் + கௌரவம் இந்த மூன்றும் உள்ளது எதுவோ அதை [உப தொழிலாகச்] செய்யுங்கள்.

34. உடம்புக்கு முடியாமல் இருக்கும்போது அமைதியான, அலைகளற்ற கடலை கற்பனை செய்துவிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டாக இருங்கள். 

35. பாலுணர்வு வந்த உடனேயே அதை நிறைவேற்றப் புறப்படாமல், இப்போது வேண்டாம், இந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று ஒரு வேலையை எடுத்துக்கொள்வதனால், அந்த செக்ஸ் சக்தி பூராவும் அந்த வேலைக்குப் பயன்படும். அந்த வேலை முடிந்த உடன் செக்ஸ் சக்தி காலியாகிவிடாது. தேக்கி வைத்துச் செய்வதனால் வேகம் அதிகமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தடவையும் அந்த உணர்வு வரும்போது தேக்கி வைத்து, வேறு வேலையை முடித்துவிட்டுச் செய்யலாமா என்றால் தாராளமாகச் செய்யலாம். வேண்டுமென்றே ஒத்தி வைத்துச் செய்வதனால், மனதை இங்கு எனில் இங்கும், அங்கு எனில் அங்கும் வைக்கின்ற தகுதியும் வரும். 

36. சம்பாதிப்பதைவிட குறைவாகத்தான் செலவு செய்ய வேண்டும். 

37. பணம் வரும்போது ஏற்கனவே போட்டிருந்த திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும்.

38. வாரத்திற்கு ஒரு நாள் நல்ல கறி ஆக்கச் சொல்லிவிட்டு அன்று அதை நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

39. நோயுற்றிருக்கும்போது அதில்லாத மாதிரி நடக்க ஆரம்பித்தால் – நடிக்க அல்ல – அந்த நோய் நீங்கிவிடும். 

40. எந்தக் காரியம் நீங்கள் செய்தது, எந்தக் காரியம் தானாக நடந்தது என்று குறித்து வைக்க வேண்டும்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து


ஷரீயத் என்பது பாமரமக்கள் உண்ணக்கூடிய உணவு. தரீகத் என்பது ஒவ்வொருவருக்குமான ஸ்பெஷல் மருந்து. அதனால் தரீக்கா பல வரலாம். ஒரே தரீக்காவில் instructions மாறிவரலாம். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு மாதிரியாக இருக்கலாம். 


(ஒரு பொருளின்மீது படும்) ஒளி அதிகமாக ஆக நிழலே இல்லாமல் போகும். அதேபோல, உங்கள் பாசிடிவிட்டி டெவலப் ஆக ஆக, நீங்கள் தகுதியை மட்டும் வளர்த்துக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் பொருளெல்லாம் உங்களைத் தேடி அடையும். நீங்கள் அதை (முயற்சி செய்து) அடைய வேண்டியதில்லை. உங்களைத் தேடி (அது) வரும். 


மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம்.  இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும்.  We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும். 


சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்). 


உங்களிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால், ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவது எளிது. உங்களிடம் ஒரு பைசா கூட இல்லாமலிருந்தால் நூறு ரூபாய்கூட கடன் வாங்க முடியாது (காரணம் பணம் இருக்கும்போது உள்ள மனநிலை, பணம் இல்லாதபோது இருக்காது).


உண்மையான அறிவு வெளிமனதுக்கு வருமுன் distort ஆகிவிடுகிறது. நான் சொல்வதெல்லாம் prove பண்ணப்பட்டது. சூஃபிகளால், சூஃபி வாழ்வைப் பின்பற்றியவர்களால் (அவர்கள் சூஃபியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. சூஃபித்துவத்தை ஒரு பிசினஸ்மேன் பிசினஸுக்குப் பயன்படுத்தலாம். அதையே ஒரு குடும்பஸ்தன் மனைவி மக்களுக்குப் பயன்படுத்தலாம்). எடிசன் பல்பை எதற்காகக் கண்டுபிடித்தானோ, அதை நாம் இன்று பெட்ரூமுக்கும் பயன்படுத்தலாம், புர்தா ஷரீஃபுக்கும் பயன்படுத்தலாம் அல்லவா? அது பயன்படுத்தும் ஆளைப்பொறுத்தது. 


எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அறிவுக்கு வித்து எதுவோ அங்கிருந்து அது வந்திருக்கும்.  Infinite Intelligence என்று அதற்குப்பெயர். ஆண்டவனுக்குப் பெயர்.

எங்கள் ஞானாசிரிய ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து

 எங்கள் ஞானாசிரிய ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து

==========================================

செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் / Dos and Don’ts

Don’ts

1. நான் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு வருகின்ற எண்ணங்களை வைத்து எனக்கு உதாரணம் காட்டுவதோ, ஒத்து ஊதுவதோ கூடாது. 

2. ஒருவரிடம் கேட்கும்போது இன்னொருவர் அதற்கு பதில் சொல்லக்கூடாது.

3. என்னைப் பாராட்டிப் பேசுவது கூடாது.

4. ஆச்சரியப்படக்கூடாது, அதிகமாக  சந்தோஷமும் படக்கூடாது.

5. அவசரப்படக்கூடாது.

6. எரிச்சல் / பொறாமை கூடாது

7. தக்க காரணம் இல்லாமல் எந்தச் செயலையும் [பாதியில்] விட்டுவிடக்கூடாது. அலுப்பு காரணமாக விட்டால் போச்சு. 

8. எந்த விளைவுக்கும் – நல்லதோ கெட்டதோ – இதுதான் காரணமென்று முடிவு செய்துவிடக் கூடாது. 

9. குரு வந்த பிறகு, சொந்த புத்திக்கு இடம்தரக்கூடாது. 

10. எதிர்பார்ப்பு கூடாது.

11. கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்காமல் இருக்கக்கூடாது. அந்தப் பணத்தை rotation-லும் விடக்கூடாது. 

12. Bed-coffee, tea எல்லாம் குடிக்கக்கூடாது.

13. நிர்வாணமாகக் குளிக்கக்கூடாது.

14. கையை நீட்டக்கூடாது. அது திருட்டு அல்லது பிச்சை.

15. ’என்னவோ நினைத்தேன்’ என்பது போலெல்லாம் பேசக்கூடாது. 

16. ஒரு காரியத்தில் வெற்றியடைய நேர்மறையான உணர்வைத்தான் உந்து சக்தியாக வைக்கவேண்டும். பொறாமை, பழி உணர்ச்சி போன்ற எதிர்மறை எண்ணங்களை வைக்கக்கூடாது. 

17. சாப்பிடும்போது பேசக்கூடாது.

18. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் கூடாது.

19. தொட்டுப்பேசக்கூடாது. அது பெண்மை. 

20. Rationlaisation [செய்த செயலை நியாயப்படுத்துவது], Projection [ஒருவர்மேல் கொண்ட எதிர்மறை உணர்ச்சியை, வெறுப்பை, கோபத்தையெல்லாம் இன்னொருவர் மேல் காட்டுவது], Inhibition [இது கூடாது, அது கூடாது என்று நம்மை நாமே தடை செய்துகொள்ளும் தேவையற்ற தடையுணர்ச்சி] – இம்மூன்றும் [நமது பாதையில்] கூடாது. 

21. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனுக்குடன் செய்துவிடக்கூடாது.

22. பேசும்போது கையசைப்பது, சாப்பாட்டுத் தட்டில் உள்ள அப்பளத்தை எடுத்து கடித்துப் பார்ப்பது, இனிப்பை எடுத்து சுவைத்துப் பார்ப்பது – இதெல்லாம் கூடாது. 

23. அரித்தால் உடனே சொரியக்கூடாது. அரிப்பு போகாவிட்டால் மெதுவாக, உணர்ந்து சொரியலாம். இப்படியெல்லாம் செய்தால் நம்மை தொந்தரவு செய்வதை நம்முடைய Conscious விட்டுவிடும். Sub-conscious வேலை செய்ய ஆரம்பிக்கும். 

24. பேசும்போது நம் கண் அலையக்கூடாது. எதிராளியின் கண்ணையும் அலையவிடக்கூடாது.

25. தன்னை மறந்து சிரிப்பதும், அரட்டையடிப்பதும் கூடாது. அது வெற்றியின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதாகும்.

26. பேசும்போது, ‘ஆனால், ‘வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது.

27. ஒரு காரியத்தை ஆரம்பித்து அரைகுறையாக நிறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் அது மற்ற காரியங்களையும் முடிக்க விடாமல் செய்துவிடும்.

28. நெருங்கிய நண்பர்களிடம் பேசினாலும், அடுத்தவர்கள் மீது பழிகூறிப் பேசக்கூடாது.

29. வேதனையான, வெறுப்பை உமிழும் உணர்வுகளையெல்லாம் [unpleasant emotions] வெளிப்படுத்தக்கூடாது. 

30. லாடம் கிடைத்தவுடன் குதிரை வாங்க நினைக்கக்கூடாது. [புறத்தூண்டுதலின் பேரில் ஒரு ஆசையை வளர்த்துக்கொள்ளக்கூடாது].

31. நேரம் கெட்ட நேரத்தில் ஃபோன் பேசுவது, விஜயம் செய்வதெல்லாம் கூடாது. அது தோல்வியைத்தரும். 

32. அடுத்தவர் பணம் எண்ணும்போது பார்க்கக்கூடாது. அது நமக்கு உரிமையில்லாத அழகான பெண்ணை ரசிப்பதைப் போன்றது. நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடும்.

33. கடைப்பேச்சை வீட்டுக்கும், வீட்டுப்பேச்சை கடைக்கும் கொண்டு போகக்கூடாது. [கடை என்பது அலுவலகம் / தொழிலுக்கான குறியீடு].

34. ஒரு விஷயத்தில், ‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று அடுத்தவருடைய கருத்தைக் கேட்கக் கூடாது. 

35. மக்களிடம் காட்டுவதற்காக செலவு செய்யக்கூடாது.

36. மனைவிக்கு ஆலோசனை வார்த்தையால் சொல்லக்கூடாது. 

37. மகிழ்ச்சி வருவது தவறல்ல. ஆனால் பத்து வினாடிகளுக்கு மேல் அதை அனுமதிக்கக்கூடாது.

38. உணர்ச்சிவசப்படாமல் / ரொம்ப சந்தோஷப்பட்டுவிடாமல் வரவிட்ட பணத்தை ஏற்கனவே போட்ட திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும். கூடுதலாக, புதிதாக எதுவும் செய்யக்கூடாது.

39. டென்ஷனாக உள்ளபோது அசையக்கூடாது.

40. இஸ்முகளை / மந்திரங்களை மெட்டு போட்டும், அர்த்தம் பார்த்தும் ஓதக்கூடாது. 

41. அடுத்தவரின் சாப்பாட்டைப் பார்க்கக் கூடாது.

42. குழப்பத்தோடு வெளியில் போகக்கூடாது. [அதை நீக்கிவிட்டுப் போகலாம்].

43. எதற்கெடுத்தாலும் ஆண்டவனைக் கூப்பிடக்கூடாது. அது அவனுக்கே சலிப்பை ஏற்படுத்தும்.

44. வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி உற்சாகத்தோடு வெளியில் சொல்லக்கூடாது. அடுத்த காரியம் நடக்காது.

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து
===========================================
மூச்சு
======
எல்லா நி’அமத்தையும் [அருட்கொடையையும்] ஆண்டவன் எண்ணத்துக்கு அடுத்தபடியாக மூச்சோட்டத்தில்தான் வைத்துள்ளான். மூச்சை கட்டுப்படுத்தினால் எதையும் செய்யலாம். 
ஒருவரிடம் ஒரு காரியமாகப் பேசும்போது அவருடைய மூச்சோட்டத்தை கவனித்தே செய்யவேண்டும். இல்லையெனில் நம் முயற்சி தோல்வி அடைந்துவிடும். ஒருமுறை தோல்வி அடைந்துவிட்டால், தொடர்ந்து தோல்வி அடையும். 
நமது மூச்சோட்டத்தின் frequency-க்கு [அலைவரிசைக்கு] அடுத்தவரைக் கொண்டுவந்து பேசினால் நமது காரியம் வெற்றி அடையும். இது ஒரு வழி. 
இன்னொரு வழி, மனதளவில் நாம் நம்மை அடுத்தவரைவிட உயர்வானவராக ஆக்கிக்கொண்டோமெனில், நாம் ஒரு ஆளைப் பார்த்த உடனேயே நமது மூச்சோட்டம் அவருக்கு வந்துவிடும். நாம் அவரை எளிதாக கட்டுப்படுத்திவிடுவோம் / நமது விருப்பத்துக்கு ஏற்ப பணிய வைத்துவிடுவோம். 
[ஆனால் இதில் நேர்மையாக இருக்கவேண்டியது அவசியம். அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டியவர்களாக நாம் உள்ளோம்]. 
ஒவ்வொரு 2 மணி 24 நிமிடங்களுக்கொருமுறை மூச்சு வலம் இடமாக மாறிமாறி ஓடும். ஒவ்வொரு 14 நாட்களுக்கு மாறிமாறி ஓடும். வளர் பிறைக்கும் தேய் பிறைக்கும் மாறி மாறி வரும். 
நோய், கடன் இவை தீர மூச்சு வலது பக்கமாக ஓடும்போது நினைக்கவேண்டும். வீடு கட்டுதல் / வாங்குதல் திருமணம் செய்தல் போன்ற நிரந்தரமானதைப் பற்றி மூச்சு இடது பக்கமாக ஓடும்போது நினைக்க வேண்டும். 
சாய்ந்துகொண்டு, வலது பக்கமாக மூச்சு ஓடும்போது, ஓடாத சரக்கைப் பற்றி நினைத்தால் அது விற்கும். 
வலது பக்கமாக ஓட வேண்டிய மூச்சு இடதாகவோ, இடது பக்கமாக ஓடவேண்டிய மூச்சு வலதாகவோ ஓடினால், அன்று ஏதோ நடக்கப் போகிறது, உடலில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். 
இந்த இடத்தில் உடல் என்பது நம் உடலை மட்டுமின்றி, நம் குடும்பத்தையும் குறிக்கும். 
Auto-suggestion, hypnotism, தரீக்கா [ஆன்மிகப்பாதை] எல்லாவற்றிற்கும் மூச்சோட்டத்துக்கும் தொடர்புள்ளது. எனவே மூச்சை கட்டுப்படுத்தித்தான் ஆகவேண்டும். 
மெல்லிய நூல் போன்றதுதான் மூச்சு. அதை கட்டுப்படுத்துவது எளிது. பேச்சு, கோபம், செக்ஸ் முதலியவற்றில் மூச்சோட்டம் மாறுபடும். 
இபாதத் [இறைவணக்கம், இறைவனை நினைத்து ஓதுதல், தியானம் முதலிய காரியங்கள் செய்தல்] செய்யும்போது Sex-ல் உள்ள மூச்சோட்டத்தை உண்டாக்கினால் இபாதத் Sex ஆக மாறிவிடும். 
அதேபோல Sex-ல் இபாதத் செய்யும்போது உள்ள மூச்சோட்டத்தைக் கொடுத்தால் Sexகூட ஒரு இபாதத்தாக மாறிவிடும்.
ஒருமுறை மூச்சோட்டம் ஒரு குறிப்பிட்ட அலைவரிடைக்கு வந்துவிட்டால் அதற்குரிய ஆன்மிக சக்தி தானாகவே வந்துவிடும். 
மூச்சு இடது வலதாக ஓடாமல் இரண்டுக்கும் மத்தியில், அதாவது இரண்டு பக்கமும் ஒரேவிதமாக, ஓடினால் அப்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் இருப்பது நல்லது. 
Relaxed-ஆக இருக்கும்போது விடும் மூச்சு வேறு. டென்ஷ்டனாக இருக்கும்போது விடும் மூச்சு வேறு. 
ரஹ்மானியத்தான [தெய்வீகமான] மனநிலையின் அடையாளங்களில் ஒன்று அமைதியான மூச்சோட்டம். 
அமைதியான உள்ளம், சரியான உடல் / சரியான குடும்ப உறவு முறைகள் அனைத்திற்கும் மூச்சுப் பயிற்சி அவசியம். 
மூச்சோட்டத்தை மிகச்சரியாகச் செய்யும்போது தெய்வத்தன்மை மேலே வரும். மூச்சை ஏன் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அது சரியாக இல்லை. 
மூச்சை கட்டுப்படுத்துவதுதான் மற்ற விஷயங்களைக் கட்டுப் படுத்துவதைவிட எளிது. அதே நேரத்தில் அந்த லகானைப் பிடித்து இழுத்துவிட்டால் எல்லாம் control ஆகிவிடும். 
மூச்சை full extent-க்கு விடவேண்டும். Relaxed-ஆக அமர வேண்டும். படுத்தும் கொள்ளலாம். குறைந்தது ஒரு கால் மணி நேரம். 
ஒரு பத்து நாளைக்கு மூச்சை control பண்ணிப்பாருங்க. உங்கள் நடை, உடை, பேச்சு etc எல்லாம் மாறிவிடும். உங்களால் எதையும் கட்டுப்படுத்திவிட முடியும். 
ஒருவருடைய மூச்சின் frequency-யை மாற்ற முடிந்தால் அவரது உள்ளத்தை மாற்றலாம். [இந்த பயிற்சி பழக்கமானவுடன்] எல்லா சூழ்நிலைகளிலும் Relaxed-ஆக மூச்சுவிட ஆரம்பித்துவிடுவீர்கள். 
ஆழ்ந்த மூச்சோட்டம் பழக்கமாக வேண்டும். எப்ப ரியாலத் automatic-ஆக ஆகிவிட்டதோ, அதனால் வரக்கூடிய பயன்களும் automatic-ஆக வர ஆரம்பிக்கும். 
மூச்சு ஓர் அற்புதமான கருவி. ஆனால் அதை நாம் தவறாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளோம். 
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள். அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி செய்யலாம். 
மூச்சுப் பயிற்சிதான் ஆன்மிகத்தில் முதல் பயிற்சி. ஆடாமல் அசையாமல் உட்கார வேண்டும். 
மூச்சென்னும் உணவானது மற்ற உணவுகளைக் கொடுக்கும். செல்வத்துக்கு மேல் செல்வம். ஒளிக்கு மேல் ஒளி.