View status

View My Stats

வியாழன், 23 ஜூலை, 2015

‘வறண்ட நிலம் வாழ வைக்குது மரம்

வர்ணிக்கிறார் வனராஜா
‘‘முப்பத்தைந்து ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும் அலைந்து, திரிந்து தமிழகத்துக்கு ஏற்ற லாபம் தரும் மர வகைகளை தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறபோகிறேன். அதற்குள் என் மனதுக்குள்ளும், வனத்துறை தோட்டத்திலும் வளர்ந்திருக்கும் அந்த அற்புதமான மரங்களைப் பற்றி மக்களுக்குச் சொல்லவேண்டும். கொஞ்சம் வரமுடியுமா?’’ என்று நமக்கு அழைப்பு விடுத்தார் தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் டாக்டர். குமாரவேலு ஐ.எஃப்.எஸ் தொடர்புக்கு (அலைபேசி94449-09737).
கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில், 65-வது கிலோ மீட்டரில், விரிந்து கிடக்கிறது விளாம்பூண்டி வன ஆராய்ச்சி மையம். நிலம் வறண்டு கிடந்தாலும் பசுமைக்கட்டி வரவேற்றன மரங்கள். அங்கே நம்மிடம் பேச ஆரம்பித்தார் குமாரவேலு.
‘‘இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக வறட்சி நிலவும் மாநிலம் தமிழ் நாடுதான். எனவே, கிடைக்கின்ற மழைநீரை வைத்து லாபகரமாக விவசாயம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தப் பயிர் செய்தாலும் லாபம் இல்லை. பூச்சி, நோய் மருந்து என்று பிரச்னைகள் தான் வேகமாக வளர்கின்றன. சக்திக்கு மீறிய நஷ்டத்தைச் சந்திப்பவர்கள், 'விவசாயமே வேண்டாம்' என்று நகரத்துக்கு வேலை தேடிப்போகிறார்கள். நகரத்தில் தஞ்சம் புகுந்து விட்ட முன்னாள் விவசாயக்குடும்பம், தற்போது பல்லாயிரக்கணக்கில் சம்பாதிக்கிறது. ஒரு காலத்தில் கடனாளியாக இருந்த சக விவசாயி, பட்டணத்தில் பிக்கல், புடுங்கல், இல்லாமல் வாழ்வதைப் பார்த்து, அந்த ஊரில் உள்ள மற்ற விவசாயிகளும் பட்டணத் துக்குப் போகிறார்கள். நாளுக்குநாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது. விவசாயிகள் உழைப்பதற்குத் தயாராக இருந்தபோதும், உரிய விலை இல்லை என்பதால்தான் வெறுத்து ஒதுங்குகிறார்கள். அவர்களை மீண்டும் செல்வாக்குடன் விவசாயம் செய்து வாழவைக்கும் சக்தி, மரம் ஒன்றே ஒன்றுக்குத்தான் உண்டு! இரண்டரை ஏக்கர் வைத்துள்ள விவசாயி, ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறத்தக்க மரப்பயிர்களின் கன்றுகளை வனத்துறையில் வைத்திருக்கிறோம். அவற்றை இலவசமாகவே விவசாயிகளுக்குத் தருகிறோம்.
வறட்சியான இந்தப் பகுதியை தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்காகவே மரங்களை வளர்த்து வருகிறோம். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் செஞ்சந்தனம், பீயன்மரம் (தீக்குச்சி), மலை வேம்பு, குங்குலியம் போன்றவை வளர்ந்து கிடக்கின்றன. அனல்காற்று வீசுமளவுக்கு வறக்காடு இது. இப்படிப்பட்ட நிலத்தில் மரங்களை வளர்த்துக் காட்டினால், இதைப் பார்த்தாவது மானாவாரி நிலத்தில் தைரியமாக மரங்களை நட விவசாயிகள் முன்வருவார்கள் என்றுதான் இந்த இடத்தை தேர்வு செய்தோம். நாங்கள் திட்டமிட்டபடியே இவை வளர்ந்து நிற்கின்றன'' என்று பெருமை பொங்கச் சொன்ன குமாரவேலு, ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்திருக்கும் வரட்டுப்பள்ளம் கிராமத்தில் உள்ள வன ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
''மர வகைகளில் அற்புதமானது மூங்கில். உலகில் வேகமாக வளரக்கூடிய தாவரம் ஒன்று உண்டு என்றால் அது மூங்கில்தான். இங்கே முதலில் மூங்கிலைத்தான் பார்க்கப்போகிறோம். முள் உள்ள மூங்கிலை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் படாதபாடு படுகிறார்கள். இதற்கு மாற்றாக, 1990-ம் ஆண்டு முள் இல்லாத மூங்கில் ரகத்தை வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரவழைத்தோம். அங்கு சென்று தமிழகத்துக்கு ஏற்ற 5 வகைகளை மட்டும் தேர்வு செய்தோம். பரிசோதனை முறையில் பயிரிட்டுப் பார்த்தோம். நல்ல லாபம் கிடைத்தது. இதையடுத்து, மூள் இல்லாத மூங்கிலை பயிரிடச் சொல்லி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்துக்கும் மேல் விவசாயிகள் வருமானம் எடுத்து வருகின்றனர்'' என்றபடியே ஆராய்ச்சி மையத்துக்குள் அழைத்துச் சென்றார்.
திரும்பிய பக்கமெல்லாம் சிறிதும், பெரிதுமாக மரங்கள் வளர்ந்து நிற்க, தன்னைச்சுற்றிலும் பஞ்சு மெத்தை போட்டதுபோல காய்ந்த இலைகள் கிடக்க, ஜம்மென்று நின்றுகொண்டிருந்தன மூங்கில்கள்.
‘‘நடவு செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன. 5 அடிக்கு 5 இடைவெளியில் இந்த மூங்கில்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. 160 குத்துகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 40 மூங்கில்களுக்கு குறை வில்லாமல் இருக்கின்றன. நான்காம் ஆண்டு முதல் ஒவ்வொரு குத்தில் இருந்தும் 10 மூங்கில்கள் வீதம் அறுவடை செய்யலாம். ஒரு மூங்கில் 10 முதல் 20 கிலோ இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 16 டன் மூங்கில்கள் கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி டன் ரூ.3ஆயிரத்துக்கு விலை போகிறது. 48 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் கிடைத்தால் கூட அது நல்ல வருமானம்தான். ஏனென்றால்... இதற்கான முதலீடு மிகவும் குறைவு. மழை நீர் மூலம்தான் இது வளர்கிறது. உரம், பூச்சி மருந்து செலவில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் பாதுகாத்து வந்தாலே போதும். நீர் பாசனம், நல்ல பராமரிப்பு என்று பார்த்துப் பார்த்துச் செய்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.
பாம்புசா டுல்டா, பாம்புசா பால்குவா, பாம்புசா நிடன்ஸ், பாம்புசா வல்காரீஸ் போன்ற மூங்கில் ரகங்களை பயிரிடச் சொல்கிறோம். பாம்புசா பாலிம் மரப்பா, பாம்புசா ஒலிவேரி போன்ற ரகங்கள் மிக வேகமாக வளர்ந்து லாபம் கொடுக் கின்றன’’ என்று சொன்னவர், அப்படியே அருகிலி ருந்த சவுக்கு தோட்டத்துக்குள் நுழைந்தார்.
‘‘கடுமையான வறட்சியின்போது கூட இந்த சவுக்கு மரம் சாகவில்லை. இதற்குக் காரணம் இது சாதாரண சவுக்கு அல்ல. இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த ஜூங்கினியானா ரகம்.
இந்தோனேஷியாவின் கப்பாளங்-குப்பாங், திமுர் போன்ற இடங்களில் மிக வேகமாக வளரக்கூடிய சவுக்கு மரவகைகள் இருப்பதைக் கேள்விப்பட்டோம். ஆஸ்திரேலியாவில் உள்ள கேன்பராவில் இருக்கும் அரசு விதைப் பண்ணை களில் இதற்கான செடிகள் கிடைக்கும் என்று தெரிந்து, 1997-ம் ஆண்டு அவற்றை வரவழைத்தோம். முதலில் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவற்றைப் பயிரிட்டோம். கூடவே நாட்டு சவுக்கு மரங்களையும் நட்டோம். மறந்தும் கூட எதற்கும் தண்ணீர் ஊற்றக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தேன். வறட்சியைத் தாங்காமல் நாட்டு சவுக்குக் கன்றுகள் ஓராண்டுக்குள் இறந்து விட்டன. ஆனால், ஜுங்கினியானா சவுக்கு மட்டும் ஜம்மென்று வளர்ந்து நின்றது.
வறட்சி, உப்பு நீர், களர் நிலம் என்று எதிலும் வளரும் தன்மை கொண்ட சவுக்கு, இன்றைக்கு மிகப்பெரிய மரியாதை பெற்று நிற்கிறது. சவுக்கு மரம் பயிரிடும் விவசாயிகளை, காகித ஆலைகள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. இரண்டு அடிக்கு இரண்டு அடி இடைவெளியில் ஏக்கருக்கு 1,000 மரங்கள் நடலாம். 4-ம் ஆண்டு அறுவடை செய்யலாம். 60 டன் கிடைக்கும். இன்றைய நிலவரப்படி டன் 3 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதன்படிப் பார்த்தால் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதைப் பற்றி வீட்டில் சொல்லிக் கொண்டி ருந்தபோது, 'அந்த ஆளு டுபாக்கூர் விடறான்னு சொல்லிடப் போறங்க' என்று என் மனைவி கிண்டல் செய்தார். இப்போது வாயடைத்து நிற்கிறார்'' என்று நிறுத்திய குமாரவேலு,
''அடுத்தபடியாக, ஒரு கதாநாயகியை அறிமுகப் படுத்தப்போகிறேன். அதுவும் சாதாரண கதாநாயகி அல்ல... லட்சம் லட்சமாக குவிக்கும் மாபெரும் கதாநாயகி...'' என்றபடியே நடந்தார்.
''யார் அது?'' என்று வியப்போடு பின்தொடர்ந்தோம்.
அடுத்த இதழில்...
தைலமர எச்சரிக்கை
கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள குளவியால் தற்சமயம் தைல மரத்தில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள அத்தனை மரங்களும் அழிந்துவிட்டன. இப்போது இந்தியாவில் காணப்படுகிறது. பெரும்பாலும் விதையில்லாமல் உருவாக்கப்படும் தைல மரங்களில் தான் இதன் தாக்குதல் அதிகமாக உள்ளது. விதையின் மூலம் உருவாக்கப்பட்ட கன்றுகளை இந்த நோய் தாக்குவதில்லை. எனவே தைலமரம் பயிரிடும் போது கவனம் தேவை.
ஸ்ட்ராவில் சவுக்கு
குளிர்பானம் குடிக்க பயன்படும் ஸ்ட்ராவை பயன்படுத்தி சவுக்கு கன்றுகள் உற்பத்தி செய்யும் முறையை டாக்டர். குமாரவேலு கண்டறிந்துள்ளார். ஒரு ஸ்டாரவை இரண்டாக வெட்டி அதில் மண் நிரப்பப்படுகிறது. இதில் மெல்லிய சவுக்கு கன்றுகள் நடப்படுகின்றன. ஒரு பிளாஸ்டிக் டிரேவில் மணல் கொட்டப்பட்டு அதில் நீர் விடப்படுகிறது. மண்ணில் உள்ள நீர் மேலேற்றும் விசையின் மூலம் ஸ்டிராவில் உள்ள சவுக்கு கன்றுகளுக்கு கிடைக்கின்றது. இந்த எளிய முறையில் இந்தோனேஷிய கன்று உற்பத்தி செய்ய 25 பைசாதான் செலவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக