View status

View My Stats

புதன், 21 டிசம்பர், 2016

போலீஸ் இன்ஸ்பெக்டரை விவசாயியாக மாற்றிய நம்மாழ்வார்!

போலீஸ் இன்ஸ்பெக்டரை விவசாயியாக மாற்றிய நம்மாழ்வார்!

கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை அடுத்துள்ள வேட்டையார் பாளையம் கிராமத்தில் உள்ள தனது 7 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பணி ஒய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் மனோகரன். அதோடு நில்லாமல் அழிந்து வரும்  நிலையில் இருக்கும் நாட்டுரக காய்கறி விதைகளை தேடிப்பிடித்து சேகரித்து தனது வயலில் சாகுபடி செய்து அதன் மூலம்  விதை உற்பத்தி செய்து அதை தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளுக்கு கொடுத்து மீண்டும் நாட்டுரக காய்கறிகள் துளிர்க்க பேருதவி செய்து வரும் அவரை சந்தித்துப் பேசினோம்.

Advertisement

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

மாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்!

நிழல்வலை பந்தலுக்குள் பசுமை காட்டி நிற்கும் நாட்டுரக காய்கறி நாற்றங்கல் குழிதட்டுக்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் செய்து கொண்டிருந்த காவல் துறை ஆய்வாளர் மனோகரன் பேச ஆரம்பித்தார். "என்னோட பூர்வீக தோட்டம் இது. கிணத்துப்பாசன வசதி இருக்கு. 35 வருஷம் காவல்துறையில வேலைபார்த்து பணி ஓய்வு பெற்ற பின்னால முழு நேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல ஆள் வெச்சு விவசாயம் பார்த்துட்டு வந்தேன். லீவு கிடைக்கும் போதெல்லாம் வந்து போவேன். அப்போது ரசாயன விவசாயம்தான் பிரதானமா இருந்திச்சு. ஆனா, கடந்த 9 வருஷமா முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்து வர்றேன். அந்த மாற்றம் ஏற்பட காரணம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்தான். 

கரூர் மாவட்டம், கடம்பூர் பக்கத்துல வானகம்ங்குற பெயர்ல இயற்கை விவசாய மாதிரிப்பண்ணை பண்ணை அமைச்சு பயிற்சிகள் கொடுத்து வந்தார், நம்மாழ்வார். அலுவலக வேலையா அந்த ஊரு பக்கத்துல இருக்கும் காவல் நிலையத்துக்கு அடிக்கடி போய்வருவேன். அப்பத்தான் வானகத்தை பத்தி கேள்விப்பட்டு அங்க நம்மாழ்வாரை சந்திச்சேன். இயற்கை விவசாயம் குறித்து ஐயா சொன்ன கருத்துகள் என்னை ரொம்ப கவர்ந்தது. தொடர்ந்து அவர் கொடுத்த பயிற்சியில கலந்துகிட்டேன். முதல் கட்டமா அவர் கொடுத்த ஐந்து நாள் பயிற்சியில கலந்துகிட்டேன். அதை தொடர்ந்து, அந்தப்பக்கம் போகும் போதெல்லாம் வானகம் போய் அவரை சந்திச்சு ஆலோசனைகள் கேட்டு வருவேன். அதில் முக்கியமா அவர் சொன்ன விஷயம் இதுதான். கம்பு, ராகி, சோளம், வரகு, தினை, குதிரை வாலி, சாமை போன்ற நூற்றுக்கணக்கான நாட்டுரக சிறுதானியங்கள் நம்மிடம் இருந்தது. தக்காளி, கத்தரினு பல நாட்டுக்காய்கறிகளும் இருந்தது.

Advertisement

வறட்சியை தாங்கி மானாவரியா விளைஞ்ச அந்த தானிய பயிர்களுக்கு எந்த உரமும் விவசாயிங்க கொடுக்கல. ஆடு மாடுகள் மேயும் போது இயற்கையில கிடைக்கிற மாட்டு சாணம், ஆட்டுப் புழுக்கை இரண்டும் எருவா நின்னு அந்த மானாவாரி பயிர்களுக்கு உரம் கொடுத்தது. ஆடியில விதைச்சு புரட்டாசி, ஐப்பசி மழையில வளர்ந்து மார்கழிப்பனியில் கதிர் பிடிச்சு தை மாசம் அறுவடைக்கு வந்திடும் அந்த தானியங்களை விவசாயிகள் உணவுக்கு பயன்படுத்திக்கிட்டாங்க. வைக்கோல் உள்ளிட்ட பயிர் தட்டைகளை உழைக்குற மாட்டுக்கு உணவா கொடுத்தாங்க. அடுத்த போகம் ஆடி மாசம் விதைக்க தேவையான விதைகளை முந்தைய அறுவடையில இருந்து சேகரிச்சு வெச்சாங்க. இந்த சுழற்சி முறை விவசாயம் இருக்கும் வரை எந்த விவசாயும் கடன்காரனா இல்லை. ஆனா, பசுமைப்புரட்சிக்கு பிறகு வந்த நவீன விவசாயம் பழைய பாரம்பரிய விவசாயத்தை அழிச்சிடுச்சு. வீரிய விதைகள், உரங்கள்னு காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டாங்க. அதன் விளைவு இன்னிக்கு நாட்டு ரகம் அழிஞ்சுடுச்சு. ரசாயன பூச்சிக்கொல்லி தெளிச்ச உணவை சாப்பிட்டு கண்ட கண்ட நோய் எல்லாம் பெருகிடுச்சு. இதை மாத்த ஒரே வழி நாட்டுரக விதைகளை மீண்டும் கொண்டுவரணும்னு சொன்னார் நம்மாழ்வார், தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையில் இருந்து பணி ஓய்வும் கிடைத்தது. கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, அவரை உளிட்ட நாட்டுரக காய்கறி விதைகளை தேடிப்பிடித்து அதை வளர்த்து அந்த காய்கறிகள்ல இருந்து மறுபடியும் விதைகள் எடுத்து விதைகளாகவும், நாற்றுக்களாகவும் மற்ற விவசாயிகளுக்கு கொடுத்து நாட்டுரக காய்கறிகள் அழியாமல் காப்பற்றும் முயற்சியில் இறங்கி, இதுவரை 150 விவசாயிகளுக்கு நாட்டுரக காய்கறி விதைகளை கொடுத்திருக்கேன், இன்னும் கொடுத்து வர்றேன். அது போக நாட்டுரக நெல்லிக்கனி கொடுக்கும் பத்து நெல்லி மரங்கள் என்னோட பண்ணையில இருக்கு, நாட்டு மா மரம், நாட்டு கொய்யா, நாட்டு முருங்கை. என்று நாட்டு ரக பழ மரங்களும் என்னோட பண்ணையில் இருக்கு" என்றார்.

 இதனை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் மனோகரனின் இயற்கை விவசாய பண்ணையை இதுவரை 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வந்து பார்வையிட்டு நாட்டுரக விதைகளை பற்றி தெரிந்து சென்றுள்ளார்கள். மேலும் பேசிய மனோகரன்  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு வந்து போகிறார்கள். குற்றவாளிகளைத்தேடி கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகிய நான் ஓய்வு பெற்றாலும், நாட்டு ரக விதைகளை தேடிக்கண்டு பிடிக்கும் இயற்கை விவசாயி ஆகிய மனோகரனுக்கு ஓய்வு இல்லை. நாட்டு ரக விதைகளை தேடும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்" என்கிறார்.

- ஜி.பழனிச்சாமி.
Thanks vikata

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக