View status

View My Stats

வியாழன், 9 ஜூன், 2016

பஞ்சகவ்யா!


இன்றைக்கு இயற்கை விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருட்களில் முக்கிய இடம் பிடித்திருப்பது... பஞ்சகவ்யா! இயற்கை விவசாயத்தின் அடிநாதமாக, முழுவேதமாக இருக்கும் பஞ்சகவ்யா, பயிர்களில் ஏற்படுத்திய ஆச்சர்ய மாற்றங்களைப் பார்த்த பிறகே பல விவசாயிகள், இயற்கைக்கு மாறினர். பசுமைப் புரட்சியால் சீரழிந்த நிலங்களை மீட்டுக் கொடுத்ததோடு... இயற்கை விவசாயத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட வைத்தது, பஞ்சகவ்யாதான். பள்ளிக்கூடம் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இன்றைக்கு ‘பஞ்சகவ்யா’ என்கிற வார்த்தை வலம் வருகிறது. ‘சாணமும், மூத்திரமும் பயன்படுத்தும் சன்னியாசிகள் விவசாயம் எங்களுக்குத் தேவை இல்லை’ என்று ஆரம்பத்தில் பஞ்சகவ்யாவைப் புறக்கணித்த வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்கூட, இன்று பஞ்சகவ்யாவை ஏற்றுக்கொண்டுள்ளன. பஞ்சகவ்யா மூலம் பணக்காரர்களானவர்கள், மாடி வீடு கட்டியவர்கள், பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்தவர்கள், கார் வாங்கியவர்கள்... என வெற்றி விவசாயிகளின் பட்டியல் நீள்கிறது!

இந்தத் தொடரில் இப்படி வெற்றி பெற்ற விவசாயிகளை, பஞ்சகவ்யாவின் கதையோடு சேர்த்து நாம் பார்க்கப் போகிறோம்.

பாரம்பர்ய விவசாயத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து வரும் பஞ்சகவ்யாவை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும்... ஆரம்ப காலத்தில் அநேகம் பேர் பாடுபட்டுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர், முதன்மையானவர் ‘பஞ்சகவ்யா சித்தர்’ என்று அழைக்கப்படும் ‘கொடுமுடி’ டாக்டர் கே.நடராஜன், எம்.பி.பி.எஸ். காலகாலமாக கோயில்களில் வழங்கப்படும் பக்தி பிரசாதம்தான் பஞ்சகவ்யா. இதை கொஞ்சம் மாற்றி, பாரம்பர்ய விவசாயத்துக்குக் கொண்டு சேர்த்ததில் நடராஜனின் பங்கு அலாதியானது. பஞ்சகவ்யா உருவான விதத்தில் இருந்து, பயன்பாடு வரை பல்வேறு தகவல்களுடன் தனது அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார், டாக்டர்.நடராஜன்.

‘‘ஈரோடு மாவட்டத்துல இருக்கிற கொடுமுடிதான் சொந்த ஊர்.

43 வருஷமா இங்க மருத்துவமனை வெச்சு நடத்திட்டிருக்கேன். 90-கள்ல... பூச்சிக்கொல்லி குடிச்சிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்ற கேஸ்கள் என்கிட்ட அதிகமா வந்தது. அதுல பெரும்பாலும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான் அதிகம். ‘ஏன் இவங்க தற்கொலைக்கு முயற்சி செய்றாங்க?’னு எனக்குள்ள கேள்வி ஓடிக்கிட்டே இருக்கும். சிகிச்சை முடிச்சவங்களை உடனே வீட்டுக்கு அனுப்பாம, ரெண்டு நாள் தங்க வெச்சி... ‘என்ன பிரச்னை, எதனால இந்த முடிவுக்கு வந்தீங்க?’னு கேட்டு, கவுன்சலிங் கொடுப்பேன். சாகுபடி நஷ்டம், கடன் பிரச்னை மாதிரியான காரணங்களைத்தான் எல்லோரும் சொன்னாங்க.

‘ஆடம்பரச் செலவு, சொகுசு வாழ்க்கைனு எந்த வெட்டிச் செலவும் செய்றதில்லை. இருந்தாலும் கடனாளியாக என்ன காரணம்?’னு யோசிச்சப்போ... ரசாயன விவசாயத்துல இருக்கிற செலவுகள்தான் காரணம்னு தெரிஞ்சது. 1960-க்கும் முன்ன 2 சதவிகிதமா இருந்த கிராமப்புறத் தற்கொலைகள், படிப்படியாக உயர்ந்து இன்னிக்கு 18 சதவிகிதத்துல வந்து நிக்குது. முன்னாடி, முழுக்க முழுக்க பாரம்பர்ய விவசாயம் மட்டுமே நடந்துச்சு. தற்சார்பா நடந்த விவசாயத்துல இடுபொருள் செலவு ரொம்ப குறைவா இருந்தது. இன்னிக்கு, உற்பத்திச் செலவு பல மடங்கு எகிறிக்கிடக்குது. ஆனா, அதுக்கேத்த வருமானம் கிடைக்கறதில்லை. ‘இந்த போக நஷ்டத்தை, அடுத்த போகத்தில் ஈடு செய்திடலாம்’ங்கிற நம்பிக்கையிலேயே கடன் மேல கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நெருக்கடியில தற்கொலை முடிவுக்கு வர்றாங்கங்கிற உண்மை புரிஞ்சது.

கருத்தரங்கு காட்டிய வழி!

பாரம்பர்ய விவசாயத்துல மட்டும்தான் விவசாயத்துக்கான செலவுகளை குறைக்க முடியும்னு புரிஞ்சதும், ரசாயன விவசாயத்துக்கான மாற்றுவழி குறித்து யோசிக்க ஆரம்பிச்சேன். இயற்கை வேளாண்மை, மூலிகை மருத்துவம் சம்பந்தப்பட்ட தேடல்ல இறங்கினேன். அதுகுறித்த பல கருத்தரங்குகள்ல கலந்துகிட்டேன். 98-ம் வருஷம் பெங்களூர்ல நடந்த ‘சர்வதேச மூலிகைக் கருத்தரங்கு’ல கலந்துகிட்டேன். அங்க, ‘ஆர்கானிக் ஃபார்மிங் சோர்ஸ் புக்’ங்கிற ஆங்கில புத்தகத்தை வாங்கினேன். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர், ‘கிளாடு ஆல்வாரிஸ்’.

‘பிரேசில் நாட்டு விஞ்ஞானி ஒருவர், பசுவின் சாணம், மூத்திரம் இரண்டையும் சம அளவு தண்ணீரில் கலந்து,

21 நாட்கள் ஊற வைத்து, அதனுள் இருக்கும் மீத்தேன் வாயு நீங்கியதும், அதனுடன் சில நுண்ணூட்டங்களைச் சேர்த்து... அந்தக் கரைசலில் 20 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து திராட்சைக்குக் குறிப்பிட்ட இடைவெளியில் தெளித்து வந்ததால், பூஞ்சண நோய்த் தாக்குதல் இல்லாமல் திராட்சை விளைந்தது. அதிக மகசூல் கிடைத்ததோடு, பழங்களின் சுவையும் நன்றாக இருந்தது’னு அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தார் ஆல்வாரிஸ். அது என் மனதில் ஆழமா பதிஞ்சுது. அதேநேரத்துல இன்னொரு சம்பவமும் நடந்தது. அதுதான் பஞ்சகவ்யாவை விவசாயத்துக்குப் பயன்படுத்துறதுக்கான அடிப்படை வித்தாக மாறிச்சு.

பிரசாதம் தந்த பேருண்மை!

ஒரு சிவராத்திரி அன்னிக்கு, ஊர்ல இருக்கிற சிவன் கோவிலுக்குப் போனேன். பூஜை முடிஞ்சதும், அர்ச்சகர் பிரசாதமா ஒரு திரவத்தைக் கொடுத்தார். ‘இந்தப் பிரசாதத்தினால் என்ன பயன்’னு அவர்கிட்ட கேட்டப்போ, ‘இது, பஞ்சகவ்யா. இதுல 4 மடங்கு பசும்பால், 3 மடங்கு தயிர், 2 மடங்கு நெய், ஒரு மடங்கு பசு மாட்டுச் சிறுநீர், நெல்லிக்காய் அளவு சாண உருண்டைனு 5 பொருட்களைச் சேர்த்து தயாரித்திருக்கோம். இது, பல ஆயிரம் வருஷங்களாக கோவில்கள்ல பிரசாதமாக வழங்கப்பட்டு வருது. இதை சாப்பிட்டா... நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வந்த பிணி ஓடிப்போகும், வரப்போற பிணியைத் தடுத்து நிறுத்தும்’னார். அவர் சொன்ன வாசகம், என் மனசுல ஒரு பொறியை ஏற்படுத்திச்சு.

பிரேசில் நாட்டு விஞ்ஞானி திராட்சைத் தோட்டத்துக்கு பயன்படுத்தியதையும், அந்தக் கோவில் பிரசாதத்தையும் இணைச்சு பல யோசனைகள் எனக்குள்ள ஓடிச்சு. ‘பஞ்சகவ்யாவை ஏன் பயிர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது?’ங்கிற யோசனை என்னைத் தூங்க விடலை. அதைத் தயாரிச்சு பரிசோதனை பண்ற வேலைகளை ஆரம்பிச்சேன். என்னோட மருத்துவ அறிவும் அதுக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.

ஃபார்முலாவைத் திருப்பிப்போடு!

நான், பசுமாட்டின் சாணம் 5 கிலோ, மாட்டின் சிறுநீர் 3 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், தயிர் 2 லிட்டர், நெய் ஒரு லிட்டர், நாட்டுச் சர்க்கரை ஒரு கிலோ...னு கலந்து 15 நாட்கள் ஊற வைத்தேன். என்னுடைய வீட்டுத்தோட்டத்துல இருந்த ஒரு முருங்கை மரம், எவ்வளவோ பராமரிச்சும் சரியா காய் பிடிக்காம இருந்தது. அந்த மரத்தில் முதல் பரிசோதனையைத் தொடங்கினேன். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிச்சேன்.

15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிச்சேன். தொடர்ந்து தெளிச்சதால சரம்சரமா அந்த மரத்துல காய் காய்ச்சுது. ஒவ்வொரு முருங்கைக்காயும் நாலடி நீளத்தில பச்சைப் பாம்பு மாதிரி தொங்கிச்சு. அதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

என் தோட்டத்துல ஏற்பட்ட இந்த மாற்றம், அடுத்த சில நாட்கள்ல விவசாயிகள் சிலரோட வயல்களுக்கும் மடை மாறிச்சு.

அந்த ஆச்சர்ய சங்கதிகளை அடுத்த இதழில் பேசுவோம்!

-மணம் பரப்பும்

கொடுமுடி’ டாக்டர்.நடராசன், பஞ்சகவ்யாவைப் பயிர் சாகுபடியில் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். விதைநேர்த்தித் தொடங்கி, நடவு, வளர்ச்சிப் பருவம், பூ மலர்ச்சி, காய்ப் பெருக்கம், அறுவடைக்குப் பின் கெடாமை இப்படிப் பல படிகளிலும் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கியுள்ளார். அது இந்தியாவின் பல மாநிலங்களிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பஞ்சகவ்யா பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

- “இயற்கை வேளாண் விஞ்ஞானி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் டாக்டர் வடிவேலுவிடம், பஞ்சகவ்யா குறித்து கேட்டபோது, ‘‘இது அருமையான பயிர் வளர்ச்சி ஊக்கி. பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து அதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டோம். பிறகுதான் ‘டி.என்.ஏ.யு. பஞ்சகவ்யா’ என்ற பெயரில் அதை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களின் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களிலும் இதைப் பயன்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பலனை உறுதிப்படுத்தியிருக்கிறோம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக