View status

View My Stats

புதன், 22 ஜூன், 2016

குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு,


இது ஃபேன்ஸி யுகம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, அழகியல் ஆர்வமுள்ளவர்களும் அழகுக்காகப் பல்வேறு உயிரினங்களை வளர்க்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நகர்ப்புற வீடுகள் என அனைத்து இடங்களிலும் நாய், பூனை, புறா, கிளி, வண்ண மீன்கள் என அழகுக்காக வளர்க்கப்படும் 'ஃபேன்ஸி’ உயிரினங்கள் வரிசையில் சமீப காலமாக அலங்காரக் கோழிகளும் இடம்பிடித்து வருகின்றன. நாட்டுக்கோழியைவிட குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது.
வீட்டு மொட்டை மாடியில் முப்பது ஆண்டுகளாக அலங்காரக் கோழிகளை வளர்த்துவரும் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் காபிரியேல் சொல்வதைக் கேளுங்கள்.
''கோழிகளின் முட்டை இடும் திறன், வளர்ச்சி, உருவ அமைப்பு, குணங்களின் அடிப்படையில் முட்டைக் கோழி, இறைச்சிக் கோழி, சண்டைக் கோழி, அலங்காரக் கோழிகள் என இனம் பிரிக்கிறார்கள். போன்சாய் மரங்களைப் போல சிறிய உருவம், நளினமான நடை, வண்ண வண்ண இறகுகள், கால் நுனியில் அடர்த்தியான ரோமம் ஆகியவை அலங்காரக் கோழிகளின் அடையாளம். இவை பெரும்பாலும் வெளிநாடுகளை தாயகமாகக் கொண்டவை.
10 ஆயிரம் முதலீடு போதும்!
இவற்றை வணிக ரீதியாக வளர்க்க அதிக இடம் தேவையில்லை. வீட்டு மொட்டை மாடியில்கூட வளர்க்கலாம். அதேபோல அதிக எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்கவும் தேவையில்லை. சுமார் இருபது கோழிகளை வளர்த்தாலும் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம். இதை வளர்க்க, 10-க்கு 10 அடி அளவில் வெயில் நேரடியாகத் தாக்காமலும், மழை பெய்யும்போது சாரல் அடிக்காமலும் இருப்பது போல குறைந்த செலவில் கொட்டகை அமைத்துக்கொண்டால் போதும். அலங்காரக் கோழி வளர்ப்புக்கு 10 ஆயிரம் முதலீடு போதுமானது.
ஆயிரம் முதல் லட்சம் வரை!
அலங்காரக் கோழிகளில் அமெரிக்கன் கிரில், பிரம்மா, கொச்சின் பேந்தம், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட், போலீஸ் கேப், குட்டைவால் கோழி, ஃபீனிக்ஸ், பேந்தம், பிளாக்மினி கொச்சின், பூட்டேட் பேந்தம், பஞ்சுக்கோழி, டேபிள் ஃபைட்டர், செப்பரேட்டர், மினி வொய்ட் ரோஸ் கேப், கடக்நாத், கிராப் என பலவகையான கோழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கோழியும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன. ஒரு கோழி சுமாராக 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். ஒரு சில அபூர்வ ரக வகைக் கோழிகள் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகின்றன. சில்கி, கடக்நாத் ஆகிய ரக கோழிகளின் இறைச்சி மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.
20 கோழிகளுடன் தொடங்கலாம்!

முதன் முதலாக இத்தொழிலில் இறங்குபவர்கள் அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகங்களில் குறைந்த எண்ணிக்கையில் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். சில்கி, போலீஸ் கேப், கொச்சின், சீ பிரைட் ஆகிய நான்கு ரகங்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு உள்ளது. மேற்படி ரகங்களில் தலா 3 பெட்டை, 2 சேவல்களை வாங்க வேண்டும். மொத்தம் 20 கோழிகளுடன் தொழிலைத் தொடங்கி, அனுபவத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். ஒரு நாள் வயதுடைய குஞ்சு 300 ரூபாய்க்கும், எட்டு வார வயதான கோழிகள் 800 ரூபாய்க்கும் கிடைக்கும். முதன் முதலில் இந்தத் தொழிலில் இறங்குபவர்கள் எட்டு வார வயதுடைய குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. தீவனம் பராமரிப்பு அனைத்தும் நாட்டுக்கோழிக்குச் செய்வது போலவே செய்ய வேண்டும். 25-ம் வாரத்திலிருந்து முட்டை போடத் தொடங்கும். நாட்டுக்கோழிகளைப் போல தினமும் முட்டை கிடைக்காது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் முட்டை கிடைக்கும்.

ஒரு வருஷம்... ஒரு லட்சம்!
ஒரு ஆண்டுக்கு சில்கியில் 160 முட்டையும், கொச்சின் கோழி மூலம் 120 முட்டைகளும், போலீஸ் கேப் மூலமாக 100 முட்டைகளும், சீ பிரைட் மூலம் 60 முட்டைகளும் கிடைக்கும். இந்த முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகளுடன் அடைவைத்து பொறிக்க வைக்கலாம். அல்லது சிறிய அளவிலான இன்குபேட்டர் மூலமாகப் பொறிக்க செய்யலாம். அடை வைத்ததிலிருந்து 21 நாளில் குஞ்சு பொறிக்கும். இந்த குஞ்சுகளை இரண்டு மாதங்கள் வளர்த்து விற்பனை செய்யலாம். அலங்கார கோழிகள் இடும் முட்டைகளில் சராசரியாக 60 சதவிகிதம் தான் பொறிக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், சில்கி முட்டை மூலம் 96 குஞ்சுகள், கொச்சின் மூலமாக 72 குஞ்சுகள், போலீஸ் கேப் மூலம் 60 குஞ்சுகள் மற்றும் சீ பிரைட் மூலம் 36 குஞ்சுகள் என மொத்தம் 264 குஞ்சுகள் கிடைக்கும். இதில் இறப்பு விகிதத்தைக் கழித்தால், ஆண்டுக்கு சராசரியாக 200 குஞ்சுகள் கிடைக்கும். ஒரு குஞ்சு 800 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 1.60 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் ஒரு ஆண்டுக்கான செலவாக அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
விற்பனை வாய்ப்பு!
விற்பனை வாய்ப்பைப் பற்றி கவலையே இல்லை. உங்களிடம் அலங்காரக் கோழிகள் இருப்பது தெரிந்தால் வியாபாரிகளே வந்து வாங்கிக்கொள்வார்கள். அப்படியும் விற்பனை செய்ய முடியாதவர்கள் எங்களிடம் விற்பனை செய்யலாம். எட்டு வார வயதுடைய குஞ்சுகளை 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வோம்'' என்று முடித்தார் அவர்.
அட, இதுவும் நல்ல பிஸினஸா இருக்கும் போலிருக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக