வியாழன், 9 ஜூன், 2016

பஞ்சகவ்யா - 8


பலே பஞ்சகவ்யா... மண்வளம் கூடுது... மகசூல் கூடுது..!

ஆரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து தகவல்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தன் வாழ்வில் பஞ்சகவ்யா ஏற்படுத்திய மாற்றங்களை இங்கே விவரிக்கிறார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓ.கே.ஆர். ராதாகிருஷ்ணன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதுதான் இங்கே கவனிக்கதக்க விஷயம்.

‘‘எனக்கு சொந்த ஊரே இந்த வேலாயுதம்பாளையம்தான். எம்.எஸ்சி. அக்ரி படிச்சு முடிச்ச கையோட புகளூர் பேப்பர் மில்லுல வேலையில சேர்ந்தேன். பலவருஷம் அங்க வேலை பார்த்துட்டு, ஒரு கட்டத்துல வெளியில் வந்து சொந்தமா வியாபாரம் செஞ்சுக்கிட்டு... கூடவே எனக்கு சொந்தமான 30 ஏக்கர் நெலத்துல விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

ஒரு காலத்துல, லிட்டர் கணக்குல பூச்சிக்கொல்லி விஷத்தையும், மூட்டை மூட்டையா ரசாயன உரத்தையும் நெலத்துல கொட்டினேன். நான் படிச்ச படிப்பு அதைத்தான் எனக்கு கத்துக்கொடுத்தது. இப்படி செய்றது சரியா தப்பானு கூட யோசிக்கல. ஆனா, 2000-ம் வருஷம் டிசம்பர் மாசம், குளித்தலை பக்கத்துல இருக்கிற லாலாபேட்டையில் விவசாயக் கருத்தரங்கு ஒண்ணு நடக்குது. அதுல கலந்துக்கப் போறோம். நீங்களும் வாங்க’’ அப்படினு என்னுடைய நண்பர்கள் வற்புறுத்தி கூட்டிட்டுப் போனாங்க. ‘நாம எம்.எஸ்சி அக்ரி படிச்ச பட்டதாரி நமக்கு தெரியாத விஷயத்தையா இந்தக் கருத்தரங்கில சொல்லிடப்போறாங்க’னு ஒரு மெதப்பிலதான் போய் உட்கார்ந்தேன். சிறப்புப் பேச்சாளரா நம்மாழ்வார் அய்யா பேசத் தொடங்கினார். நான் எந்த ஈடுபாடும் காட்டாம ஒப்புக்கு சப்பையா உட்கார்ந்திருந்தேன்.
‘அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல...’ என்கிற விடுகதை மூலமா, ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவுங்கிற இயற்கை விவசாய சூத்திரத்தை ஆதாரங்களோட சுவையா பேசினார். பசுமைப் புரட்சிக்கு முன்பு, பசுமைப் புரட்சிக்கு பிறகு விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் பட்டியல் போட்டார். ‘இந்த மண்ணையும் மக்களையும் காப்பாத்த பாரம்பர்ய விவசாயத்தால்தான் முடியும். பசுமைப் புரட்சி விவசாயத்தை அழிச்சிடும். விவசாயப் பட்டதாரியான நான் அரசு வேலையை உதறித் தள்ளிட்டு, முழுநேர இயற்கை விவசாய ஊழியனா இதை பரப்பிக்கிட்டு வர்றேன்’னு அவர் சொன்னது என்னை உலுக்கிடுச்சு. நிமிர்ந்து உட்கார்ந்து அவரது பேச்சை ஆர்வமா கேட்டு குறிப்பெடுக்க ஆரம்பிச்சிட்டேன். குறிப்பா பயிருக்கு பஞ்சகவ்யா செய்ற நன்மைகள் பத்தியும், அதை தயாரிக்கும் விதம் பத்தியும் செய்முறையுடன் அவர் விளக்கினது ஒரு புதுவழியைக் காட்டுச்சு. நானும் பஞ்சகவ்யா வழியில் போக முடிவு செஞ்சேன்.

கருத்தரங்கு முடிஞ்சதும் நம்மாழ்வாரை சந்திச்சு பேசினேன். நான் விவசாயப் பட்டதாரினு தெரிஞ்சு சந்தோஷப்பட்டார். உங்களைப் போன்றவங்க இயற்கை விவசாயத்துக்கு மாறினால், அது இன்னும் அதிக வீச்சுடன் பயணிக்கும்னு சொன்னவர், டாக்டர் நடராஜனை சந்திக்கச் சொன்னார். நடராஜனைப் போய் சந்திச்சு, பஞ்சகவ்யா தயாரிக்கக் கத்துக்கிட்டேன். தொடர்ந்து தீவிரமா இயற்கை விவசாயத்துல இறங்கினேன். இப்ப 15 நாட்டு மாடுகள வெச்சு பராமரிச்சுக்கிட்டு வர்றேன். இதுதான் பஞ்சகவ்யா தயாரிக்க ரொம்ப உதவியா இருக்குதுங்க.

என்னோட 30 ஏக்கர் நிலத்துல, 12 ஏக்கர்ல தென்னை காய்ப்புல இருக்கு. மீதி இடங்கள்ல கரும்பு, வாழை, பப்பாளி, மரவள்ளினு மாத்தி மாத்தி பயிர் செய்றேன். எல்லா பயிர்களுக்கும் பஞ்சகவ்யா கரைசலைத் தவறாம கொடுக்கிறேன். மொத்த நிலமும் இப்ப நஞ்சில்லா நிலமா மாறிடுச்சு. மண்ணில் விளையாடும் மண்புழுக்கள்தான் அதுக்கு சாட்சி’’ என்ற ராதாகிருஷ்ணன் தனது தோட்டத்தை ஒட்டி நெடுஞ்சாலையோரமாக நம்மாழ்வார் பெயரில் இயற்கை அங்காடி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

‘‘கரூர்-கொடுமுடி நெடுஞ்சாலை ஓரத்தில்தான் என்னோட நிலம் இருக்கு, இந்த வழியாக போகும் வழிப்போக்கர்கள் சாலையோர தென்னை மர நிழலில் வாகனங்களை நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் இளைப்பாறி போவாங்க. அவங்களுக்காக இளநீர்க் கடையைப் போட்டேன். ஒரு தடவை என்னோட தோட்டத்துக்கு வந்த நம்மாழ்வார், இளநீர் வியாபாரம் நடப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டார். வழிப்போக்கர்களுக்கு இளநீர் மட்டும் கொடுத்தால் போதாது, உங்க தோட்டத்துல விளையுற மத்த பொருட்களையும் கொடுக்கணும்னு சொன்னார்.

அது நல்ல யோசனையா மனசில பட்டது. உடனே கடையை விரிவுபடுத்தி, இளநீர், கரும்புச் சாறு, வாழைப்பழம், பப்பாளி, நாட்டுச்சர்க்கரை, மோர், தயிர், வெண்ணெய்னு நான் விளைவிச்ச பொருட்களை விற்பனை செய்றேன்... நல்லா போயிட்டிருக்கு’’ என்றவர் நிறைவாக, இந்த மாற்றத்துக்கான முதல் புள்ளி பஞ்சகவ்யாதான்’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு,
ஓ.கே.ஆர். ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 94433-64040.

சீமைப்பசுவில் தயாரித்தால், வீரியம் குறையும்!

பஞ்சகவ்யா கரைசலை பஞ்சபூதங்களுடன் ஒப்பிட்டு அதை ஒட்டிய சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் நடராஜன். ‘‘நாம் வாழும் இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், வாயு ஆகிய இந்த ஐந்து பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்துதான் இந்த உலகத்தில் வாழும் உயிரும் பயிரும் இயங்கி வருகிறது. இந்த ஐந்து பூதங்களின் தன்மை பஞ்சகவ்யாவுக்குள் இருக்கிறது.

(நிலம்-சாணம், நீர்-சிறுநீர், நெருப்பு-பால், வாயு-தயிர், நெய்-ஆகாயம். மனித உடல் இயக்கம் சமநிலையில் இருக்க இந்த ஐந்து பூதங்களின் பங்களிப்பு எப்படியோ... அப்படித்தான் மண்ணில் விளையும் பயிர்களின் வளர் சமநிலையை பஞ்சகவ்யாவில் உள்ள இந்த ஐந்து பொருட்கள் கட்டுப்படுத்துகிறது. அதேபோல் பஞ்சகவ்யா கரைசலில் கூடுதலாக சேர்க்கும் நாட்டுச் சர்க்கரை நுண்ணுயிர்ப் பெருக்கத்தையும், வாழைப்பழம் நொதிக்கும் தன்மையை அதிகரித்து, நுண்ணுயிரிகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. நொதிப்பு ஆற்றலை அதிகரித்து நுண்ணுயிர்ச் சத்துக்களைப் பெருக்க ‘கள்’ பயன்படுகிறது.

பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டுப்பசுவில் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்களே மிகச்சிறந்தது.நாட்டுப்பசு இல்லாமல் சீமைப்பசு மூலம் பெறப்படும் பொருட்களைக்கொண்டு பஞ்சகவ்யா தயாரிக்கலாம். அதில் அவ்வளவு வீரியம் இருக்காது. 20 சதவிகிதம் குறைவாகவே இருக்கும்’’

தொடர்புக்கு, செல்போன்: 94433-58379.

பஞ்சகவ்யாவும்... பயிர்களும்!

‘‘கடந்த 15 வருஷத்துக்கு மேலாக என்னோட தோட்டத்துப் பயிர்களுக்கு பஞ்சகவ்யா கொடுத்துட்டு வர்றேன். இது பெரிய மாற்றத்தை மண்ணுக்குள் ஏற்படுத்தி இருக்கு. ரசாயனத்தை அள்ளிக்கொட்டியதில் நஞ்சாக மாறிப்போயிருந்த மண் கெட்டியாக மாறினதோடு, உவர்ப்பு நிலமாகவும் ஆயிடுச்சு. ஒரு போகத்தில் போடும் உரத்தின் அளவை அடுத்தபோகத்தில் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. வெள்ளாமையும் சிறப்பாக இல்லை. உற்பத்திச்செலவு மூணு மடங்கு ஆனதுதான் மிச்சம். கரும்பு, தேங்காய் இதுகளோட பிழிதிறன் குறைஞ்சுகிட்டே வந்துச்சு. ஆனால், இயற்கை விவசாயத்துக்கு மாறின சிலவருடங்களில் என்னோட மண்ணின் தன்மை மாற்றம் அடைஞ்சு வர்றதை கண்கூடா தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப என்னோட மண்ணுல மண்புழுக்கள் நிறைய இருக்கு‘‘ என்கிற ராதாகிருஷ்ணன் பஞ்சகவ்யா கொடுப்பதால் பயிர்களுக்கு என்ன நன்மை என்பதைப் பட்டியலிடுகிறார்.

கரும்பு!

தோகை அடர்த்தியாகவும், நீளமாகவும் செழிப்புடனும் இருப்பதால், தண்டு ஊக்கமுடன் ஒரே சீராக வளர்ந்து நிற்கும், எடை அதிகரிப்பதால் மகசூல் கூடும், பிழிதிறன் கூடுதலாக கிடைப்பதால் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை முதல்தர கட்டுமானத்துடன் இருக்கும்.

தென்னை!

ஈரியோஃபைட், வாடல் நோய் உள்ளிட்ட நோய்கள் நீங்கி, காய்கள் சீரான வளர்ச்சி அடையும். இளநீர் சுவையுடன் இருக்கும். முற்றிய தேங்காய்களின் கொப்பரைப் பருப்பு அடர்த்தியுடன் காணப்படும், கொப்பரை அதிக பிழிதிறனுடன் இருக்கும் என்பதால், கூடுதல் எண்ணெய் கிடைப்பதுடன், தரமான பிண்ணாக்கும் கிடைக்கும்.

மரவள்ளி!

மண் மெதுமெதுப்புடன் மாறி விடுவதால், கிளை விடும் வேர்கள் எளிதில் மண்ணில் ஊடுருவி அதிக கிழங்குகளைக் கொடுக்கும். தரமான அதிக எடையுள்ள கிழங்குகள் என்பதால் மகசூல் அதிகரிக்கும்.

பப்பாளி!

பெரியதும் ஒரே சீரானதுமான பழங்கள், நல்ல நிறத்துடன், அதிக சுவையுடன் இருக்கும்.

நெல்!

பதர் இல்லாமல் திடமான அரிசி கிடைக்கும். கூடுதலான வைக்கோல் பெறலாம். ருசியான உணவு சமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக