View status

View My Stats

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

''மரமும் கல்வியும் என் இரண்டு கண்கள்!''


''மரமும் கல்வியும் என் இரண்டு கண்கள்!''

மனித நேய மாயக்கிருஷ்ணன்!
ளிகைக் கடை நடத்தும் ஒருவர் அதில் கிடைக்கும் வருவாயில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளைத்  தன் செலவில் வாங்கிச் சாலையோரம் நட்டுவைத்து பராமரித்துவருகிறார். அதோடு மட்டும் இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து அவர்களுக்குத் தேவையான உதவிகளையும்  செய்துவருகிறார் எனத் தகவல் கிடைக்க, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தில் உள்ள  மளிகைக் கடையில் ஆஜரானேன். அவர்  மாயகிருஷ்ணன். 
'' நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். குடும்பத்தில் யாரும் படிக்கலை. அதனால, அவங்களுக்குப் படிப்போட அருமை தெரியவில்லை. ஏழாவது படிச்சிட்டு இருந்தப்ப, வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திட்டாங்க.  வீட்டில் இருந்த நான், அண்ணனுக்கு உதவியா டைலரிங் கடைக்குப்போய் ஒத்தாசையா இருந்தேன். அப்படியே நானும் டைலரிங் கத்துக்கிட்டுத் துணிதைக்க ஆரம்பிச்சேன்.
ஒரு நாள் பேப்பர் படிக்கும்போது,  இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைச் செய்தியைப் படிச்சேன். அந்தச் சோதனையின் வெற்றிக்கு, நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்தான் காரணம்னு  தெரிஞ்சுகிட்டேன். அவரைப் பத்திப் படிக்க ஆரம்பிச்சேன்.  தொடர்ந்து அவர் சொல்லும் விஷயங்களைக் கடைபிடிக்க ஆரம்பிச்சேன். அதோடு, அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பிச்சேன்.
அதன்படி 2005-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஒரு மனிதன், தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் பத்து மரங்களையாவது நடவேண்டும் என்று கலாம் சொல்லி இருந்தார். ஆரம்பத்துல பத்துக் கன்றுகள் நட்டு வளர்த்தேன். எல்லோரும்  பாராட்டினாங்க. அந்தச் சந்தோஷத்தில் தொடர்ந்து மரக் கன்றுகளை வாங்கிப் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் நடஆரம்பித்தேன். என் ஆர்வத்தைப் பார்த்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கு 'இந்த மரக் கன்றுகள் வேணும்’னு கோரிக்கை வெச்சாங்க. 
ஆசிரியர்கள் சொல்லும் மரக் கன்றுகளை விருத்தாசலம், நெய்வேலி ஆகிய ஊர்களுக்கு பைக்கில் போய்எடுத்துவருவேன். அப்படி வர்றப்ப வழியில் இருக்கும் பள்ளிக் கூடங்களில் நானே கேட்டு மரக் கன்று நட்டு வைப்பதும் உண்டு. அப்படி வைத்த மரங்களில் சிலவற்றை ஆடு, மாடுகள் கடித்திருப்பதைப் பார்த்துப் பதறிப்போனேன். மரக் கன்றுகளைக் காப்பாற்ற இரும்புக் கூண்டு செய்து, அதில் நல்ல வாசகங்களை எழுதிவைக்கலாம்னு யோசனை வந்தது. அதுக்குப் பணம் அதிகமா தேவைப்பட்டுச்சு. இதற்கு நான் பார்த்து வந்த டைலரிங் தொழில் சரியா வராததால் தொழிலை மாற்றி எஸ்.டீ.டி. பூத் ஆரம்பிச்சேன்.  அப்துல் கலாம்,  'ஒரு மாணவன் குறைஞ்சது பத்து குடிகாரர்களையாவது திருத்தணும்'னு சொன்னார். அதனால, மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்றேன். அப்போது ராமநத்தம் காந்திநகர் பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரத் தொழில் செய்பவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள், படிக்காமல் இருப்பதைப் பார்த்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. படிப்பைப் பாதியில் நிறுத்தியதால் நான் சந்தித்த அவமானங்களை பூம்பூம் மாட்டுக்கார வேலை செய்யும் பெற்றோர்களிடம் எடுத்துச்சொல்லி, அங்கே இருந்த 30 பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டேன். இப்போது வரைக்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை நான் செஞ்சுட்டு வர்றேன். என் நண்பர்களும் எனக்குத் தோள் கொடுக்க, இப்போது அந்த 30 பிள்ளைகளும் சந்தோஷமா படிச்சிட்டுவர்றாங்க. 
செல்போன்கள் வந்தபிறகு எஸ்.டீ.டி. பூத் தொழில் டல் ஆகவே அவர்களுக்கு உதவ முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். எஸ்.டீ.டி. மளிகைக் கடையாக மாறியது. இன்று கடவுள் புண்ணியத்தில் கிடைக்கிற லாபத்தில் கஷ்டப்படுற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செஞ்சுட்டு வர்றேன்.
நான் வைத்த கன்றுகள் தழைத்து மரமாகி நிழல் தருவதுபோல நான் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்ட பிள்ளைகள் இன்று எட்டாம் வகுப்புப் படிக்கிறார்கள். இன்னும் நிறைய பேரைப் படிக்கவைக்க என்னால் முடிந்தவரை உதவி செய்துகொண்டே இருப்பேன்'' என்றார் நம்பிக்கையுடன்.
இவர் நட்டு வைத்த மரக் கன்றுகள் ஒரு பக்கம் மரங்களாகிறது. இன்னொரு பக்கம் மாணவர்கள் கல்வியாளராகிறார்கள்!





நன்றி: என் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக