**
*****************************
நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம். எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. மருத்துவர் இழுத்து மூச்சுவிடு என்று ஸ்டெதாஸ்கோப்பை முதுகில் வைக்கும் போதுதான் நமக்கு மூச்சுவிடுவது என்பது ஞாபகத்துக்கு வருகிறது. நான் சொல்வது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் மூச்சுவடுவது பற்றிய சிந்தனையே இல்லாமல் பிறந்து, வளர்ந்து, இறந்து போனவர்களும் உண்டு. இழுத்துவிடும் மூச்சு நின்னாப் போச்சு என்பார்கள். ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு எத்தனை மூச்சு என்று தீர்மானிக்கப் பட்டிருக்கும்.
எனவே சுவாசத்தை இழுத்து மெதுவாக விட்டுப் பழகுவதால் பிராணசக்தி அதிகம் கிடைக்கும், ஆயுள் நீளும். புத்தகத்தைப் படிக்கிறோம். அதை என்னவென்று சொல்வார்கள் ? புத்தகத்தை வாசிக்கிறான் என்பார்கள். ஒரு இசைக் கருவியை மீட்டுகிறோம். அதை என்னவென்று சொல்வார்கள் ? அந்த இசைக் கருவியை வாசிக்கிறான் என்பார்கள். அது ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? வாசிப்பது என்றால் ஒரே சிந்தனையோடு செய்வது. மூச்சு விடுவதை சுவாசி என்று ஏன் சொல்கிறார்கள் ? சுகமாக வாசி. அதாவது கவனத்தோடு மூச்சை வாசிப்பதுதான் சுவாசி, அதுதான் சுவாசம். அதிலிருந்து வந்ததுதான் வாசிப்பது என்ற வார்த்தை. பரம்பொருள் மேல் ஒரே கவனமாக இருப்பதைத்தான் வாசிவாசி என்று சொல்ல அது சிவா என்று ஆகி விட்டது. ''நமசிவய'' வில் சிவ என்றால் அது இருப்பு நிலை. ''நமசிவாய'' என்றால் அது சக்தி நிலை. வசி என்று வருகிற பொழுது அது பரம்பொருள் நிலை. வாசி என்றால்தான் அது இயக்க நிலை. அதாவது மூச்சுதான் சக்தி. மூச்சுதான் இயக்கம். எனவேதான் அதை சக்தி பஞ்சாட்சரம் என்பார்கள். ஒரு மனதோடு (சு)வாசிப்பது சக்தியைப் பெருக்கும்.
இந்த மூச்சின் பல சூட்சுமங்கள் நம் முன்னோர்களால் நமக்கு திறந்து காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் நமக்கு அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. நான் தியானம் கற்று பயிற்சி செய்யத் துவங்கிய காலத்தில், ஆர்வக் கோளாரு காரணமாக நடுஇரவில்கூட எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறேன் என்று சொல்லி கண்ணைமூடி உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பேன். இதையெல்லாம் பார்த்த என் அறையில் என்னுடன் தங்கும் ஒரு சக தொழிலாளி, நீ காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் தியானம் செய். ஆனால் மூச்சை மறக்காமல் எப்போதும் எந்த வேலையில் இருந்தாலும் கவனித்துக் கொண்டே இரு. நன்றாக சிரமமில்லாமல் இழுத்து மெதுவாக விட்டு பழகி வா. நிறைய நன்மைகளைப் பெறுவாய். தியானமும் கைகூடும் என்றார்.
வேறு யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். மேலும் மூச்சை கவனித்து பழக்கத்துக்கு கொண்டுவருவதற்கு சோம்பல் வேறு. ஆனால் சொன்னவர் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க ஸ்வாமிகள் என்ற சித்தரின் நேரடி சீடர். ஸ்வாமிகளின் ஸமாதிநிலைக்கு பிறகு ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி நான் வேலை பார்த்த இடத்தில் வந்து பணி செய்து கொண்டிருந்தார். எனவே நானும் அவர் சொன்னபடியே செய்து வந்தேன். ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் விரைவில் பழக்கத்துக்கு வந்து விட்டது. கொஞ்சநாள் கழிந்த பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் போது காதில் வேகமாக காற்றடிப்பது போன்ற பேரிரைச்சல் கேட்க ஆரம்பித்தது. முதலில் பயந்துவிட்டேன். உறக்கம் நீங்கி கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.
பிறகு பார்த்தால் கண்ணை மூடிய சிறிது நேரத்திலேயே கேட்கும். ஆனால் தொடர்ந்து கேட்காது . ஒரு நொடிதான். சிறிது நாட்களில் வேறொரு அவஸ்த்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது என் இதயம் துடிப்பது எனக்கு கேட்கும். கண்விழித்து ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு அமர்ந்தால் சொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்பது படிப்படியாக மறைந்து விடும். சில நேரங்களில் மூச்சை மெதுவாக விடுகிறேன் பேர்வழி என்று அப்படியே உறங்கிப் போக, மூச்சுவிட மறந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அலறி அடித்துக் கொண்டு எழுவதும் உண்டு. காலையில் கண்விழித்தால் எதிரில் தெரியும் சுவரில் டீவிப் பெட்டியில் கேபிள் கட்டாகி விட்டால் தெரியுமே அதுபோல கொச கொசவென்று புள்ளிப் புள்ளியாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது போல் தெரியும். சிறிது நேரம் கழித்து எழுந்து கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தால் சுவர் பளிச்சென்று வெள்ளையாகத் தெரியும். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது.
அந்த ஸ்வாமிகளின் சீடரே என்னிடம் ''ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?'' என்று கேட்டார். நான் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அவர் சபாஷ் அருமையான முன்னேற்றம் தெரிகிறது என்று உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார். நாம் சொல்வதைச் சொன்னாலும் எல்லோரும் அதை கடைபிடிக்க மாட்டார்கள். அப்படியே கடைபிடித்தாலும் உறுதியாக நிலைக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படி அல்ல என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார். நாம் பிரச்சனையைச் சொன்னால் இவர் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று நான் கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஆனால் அவர் அதை உணர்ந்து விட்டார். பளிச்சென்று உனது இந்தக் கோபமும் கூடப் படிப்படியாகக் குறைந்து விடும் என்றார். பிறகு சொல்ல ஆரம்பித்தார்.
நீ சுவாசத்தை உற்று கவனித்து அதை முறையாக கையாளுவதாலே உன் உள் உணர்வு விழிப்பு நிலையை அடைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இதெல்லாம். அந்த காதில் கேட்ட பேரிரைச்சல் வேறொன்றுமில்லை உன் இரத்த ஓட்டத்தின் சத்தமே, புலன் வழியே வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் மனம் உள் முகமாக திரும்பியதால் உள் உணர்வுகள் கூர்மையாகி வருவதால்தான் உன் இதயத் துடிப்பை உன்னால் கேட்க முடிந்தது. மூச்சு மெதுவாக விடுவது என்கிற பழக்கம் இன்னும் முழுமைக்கு வரவில்லை மேலும் அனிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்த சுவாசம் தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. எனவேதான் இரவில் நீ தூங்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவற்றில் நீ பார்த்தது அணுக்களின் அசைவையே .
ஆனால் இவையெல்லாம் 30% வெற்றியே இன்னும் நீ முக்கால் கிணறு தாண்டியாக வேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு நீளக் கதை எதற்கென்றால்? சுவாசத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே. இதில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு காட்டுவாசிப் பெண் முதுகில் குழந்தையை தொங்கவிட்டு, அதில் அந்தக் குழந்தை முன் புறமாக கவிழ்ந்து தாடையை மார்பின் மேல் பகுதியில் அழுத்தியவாறு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு குழந்தையை தூக்கிக் கொண்டே அலைய வேண்டும் ? என்று கேட்டால். பல காரணங்களைச் சொன்னாலும், ஒரு காரணம் பளிச்சென்று என்மனதைத் தொட்டது.
அதாவது முன் புறமாக கவிழ்ந்து தலையைத் தொங்கப் போட்டுத் தூங்கும் அந்தக் குழந்தையால் வாயால் சுவாசிக்கவே முடியாது. மூக்கால் மட்டுமே சுவாசிக்க முடியும். அதுவே பழக்கத்துக்கும் வந்துவிடும். அந்த குழந்தை வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது வாயால் சுவாசிக்காது என்றார்கள். சுவாசம் என்பது மூக்கால் மட்டுமே நடைபெற வேண்டும். ஏனென்றால் மூக்கில் மட்டுமே காற்றை வடிகட்டக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அப்படியே மீறி எதுவாவது உள்ளே போனால் தும்மல் வந்து அதை வெளியேற்றிவிடும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கினங்களும் வாய்திறந்து தூங்குவதில்லை. வாய்வழியாக சுவாசிப்பதுமில்லை.
வாய்வழியாக சுவாசிப்பதனால் அசுத்த காற்று நுரையீரலை அடைவதுடன், காற்று குளிர்ச்சியடைந்து உள்ளே போவதால், சுவாச உறுப்புகள் வீக்கம் அடைகின்றன. தூங்கும் போது வாய் வழியாக மூச்சு விடுபவன் விழித்தெழும் போது வாயிலும், தொண்டையிலும் ஒரு எரிச்சலை உணர்வான். ஆனால் நாசி வழியாக காற்று உள்ளே போகும் போது உஷ்ணமாகிப் போவதால் சளி பிடிக்காது. வாயின் மூலம் மூச்சு விடுவதால் பல தொற்று நோய்கள் விரைவாகப் பரவுகின்றன. எனவே குழந்தையிலிருந்தே இந்த வாய் வழி மூச்சுவிடுவதைத் தவர்க்க நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்படி பழக்கம் இருப்பின் அதை மாற்ற வேண்டும். அதைப்போலவே ஒரு நாயைக்கவனித்துப் பார்த்தால், அது இரவில் தூங்காவிடினும் படுக்கும் போது இடது பக்கம் கீழிருக்கும் படி படுக்கும். பகலில் வலது பக்கம் கீழிருக்கும்படி படுக்கும்.
ஏனென்றால் பகலில் உஷ்ணமான நேரத்தில் இடது கலை ஓடினால் உடலில் உஷ்ணத்தின் தாக்கம் இருக்காது. இரவில் சூரியகலை ஓடினால் உடலில் குளிர்ச்சியின் தாக்கம் இருக்காது. அதாவது உஷணம் சமன்படுத்தப்படும். இதை நாய்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நம்மை எல்லோரும் இடது பக்கமாக படுங்கள் அதுதான் இதயத்துக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். அப்படி படுப்பதினால் உடல் அதிக உஷ்ணமடைந்து நோய்களுக்கு ஏதுவாகும். பகலில் தூங்கக்கூடாது என்று சொன்னாலும் கேட்க மாட்டோம். சரி, அப்படியே தூங்கினாலும் சரி, ஓய்வாக படுத்திருந்தாலும் சரி வலது பக்கம் கீழிருக்கும் படிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவில் இடது பக்கம் கீழிருக்கும்படிக்கு படுத்துக் கொள்ளுங்கள். மேலும் சரியாக முழு மூச்சு வாங்கி விடுவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமாக அமையும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக