View status

View My Stats

செவ்வாய், 17 நவம்பர், 2015

மண்ணும் நமசிவாயம்... மலையும் நமசிவாயம்...

னித உடல் பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் உருவானது. எனவே, நாம் பஞ்சபூதத் தலங் களைத் தரிசிப்பது நம் அகத்துள் உறையும் ஆண்டவனைப் புறத்தில் தரிசிப்பதற்கு ஒப்பாகும்; புண்ணியம் நல்குவதாகும். 
இயற்கையின் இணையற்ற சக்திகளாய் விளங்கும் பஞ்ச பூதங்களான ஆகாயம், நீர், மண், காற்று, நெருப்பு ஆகியவற்றில், உலகில் உறைகின்ற உயிரினங்களின் இன்றியமையாத தேவைகளான ஒளியையும், வெப்பத்தையும் ஒருங்கே வழங்குவது நெருப்பாகும்.
அளவில்லா அருமை பெருமைகள் கொண்ட அக்னியைக் குறிக்கும் பஞ்ச பூதத் திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.
இத்தலத்தில் சிவபெருமான் அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக் கிறார். அவர் அழல் உருவாக வெளிப் பட்ட மலை என்பதால், யாரும் அண்ணவொண்ணாத மலையான அண்ணாமலையை, அருணாசலம் என்று வடமொழியில் வழங்குவர்.
ஆதிசிவமூர்த்தி இத்தலத்தில் அக்னிப் பிழம்பாக அண்ணாமலையாக வடிவெடுத்து வந்தது எவ்வாறு?
உலகைப் படைக்கும் பிரமனுக்குத் தான் மிகவும் உயர்ந்தவன் என்ற எண்ணம் உதித்துவிட்டது. ஆணவம் தலைக்கேற அலைகடலில் அரவணையில் துயில் கொள்ளும் திருமாலைத் தேடிச் சென்றான். 'இந்த உலகமே எனது படைப்பு. ஆகையால் நானே பெரியவன்; பெருமையில் சிறந்தவன்' என்று கூறினான்.
அவன் கூற்றை மறுத்த விஷ்ணு, பிரமன் தனது உந்தியில் உதித்தவன்தான் என்பதை உரைத்தார்.
அங்கு வந்த நாரதரோ அவர்கள் இருவரைவிடப் பெருமை மிக்க மூர்த்தி சிவப்பரம்பொருளே என்று செப்பி, சிக்கலை அதிகப்படுத்திவிட்டுச் சென்றார்.
அவர்களது அறியாமையை அகற்ற, சிவபெருமான் அவர்கள் இடையே தோன்றினார்.
இருவருள் யார் தனது அடியையோ அல்லது முடியையோ கண்டு வருகின்ற னரோ அவரே முதன்மையான பெருமை உடையவர் என்று முத்தாய்ப்பாய்க் கூறி முடித்தார்.
பிறகு, ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார்.
அவரது திருவடி பாதாளங்கள் ஏழினையும் தாண்டிக் கிடு கிடுவெனக் கீழே இறங்கிக் கொண்டே சென்றது.
திருமுடியோ அண்டங்களின் மேல் முகடுகளைப் பிளந்து கொண்டு மின்னலென மேலே மேலே உயர்ந்தவாறே சென்றது.
வராக அவதாரம் எடுத்த திருமால் வன்மையுடன் குடைந்து கொண்டு பாதாளம் வரை சென்றார். சிவனின் திருவடி வளர்ந்துகொண்டே சென்றதால், முயற்சியைக் கைவிட்டு முழு முதல் மூர்த்தியாம் சிவனைத் தொழுது நின்றார்.
நான்முகனோ அன்னப் பறவை உருவம் எடுத்து, முடி யைக் காணும் முயற்சியில் முழு மூச்சுடன் முனைந்தான்.
அழல் உருவின் ஆற்ற வொண்ணா வெப்பத்தால் வெந்தது அன்னத்தின் சிறகு. அதனால் கீழே விழுந்தான் பிரம்மன். அப்படி விழும்போது சிவன் மேலிருந்து உதிர்ந்த ஒரு தாழம்பூ இதழைக் கண்டான்.
தாழம்பூவைச் சாட்சியாக்கி, தான் சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாக மொழிந்தான்.
உண்மை தவறியதால் பிரமனுக்கு உலகில் கோயில்களே இல்லாமல் போகட்டும் என்று சபித்தார் சிவன். பொய்க்குத் துணை போனதால், பொன்னார் மேனியனின் அர்ச்சனைக்குத் தாழம்பூ ஆகாத மலர் ஆயிற்று.
சிவபெருமானே முழு முதற் பரம்பொருள் என்பதை முற்றிலுமாக உணர்ந்த திருமாலும் பிரம்மனும் அவரைப் போற்றித் துதித்தனர். கருணை கொண்டு சிவனும் லிங்கோத்பவராகக் காட்சி கொடுத்தருளினார்.
இவ்வாறு, ஆலம் உண்ட ஆதிசிவன் அழல் உருவெடுத்த அற்புதத் தலமே அண்ணாமலை. இறைவனே இங்கு மலை உருவில் தோன்றி உள்ளான்.  இத்தலத்து இறைவர் 'அருணா சலேஸ்வரர்’ என்றும், 'அண்ணாமலை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
அன்னையின் திருப்பெயர் உண்ணாமுலை அம்மை. வடமொழியில் அம்பாளின் பெயர் 'அபிதகுசாம்பாள்’ என்பதாகும்.
தமிழகத்து மிகப் பெரும் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலைக் கோயில் ஆறு பிராகாரங்களையும், ஒன்பது கோபுரங்களையும் கொண்டது. நான்கு திசைகளிலும் நான்கு உயரமான கோபுரங்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன.
ஒவ்வொரு கோபுரத்தின் பின்னணியிலும் ஒரு சுவையான வரலாறு பொதிந்திருக்கிறது.
ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஏறக்குறைய நூறடி தூரத்தைக் கடந்தால்தான் ஆலயத்தின் முதல் பிராகாரத்தைத் தொட முடியும். ராஜகோபுரத்தின் உட்புறம் நடக்கும்போது வலப் புறமும், இடப்புறமும் பார்த்தால் கோபுரத்தின் உட்புறத்தில் அவ்வளவு அற்புதமான சிற்பங்கள்!
ராஜகோபுரத்தைக் கடந்தவுடன், வலப்புறம் எதிரே தெரிவது ஆயிரங்கால் மண்டபம். இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் இருக்கும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் ரமண மகரிஷி இளமையில் தியானம் புரிந்துள்ளார்.
இடது புறம் எதிரே கம்பத்து இளையனாராக அருணகிரிக்குக் காட்சி கொடுத்த முருகனின் கோயில். இந்த முருகன் கோயிலுக்குத் தெற்கில் சிவகங்கை தீர்த்தக் குளம்.
முருகன் கோயிலுக்கு நேர் பின்புறம் சர்வ ஸித்தி விநாயகர் கோயில் உள்ளது. இவரை வழிபட்டு வலம் வந்து வெளிப்பட்டால், உத்திராட்ச மண்டபம் என்னும் அழகிய நாற்கால் மண்டபத்தையும், அதை அடுத்து இருக்கும் நந்தி மண்டபத்தையும் காணலாம். இந்த மண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தியம்பெருமான் ஆலயத்துச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையை நோக்கியவாறு அமையாமல் ஆலயத்துக்குப் பின்னால் காட்சி தரும் மலையையே தரிசித்த வண்ணம் அமர்ந்திருக்கிறார்.
இந்த நந்தி மண்டபத்தைக் கடந்து சென்றால் எதிர்ப்படுவது வல்லாள மகாராஜா கோபுரம். நெடிதுயர்ந்திருக்கும் இந்த கோபுரத்தின் உச்சியி லிருந்துதான் அருணகிரிநாதர் தன் வாழ்வை முடித்துக் கொள்ளக் கீழே குதித்திருக்கிறார். அவரை முருகப் பெருமான் தாங்கி, தடுத்தாட் கொண்டிருக்கிறார். இந்த கோபுரத்துக்கு அடுத்து இருக்கும் பிராகாரத்தில், தெற்கில் பிரம்மதீர்த்தம் உள்ளது. இந்தப் பிராகாரத்தில் இருக்கும் வினை தீர்க்கும் விநாயகர் சந்நிதியிலும் மக்கள் சாரி சாரியாக வந்து வணங்குகிறார்கள். இந்தப் பிராகாரத்தில் புரவி மண்டபம் இருக்கிறது. நளேசுவரர், வித்யாதரேசுவரர், பிரம்ம லிங்கம் ஆகியோரும் எழுந்தருளியிருக்கும் பிராகாரம் இது.
இதை அடுத்து இருக்கும் மூன்றாம் கோபுரம் கிளிக் கோபுரம் ஆகும். இந்தக் கோபுரத்தில்தான் அருணகிரிச்சித்தர் தனது பூதவுடலை விட்டுக் கூடு விட்டுக் கூடு பாயும் சித்து வேலை செய்து, தன் உயிரை ஒரு கிளியின் உடலில் புகுத்தி, பாரிஜாத மலரைத் தேடிக் கொண்டுவரச் சென்றிருக்கிறார்.
கிளி உருவில் பாரிஜாத மலருடன் திரும்பி வந்து பார்த்தால், அவரது பூத உடல் அங்கே இல்லை. கிளி உருவிலேயே இந்த கோபுரத்தில் இருந்து அவர் கந்தர் அனுபூதியைக் களிப்புடன் பாடியிருக்கிறார்.
கிளிக் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், மூன்றாம் பிராகாரம். இங்கேதான் மங்கையர்க்கரசி என்னும் சிவனடியார் எழுப்பிய பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதற்குத் தீப தரிசன மண்டபம் என்று பெயர். இங்கு திருக்கார்த்திகைத் திருநாளில் பஞ்சமூர்த்திகள் மலையை நோக்கி நிற்க, மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.
மூலவரான அண்ணாமலையார் சந்நிதியைத் தரிசிக்கும் முன் பல மண்டபங்களையும், சந்நிதி களையும், உற்சவ மூர்த்திகளையும், அறுபத்து மூவரின் அற்புதத் திருவுருவங்களையும் தரிசித்துப் பெரும் பயன்பெறலாம்.
கருவறையில் 'அருணாசலேஸ்வரர்’ சுயம்புவான லிங்க வடிவில் அருவுக்கும் உருவுக்கும் இடைப் பட்ட அருவுருவாகக் காட்சி தந்து அருள்கிறார். அம்மன் சந்நிதியில் உள்ள மகாமண்டபத்தின் தூண்களில் அஷ்டலட்சுமியின் உருவங்களும், ருத்ர துர்கை உருவமும் அமைந்துள்ளன. மால்அயன் காண இயலா மாபெரும் வடிவெடுத்தவனின் துணைவி உண்ணாமுலையம்மை சின்னஞ்சிறிய உருவுடன் கனிவுடன் காட்சி தந்து நம் உள்ளம் உருக வைக்கின்றாள். கார் ஒழுகும் குழலாளை, கருணை வழிந்து ஒழுகும் கடைக் கண்ணாளை, அழகு ஒழுகும் முகத்தினாளை, சீர் ஒழுகும் பதத் தாளை, அருணை உண்ணாமுலை அன்னையை உவந்து வணங்கினால் உள்ளக் குறைகள் அனைத்தும் அகல்வது உறுதி!
அண்ணாமலை, ஞான தபோதனர்கள் பலர் நண்ணி வந்து நற்கதி பெற்ற திருத்தலமாகும். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார் போன்ற மகான்கள் அருள் வாழ்க்கை வாழ்ந்து முக்தியடைந்த தலமாகும்.
சித்தர்களும், ஞானிகளும் இன்றும் வாழ்ந்து வருகிற சீரும் சிறப்பும் மிக்க திவ்விய திருத்தலம் திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய நகரம்! அண்ணாமலைக்குச் சென்று நெஞ்சார வணங்குங்கள். அண்ணாமலை சந்நிதி, நெஞ்சுக்கு நிம்மதி!

திருக்கார்த்திகை தீபத்திருவிழா!
திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா இத்திருத்தலத் தின் தனிப்பெரும் சிறப்பாகும். மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்துள்ளது.
கயிலாய மலை. சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த பார்வதி தேவி, அவருடன் குறும்பாக விளையாட எண்ணினாள். சத்தமில்லாமல் நடந்து வந்து பின்னாலிருந்து சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். அவை சூரிய, சந்திரனே அல்லவா? அவற்றை மறைப்பதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை யோசிக்கத் தவறி விட்டாள் பார்வதிதேவி. மறுகணம், உலகம் இருண்டு போனது. மக்கள் நடுங்கினார்கள். தீயவற்றின் ஆதிக்கம் அதிகரித்தது. நல்லவர்கள் பயந்து கலங்கினர். எல்லா உயிர்களும் பெரும் துன்பத்தை அனுபவித்தன. மொத்தத்தில் எல்லாம் தலைகீழாகிவிட்டது.
பார்வதியின் குறும்பு விளையாட்டால் நிகழ்ந்த விபரீதங்களைக் கண்டு கயிலாயநாதன் கடும் கோபமுற்றார். இதைக் கவனித்த பார்வதிதேவி, பதற்றத்துடன் கைகளை விலக்கினாள், 'மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன்' என்றாள். இந்தப் பெரும் தவறுக்குப் பரிகாரமாக, பார்வதி தேவி சிவனை நோக்கித் தவம் புரிய எண்ணினாள். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த திருத்தலம்தான் திருவண்ணாமலை!
திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று என்ற இடத்தில் அமர்ந்துதான் சிவனை எண்ணித் தவம் செய்தாள் பார்வதி தேவி. பின்னர் தனது பரிவாரங்களுடன் அண்ணாமலையை வலம் வந்து வணங்கினாள். பார்வதிதேவியின் தவத்தையும், கிரி வலத்தையும் மெச்சிய இறைவன், அவளுக்கு ஜோதி வடிவாகக் காட்சி தந்தார். தன் உடலின் இடப்பகுதியை அவருக்குத் தந்து அருளினார்.
அப்போது, பார்வதி தேவி சிவனிடம் ஒரு வரம் கேட்டாள்: ''என் முன்னே நீங்கள் ஜோதி வடிவமாகத் தோன்றி அருளியதுபோல, ஒவ்வொரு வருடமும் இங்கே வந்து வழிபடும் பக்தர்களுக்கும் காட்சி தர வேண்டும், அவர்களுடைய குறைகளைத் தீர்த்தருள வேண்டும்!’'
பக்தர்களுக்கு நலம் செய்வதென்றால் சிவனுக்குக் கசக்குமா? புன்னகையுடன் சம்மதித்தார். இறைவன் அன்னைக்கு சோதி வடிவில் காட்சி தந்த திருநாள் கார்த்திகை மாதம் பரணியன்று  பிரதோஷ காலம். ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருக்கார்த்திகை தீப தரிசனம் காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்.

கிரிவலம்...
சோதி வடிவில் தன்னைக் கண்ட அம்பிகை மலையை வலம் வந்ததும் ஈசன் மகிழ்ந்தான். தனது இட பாகத்தையே அவளுக்கு அளித்தான். அர்த்தநாரீசுவரனாகக் காட்சி தந்தான். எனவே, திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது சிவனையே வலம் வருவதாகக் கருதப்படுகிறது.
பார்வதிதேவியும் அவளது பரிவாரங்களும் தொடங்கி வைத்த மலையைச் சுற்றும் வழக்கம், அதன்பிறகு பல சித்தர்கள், ஞானிகளால் பின்பற்றப்பட்டது. இன்றைக்கும் அவர்கள் சூட்சுமரீதியாகக் கிரிவலம் வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
சிவராத்திரி, வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, பௌர்ணமி, கார்த்திகை மாதம் போன்ற காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வருகிறார்கள்.
மலையைச் சுற்றி அஷ்ட லிங்கங்கள், அஷ்ட நந்திகள், பல புனிதத் தீர்த்தங்கள், பல அழகிய மண்டபங்கள், பல திவ்விய ஆசிரமங்கள் ஆகியவை அமைந்துள்ளன. சித்தர்கள் பலர் வாழ்ந்த, வாழ்கின்ற மலை அண்ணாமலை. ஆன்மிக மணத்தைச் சுமந்து வரும் மூலிகைக் காற்று கிரிவலம் செல்வோர்க்கு உடல் நலம், மன அமைதி ஆகியவற்றை அளிக்கின்றது.

திருத்தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர் : திருவண்ணாமலை,
தலம் அமைந்திருக்கும் மாநிலம் : தமிழ்நாடு
சுவாமியின் திருநாமம்  : அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்)
அன்னையின் திருநாமம் : அபிதகுசாம்பாள் என்னும் உண்ணாமுலை
எங்கே உள்ளது?: சென்னையில் இருந்து 200 கி.மீ. தொலைவில்.
எப்படிப் போவது?:  சென்னையில் இருந்து பேருந்து மற்றும் கார் மூலம்.
எங்கே தங்குவது?:  திருவண்ணாமலையில் நிறைய தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம் :  காலை 6 மணி முதல் பகல் 12:30 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை.

பரணி தீபம்... மகா தீபம்!
16.11.15 திங்கள்: காலை 6.15 மணிக்கு  மேல் 7.25 மணிக்குள்  கொடியேற்றம்.

22.11.15 ஞாயிறு: பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்

25.11.15 புதன்  : அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீப தரிசனம்   மாலை 6.00 மணிக்கு  மகா தீப தரிசனம்.  இரவு பஞ்சமூர்த்திகள்  தங்க ரிஷப வாகனத்தில்   புறப்பாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக