வியாழன், 9 ஜூன், 2016

பஞ்சகவ்யா - 7




பண்ணைக் கோழிகளுக்கு பஞ்சகவ்யா... முட்டைகள் அதிகரித்த ஆச்சர்யம்!



*சராசரி முட்டை அளவு அதிகம்.

*தீவனச்செலவு குறைவு.

*இறப்பு விகிதம் குறைவு.

*நஞ்சில்லா முட்டைகள் கிடைக்கின்றன.

பஞ்சகவ்யா உருவானவிதம், ஆரம்ப காலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள், பரவலாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து, கடந்த இதழ்களில் பார்த்தோம். அந்த வகையில் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் கோழிகளுக்கும் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி ஆய்வுசெய்து வெற்றிகண்டிருக்கிறார், கரூர் மாவட்டம், நடையனூர் கிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ மதியழகன். 

மரங்கள் அடர்ந்த சோலைவனம் போல் காட்சியளிக்கிறது, மதியழகனின் பண்ணை. பண்ணையின் நடுவே நீண்டு கிடக்கின்றன, கோழிகளுக்கான கொட்டகைகள். ‘கொர்க் கொர்க்’ என்று ஓயாமல் கேட்கும் கோழிகளின் சப்தத்துக்கு இடையே மதியழகனிடம் பேசினோம்.

“96-ம் வருஷத்தில் இருந்து முட்டைக்கோழிப் பண்ணைத் தொழிலைச் செய்துகிட்டிருக்கேன். 5 ஆயிரம் கோழியில் ஆரம்பிச்சது... இப்போ, 50 ஆயிரம் கோழிகள் வரை வெச்சிருக்கேன். முட்டைகளை பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ற கம்பெனிக்குத்தான் முட்டைகளை அனுப்பிக்கிட்டிருந்தேன். நல்லா போயிட்டிருந்திச்சு தொழில். என்னோட முட்டைகள கொள்முதல் செய்து வந்த கம்பெனியின் சேர்மன் ஒருநாள் ரேடியோவுல பேசினார். ‘நம்ம நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுற உணவுப் பொருட்களில் ரசாயன படிமங்கள் கலந்திருப்பதாக இறக்குமதியாளர்கள் சொல்றாங்க. நாம் அனுப்புற முட்டை பவுடர்ல கூட ரசாயனத்தின் தன்மை இருப்பதா தகவல் வந்திருக்கு. எனவே, ரசாயனம் இல்லாம, இயற்கை விவசாயம் மூலம் விளைஞ்ச தானியங்களைக் கொண்டு கோழித்தீவனங்களைப் பயன் படுத்தவேணும்’னு அந்த ரேடியோ செய்தியில சொன்னார். அதுலேருந்து இயற்கை விவசாயத்து மேல எனக்கொரு ஈர்ப்பு ஏற்பட்டுடுச்சு.

அந்த சமயத்துல வேலாயுதம்பாளையத்துல நடந்த இயற்கை விவசாயக் கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அங்க ‘நஞ்சில்லா விவசாயம்’ பத்தி நிறைய செய்திகளை விவரிச்சாங்க. அங்கதான், முதன்முதலா, நம்மாழ்வாரையும், டாக்டர்.நடராஜனையும் சந்திச்சேன். நஞ்சில்லா விவசாயம் பத்தி ரொம்ப அழகா சொன்னார், நம்மாழ்வார். கூட்டம் முடிஞ்சதும், அவரைச்சந்திச்சு என் பிரச்னையைச் சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சவர், ‘எனக்கு கோழிகள் குறித்து அவ்வளவா தெரியாது. நீங்க டாக்டர். நடராஜன்கிட்ட பேசுங்க. அவர் ஏற்கெனவே கால்நடைகளுக்கு பஞ்சகவ்யாவைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கார்’னு சொன்னார். அதைத் தொடர்ந்து, டாக்டரே எங்க பண்ணைக்கு வந்து பஞ்சகவ்யா தயாரிக்கச் சொல்லிக் கொடுத்தார். 

கோழிகளுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்துப் பார்க்கிற பரிசோதனையை ஆரம்பிச்சோம். நோய் தாக்கி இறக்கிற தருவாயில இருந்த 9 குஞ்சுகளை எடுத்து, ஒவ்வொரு குஞ்சுக்கும் 5 மில்லி பஞ்சகவ்யாவை வாயில ஊத்தினோம். 5 நாள் தொடர்ந்து கொடுத்ததுல அந்தக் குஞ்சுகள் நல்லா தேறிடுச்சு. இந்தத் தகவலை நம்மாழ்வார்கிட்ட சொன்னப்போ, ரொம்ப சந்தோஷப்பட்டார். 

திடீர்னு ஒரு நாள் பண்ணைக்கு வந்தார், நம்மாழ்வார். அவர் வந்திருந்த சமயத்துல உயிர் பிழைச்சு தேறி வந்த அந்த 9 குஞ்சுகளும் முட்டை போட ஆரம்பிச்சிருந்துச்சு. அதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார். அப்படியே சில யோசனைகளையும் சொன்னார். ‘இந்த 9 குஞ்சுகளைக் காப்பாத்துனதை வெச்சு ஒரு முடிவுக்கு வந்துடக்கூடாது. தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணணும். குஞ்சுப் பருவம், முட்டையிடும் பருவத்துல இருக்கிற 500 கோழிகளைத் தனியா பிரிச்சு, தினமும் பஞ்சகவ்யா கொடுத்து பரிசோதனை செஞ்சு மாற்றங்களைக் குறிச்சு வைங்க’னு நம்மாழ்வார் சொன்னார். அது மாதிரி பரிசோதனை செய்ததுல, குஞ்சுப் பருவத்துல ஒரு குஞ்சுக்கு தினமும் ஒரு மில்லியும், முட்டையிடும்் பருவத்துல ஒரு கோழிக்கு தினமும் 3 மில்லியும் கொடுத்தாலே போதுமானதுனு ஒரு முடிவுக்கு வந்தோம். அப்படிக் கொடுத்துட்டு வந்ததுல குஞ்சுகளோட இறப்பு விகிதம் குறைஞ்சது. அதோட தரமான முட்டைகளும் கிடைக்க ஆரம்பிச்சது. 

வழக்கமா கோழிகள் 20 வாரத்துல பருவத்துக்கு வந்து 80-ம் வாரம் வரை முட்டை போடும். சராசரியா 310 முட்டைகள் கிடைச்சாலும், அதுல முழுமையடையாத சின்ன முட்டைகள் எல்லாம் போக, 260 முட்டைகள்தான் தேறும். ஆனா, பஞ்சகவ்யா கொடுக்க ஆரம்பிச்ச பிறகு, சராசரி அளவான 310 முட்டைகளுமே சரியான அளவுல தரமா இருந்தது. 

அடுத்து கம்பெனி தீவனங்களைத் தவிர்த்துட்டு... ரசாயனம் பயன்படுத்தாம விளைய வெச்ச தானியங்களை வாங்கி, நானே அடர்தீவனத்தைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். 1,000 கிலோ தீவனத்துக்கு 30 லிட்டர் பஞ்சகவ்யானு கலந்து காய வெச்சு இதைக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதைச் சாப்பிட ஆரம்பிச்ச கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமா இருந்தது. அதனால மருத்துவச் செலவு குறைஞ்சது. இறப்பு விகிதமும் குறைஞ்சது. குறைவான தீவனச்செலவுல நஞ்சில்லாத முட்டைகள் கிடைக்க ஆரம்பிச்சது” என்ற மதியழகன் நிறைவாக, 

“நஞ்சில்லா முட்டைங்கிறது பஞ்சகவ்யாவாலதான் எனக்கு சாத்தியமாச்சு. நஞ்சில்லா முட்டைகள் உற்பத்தியாக ஆரம்பிச்ச பிறகு, எனக்கு முட்டை விற்பனையில பிரச்னை இல்லை. இருந்தாலும் நஞ்சில்லா முட்டை, நம்ம மக்களுக்கும் கிடைக்கணுங்கிற நோக்கத்துல ‘இயற்கை முட்டை’ங்கிற பெயர்ல நானே இனி விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுக்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார். வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம். 

முட்டைக் கோழிக்கு பஞ்சகவ்யா !

“முட்டைக் கோழிகளுக்குக் கொடுக்கும் பஞ்சகவ்யாவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்” என்ற மதியழகன், தயாரிப்பு முறையைச் சொன்னார்.

“5 கிலோ சாணம், 3 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர், 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர் ஆகியவற்றோடு, 2 லிட்டர் நீராகாரம் (பழைய சோற்றுத் தண்ணீர்) சேர்த்து தயாரிக்க வேண்டும். ஒரு கோழிக்கு 3 மில்லி என்ற அளவில் கொடுக்க வேண்டும்” என்றார், மதியழகன்.

பயிர்களுக்கும், கோழிப்பண்ணைக்கும்!...

பஞ்சகவ்யா தயாரிப்பு பற்றி டாக்டர்.நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே...

‘‘பயிர்களுக்குக் கொடுக்கும்போது 19 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிறது. அதாவது 5 கிலோ பசுமாட்டுச் சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து மூன்றுநாட்கள் கழித்து பால், தயிர், பசுமாட்டுச் சிறுநீர், இளநீர், கனிந்த வாழைப்பழம், 3 லிட்டர் சர்க்கரைத் தண்ணீர் ஆகியவற்றை ஊற்றிக் கலக்கிவிட்டு, அடுத்தநாள் 2 லிட்டர் தென்னங்கள்ளை பீப்பாயினுள் உள்ள கலவையில் ஊற்றி, நாளொன்றுக்கு இருவேளை 7 நாட்கள் கலக்கி விட, பஞ்சகவ்யா தயார். பயிர்களுக்கு என்றால், பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா கலவையைக் கலந்து தெளிக்கலாம். இதை கறிக்கோழிகளுக்கு தலா 3 மில்லி கொடுத்துவர கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். குறிப்பாக கறிக்கோழிகளை அதிகம் தாக்கும் கழிச்சல் நோய் தடுக்கப்படும்.’’

(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒருவாரம் கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.)

கறிக்கோழிகளுக்கு எடை கூடும்!

கறிக்கோழிகளுக்கு பஞ்சகவ்யா கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறார், சென்னை எத்திராஜ் கல்லூரியின், உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை ஜெ.ப்ரியா. அவரிடம் பேசியபோது, “கறிக்கோழிகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் பஞ்சகவ்யா சாப்பிடும் கோழிகளுக்கு எடை அதிகரிப்பது உறுதியாகி இருக்கிறது. ஒரு கிலோ கோழித்தீவனத்தில் 10 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து கொடுத்து வந்தால் 40-ம் நாளில் எடை போடும்போது... சராசரி எடையை விட 250 கிராம் முதல் 400 கிராம் வரை எடை அதிகரிக்கிறது. அதோடு, குஞ்சுகளின் இறப்பு விகிதமும் குறைகிறது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக