View status

View My Stats

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

பாத்திமா மீர்

இனவெறியை எதிர்த்து போராடிய இந்திய பெண் : பாத்திமா மீர் !! நெல்சன் மண்டேலவால் பெரிதும் பாராட்ட பெற்ற ஒரு இந்திய பெண் !!!


பாத்திமா மீர் (Fatima Meer) இன ஒதுக்கல் (Apartheid) எனப்படும் நிறவெறி, இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராக, தென்னாப்பிரிக்க 
விடுதலை இயக்கத்தில் முன்னணியில் நின்று, வெள்ளையர் இனவெறி ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிய இந்திய வீராங்கனை.

குஜராத் மாநிலத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று குடியேறிய இந்திய மரபுவழி இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஓர் அறிவுஜீவி, எழுத்தாளர், கல்வியாளர், செயல்வீரர் எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது போராடியவர்.

1956இல் நேட்டால் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராகச் சேர்ந்த பாத்திமா மீர்தான், தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியில் அமர்த்தப்பட்ட வெள்ளையர் இனத்தவர் அல்லாத முதல் பெண். பின்னாளில், அவரே அங்கு கறுப்பினத்தவர் குறித்த புகழ்பெற்ற ஆராய்ச்சி மையத்தை 1972இல் தொடங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

"பெரும்பாலான இந்தியப் பெண்கள் சமையலறையில் சமோசா செய்யும் பணியில் அவரவர் அம்மாக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த காலத்தில், அந்த இளம் இந்தியப் பெண் வீதியில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டங்களை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். உலகிலேயே மிகக் கொடுமையான அடக்குறை ஆட்சி அமைப்புக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்தார்'' என்று பாத்திமா மீரைப் பற்றி அவரின் நெருங்கிய தோழியும் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியுமான வின்னி மண்டேலா குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தியான பாத்திமா மீரின் தாத்தா இஸ்மாயில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரை நகரான சூரத் நகரில் இருந்து ஒரு வியாபாரியாக 1880களில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர். பாத்திமா மீரின் தந்தையான மூசா மீர், தென்னாப்பிரிக்காவில் உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த "இந்தியன் வியூஸ்'' வார இதழின் ஆசிரியராக இருந்தவர். பாத்திமா மீரின் தாய் ஆமினா, முதலில் ராச்சேல் என்ற பெயர் கொண்ட வெள்ளையர் இனப் பெண் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. மீரின் குடும்பம், முஸ்லிம் குஜராத்தி மரபுகளும், தந்திரமான அரசியல் செயல்பாடுகளும் கலந்த ஒரு சங்கமம் ஆக இருந்தது. அந்த இரண்டு பண்புகளும் பின்னிப் பிணைந்த இணைப்பாக பாத்திமா மீர் திகழ்ந்தார்.

டார்ட்நெல் கிரசென்ட் பள்ளியில் பயின்றபோதுதான் பாத்திமா மீரின் அரசியல் ஈடுபாடு தொடங்கியது. இனவெறி அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக மாணவ, மாணவியரின் அமைதிவழி கிளர்ர்ச்சிக் குழு ஒன்றை அங்கு அவர் உருவாக்கினார். நேட்டால் இந்திய காங்கிரஸ் அமைப்பு நடத்திய பேரணியில், தனது 17ஆம் வயதில் பாத்திமா மீர் முதன் முதலாக மேடையேறிப் பேசினார்.

அக்காலத்தில் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய தனது தாய் மாமா அகமது மீர் மற்றும் மாமாவின் இரண்டாவது மகனான சட்டக்கல்லூரி மாணவரும், நேட்டால் இந்திய காங்கிரசு தலைவருமான இஸ்மாயில் மீர் ஆகியோரின் அரசியல் செயல்பாடுகள் பாத்திமாவுக்கு பெரிதும் ஆதர்சமாக இருந்தன. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள விட்வாட்டர்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பயிலும்போது மாமா மகன் இஸ்மாயில் மீருடன் பாத்திமா காதல்வயப்பட்டார்.

அவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை நெல்சன் மண்டேலாவின் தோழர்கள், சமகாலத்தவர்கள். பாத்திமா மீரை எப்போதும் பாத்திமாபென் (சகோதரி பாத்திமா) என்றுதான் நெல்சன் மண்டேலா அழைப்பார்.

பல்கலைக்கழகப் படிப்பை டர்பன் நகரில் பாத்திமா நிறைவு செய்தார். பாத்திமாவும் இஸ்மாயில் மீரும் 1952இல் திருமணம் செய்து கொண்டனர். 1950ஆம் ஆண்டுகள், பாத்திமா மீர் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். மக்கள் சமூகங்களை இன அடிப்படையில் பிரித்து வைத்த பாஸ்போர்ட் சட்டம், குழுப் பகுதிகள் சட்டம் போன்ற வெள்ளைச் சிறுபான்மை அரசின் முடிவுகளை எதிர்த்து அவர் போராடினார். அந்தச் சட்டங்களின் விளைவாக பாத்திமா மீரின் குடும்பம் உள்பட ஏராளமான இந்தியர்களின் குடும்பங்கள் "வெள்ளையர்களுக்கு மட்டும்' என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வீடு வாசல்களையும் தொழில்களையும் விட்டு விரட்டி, வெளியேற்றப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக