View status

View My Stats

புதன், 7 அக்டோபர், 2015

மாடித்தோட்டத்தில் விளையும் பன்னீர் திராட்சை!

விஷம் இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் பலர் தங்கள் வீட்டின் மாடிகளிலோ, ஒதுக்குபுறங்களிலோ காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். அதில் ஒருவர்தான் இந்த மாடித்தோட்ட விவசாயி செல்வராஜ். 
 ‘பாடிய வாயும் ஆடிய காலும் சும்மா இருக்காது’ என்பார்கள். அதுபோலதான் விவசாயமும். கடும் வறட்சி காரணமாக வயலெல்லாம் காடாகிக் காய்ந்து போய்க் கிடக்கும் நிலையில்... ‘தன் வீட்டு மொட்டை மாடியையே திராட்சைத் தோட்டமாக்கி விவசாயத்தைத் தொடர்கிறார், ஒரு விவசாயி’ என்ற தகவல், நம்மை வந்தடைந்தது. 
 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா, சித்தூர் பஞ்சாயத்து, புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். வேடசந்தூர்-எரியோடு சாலையில் பூத்தாம்பட்டி என்ற ஊர் எல்லையில், வடக்குத் திசையில் பிரியும் தார் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, புளியம்பட்டி. போகும் வழியில் விவசாயத்தையே பார்க்க முடியவில்லை. கடுமையான வறட்சியில் நிலமெல்லாம் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாததால் துருப்பிடித்துக் கிடக்கின்றன, பம்ப்செட் மோட்டார்கள். 
 
சுமார் 100 வீடுகளே இருக்கும் சின்ன கிராமம். கோயிலை ஒட்டிய சிமென்ட் பாதையில் குறுகலான சந்தில் இருக்கிறது, செல்வராஜின் வீடு. வீட்டு வாசலில் இருக்கும் மல்லிகைச் செடியை கவாத்து செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்து, திராட்சைத் தோட்டம் பற்றிக் கேட்டதும் ஆர்வமானவர், மாடிக்கு அழைத்துச் சென்றார். மொட்டை மாடியில் வெயிலே தெரியாத வகையில் பசுமைப் போர்வை போர்த்தி இருந்தது, பன்னீர் திராட்சைப் பந்தல்.
 

உள்ளே கொத்துக்கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன திராட்சைப் பழங்கள். திராட்சைத் தோட்டத்துக்குள் நுழைந்த பிரமிப்பில் இருந்த நம்மிடம் ஒரு கொத்தை நீட்டி, ‘‘சாப்பிட்டுப் பாருங்க” எனக் கொடுத்து விட்டு, பேசத் தொடங்கினார், செல்வராஜ்.
 ஏமாற்றிய மழை!
 
 ‘‘எங்களுக்குப் பரம்பரையா விவசாயம்தான் தொழில். அப்பா காலத்துல நல்லபடியாத்தான் சம்சாரித்தனம் பண்ணிட்டிருந்தோம். ஒரு காலத்துல முருங்கை, நெல்லு, கடலைனு பெருங்கொண்ட விவசாயம் நடந்துகிட்டிருந்த ஊருதான். இடையில, மழை தண்ணியில்லாம கெணறுக வத்திப்போச்சு. எங்க ஊர்ல நல்லா மழை பேஞ்சி ஏழெட்டு வருஷமாச்சு. காசு, பணம் இருக்கறவங்க போர் போட்டு வெள்ளாமை பண்ணுனாங்க. என்ன மாதிரி இல்லாதவங்க, கெணத்தை அப்படியே போட்டுட்டு கூலி வேலைக்குக் கிளம்பிட்டோம். உழவு ஓட்டுறது, பிளம்பிங், கொத்தனார், கம்பி கட்டுறதுனு கிடைக்கிற வேலைக்குப் போயி பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன். 
 
சின்ன வயசுல இருந்தே எனக்கு மரம் வளர்க்குறதுல ரொம்ப ஆர்வம். வீட்டைச் சுத்தி மாதுளை, மல்லிகைனு நட்டு வளர்த்துகிட்டு இருந்தேன். எங்கயாவது வெளியூருக்குப் போனா, அங்க இருந்து ஏதாவது கன்னை வாங்கிட்டு வந்து நட்டு வளர்ப்பேன். ஆறு வருஷத்துக்கு முன்னகூட கேரளாவுக்கு கூலி வேலைக்குப் போயிட்டு வரும்போது, கொஞ்சம் கன்னுகளை வாங்கிட்டு வந்து ஊர் எல்லையில இருக்கும் கோவில் பக்கத்துல நட்டு வெச்சிருக்கேன். ஆல், அரசு, புங்கன் மாதிரியான மரங்களோட நாத்துகளை வாங்கிட்டு கொஞ்சம் பெருசா வளர்த்து கோவில்களுக்கு இலவசமா கொடுத்துடுவேன்.   
 
 
 
கற்றுக்கொடுத்த விவசாயிகள்!
 
என் வீட்டம்மா, வேலைக்குப் போற வீட்ல ரெண்டு திராட்சைக் கொடிகள் நட்டு வெச்சிருந்ததைப் பாத்துட்டு வந்து சொன்னாங்க. உடனே எனக்கும் திராட்சை நடணும்னு ஆர்வமாகிடுச்சு. அந்த வீட்டுல போய் பார்த்தேன். அப்பறம் திண்டுக்கல் மாவட்டத்துல, திராட்சை அதிகமா விளையுற சின்னாளபட்டி பக்கத்துல இருக்க ஊத்துப்பட்டியில போயி சில விவசாயிங்களோட தோட்டங்களைப் பாத்தேன். திராட்சை நடவு, பராமரிப்பு, கவாத்துனு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க. சாகுபடி முறைகளைத் தெரிஞ்சுகிட்டு, அவங்ககிட்டயே முப்பது குச்சி வாங்கிட்டு வந்து பிளாஸ்டிக் பையில வெச்சு வளர்த்து நடவு போட்டேன்” என்ற செல்வராஜ், இவற்றை வளர்த்தெடுக்க கொஞ்சம் மெனக்கெடத்தான் செய்திருக்கிறார்.
 
10 செடிகளில் படர்ந்த பந்தல்!
 
“வீட்டைச் சுத்தி ரெண்டடிதான் இடமிருக்கு. மாடியில திராட்சை பந்தல் போட்டுக்கலாம். ஆனா, மாடியில செடியை நட முடியாது. தொட்டிகள்ல வெச்சாலும் வேர் பெருசானா தொட்டி தாங்காது. என்ன பண்ணலாம்னு யோசிச்சு, வீட்டைச் சுத்தி செடியை நட்டு, கயிறு மூலமா மாடிக்கு கொடியை ஏத்தி, பந்தல்ல படர விட்டேன். பந்தல் அமைக்கறதுக்கு பழைய இரும்புக் குழாய்களை பயன்படுத்தியிருக்கேன். இதுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இப்ப கொத்துக்கொத்தா பழங்களைப் பாக்கும்போது, அந்த கஷ்டமெல்லாம் காணாமப் போயிடுச்சு. இதை நட்டு ரெண்டு வருஷமாச்சு. இப்ப என்கிட்ட 10 செடிகள் இருக்கு. அதுகளோட கொடிதான் மாடியில படர்ந்திருக்கு. வருஷத்துக்கு ஒரு தடவை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை வாங்கி தண்ணியில கரைச்சு, செடியோட வேர்கிட்ட ஊத்துவேன். காய் பிடிக்குற நேரத்துல ஒரு பூச்சி வரும். அதுக்கு மட்டும் கடையில பூச்சிக்கொல்லி வாங்கித் தெளிப்பேன். இதுபோக வேற எதையும் கொடுக்குறதில்ல.
 
300 கிலோ மகசூல்!
 
இதுவரைக்கும் மூணு தடவை பழம் வெட்டியிருக்கோம். 800 சதுர அடியில மாடி இருக்கு. அதுல 600 சதுர அடியில பந்தல் இருக்கு. முதல் தடவை 70 கிலோ கிடைச்சது. அடுத்த தடவை 130 கிலோ. இந்தத் தடவை இதுவரைக்கும் 150 கிலோவுக்கும் மேல எடுத்திட்டோம். இன்னும் 150 கிலோ கிடைக்கும்னு நினைக்குறேன். செலவுனு பாத்தா வருஷத்துக்கு 1,500 ரூபாய் ஆகும். இந்தப் பழங்களை விலைக்குக் கொடுக்கறதில்லை. வீட்டுத்தேவை போக, சொந்தக்காரங்களுக்கும், ஊர்ல இருக்க சின்னப் பசங்களுக்கும் இலவசமா கொடுத்திடுவேன்.
 
அதுபோக, அணில், காக்கா வந்து தின்னுட்டுப் போகும். அதை நான் தடுக்கறது இல்லை. அதுக தின்ன மீதிதான் நமக்கு” என்ற செல்வராஜ், “மொதல்ல, வெவசாயம் பாக்காம, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். இந்தத் தோட்டம் போட்ட பின்னாடி, அந்த நினைப்பு இல்லை. காலையில, சாயந்திரம்னு எப்ப ஓய்வு கிடைச்சாலும் மாடிக்கு வந்திடுவேன். இதையும் தோட்டமா நினைச்சுத்தான் பாத்துகிட்டு இருக்கேன்” என்று சொன்னபோது, அவருடைய மனதில் குடிகொண்டிருக்கும் மகிழ்ச்சியை நன்றாகவே உணர முடிந்தது! 
தொடர்புக்கு :
செல்வராஜ், செல்போன் : 96557-35497
......................................

மொட்டை மாடி சாகுபடி!
மாடியில் திராட்சை சாகுபடி குறித்து செல்வராஜ் சொன்ன விஷயங்கள் இங்கே... 
 
“வீட்டைச் சுற்றி 5 அடி இடைவெளியில் 4 அடி அகலம், 2 ஆழத்துக்கு  குழியெடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு சிமெண்ட் சாக்கு அளவு மணல், ஒரு சிமெண்ட் சாக்கு அளவு குப்பை எருவைக் கொட்டி, செடியை நடவு செய்து மேல் மண்ணைக் கொண்டு குழியை மூடவேண்டும். தொடர்ந்து செடியைக் காய விடாமல் தண்ணீர் கொடுத்து வந்தால், செடி தழைத்து வளரும். 2 இலைக்கு அடுத்து ஒரு சிம்பு வெடிக்கும். இதை நகத்தால் கிள்ளி எடுத்துவிட வேண்டும். செடி வளரும் பருவத்தில் சிம்பு கிள்ளி விடுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, கயிறு மூலமாகக் கொடியை மாடிக்கு ஏற்ற வேண்டும். கொடியின் முனையில் கயிற்றை நேரடியாக கட்டக் கூடாது. பிளாஸ்டிக் கவரை கிழித்து கயிறு போல் ஆக்கி, அதைக் கொடியின் முனையில் மென்மையாகக் கட்ட வேண்டும். மறுமுனையை கயிற்றுடன் இணைக்க வேண்டும்.
 
..................................


“பஞ்சகவ்யா இருக்க பூச்சி மருந்து எதற்கு?”
 
பூச்சிகளுக்கு இயற்கை தீர்வு குறித்து, திண்டுக்கல் மாவட்ட, திராட்சை சாகுபடி முன்னோடி இயற்கை விவசாயி ஜானகிராமனிடம் கேட்டோம்... “கவாத்து செய்து முடித்தவுடன், 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்தாலே போதும். எந்தப் பூச்சி, நோயும் தாக்குவதில்லை.
 
கடலைப்பிண்ணாக்கு விலை அதிகம் என்பதால், கடலை பிண்ணாக்கு 50%, புங்கன் பிண்ணாக்கு 20%, ஆமணக்கு பிண்ணாக்கு 20%, வேப்பம் பிண்ணாக்கு 10% கலந்து ஊற்றலாம். மாடித்தோட்டத்துக்கு இதைப் பின்பற்றினாலே போதும். இயற்கை முறையில் நன்றாக திராட்சையை விளைய வைக்கலாம்” என்றார்.
தொடர்புக்கு :
ஜானகிராமன், 91500-09998
 
 நன்றி ,விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக