View status

View My Stats

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பஞ்சகவ்யா - 9


புழுதி சாகுபடிக்குக் கைகொடுத்த பஞ்சகவ்யா!
பஞ்சகவ்யா உருவான விதம், ஆரம்ப காலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள், பரவலாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து கடந்த இதழ்களில் பார்த்தோம். அந்த வரிசையில் இந்த இதழில், தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், கரூர் மாவட்டம், நடையனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி எம்.சேதுபதி.
எனக்கு மொத்தம் 10 ஏக்கர் நஞ்சை நெலம் இருக்கு. கரும்பு, நெல், மரவள்ளினு போகம் தவறாமல் வெள்ளாமை செய்றேன். காவிரிப்பாசனம்தான் பிரதானம். கிணறும் இருக்கு.
1998-ம் வருஷம் வரைக்கும் நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். இயற்கை விவசாயம் செய்ய ஆசை இருந்தாலும், அதுக்கான வழி கிடைக்கல. ஒருசமயம், தமிழ் வாத்தியாரான புலவர் கருப்பண்ணன் என்னைப் பார்க்க வந்தார். அவர், என் வயலுக்குப் பக்கத்துல விவசாயமும் செஞ்சுகிட்டிருந்தார். கொடுமுடி டாக்டர் நடராஜனுக்கு அவர் சம்பந்தி. அவர் எதையுமே மாத்தியோசிக்கக்கூடிய மனுஷன். அவரு வந்தப்போ என்னோட வயல்ல பசுந்தாள் உரம் போட்டு சேத்துழவு அடிச்சிகிட்டிருந்தேன். வரப்புல நின்னு பேசிகிட்டிருந்தவர், அப்படியே பேச்சுவாக்குல... டாக்டர் குறித்தும், பஞ்சகவ்யா குறித்தும் சொன்னார். ‘பஞ்சகவ்யா எல்லா பயிர்களுக்கும் உகந்த இயற்கை இடுபொருளா இருக்குதுனும் சொன்னார்.
இயற்கை விவசாயத்துக்கு வழி கிடைச்சுடுச்சுனு சந்தோஷபட்டு மறுநாளே டாக்டர் நடராஜனைப் பார்க்கக் கிளம்பிட்டேன். ‘சம்பந்தி சொல்லிவிட்டாரா, சந்தோஷம்என்றவர், பஞ்சகவ்யா கரைசல் குறித்து விவரமாகச் சொன்னார். அப்படியே, ‘முன்னோடி விவசாயி செல்லமுத்துவைப் போய் பார்த்துட்டுப் போங்கனு சொன்னார்.
செல்லமுத்து தோட்டத்துக்குப் போனதும், அவர் பஞ்சகவ்யா தயாரிக்கிறது குறித்தும் மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கிறது குறித்தும் தெளிவா சொல்லிக் கொடுத்தார். அவர் மூலமாதான் நம்மாழ்வார் அய்யாவைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். அந்த சமயம் குளித்தலை பக்கத்துல ஒரு கிராமத்துக்கு நம்மாழ்வார் அய்யா வர்றார்னு தெரிஞ்சுகிட்டு அந்தக் கூட்டத்துக்குப் போனேன்.
நம்மாழ்வார் இயற்கை விவசாயம் சம்பந்தமா நிறைய விஷயங்களைப் பேசினார். மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், அரப்புமோர்க் கரைசல் தயாரிக்கிற விதங்கள், இருமடிப்பாத்தி அமைக்கிறது குறித்தெல்லாம் விவரமா சொன்னவர், அப்படியே வயல்வெளிக்குக் கூட்டிட்டுப் போய் பூச்சிவிரட்டிக்கான இலைதழைகளை எல்லாம் அடையாளம் காட்டினார். எல்லாத்தையுமே உடனடியா என்னோட வயல்ல நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சேன். தொடர்ந்து நம்மாழ்வார் அய்யா கலந்துக்கிற கூட்டங்களுக்கெல்லாம் போக ஆரம்பிச்சேன்.
கரும்பு, நெல், வாழைனு எல்லா பயிர்களுக்கும் மத்த இடுபொருட்களோட சேர்த்து பஞ்சகவ்யாவையும் பிரதானமா பயன்படுத்த ஆரம்பிச்சேன். டாக்டர் நடராஜன், என் தோட்டத்துக்கு வந்தும் சில ஆலோசனைகளைச் சொன்னார். என்னோட தீவிர இயற்கை விவசாய ஆர்வத்தைக் கேள்விப்பட்டு திடீர்னு ஒருநாள் நம்மாழ்வார் அய்யா என் வயலுக்கு வந்தார். எனக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு. பாசனத்தண்ணீர் பத்தாக்குறையா இருந்த காலம் அது. வந்தவரு என்னோட பத்து ஏக்கர் நெலத்தையும், சுத்திப் பார்த்தாரு. நான் தயாரிச்சு வெச்சிருக்கிற பஞ்சகவ்யா கரைசல், அதை பயிர்களுக்குக் கொடுக்கிற விதத்தையெல்லாம் கேட்டார்.
பிறகு களத்துமேட்டுல போட்டிருந்த வைக்கோல்போர் பக்கம் வந்து நின்னு, கொஞ்சமா வைக்கோலைப் புடுங்கி தொழுவத்துல கட்டியிருந்த மாடுகளுக்கு எடுத்துப் போட்டார். படுத்துக் கிடந்த மாடுங்கசடார்னு எந்திரிச்சு ஆர்வமா வைக்கோலை சாப்பிட ஆரம்பிச்சுடுச்சு.
உடனே, ‘அடிகாட்டுல, நடுமாட்டுல, நுனிவீட்டுலங்கிற பழமொழியைச் சொல்லி விளக்கம் கொடுத்தார். அந்த வைக்கோல் எப்போ அறுவடை செஞ்சது, என்ன ரக நெல்லுனெல்லாம் பாந்தமா விசாரிச்சார்.
அடுத்து எவ்வளவு பரப்புல நெல் சாகுபடி செய்யப் போறீங்கனு கேட்டப்போ, ‘தண்ணீர்ப் பற்றாக்குறை. ஆத்துலயும் தண்ணி இல்லை. கிணத்துலயும் தண்ணி இல்லை. அதனால இந்த போகம் நெல் சாகுபடி செய்யலைனு நான் சொல்லவும் பலமா சிரிச்ச நம்மாழ்வார், ‘குறைஞ்ச தண்ணீர்லயே நல்லபடியா நெல் சாகுபடி செய்ய முடியும். புழுதி நெல் சாகுபடி இருக்கிறப்போ என்ன கவலைனு சொல்லிட்டு புழுதி நெல் சாகுபடி குறித்து சொல்லித் தந்தார்.
அவரு சொன்னபடியே ஒரு ஏக்கர்ல புழுதிநெல் சாகுபடி செஞ்சேன். ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் என்னோட வயலுக்கு வந்தார், நம்மாழ்வார் அய்யா. ‘பக்கத்து வயல்ல எல்லாம் நெல் பயிரு கரும்பச்சை நெறத்துலதளதளனு இருக்கு. என்னோட வயலில் மட்டும் கிளிப்பச்சை நெறத்துல இருக்கு. உரம்போட்டாதான் அந்த நெறத்தைக் கொண்டுவரமுடியும்னு கவலையா சொன்னேன். அதை மறுத்த அய்யா, ‘உரத்தைப்போட்டு கரும்பச்சை நெறத்தைக் கொண்டு வர நெனைக்காதீங்க. அது ரொம்ப தப்பு. உண்மைய தெரிஞ்சிக்குங்க. நெல் பயிரின் இயல்பான நெறம் கிளிப்பச்சைதான். உங்க வயல்ல அது சரியாதான் இருக்கு. தொடர்ந்து பஞ்சகவ்யா மட்டும் தெளியுங்க அதுபோதும். நல்ல மகசூல் கிடைக்கும்னு நம்பிக்கையா சொன்னார். அவர் சொன்னபடி பஞ்சகவ்யாவைத் தெளிச்சு வந்ததுல... ஒரு ஏக்கர் நிலத்துல 3 ஆயிரத்து 250 கிலோ மகசூல் கிடைச்சதுஎன்ற சேதுபதி நிறைவாக,
புழுதி நெல் சாகுபடியில் நான் எடுத்த மகசூலை நம்மாழ்வார் போகிற இடங்களில் எல்லாம் பெருமையா சொல்ல ஆரம்பிச்சிட்டார். புழுதி நெல்லுனு யாராச்சும் பேச்சை எடுத்தாலே... ‘நடையனூர் சேதுபதிய போய் பாருங்கய்யானு சொல்லிடுவார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த முறைதான் இது. மசானாபு ஃபுகாகோ, நாரயணரெட்டி... மாதிரியான முன்னோடிங்க கையாண்ட முறைதான்னாலும், நம்மாழ்வார் அய்யா வழியாதான் அந்த புழுதி நெல் சாகுபடி விவரம் எங்க பகுதிக்கு தெரிய வந்துச்சு. அப்புறம், தண்ணீர் பத்தாக்குறைய பத்தியெல்லாம் கவலைப்படாம போகம் தவறாம புழுதிநெல் விதைக்கிறதை வழக்கமாக்கிட்டோம். வறட்சியிலும் நெல் விவசாயம் செய்ய முடியும்னு எங்களுக்குக் கத்துக்கொடுத்த நம்மாழ்வார் அய்யாவை நினைக்காத நாளில்லைஎன்றார், நெகிழ்ச்சியுடன்.
-மணம் பரப்பும்
தொடர்புக்கு,
எம்.சேதுபதி,
செல்போன்: 94867-06757.
புழுதிநெல் சாகுபடி!
புழுதிநெல் சாகுபடி குறித்து சேதுபதி சொன்ன விஷயங்கள் இங்கே...
ஒரு ஏக்கர் புழுதிநெல் சாகுபடிக்கு ஒரு கிலோ விதை தேவை. விதையை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். சாகுபடி வயலை நன்றாக உழுது மண்ணைபொலபொலவென புழுதியாக்க வேண்டும். பிறகு, 10 அடி அகலம் 20 அடி நீளம் கொண்ட பாத்திகளை அமைக்கவேண்டும். 200 கிலோ தொழுவுரத்துடன் தலா 250 கிராம் அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து பாத்திகளுக்குள் தூவ வேண்டும். பிறகு நீளமான கோணிக்கயிறை (சணல்) பாத்தியின் இருமுனைகளிலும் இழுத்துக்கட்டி, முக்கால் அடி இடைவெளியில் அடையாளம் செய்ய வேண்டும். ஊற வைத்துள்ள விதைநெல்லை பாத்தியில் முக்கால் அடி இடைவெளியில் ஊன்றி தண்ணீர் விட வேண்டும்.
3-ம் நாள் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரம் இரு முறை பாசனம் செய்தால் போதும். 20 மற்றும் 50-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்... 30 கிலோ மண்புழு உரத்துடன் தலா 250 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து பாத்திகளுக்குள் பரவலாக இறைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துவரவேண்டும். விதைப்பில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்கிற அளவில் பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து தெளித்து வர வேண்டும். மாதம் இருமுறை 3 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.
நெய்க்குப் பதில் விளக்கெண்ணெய்!
பஞ்சகவ்யாவில் சில மாற்றங்கள் செய்து பயன்படுத்தினால், சிறப்பான பலன் கிடைக்கிறது என்று கூறும் சேதுபதி, அது குறித்துச் சொன்னார்.
தேவையானவை:
பசுஞ்சாணம் (பச்சை சாணம்) - 5 கிலோ
பசுமாட்டுச் சிறுநீர் - 3 லிட்டர்
காய்ச்சி ஆற வைத்த பசும்பால் - 2 லிட்டர்
பசுந்தயிர் - 2 லிட்டர்
விளக்கெண்ணெய் - 500 கிராம்
இளநீர் - 3 லிட்டர்
கனிந்த வாழைப்பழம் - 12
சோயா பிண்ணாக்கு - ஒரு கிலோ
நாட்டுச் சர்க்கரை - ஒரு கிலோ
தென்னங்கள் அல்லது கம்பஞ்சோற்று நீர் - 2 லிட்டர்
சோயா பிண்ணாக்கை தண்ணீரில் ஊற வைத்து, கரைசலாக்கிக் கொள்ளவேண்டும். நாட்டுச் சர்க்கரையையும் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். 5 கிலோ பசுமாட்டுச் சாணத்துடன் 00 கிராம் விளக்கெண்ணெயைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கி பீப்பாய்க்குள்
3
நாட்கள் மூடி வைக்க வேண்டும். பிறகு, மற்ற பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இறுதியாக சோயா பிண்ணாக்குக் கரைசல், நாட்டுச் சர்க்கரைக் கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து 10 நாட்கள் தினமும் இருவேளை கரைசலைக் கலக்கி வர வேண்டும். 11-ம் நாள், கள் அல்லது கம்பஞ்சோற்று நீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுத்த 7 நாட்கள் தொடர்ந்து தினமும் இருவேளை கலக்கி வந்தால், பஞ்சகவ்யா தயார். விளக்கெண்ணெய், பஞ்சகவ்யாவை ஆவியாகாமல் தடுக்கிறது. அதனால், பயிருக்கு முழுபலனும் கிடைக்கும்.
சின்னவெங்காயத்தை இருப்பு வைக்க வேண்டாம்
பல்கலைக்கழகம் அறிவுரை!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஊரக மையம், கடந்த 13 ஆண்டு கால சின்னவெங்காய சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து, சந்தை நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மத்திய தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட சின்னவெங்காயம், தென்னிந்திய சமையலில் முக்கிய இடம்பெறும் விளைபொருள். தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல்,தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சின்னவெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது, சந்தையின் போக்குக்கேற்ப விற்பனை செய்யும் நோக்கில்... சின்னவெங்காய வர்த்தகர்கள், அதிகளவு வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளனர். தவிர, வெங்காய விளைச்சலும் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. தற்போது, ஏற்றுமதி வர்த்தகமும் சற்று குறைந்துள்ளது. அதனால், ஜூன் மாதத்தில் சின்னவெங்காயத்தின் பண்ணை விலை ஒரு கிலோ 21 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், வருங்காலங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என அறிவுறுத்தப்படுகிறதுஎன்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக