View status

View My Stats

வியாழன், 9 ஜூன், 2016

பஞ்சகவ்யா - 3




மல்லிகையில் மட்டுமல்ல... வாழ்விலும் மணம் கூட்டிய பஞ்சகவ்யா...

*நாட்டுச்சர்க்கரை சேர்த்தால் கூடுதல் பலன்.

*விளைச்சல் அதிகரிக்கும்.

*40% உரச்செலவுகள் குறையும்.

*பூச்சி, நோய்கள் தாக்காது.

ஈரோடு மாவட்டம், கருக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்துவின் வாழ்க்கையில் பஞ்சகவ்யா ஏற்படுத்திய இனிய மாற்றம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து, கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரைப் பற்றி நமக்கு அறிமுகம் கொடுத்தார், டாக்டர்.நடராஜன். உடனே, கரட்டுப்பாளையத்துக்குப் பயணமானோம்.

வளைந்து நெளிந்து ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் இருக்கும் அழகிய ஊர், கரட்டுப்பாளையம். வாய்க்கால் கரையில் சிறிது தூரம் நடந்தால், அதிலிருந்து பிரிந்து செல்லும் ஒத்தையடிப்பாதையின் இருபுறமும் மலர்ந்து நிற்கிறது, ஈஸ்வரமூர்த்தியின் மஞ்சள் காடு. வாய்க்கால் தண்ணீரை, வழிய வழிய மஞ்சள் காட்டுப் பாத்திகளில் நிரப்பிக் கொண்டிருந்தார், ஈஸ்வரமூர்த்தி. அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... “வாங்க, வாங்க... நீங்க வருவீங்கனு டாக்டர் போன் போட்டு சொல்லிட்டாருங்க” என்று வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

பிள்ளைகளைப் படிக்க வைத்த பஞ்சகவ்யா!

“நான் பி.காம் படிச்சிட்டு வேலையெல்லாம் தேடி அலையாம முழுநேர விவசாயியா மாறிட்டேன். காலிங்கராயன் பாசனத்தில் நாலு ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்த பொண்ணு ரேவதி சுதர்சனா. எம்.சி.ஏ படிச்சிட்டு சென்னையில ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியா இருக்கிறாங்க. ரெண்டாவது பொண்ணு கிருபா. ‘சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட்’ல (சி.இ.சி.ஆர்.ஐ) பி.டெக் படிச்சிட்டு மலேசியாவில் வேலை பார்க்கிறாங்க. மின்னணுக் கழிவு மேலாண்மைக்காக, இவருக்கு ‘தங்க காப்பு’ விருதை மலேசியா அரசாங்கம் கொடுத்திருக்கு. ‘இதையெல்லாம் எதுக்குடா இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்?’னு யோசிக்கிறீங்களா... அங்கதான் விஷயமே இருக்கு.

நான் இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கிறது, என் பொண்ணுகளை இந்தளவுக்கு நல்லா படிக்க வெச்சது, சிறப்பா கல்யாணம் பண்ணி வெச்சது... எல்லாத்துக்கும் பஞ்சகவ்யா ஒரு முக்கிய காரணம். அதுக்காகத்தான் இதை உங்ககிட்ட சொன்னேன்” என்று பெருமையாகச் சொன்ன ஈஸ்வரமூர்த்தி, அடுத்த மடைக்கு மண்வெட்டியால் தண்ணீரைத் திருப்பி விட்டு வந்து தொடர்ந்தார்.

சோதனைக்கு 10 சென்ட்!

“நோய்க்கு வைத்தியம் பார்க்கத்தான் டாக்டர் நடராஜன்கிட்ட போனேன். நான் விவசாயிங்கிறதால, வைத்தியம் பார்த்த கையோடு, பஞ்சகவ்யா குறித்தும் செல்லமுத்து குறித்தும் விலாவாரியா சொல்ல ஆரம்பிச்சிட்டார். அதோட, ‘இதைப் பயன்படுத்துனவங்க எல்லாருமே நல்லா இருக்குனுதான் சொல்றாங்க... நீங்களும் இதைப் பயன்படுத்திப் பாருங்க’னு சொல்லி ஒரு லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை இலவசமாவே கொடுத்தனுப்பினார். எனக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லை. டாக்டர் முகத்துக்காக வாங்கிட்டுப்போன பஞ்சகவ்யாவை மாட்டுத்தொழுவத்தில் மறைச்சு வெச்சிக்கிட்டேன்.

அடுத்த முறை டாக்டர் கிட்ட போனப்போ, ‘பஞ்சகவ்யா தெளிச்சீங்களா?’னு கேட்டார். ‘புதுசா எதையாச்சும் தெளிச்சு வெள்ளாமைக்கு வம்பு வந்துடப் போகுது. நாமளே நாலு ஏக்கர் வெச்சிருக்கிற சிறு விவசாயி, நஷ்டம் வந்தா தாங்கமுடியாது’னு வீட்ல பயப்படுறாங்கனு சொன்னேன். பலமா சிரிச்ச டாக்டர், ‘உங்க பயத்துல நியாயம் இருக்கு. நான் ஒரு யோசனை சொல்றேன். அதுபடி செய்யுங்க. அதையும் மீறி நஷ்டம் வந்துட்டா அதை நான் ஏத்துக்கிறேன்’னு சொன்னார். நான், ‘சரி’னு சொல்லவும்... ‘முழு வயல்லயும் பஞ்சகவ்யாவைத் தெளிக்க வேண்டாம். பத்து சென்ட் அளவில் உள்ள பயிர்கள்ல மட்டும் தெளிச்சுப் பார்த்துட்டு வந்து சொல்லுங்க’னார்.

அடுத்த நாள், என்னோட மஞ்சள் வயல்ல ஒரு மூலையில் பத்து சென்ட் நிலத்தை பஞ்சகவ்யா தெளிக்கிறதுக்காக ஒதுக்கி... பத்து லிட்டர் தண்ணீர்ல 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிச்சேன். வாரம் ஒரு தடவைனு மூணு வாரம் தெளிச்சேன். மத்த மஞ்சள் பயிரெல்லாம் ‘தளதள’னு இருக்க, இந்த பத்து சென்ட் மஞ்சள் செடிங்க மட்டும் பழுத்துப் போச்சு. வீட்டுல ‘குய்யோ முய்யோ’னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

உடனே, டாக்டர்கிட்ட போய் சொன்னேன். அவர், ‘5 கிலோ சாணம், 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர், 1 லிட்டர் நெய் கலந்து இதைத் தயார் பண்ணுனேன். ஒரு வேளை சிறுநீர் அதிகமா இருக்கிறதால இலை பழுத்திருக்கும். சிறுநீரை மட்டும் 3 லிட்டரா குறைச்சிட்டா சரியாகிடும்னு சொன்னார். அதோட இன்னும் சில விவசாயிகள் கிட்டயும் பேசினார். அவங்க எல்லாருமே பஞ்சகவ்யா குறித்து எதிர்மறையா எதுவுமே சொல்லலை. எனக்கும் அதுல கொஞ்சம் ஆர்வம் வந்துடுச்சு. உடனே, நானே 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர், 1 லிட்டர் நெய்னு கலந்து பஞ்சகவ்யா தயாரிச்சு இன்னொரு பத்து சென்ட் வயல்ல தெளிச்சேன். பயிர்ல நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. உடனே வயல் முழுக்க தெளிக்க ஆரம்பிச்சிட்டேன்.

ஆனா, பக்கத்து தோட்ட விவசாயிகள்ல்லாம் என்னை ரொம்பவே கேவலப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, செடிகள் நல்லா வளர்ந்ததைப் பார்த்து அவங்களை நான் கண்டுக்கவேயில்லை. அந்த வருஷம் மஞ்சள் வழக்கத்தை விட நல்லாவே விளைஞ்சது. அதில்லாம உரச்செலவு 40 சதவிகித அளவுக்கு குறைஞ்சது. பூச்சி, நோய்கள் வரவேயில்லை. அதனால பூச்சிக்கொல்லி, மருந்தடிக்கிற செலவெல்லாம் மிச்சமாச்சு” என்ற ஈஸ்வரமூர்த்தி தொடர்ந்தார்.

“அதுக்கப்புறம் எனக்கு பஞ்கவ்யா மேல அதிக நம்பிக்கை வந்துடுச்சு. நானே தயாரிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுல நொதிப்புத் தன்மை குறைவா இருக்கவும்... டாக்டர்கிட்ட அது குறித்து விளக்கம் கேட்டேன். அவர், ‘இனிப்பு சேர்த்து பாருங்க’னு சொன்னார். உடனே, வழக்கமான பொருள்களோட ஒரு கிலோ நாட்டு சர்க்கரையையும் சேர்த்து பஞ்சகவ்யா தயாரிச்சப்போ... அது அருமையா நொதிச்சு வந்தது. நுண்ணுயிரிகள் அதிகமா இருந்ததால பலனும் நல்லா இருந்தது. உடனே 80 சென்ட் மல்லிகைக்கு பஞ்சகவ்யாவைத் தெளிச்சுப் பார்த்தேன். சும்மா பூ பூத்து குலுங்கிடுச்சு. பூவெல்லாம் அம்பு மாதிரி இருந்துச்சு. வாசம் ஊரையே தூக்குற அளவுக்கு இருந்துச்சு. அந்த முறை பூ எடுக்க ஆள் பத்தாத அளவுக்கு விளைச்சல்.

தொடர்ந்து பஞ்சகவ்யா தெளிச்சு பூ சாகுபடி பண்ண ஆரம்பிச்சேன். நல்ல மகசூல் கிடைச்சதோட, நல்ல விலையும் கிடைக்க ஆரம்பிச்சது. சுத்துப்பட்டு கிராமங்கள்ல எங்க கல்யாணம்னாலும் மல்லிகைப்பூவை எங்ககிட்டதான் வாங்குவாங்க. எங்க வீட்டுக்கே ‘பூக்காட்டுக்காரர் வீடு’னு பேர் வெச்சுட்டாங்கனா பாத்துக்கங்களேன். அந்தளவுக்கு எனக்கு பெருமை தேடிக் கொடுத்தது, பஞ்சகவ்யாதான். வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்த விவசாயம் அதுக்கப்பறம்தான் எனக்கு லாபமா மாற ஆரம்பிச்சது” என்ற ஈஸ்வரமூர்த்தி நிறைவாக,

‘‘இவ்வளவு சக்தி இருக்கிற பஞ்சகவ்யாவை ஏன் அரசாங்கம் கண்டுக்கிடலைனு யோசிச்சு, அதை எடுத்துக்கிட்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்குப் போனேன். அப்போ இருந்த துணைவேந்தர்கிட்ட அதைக் காட்டி சொன்னேன். ‘இந்த ஆராய்ச்சியெல்லாம் நாங்க செய்ய வேண்டிய வேலை. நீங்கள்லாம் செய்யக்கூடாது’னு சொல்லி அனுப்பி வெச்சிட்டார். அதுக்கப்பறம் நம்மாழ்வார் அய்யா என் வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கி, பஞ்சகவ்யா தயாரிப்பு முறையை எல்லாம் பார்வையிட்டார். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அவர் கையிலெடுத்துக்கிட்டு போய் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்துட்டார். இப்போ, பல்கலைக்கழகமும் இதை ஒப்புக்கிட்டாங்கங்கிறது மகிழ்ச்சியான விஷயம்” என்று சொல்லி விட்டு தண்ணீர் பாய்ச்சத் தொடங்கி விட்டார்.

தொடர்புக்கு,
எஸ்.ஈஸ்வரமூர்த்தி,
செல்போன்: 90470-08387.

கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா!

“பஞ்சகவ்யாவைக் கலக்கி விடுற கம்பை மூலையில சாத்தி வைப்போம். அதை தோட்டத்துல இருக்கிற நாய்கள்லாம் நக்கும். கோழிங்க கூட அந்த கம்பை கொத்தும். அதைப் பார்த்துட்டு கோழிகளுக்கும், ஆடு, மாடுகளுக்கும் அதைக் கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லா ஊட்டத்தோட நோயில்லாம வளர ஆரம்பிச்சது. அப்போதான் தெரிஞ்சது, பஞ்சகவ்யா கால்நடைகளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்னு. ஒரு முறை, வீட்டுல வளர்த்துட்டு இருந்த ‘ஜெர்மன் ஷெப்பர்டு’ நாய்க்கு சொறி பிடிச்சிடுச்சு. அதுக்கு எந்த மருந்தும் கொடுக்காம பஞ்சகவ்யாவை மட்டும் குடிக்க கொடுத்தேன். சொறி சரியாகிடுச்சு. தோல் நோய்களைத் தீர்க்குற அற்புத மருந்து பஞ்சகவ்யா. பலர், ‘சொரியாசிஸ்’ நோயையே குணப்படுத்துதுனு சொல்றாங்க” என்று பெருமையாகச் சொல்கிறார், ஈஸ்வரமூர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக