View status

View My Stats

வியாழன், 9 ஜூன், 2016

பஞ்சகவ்யா-5




பட்டணங்களுக்குப் பயணிக்கும் பஞ்சகவ்யா... மாதம் `30 ஆயிரம் வருமானம்!

பஞ்சகவ்யா உருவான விதம் ஆரம்ப காலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள், பரவலாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து கடந்த இதழ்களில் பார்த்தோம். அந்த வரிசையில் இந்த இதழில், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், கொடுமுடி அருகில் உள்ள முத்தூர் பகுதியைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ புரவிமுத்து என்கிற முத்துசாமி.

பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை தனது பண்ணையில் வளர்த்து வருகிறார், முத்துசாமி. தன் மனைவி ஈஸ்வரி சகிதம் பஞ்சகவ்யா தயாரிப்பில் இருந்தவரிடம் பேசினோம். “புரவிப்பாளையம் கிராமம்தான் என்னோட சொந்த ஊர். காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துல, நெல், கரும்பு, மஞ்சள்னு முப்போகம் வெளைச்சல் எடுக்கிற நஞ்சைக்காட்டு விவசாயி. ஆரம்பத்துல எல்லாரையும் போல மூட்டைக்கணக்கில் உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லியையும் மண்ணுல கொட்டுன விவசாயிதான் நானும். ஆனா, பதினெட்டே நாளில் என்னை இயற்கை விவசாயத்துக்கு மாற வெச்சது பஞ்சகவ்யாதாங்க” என்று பீடிகை போட்ட முத்துசாமி, தான் தயாரித்த பஞ்சகவ்யா கரைசலை மண்பானையில் ஊற்றி வைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

பாம்புக் கடி... பஞ்சகவ்யா!

“2003-ம் வருஷம்னு நெனைக்கிறேன். ஒரு ராத்திரி வேளை, கடலைக்காட்டுக்கு பாசனம் செஞ்சிக்கிட்டு இருந்தேன். மடை திருப்புறதுலயே கவனமா இருந்த நான் வரப்பில் படுத்துக்கிடந்த பாம்பை கவனிக்காம மிதிச்சிட்டேன். கால் மணிக்கட்டுப் பக்கத்துல பட்டுனு ஒரு கடி கடிச்சிடுச்சு. பச்சை மிளகாயக் கடிச்ச மாதிரி ‘சுர்’னு வலி மண்டைக்கு ஏறுது. என்னை மாட்டு வண்டியில ஏத்திக்கிட்டுப் போய், கொடுமுடி டாக்டர் நடராஜன் ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. 

முதலுதவி செஞ்ச டாக்டர், ‘தாமதிக்காம கொண்டுவந்துட்டீங்க. இல்லைனா, நிலைமை மோசமாகியிருக்கும். கொஞ்சநாள் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டியிருக்கும்’னு சொன்னார். 

18 நாள் அங்கேயே தங்க வெச்சு வைத்தியம் பார்த்தாரு. அப்ப அவரோட ரொம்ப நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. நாட்டு நடப்பு, உலக நடப்புனு பல விஷயங்கள் பேசுவோம். அப்படி பேசும் போதுதான் பஞ்சகவ்யா கரைசல் குறித்த பேச்சும் வந்தது. குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பும் போது, 5 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை அன்பளிப்பா கொடுத்தார். அதைத் தயாரிக்கும் முறைகளையும் சொல்லிக் கொடுத்து அனுப்பினார்.

வயலில் ஒரு பரிசோதனை!

வீட்டுக்கு வந்த அடுத்த நாளே மஞ்சள், கடலை ரெண்டுலயும் பஞ்சகவ்யாவைத் தெளிச்சு பரிசோதனை பண்ணிப்பாக்கலாம்னு வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். விதைச்சு 15 நாளாகியிருந்த இளங்கடலைச் செடிகள்ல, ஒரு மூலையிலிருந்த செடிகள்ல மட்டும்... ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யானு கலந்து, தெளிச்சேன். தொடர்ந்து தெளிச்சுப் பார்த்தப்போ, ரசாயனம் போட்ட செடிகளுக்கும் பஞ்சகவ்யா தெளிச்ச செடிகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரிஞ்சது. பஞ்சகவ்யா தெளிச்ச செடிகள் நல்லா ‘தளதள’னு பளீர்னு இருந்துச்சு. மஞ்சள் செடிகள்லயும் அதே மாதிரி வித்தியாசம் இருந்தது. அப்போதான் பஞ்சகவ்யாவில் ஏதோ விஷயம் இருக்குனு நான் புரிஞ்சுக்கிட்டேன். தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். 

அப்புறம், கொடுமுடி டாக்டர் மூலமா நம்மாழ்வார் அய்யாவோட தொடர்பு கிடைச்சது. அப்புறம்தான் அய்யா தலைமையில நடந்த கருத்தரங்கு, களப்பயிற்சிகள்னு கலந்துக்க ஆரம்பிச்சேன்” என்ற முத்துச்சாமி தொடர்ந்தார்.

“அந்த சமயத்துல குடும்பச் சூழல் காரணமா புரவிப்பாளையத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற முத்தூர் மேட்டுக்கடைங்கிற இடத்துக்கு குடிபோக வேண்டியதாயிடுச்சு. அந்த ஊர்ல நெறைய முத்துசாமிகள் இருந்ததால, என்னை ‘புரவி முத்து’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அங்க 10 ஏக்கர் மானாவாரி பூமி வாங்கி போர்வெல் போட்டு... மாதுளை, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, புளி, எலுமிச்சைனு நட்டேன். 

அந்தப் பண்ணைக்கு வந்த நம்மாழ்வார் அய்யா, ஒரு நாள் முழுக்க தங்கியிருந்து சில ஆலோசனைகள் சொன்னார். ‘நாட்டு மாடுகள் வளர்க்க ஏத்த ஊரு இது. அதுவும் இங்கு வெளையுற புல்லு, சீதோஷ்ண நிலை ரெண்டும் நாட்டுமாடுகளுக்கு ஏத்தது. உங்களுக்கு போதிய மேய்ச்சல் நெலமும் இருக்கு. அதனால, காங்கேய இன மாடுகளை காப்பாத்துங்க’னு அன்புக்கட்டளை போட்டார், அய்யா. அப்படியே என்னோட பண்ணைக்கு ‘கனிச்சோலை’னு பேர் வெச்சிட்டுப் போனார்.

உடனே 4 நாட்டு மாடுகளை வாங்கினேன். இப்போ 15 நாட்டுப் பசுக்களும் ரெண்டு காங்கேயம் காளைகளும் இருக்கு. அதுகளுக்கு தேவையான பசுந்தீவனம் இங்கயே உற்பத்தியாகுது. ரெண்டு ஏக்கர்ல கோ-3, கோ.எஸ்.எஃப்- 29, கினியா புல் மூணையும் வளர்த்துக்கிட்டு வர்றேன். 15 நாளுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தீவனப்பயிர்களுக்குத் தெளிச்சாலே ‘தளதள’னு வளருது. பார்க்கிறவங்க ‘இது, கரும்பா?’னு கேக்குறாங்க. என்ற முத்துச்சாமி, பசுந்தீவன வயல்களைச் சுற்றிக்காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.

பார்சலில் பஞ்சகவ்யா!

“நாட்டு மாடுகள்ல என்ன வருமானம் கிடைச்சிடப்போகுது? தொழுவுரத்துக்கும் பஞ்சகவ்யா தயாரிக்கவும் ரெண்டு மாடுகள் போதாதா... 15 மாடுகள் எதுக்கு?னு எல்லாரும் கேட்டாங்க. அந்த சமயத்துல, ‘பசுமை விகடன்’, மூலமா அறிமுகமான சென்னைவாசி ஒருத்தர் ‘ நாட்டு மாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யா தேவை’னு கேட்டிருந்தார். அவர்கிட்ட பேசினப்போ, 10 லிட்டர் ஆர்டர் கொடுத்து பணம் அனுப்பி வெச்சார். நான் பஞ்சகவ்யாவை பார்சல் செய்து லாரியில் அனுப்பி வெச்சேன். ரெண்டு மாசம் கழிச்சு அவர் திடீர்னு போன் செய்து... ‘நாட்டுப் பசுமாட்டின் பஞ்சகவ்யா நல்லா வேலை செய்யுது. வீரியம் அதிகம். இன்னும் 10 லிட்டர் அனுப்புங்க’னு ஆர்டர் கொடுத்தார். அடுத்து அவரோட நண்பர்களும் எனக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. 

இப்ப, ஒரு லிட்டர் 150 ரூபாய்னு மாசம் 180 லிட்டர் பஞ்சகவ்யாவை சென்னைக்கு அனுப்பிக்கிட்டிருக்கேன். அது போக கோயம்புத்தூருக்கு 50 லிட்டரும், திருச்சிக்கு 30 லிட்டரும் அனுப்புறேன். இயற்கை இடுபொருட்களைப் போட்டு வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்க அதிகரிச்சிக்கிட்டு வர்றதால, பஞ்சகவ்யா தேவை அதிகரிச்சிக்கிட்டே இருக்கு. 2017-ம் வருஷம் ஆயிரம் லிட்டர் பஞ்சகவ்யாவை அனுப்பனும்னு இலக்கு வெச்சிருக்கேன். 

பஞ்சகவ்யா மட்டுமில்லாம, பசுப் பொருட்கள் மூலமா அர்க், விபூதி, ஷாம்பூ,சோப்பு, ஊதுபத்தி, சாம்பிராணினும் தயாரிச்சிக்கிட்டிருக்கேன்” என்ற முத்துச்சாமி நிறைவாக,

“இப்போ, பஞ்சகவ்யா மூலம் குறைஞ்சபட்சமா மாசம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் வருது. இன்னும் ரெண்டு வருஷத்துல மாசம் ஒரு லட்சம் ரூபாய் வருமானத்தைத் தொட்டுடுவேன். பஞ்சகவ்யா மட்டும் இல்லேன்னா இந்தமாதிரியான வறட்சியான பருவநிலையிலே வெள்ளாமையே இல்லாமபோய், ஆளுக்கு ஒரு மூலைக்கு வேலைக்குப் போயிருப்போம். பஞ்சகவ்யா வெள்ளாமைய மட்டுமில்லாம எங்க வீட்டையும் செழிக்க வெச்சிடுச்சு. இன்ஜினீயரிங் படிச்சிருக்கிற என் பிள்ளைங்க வெளிநாடுகளுக்கு பஞ்சகவ்யாவை அனுப்ப முயற்சி செய்துகிட்டு இருக்கிறாங்க. சீக்கிரம் விமானத்துல பயணிக்கப்போகுது நாங்க தயாரிக்கிற பஞ்சகவ்யா” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

தொடர்புக்கு,
புரவிமுத்து,
செல்போன்: 99659-29098.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக