வியக்க வைக்கும் விழுப்புரம் ஜீரோ பட்ஜெட் பண்ணை!மகசூல் காசி. வேம்பையன் படங்கள்: தே. சிலம்பரசன்
சளைக்காமல் பணி ஆற்றிய விவசாயத் தொழிலாளர்கள் பலரும், வெவ்வேறு வேலைகளின் பக்கம் ஒதுங்கி வருவதால், விவசாயம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு 100 நாள் வேலைத்திட்டம் வேறு, தொழிலாளர்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அதளபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது, நிலத்தடி நீர். இவ்வளவையும் தாண்டி விவசாயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது 'மரம் வளர்ப்பு’தான்! அந்த நம்பிக்கையில், பழ மரங்கள், தடி மரங்கள் என வளர்த்து, கலக்கலாக வருமானம் பார்த்து வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சுந்தரம்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கும் கஞ்சனூர் கிராமத்திலிருந்து வலதுபக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, தென்பேர் கிராமம். இங்கேதான் இருக்கிறது, சுந்தரத்தின் சோலைக் காடு. மலைச்சாரல் மழை போல தூறிக் கொண்டிருந்த ஒரு காலை நேரத்தில் அந்தச் சோலைக்குள் நுழைந்தோம். குடை பிடித்துக்கொண்டே மரங்களைச் சுற்றிக் காட்டினார், சுந்தரம்.
''சொந்த ஊர் பாண்டிசேரி பக்கத்துல இருக்குற தவளக்குப்பம். அப்பா பாண்டிச்சேரி முதல்வருக்கு பி.ஏ.வா இருந்தார். சின்னக் குழந்தையில இருந்தே விவசாயம் பிடிக்கும். காலேஜ் முடிச்சுட்டு சொந்த ஊர்ல இருந்த 30 ஏக்கர்ல விவசாயம் பார்த்துக்கிட்டே, தனியார் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தேன். 92-ம் வருஷம் அப்பா 'ரிட்டையர்டு’ ஆன பிறகு, அவரும் விவசாயத்துக்கு வந்து, நெல், கடலை, தென்னை, மரவள்ளினு சாகுபடி செஞ்சார். எங்க ஊர்ல, வேலை ஆட்கள் பிரச்னையால சரியா விவசாயம் பார்க்க முடியலை. அதனால, 18 ஏக்கர் நிலத்தை வித்துட்டோம். அதுக்கப்பறம், நான் வேலையை உதறிட்டு, வேலையாள் பிரச்னை இல்லாத இடமா தேடி அலைய ஆரம்பிச்சு... இந்த ஊர்ல
33 ஏக்கர் நிலம் வாங்கி, கடலை, காராமணி, மரவள்ளினு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
இங்கயும் கொஞ்ச நாள்லயே, தண்ணி பிரச்னை வந்துடுச்சு. அந்த சமயத்துல, பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரியில முதல்வரா இருந்த, சம்பந்தமூர்த்திகிட்ட பேசுனப்போ... 'நெல்லி, சப்போட்டா, மா மாதிரியான பழ மரங்களை வெச்சா, வேலை ஆட்களோட தேவையும் குறையும். குறைஞ்ச தண்ணீரை வெச்சும் சமாளிச்சுடலாம்’னு சொன்னார். அதுக்குப் பிறகு, 12 ஏக்கர்ல நெல்லி, 6 ஏக்கர்ல சப்போட்டா, வேலி ஓரத்துல 1,500 தேக்குனு நடவு செஞ்சுட்டு, மீதி நிலத்துல வழக்கமான சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். ஓரளவுக்கு வேலையாட்கள் தேவையும், தண்ணீர் தட்டுப்பாடும் கட்டுக்குள் வந்துச்சு. நாலு வருஷத்துல நெல்லியும், அஞ்சு வருஷத்துல சப்போட்டாவும் காய்க்க ஆரம்பிச்ச பிறகு, மீதம் இருந்த நிலத்துல எல்லாம், மா, எலுமிச்சை, தென்னைனு நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சுந்தரம் தொடர்ந்தார்.
வழிகாட்டிய பாலேக்கர்!
''பழ மரங்கள் வருமானம் கொடுக்கறதைப் பாத்ததும், 'இந்த மண்ணுல மர வகைகள் நல்லா வளரும்’னு எனக்குப்பட்டது. என்ன மரங்களை வைக்கலாம்னு தேடிகிட்டிருந்தப்போதான், 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதுல பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள், என்னை ஈர்த்துச்சு. அவரோட பயிற்சியிலயும் கலந்துகிட்டேன். மர சாகுபடி செய்யுற பண்ணைகள் பலதுக்கும் போய், அந்த விவசாயிகளோட அனுபவங்கள உள் வாங்கிக்கிட்டேன். கோயம்புத்தூர், வன மரபியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சியில மர வகைகள், பலன் கொடுக்குற காலம், சந்தை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.
அதுக்கப்பறம்தான், பழ மரங்களுக்கு இடையில குமிழ், மலைவேம்பு மரங்களை நட்டேன். சில இடங்கள்ல அடியில பாறை இருந்ததால இந்த மரங்கள் சரியா வரல. அதனால, வேங்கை, மகோகனி, சிகப்பு சந்தனம், ரோஸ்வுட், பூவரசு, காட்டுவாகை, சிலவாகை, இலவம்பஞ்சு மாதிரியான மரங்களை நட்டிருக்கேன். எல்லா மரங்களுக்கும் மேட்டுப்பாத்தி அமைச்சு, சுத்திக் கிடக்குற இலைதழைகளை மரத்துக்கிட்ட தள்ளி விட்டுடுவேன். அந்த இலைகள் மட்கி, நிறைய மண்புழு உருவாகிட்டதால... இப்ப உழவே ஓட்டுறதில்லை. எல்லாத்தையும் மண்புழுக்களே பாத்துக்குது. எல்லாமே பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் மகத்துவம்தான்!
57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்!
கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல கிடைச்ச நிலங்களை வாங்கினதுல இப்போ மொத்தம் 57 ஏக்கர் இருக்கு. 15 ஏக்கர்ல 900 மா, 12 ஏக்கர்ல 2 ஆயிரம் நெல்லி, 12 ஏக்கர்ல 1,300 சப்போட்டா, 6 ஏக்கர்ல 700 தென்னை, 2 ஏக்கர்ல 400 எலுமிச்சை; 200 சாத்துக்குடி, 4 ஏக்கர்ல 450 கொய்யா, 6 ஏக்கர்ல பல வகையான தடி மரங்கள்னு வெச்சுருக்கேன். பழமரங்களுக்கு இடையிலயும், தனியாகவும் 1,900 தேக்கு மரங்கள் இருக்கு. இதுல 1,500 மரங்கள் வேலிப்பயிர். இதுக்கு 9 வயசாகுது. ஊடுபயிரா 1,100 மகோகனி, 400 மலைவேம்பு, 3 ஆயிரம் வேங்கை, 700 குமிழ், 150 தீக்குச்சி, 150 பூவரசு, 60 காட்டுவாகை, 250 இலவம், 600 சிகப்பு சந்தனம், 300 ரோஸ்வுட், 150 சிலவாகை மரங்கள்னு கிட்டத்தட்ட 16 ஆயிரம் மரங்கள் இருக்குது. இதுபோக, 1,200 செடிமுருங்கை, 500 அகத்தியும் இருக்கு'' என்ற சுந்தரம், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
செலவை ஈடுசெய்யும் பழ மரங்கள்!
''இப்போதைக்கு நெல்லி, சப்போட்டா, மா மட்டும்தான் காய்ப்பில் இருக்குது. நெல்லி மூலமா வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய்; மாங்காய் மூலமா வருஷத்துக்கு
2 லட்சம் ரூபாய்; சப்போட்டா மூலமா வருஷத்துக்கு 3 லட்சம் ரூபாய்னு வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்குது. இந்த வருமானம்... நிர்வாகச் செலவுக்கு சரியாயிடுது. இன்னும் மூணு, நாலு வருஷத்துல எல்லா பழ மரங்களும் காய்க்க ஆரம்பிச்சு... எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, இளநீர் மூலமாவும் வருமானம் வர ஆரம்பிக்கும். அப்போ, எல்லா செலவும் போக, பழங்கள் மூலமா ஒரு ஏக்கர்ல இருந்து மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். தடிமரங்களைப் பொறுத்தவரை, எல்லா ரகங்கள்லயும் சேர்த்து, மொத்தம் 7 ஆயிரத்து 260 மரங்கள் இருக்கு. இது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விலைக்குப் போகும். 10 வருஷம் கழிச்சு, கொஞ்ச மரங்களையும் 20 வருஷம் கழிச்சு கொஞ்ச மரங்களையும் விக்கிறப்போ கோடிக்கணக்குல வருமானம் வரும்னு எதிர்பாக்குறேன்'' என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், சுந்தரம்.
தொடர்புக்கு, சுந்தரம்,
செல்போன்: 84891-91774.
செல்போன்: 84891-91774.
. பழ மரங்களுக்கு இடையில் பயன்தரும் மரங்கள்!
மர வகைகளை சாகுபடி செய்வது பற்றி, சுந்தரம் சொல்லும் தொழில்நுட்பங்கள்-
''மரக்கன்றுகளை நடவு செய்யும் நிலத்தில் களை இல்லாத அளவுக்கு உழவு செய்து கொள்ள வேண்டும். மேட்டுப்பகுதி நிலத்தில் ஆடி மாதத்திலும், பள்ளமான பகுதிகளில், தை மாதத்திலும் நடவு செய்ய வேண்டும்.
18 அடிக்கு 18 அடி இடைவெளியில் நெல்லி; 30 அடிக்கு 30 அடி இடைவெளியில் மா;
22 அடிக்கு 22 அடி இடைவெளியில் சப்போட்டா; 14 அடிக்கு 14 அடி இடைவெளியில் கொய்யா; 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி; 22 அடிக்கு
22 அடி இடைவெளியில், தென்னை என ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி வித்தியாசப்படும்.
இரண்டரை அடி சதுரம், இரண்டரை அடி ஆழத்துக்குக் குழி எடுத்து ஒரு மாதம் ஆறப்போட்டு... அதில், ஒரு கூடை எரு இட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு பழ மர வரிசைகளுக்கு இடையில், தேக்கு, மகோகனி, சிகப்பு சந்தனம், மலைவேம்பு ஆகியவற்றை 8 அடி இடைவெளியிலும்; வேங்கை, பெருமரம், ரோஸ்வுட் ஆகியவற்றை 10 அடி இடைவெளியிலும்; காட்டுவாகை, பூவரசு, இலவு ஆகியவற்றை 15 அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
இந்த மரங்களுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் வரை பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதன் மூலம் மரத்துக்குத் தேவையான தழைச்சத்துகள் கிடைப்பதோடு, வருமானமும் கிடைக்கும். பழ மரங்களுக்கு கவாத்து தேவையில்லை. தடி மரவகைகளை
10 ஆண்டுகள் வரை கவாத்து செய்ய வேண்டும். இதை மட்டும் செய்து வந்தாலே... உங்கள் நிலம் 'காடு’ போல மாறி, பறவைகள், விலங்குகள் எனத் தோட்டம் முழுக்க உயிர்ச் சூழல் பண்ணையாகி விடும்.''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக