View status

View My Stats

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

34 சென்ட்...

'க்கர் கணக்கில் நிலம் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். குறிப்பாக, சில ஏக்கர்களாவது இருந்தால்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க முடியும்’ என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. இதை அடித்து நொறுக்கும் வகையில்... வெறும் 34 சென்ட் இடத்தில் ஆடு, கோழி, மீன், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மூலிகைகள் என தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அடக்கிவிட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஃபெலிக்ஸ்.

 பசுமை போர்த்திய இவருடைய பண்ணையில் நுழைந்தபோது... ஆடுகளின் 'மேமே’ சத்தம், கோழி மற்றும் சேவல்களின் கூவல் என ரம்மியமாக கலந்து வந்து கொண்டிருந்தது. நாம் அதில் லயித்திருக்க, நம் தோள் தட்டி கவனத்தைத் திருப்பினார், ஃபெலிக்ஸ்.

''13 வருசமா மகாராஷ்டிர மாநிலம், புனே நகரத்துல இருக்கிற சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பாத்தேன். கை நிறைய சம்பளம் கிடைச்சுது. ஆனா, வேலைச்சுமை அதிகம். மெஷின் மாதிரி போயிட்டு இருந்தது வாழ்க்கை. தேவைக்கு அதிகமா பணம் இருந்தாலும் மனசு வெறுமையாத்தான் இருந்துச்சு. அதுக்காகத்தான் இயற்கைச் சூழலைத் தேடிட்டு இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் மூலமா 'சட்டையில்லா சாமியப்பன்’ ஐயாவோட அறிமுகம் கிடைச்சுது. அவர்தான் இயற்கை விவசாய முறைகளைக் கத்துக் கொடுத்தார்.

ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு கடையத்துக்கே வந்து, வீட்டை ஒட்டியிருந்த 34 சென்ட் இடத்துல சின்னதா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. இங்க பெர்மா கல்ச்சர் (நிரந்தர வேளாண்மை) முறையில வேளாண்மை பண்றோம். உழைப்பையும் முதலீட்டையும் குறைச்சுக்கிட்டு மகசூலையும், வருமானத்தையும் எடுக்கிறதுதான் இந்த முறையோட குறிக்கோள். இப்ப எங்க வீட்டுத் தேவையில 80% இந்த இடத்துக்குள்ளயே கிடைச்சுடுது. இதையெல்லாம்விட, மனசுக்கு 100% நிறைவு கிடைச்சிருக்கு'' என சிலாகித்த ஃபெலிக்ஸ், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தகவலுக்குள் புகுந்தார்.

தண்ணீர் மேலாண்மைக்கு தாமரைக்குளம்!

'அரை வட்டமா ஒரு தாமரைக்குளம் அமைச்சு, அதுல முக்கோண வடிவத்துல கால் அடி உயரத்தில் மூணு தடுப்புகளை வெச்சு... மழைத்தண்ணி இந்தக் குளத்துக்குள்ள வர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கேன். குளம் நிறைஞ்சதும் வாய்க்கால் வழியா மீன் குளத்துக்கு தண்ணி போயிடும். வெளியில இருந்து வர்ற தண்ணி, சுத்த மானதாக இருக்காதுங்கிறதாலதான் இந்தத் தாமரைக்குளத்துல தடுப்புகள் இருக்கு. வாய்க்கால்ல கல்வாழை, மஞ்சள், இஞ்சி நட்டிருக்கேன். இது மூணும் தண்ணியை சுத்தப்படுத்தி அனுப்பும். இதில் கல்வாழைக் குத்தான் பெரும் பங்கு. இதேபோல வீட்டுக்குப் பின்பகுதியிலும் குளியலறை, சமையலறை கழிவுநீர் சேர்ற இடத்திலயும் கல்வாழை, மூலிகைகள், கீரைகளை நட்டிருக்கேன்.

பசுந்தீவனத்தில் கலப்புத்தீவனம்!

ஆடுகளுக்காக 10 அடி நீளம், 15 அடி அகலத்தில் தரையில் இருந்து 10 அடி உயரத் தில் பரண் அமைச்சிருக்கேன். பரணுக்குக் கீழே வந்து விழும் ஆடுகளோட கழிவுகள்ல உருவாகுற புழு, பூச்சிகள் கோழிகளுக்கு உணவாகிடுது. மீதமுள்ள சிறுநீர் கலந்த புழுக்கைகளை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். இப்ப என்கிட்ட 7 கன்னி, 4 நாடு, 2 ஜமுனாபாரினு மொத்தம் 13 ஆடுகள் இருக்கு. ஆடுகளுக்கு தீவனத்துக்காக 15 சென்ட்ல அகத்தி, சித்தகத்தி, சூபாபுல்,

கோ-4, கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால், முயல்மசால், குதிரைமசால், மல்பெரி, சங்குப்புஷ்பம், ஆமணக்கு, முருங்கை, கிளரிசீடியா, பப்பாளி, பாதாம், கப்பை, சீனிக்கிழங்குக் கொடி, கினியாபுல், தீவனத்தட்டை, கொழுக்கட்டைப்புல், எலுமிச்சைப்புல், தீவனக்கம்பு, தீவனச்சோளம், கொள்ளு... இப்படி மொத்தம் 30 வகையான தீவனங்களைக் கலந்து நடவு செய்திருக்கேன். கலப்புத் தீவனமாகக் கொடுத்தால்தான் ஆடுகளோட வளர்ச்சி நல்லா இருக்கும். காலையில 11 மணிக்கும், மாலையில 4 மணிக்கும் 20 கிலோ பசுந்தீவனத்தை அறுத்து வெச்சுடுவோம். காலை, மதியம், மாலையில் தண்ணீரை மாத்தணும். காலையில் வைத்த தீவனத்தில் மிச்சம் இருந்தா, எருக்குழியில போட்டுடுவேன். இதுல உருவாகுற புழு, பூச்சிகள் கோழிகளுக்குத் தீவனமாயிடும்' என்று எளிய நுட்பங்களை அடுக்கிய ஃபெலிக்ஸ், அடுத்ததாக கோழிகள் மற்றும் மீன் பற்றிச் சொன்னார்.    

வனராணி!

'சண்டைச் சேவல் 15, நாட்டுக்கோழி 5, வனராணிக் கோழி 2, குஞ்சுகள் 20 னு மொத்தம் 42 உருப்படிகள் இருக்கு. 6 அடி நீளம், 8 அடி அகலம் 5 அடி உயரத்துல கோழிக் கொட்டகை அமைச்சிருக்கேன். கொட்டகைக்குள்ள நீளமான கம்புகளை தனித்தனியாகக் கட்டி வெச்சிருக்கேன். கோழிகள் இந்தக் கம்புகள் மேல ஏறி உட்கார்ந்துக்கும். கோதுமை, கம்பு, மக்காச்சோளம் மூணையும் கலந்து தட்டுகள்ல வெச்சுடுவேன். மத்தபடி கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளக்குறேன்.

இலைதழைகளை உண்டு வளருது, மீன்!

மீன் வளக்குறதுக்காக 15 அடி நீளம், 18 அடி அகலம், 4 அடி ஆழத்துல ஹாலோபிளாக்ல தொட்டி கட்டியிருக்கேன். அடியில சிமெண்ட் போடாம களிமண்ணைக் கொட்டியிருக்கேன். களிமண்ணைப் போட்டா நுண்ணுயிர்ப் பெருக்கம் இருக்கும். ரோகு, கட்லா, மிர்கால், புல் கெண்டை, சாதா கெண்டைனு கலந்து 200 மீன்குஞ்சுகள் விட்டிருக்கேன். புல், முருங்கை, அகத்தி இலைகளை குளத்துல தூவினால் மீன்கள் சாப்பிட்டுக்குது. தவிடு, பிண்ணாக்கு கலவையெல்லாம் கொடுக்குறதில்லை. தவிடு கொடுத்தா வளர்ச்சி அதிகமாயிருக்கும். ஆனா, மீன் ருசியா இருக்காது. தவிடு கொடுக்கும்போது 6 மாசத்துல கிடைக்கிற வளர்ச்சி, இலைகளைக் கொடுக்கும்போது ஒரு வருஷம் ஆகும். அதேசமயம், இலைதழைகளைக் கொடுக்குறப்பதான் மீன் சத்தாவும் ருசியாவும் இருக்கும்.  

மூலிகைகள், கீரைகள், பழங்கள்!

துளசி, தூதுவளை, சிறியாநங்கை, இன்சுலின், ஆவாரை, சித்தரத்தை, பால்பெருக்கி, அம்மான் பச்சரிசி, தும்பை, துத்தி, கண்டங்கத்தரி, யூகலிப்டஸ், ஆடாதொடை, கிரந்திநாயகம், முசுமுசுக்கை, இஞ்சி, வசம்பு, கிராம்பு, திப்பிலி, மிளகு, வெற்றிலைனு அறுபது வகையான மூலிகைகளும்; புதினா, கறிவேப்பிலை, வல்லாரை, அரைக்கீரை, மணத்தக்காளி, பசலி, பொன்னாங்கண்ணி, தண்டுக்கீரை, முளைகீரை, புளியாரைனு 30 வகையான கீரைகளும்; கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பூசணி, சுரை, புடல், பீர்க்கன், அவரை, கொத்தவரை, தடியங்காய்னு பலவகை காய்கறிகளும்; சேனை, மரவள்ளி, பால்சேம்பு, சர்க்கரைவள்ளி, சிறுகிழங்கு, வெற்றிலை வள்ளிக்கிழங்குனு கிழங்கு வகைகளும்; கொய்யா, அன்னாசி, மங்குஸ்தான், பப்பாளி, மா, பலா, நெல்லி, மாதுளை, அத்தி, வாழைனு பழ வகைகளையும் மேட்டுப்பாத்தி முறையில சாகுபடி செய்திருக்கேன் என்ற ஃபெலிக்ஸ், நிறைவாக வருமானம் பற்றிய தகவல்களுக்குள் புகுந்தார்.

விற்பனை வாய்ப்பு!

''இந்தப் பண்ணையில இருந்து ஆடு, கோழி களை மட்டும்தான் விற்பனை செய்றேன். மற்றது என் வீட்டுத்தேவைக்கு மட்டும்தான். விற்பனைக்காக யாரையும் தேடிப் போற தில்லை. நேரடியாக வர்றவங்களுக்கு மட்டும் தான் விற்பனை செய்றேன். 10 ஆடுகள் இருந்தா, வருசத்துக்கு 30 குட்டிகள் கிடைக்கும். குட்டிகளை வளர்த்து சராசரியாக ஒரு குட்டி 6 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். கோழிகளைப் பொறுத்தவரை சண்டைச்சேவலை 1,500 ரூபாய்க்கும், நாட்டுக்கோழியை 350 ரூபாய்க்கும்,வனராணியை 300 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். வருஷத்துக்கு சராசரியா 25 கோழிகள் விற்பனை செய்றேன். அது மூலமா 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தத்தில் கோழி, ஆடுகள் மூலமா வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கிது.  வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறி களும் கிடைச்சுடுது. ஒரு வாரத்துக்கு காய் களுக்கு 300 ரூபாய்னு வெச்சுக்கிட்டா வருசத் துக்கு 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வரும். அது அப்படியே மிச்சம். இதே மாதிரி, பழங்கள், மீன்கள், கீரைகள், மூலிகைகள் மூலமா, 30 ஆயிரம் ரூபாய் மிச்சம். தேவையான அத்தனைக்கும் 100 சதவிகிதம் மத்தவங் களை நம்பிட்டு இருந்த நான், இப்போ, 80% தற்சார்பு அடைஞ்சுட்டேன். அடுத்து, நாய்கள், லவ் பேர்ட்ஸ், முயல், புறா, காளான், தேனீ வளர்ப்புனு இறங்கப்போறேன்' என்று எதிர்கால திட்டத்தையும் சேர்த்தே சொன்னார், ஃபெலிக்ஸ் பெருத்த எதிர்பார்ப்போடு!

ஆடு, நாய், கோழிக்கழிவில் எரிவாயு!

ஆட்டுக்கொட்டகை, கோழிக்கூண்டு, நாய்க்கூண்டு இவற்றிலிருந்து சேகரிக்கப்படும் சாணக்கழிவுகளைக் கொண்டு தரைக்குக் கீழ்நிலையான தொட்டி அமைத்து பயோகேஸ் தயாரிக்கிறார் ஃபெலிக்ஸ். சிறிய வட்டவடிவ தொட்டி வழியாக 1:1 என்ற விகிதத்தில் 400 கிலோ மாட்டுச் சாணத்தை, 400 லிட்டர் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். இக்கரைசல் 2 கியூபிக் மீட்டர் கொள்ளளவுள்ள தொட்டியில் போய்ச் சேரும். இந்தக் கரைசலில் அனோரோபிக் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், 10 நாட்களுக்குள் நொதித்து பயோகேஸ் உருவாக ஆரம்பிக்கும். கேஸ் எடுக்கப்பட்ட பின் மீதமுள்ள சாணக்கழிவுகள் வெளியே உள்ள கழிவுத்தொட்டிக்கு வந்து சேரும்.இந்தச் சாணக் கழிவை வடிகரைசலுக்கு பயன்படுத்தலாம்.

பயோகேஸ் உற்பத்தி தொடக்கத்துக்கு மட்டும்தான் மாட்டுச்சாணம் தேவை. பிறகு, ஆடு, நாய், கோழிக்கழிவுகளை இதே விகிதத்தில் போடலாம். இதனுடன் பப்பாளி, பனம்பழம், புடலை மற்றும் அவரை ஆகிய காய்கறிக்கழிவுகளையும் போடலாம்.

மிதக்கும் கலன் முறையிலும் இப்படி பயோகேஸ் தயாரிக்கலாம். ஆனால், மிதக்கும் கலன் குறிப்பிட்ட காலத்துக்குள் துருபிடித்துப் பழுதடைந்து விடுவதால், நிரந்தரத் தொட்டி முறைதான் சிறந்தது என்பது ஃபெலிக்ஸின் அனுபவம்.

வடிகரைசல்!

இயற்கை இடுபொருட்களாக  ஃபெலிக்ஸ், 'வடிகரைசல்’ என்ற பெயரில் ஒரு கரைசலைத் தயார் செய்து பயன்படுத்துகிறார்.

ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் ஆட்டுப்புழுக்கை, மாட்டுச்சாணம், எருக்கு, நொச்சி, களைச்செடிகளை வெட்டிப் போட வேண்டும். பிறகு, ஆலமரம், அரசமரத் தடியில் கிடக்கும் மண்ணை எடுத்து, இரண்டு நாட்கள் நீரில் ஊற்றி வடிகட்டி, கரைசலை மட்டும் டிரம்மில் சேர்க்க வேண்டும் (ஆல், அரச மரங்களில் அதிக பறவைகள் வருவதால், அவற்றின் எச்சம் மரத்தடியில் அதிகம் படிந்து காய்ந்திருக்கும். இந்த மண்ணை வடிகட்டும்போது, எச்சம் கரைந்து கரைசலாகக் கிடைக்கும்). இதற்கு அளவு ஏதும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். இதனுடன் கெட்டுப்போன பால், தயிர் எதுவேண்டுமானாலும் ஊற்றலாம்.

டிரம் முழுவதும் கலவையால் நிறைந்ததும், 30 நாளில் நொதித்து வடிகரைசல் உருவாகிவிடும். டிரம்மின் அடியில் பைப் அமைத்து இதை சேகரித்துக் கொள்ளலாம். இந்தக் கரைசலை 1:15 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து உரமாகவும், 1:8 என்ற விகிதத்தில் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்தலாம்.

http://www.vikatan.com/pasumaivikatan/2014-dec-25/special-categories/101478.artதொடர்புக்கு,

ஃபெலிக்ஸ், செல்போன்: 7402007489

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக