View status

View My Stats

வியாழன், 12 நவம்பர், 2015

'கான்கிரீட் காட்டில் ஓர் தோட்ட வீடு'...! சாதித்து காட்டிய 'முகப்பேர் சிங்'

சிறியதாக ஓர் மாடித்தோட்டம் அமைத்து, அதை பராமரிக்கவே, மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், வீட்டைச் சுற்றியும், வீட்டின் மாடியிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகளை கொண்டு, தோட்டம் அமைத்து முப்பது ஆண்டுகளாக அவற்றை பராமரித்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த ஜெஸ்வந்த் சிங். சென்னை, முகப்பேர், ஸ்பார்டன் அவின்யூவில் இருக்கும், பசுமை நிறைந்த அவரது வீட்டில், அழகிய மாலைப் பொழுதில், அவரைச் சந்தித்தோம். தலையில் டர்பன் கட்டயபடி நம்மை வரவேற்ற ஜெஸ்வந்த் சிங்கிடம், தமிழில் பேச யோசித்த நமக்கு, செந்தமிழில் அழகாய் பேசி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

"எனது சொந்த ஊர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். என்னுடைய தாத்தா, குடும்பத்துடன் 1937ம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். சில ஆண்டுகள் வேலை செய்த பின், சொந்தமாக  கட்டுமான தொழிலில் ஈடுபட தொடங்கினேன். தொடர்ந்து எனது தந்தையும் அதே தொழிலை செய்தார். நான் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தையுடன் சேர்ந்து நானும் அதே தொழிலை செய்தேன். 1978ம் ஆண்டில் இருந்து, இந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக ஓர் துளசி செடியுடன் எங்கள் வீட்டின் தோட்டத்தை அமைக்கத் தொடங்கினோம். செடிகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கத் தொடங்கினோம். இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், இருபதுக்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட பழச்செடிகள், ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் பொருத்தமான செடிகள் வளர்த்தோம்.

தென்னை, வில்வம், ருத்ராட்சம் போன்ற மரங்கள், போன்சாய் (குட்டி மரங்கள்) முறையில் வளர்க்கப்பட்ட ஆலமரம், அரச மரம், போதி மரம், ஆகியன பச்சை பசேலென வளர்ந்து இப்போது காணப்படுகின்றன. இவற்றைக் காட்டிலும், இந்த வீட்டிற்கு தனி சிறப்பை ஏற்படுத்தித் தருபவை, தோட்டத்தை சுற்றி வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் தான்." என்கிறார் ஜெஸ்வந்த் சிங்,

"என்ன சந்தன மரங்களா?" என்று பலர் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்விக்கு ஜெஸ்வந்த் சிங்கிடம் பதில் தயாராக இருந்தது. "வீட்டில் சந்தன மரங்கள் வளர்ப்பதன் மீதான தடை 2002ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுவிட்டது. வீட்டில் தாராளமாக சந்தன மரங்களை வளர்க்கலாம். ஆனால் வெட்டத்தான் கூடாது. இவற்றை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நாங்கள், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களின் முன்னிலையில் தான் வெட்டினோம்" என்றார்.

வீட்டைச் சுற்றி பூத்துக்கிடந்த மலர்களும், வண்ண வண்ண பழங்களும் தம்மை காண, நம்மை அழைக்க, தோட்டத்தை சுற்றிக்காட்டினார் ஜெஸ்வந்த சிங். அவர் முதலில் எங்களிடம் அறிமுகப்படுத்தியது, தமிழ்நாட்டின் அரசு மலரான செங்காந்தளை. "செங்காந்தள் மலர் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இந்த மலர், ஓர் ஆண்டில், மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் பூத்திருக்கும். தேசியக்கொடி போல மேலே சிவப்பு நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும் அமைந்திருப்பது, இந்த மலரின் தனிச்சிறப்பு" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

அடுத்ததாக சிறு சிறு தொட்டிகளில் வளர்க்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளின் அருகே சென்றோம். வசம்பு, ஆடாதொடை, நிலவாகை, சித்தரத்தை, கோபுரம் தாங்கி, நேத்திர மூலி, பூனை மீசை, கற்பூரப்புல், பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சிறியாநங்கை, வல்லாரை, நொச்சி, கற்றாழை போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. "இவற்றில் சில மூலிகைச் செடிகளை காண்பது அரிதாகிவிட்டது. உடலிலுள்ள பல குறைபாடுகளை போக்கும் திறம் வாய்ந்த மூலிகைகள் அனைத்தும், எங்கள் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

மூலிகைச் செடிகளை கடந்து சென்றால், வானை நோக்கி வளர்ந்திருக்கும் சந்தன மரங்கள் காட்சி அளிக்கின்றன. அவற்றின் கீழே, சிறிய பானைகளில் துளையிட்டு, கூடுகெட்டத்தெரியாத சிட்டுக்குருவிகளுக்கும் ஓர் வசிப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜெஸ்வந்த் சிங்.

வீட்டின் வாயிலில், ஒன்பது ராசிகளுக்கும் தனித்தனியாக ஒன்பது வகையான செடிகள் வரிசையாக தொட்டிகளில் வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர, இருபத்தியேழு நட்சத்திரத்துக்கும் தனித்தனியாக செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. "ஆரம்ப காலங்களில் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றில் எனக்கு பெரியளவு ஈடுபாடு இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்துக்கும் ஏற்ற செடிகள் குறித்து அறிந்தேன். அதன்பிறகு தான், அனைத்து ராசி, நட்சத்திரங்களுக்கும் ஏற்ற செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன்" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

ராசி செடிகளின் அருகிலேயே அழகிய போன்சாய் மரங்களும் இருந்தன. ஆலமரம், அரசமரம், கொடுக்காபுளி ஆகிய போன்சாய் வகை மரங்கள் தோட்டத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டினார். தொடர்ந்து மாடியில் உள்ள காய்கறி மற்றும் பழச்செடிகளிடம் அழைத்துச் சென்றார் ஜெஸ்வந்த சிங். சிறிய மாடியில், பலவகையான காய்கறிச் செடிகளை தொட்டிகளில் வளர்த்து, பராமரித்து வருகிறார். நாம் தினமும் உபயோகிக்கும் காய்கறிகளான, தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ், ஐந்து வகை கத்தரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், பூக்கோசு, அவரைக்காய், கொடைமிளகாய், நான்கு வகை பச்சை மிளகாய் ஆகியன மாடியை அலங்கரிக்கின்றன.

பின்புறமுள்ள மாடியில், நாற்பதுக்கும் மேற்பட்ட பழ வகைகள் உள்ளன. மூன்று வகையான எலுமிச்சை, நெல்லி, மாம்பழம், இருவகையான ஆப்பிள், சப்போட்டா, விளச்சிப்பழம், பலாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பேரிச்சை, அத்தி, அன்னாச்சி, மூன்று வகையான ஆரஞ்சு, நாகப்பழம், சீமைப்பலா, கொய்யா, முந்திரி ஆகிய பழங்கள் பார்க்கும் போதே உண்ணத் தூண்டுகின்றன.

பழத்தோட்டத்தின் அருகே, தேனீக்கள் மொய்க்கும் வகையில் சிறிய தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. தேனை சேகரிப்பதுடன், செடிகள் நன்கு வளரவும் உதவுகின்றன. சேகரிக்கப்பட்ட தேனை, தேனீக்களை தொந்தரவு செய்யாமல், தம் கைகளைக் கொண்டே வெளியே எடுக்கிறார் ஜெஸ்வந்த சிங்.

எவ்வித மருந்துகளும் தெளிக்காமல், பூச்சிகளிடம் இருந்து செடிகளை காப்பாற்ற, சூரிய சக்தியில் இயங்கி, யூ.வி கதிர்வீச்சினால் பூச்சிகளை இழுக்கும் கருவியினை உபயோகிக்கும் ஜெஸ்வந்த் சிங், இந்தக் கருவியின் மூலம் ரசாயனங்கள் இன்றி இயற்கையான முறையில் செடிகளை பராமரிக்கலாம் என்கிறார். "செடிகளுக்கு பூச்சி மருந்துகள் இன்றி இயற்கை பொருட்களான வேப்ப எண்ணெய் அல்லது மாட்டுச் சாணத்தை கரைத்து தெளிக்கலாம். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, மிக்சியில் அரைத்து, சாறு எடுத்து, அதையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

இறுதியாக, வீட்டில் இருக்கும் இயற்கை கழிவுகளைக் கொண்டு, அவரே தயாரிக்கும் உரத்தை காண்பித்து, அதை உருவாக்கும் முறையையும் நம்மிடம் விளக்கினார். "பெரிய தொட்டியை எடுத்துக்கொண்டு, காற்று புகும் அளவிற்குச், அதைச்சுற்றி சிறிய துளைகள் சிலவற்றை அமைக்க வேண்டும். தொட்டியின் கீழ் பகுதியிலும், கழிவு நீர் வெளிவரும் அளவிற்கு, சிறிய ஓட்டை ஒன்றை அமைக்க வேண்டும். தொட்டியின் உள்ளே, நெட்லான் எனப்படும் வலையைக் கொண்டு அடிப்பகுதியினை மூட வேண்டும். பின்னர், ஆறு அங்குலத்துக்கு செங்கற்கள் அல்லது ஜல்லிக்கற்களை நிரப்ப வேண்டும். பின் முட்டை ஓடு, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் வெங்காய்த் தோலைகளைத் தவிர, வீட்டில் மீந்துபோன அனைத்து இயற்கை உணவுப்பொருட்களையும் உள்ளே போட்டு, அதன் மேல் மாட்டு சாணத்தை போட வேண்டும், அதன் பின், மண்புழுக்கள் சிலவற்றை போட்டு, மறுபடியும் மீதமுள்ள உணவுப்பொருட்களை போட வேண்டும். இப்படி சில அடுக்குகளாக உணவுப்பொருட்களையும், சாணத்தையும் போட்டு, இறுதியாக தொட்டியை மூட வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பெரிய தொட்டிக்கு, ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், அறுபதில் இருந்து எழுபது நாட்களுக்குப் பின், இயற்கை முறையிலான உரம் தயாராகிவிடும். ரசாயனங்கள் கலந்து விற்கப்படும் உரங்களை காட்டிலும் வீட்டில் தயார் செய்யப்படும் இயற்கை உரம் மிகவும் சிறந்தது" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

தனது வீட்டில் விளைவிக்கப்படும் செடிகளிலுள்ள பழங்கள், காய்கறிகள், பூக்கள் என அனைத்தையும் தன் வீட்டிற்கு உபயோகித்து, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிப்பதாக கூறிய ஜெஸ்வந்த் சிங், வீட்டிலேயே, செயற்கை ரசாயனங்கள் இன்றி விளையும் பழங்களையும், காய்கறிகளையும், தானும், தம் குடும்பத்தாரும், தம் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் உண்ணும் போது, தாம், மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

மரம் வளர்ப்பதன் அவசியத்தை சுவர்களில் எழுதி மக்களுக்கு விளக்குவதை காட்டிலும், வீடெங்கும் மரங்களையும், செடிகளையும் வளர்த்து, மக்களுக்கு தாம் ஓர் உதாரணமாக திகழுவதாக கூறி பெருமை அடைந்தார் ஜெஸ்வந்த் சிங்.

அவர், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம், "சென்னையின் சிறந்த வீட்டுத்தோட்டம்" என்ற விருதையும் தமிழக அரசிடம் இருந்து பெற்றிருக்கிறார். வீட்டுத்தோட்டம் அமைத்து, அதில் ஏதேனும் சந்தேங்கள் எழுந்தால், தம்மை கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தன் கைப்பேசி எண்ணையும் கொடுத்தார். 9840045621 என்கிற எண்ணில், அவரை தொடர்பு கொண்டு மக்கள் தங்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், அவரை தொடர்பு கொள்பவர்களுக்கு வீட்டுத் தோட்டம் பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஜெஸ்வந்த் சிங்கின் அன்புக் கட்டளை. இதற்கும் சேர்த்து நம் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பசுமை நிறைந்த தோட்டத்தை பிரிந்து செல்ல மனமின்றி, அங்கிருந்து கிளம்பினோம்.

2 கருத்துகள்:

  1. அருமையான தேவையான பதிவு நன்றி..தொடர்கிறேன். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் என்னுடைய தளத்திற்கு வருகை தந்து, தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு