விடாமுயற்சி!
ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன்,சாதனையாளன்.
ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன்,சாதனையாளன்.
தோல்வியால் துவண்டவர் களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும்,வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.
தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். "வீழ்ந்தோம்' என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், "வென்றோம்' என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.
தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில்,சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.
உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால்,சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம்.
விடாமுயற்சியால், வரலாற்றில் இடம் பெற்ற சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:
சிறுபிள்ளையாக இருக்கையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.
ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.
ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும்.
மிகப் பிரபலமான விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, "ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்...' என்றாராம்.
அலெக்சாண்டர் கிரகாம் பெல், காது கேளாத தன் மனைவிக்கு, காது கேட்பதற்காக கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தான், தொலைபேசியைத் தற்செயலாக கண்டுபிடித்தார். உங்களுக்குப்புதிய வாய்ப்பு, பிரச்னை உருவத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும் போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ... "தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?'
சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ், இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தவாஸ்கோடகாமா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் போன்ற பலரும், தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை.
தேசிய கவி பாரதியாரும், கவிஞர் கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில், முதல் பரிசு பெறவில்லை.
அமெரிக்கா ஜனாதிபதியாகி, அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தங்கள் பிள்ளை சரியாகப் படிக்கவில்லையே என்று புலம்பும் பெற்றோருக்கு, விஞ்ஞானி எடிசனின் நிஜவாழ்க்கைக் கதைதைரியமூட்டும். மின்சார விளக்கு உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, காது சரிவரக் கேட்காது. மூன்று மாதமே பள்ளியில் படித்தவர். "அடிமக்கு' என்று, ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார்.
ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சி செய்தும், மின்சார விளக்கைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பார்த்து, மற்றவர்கள்கிண்டல் செய்த போது, "நான் ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தேன் அல்லவா?' என்று தமாசாகப் பதிலளித்தார். தன், 67 வயதில், இவரது ஆராய்ச்சி மையம், தீ விபத்தில் சாம்பலாகியது. அப்போது, அவர், "பரவாயில்லை, கடவுள் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளார்...' என்று கூறினார். விடா முயற்சிக்கும், மனவலிமைக்கும் எடிசனைத் தவிர,வேறு யாரை உதாரணமாகச் சொல்லுவது?
பீதோவன் காது கேளாதவர். இளம் வயதில், இசை ஞானம் இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்டவர். ஆனால், பிற்காலத்தில் உலகிலேயே உன்னதமான இசையை உருவாக்கியவர் என்று புகழப்பட்டார்.
மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்பட்டப்ராங்ளின் ரூஸ்வெல்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவை வழி நடத்தி வெற்றி கண்டார்.
நேருவுக்கு பின், இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி,பள்ளிக்குச் செல்வதற்கு தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால்,புத்தகத்தையும், கழற்றிய உடையையும், தலைக்கு மேல் சுமந்தபடிநீச்சலடித்து, தினமும் அக்கரையை அடைந்திருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு, பள்ளிக்குச் சென்றிருக்கிறார். இப்படிச் சொல்ல ஆரம்பித்தால், சுதந்திர இந்தியாவில், அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மிகச் சிறந்த சாதனையாளர்கள் கூட, ஆரம்ப காலத்தில் தடுக்கி விழுந்திருக்கின்றனர். "போர்டு' என்ற கார் கம்பெனியை நிறுவி, புதிய கார்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றிபோர்டு, முதல் காரை உருவாக்கும் போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்து விட்டார்.
தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.
இன்று, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில் கேட்சும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிய இருவரும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள்.
பில்கேட்ஸ், தன் நண்பரோடு, வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பித்த நிறுவனம் தான், உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட்.
இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி,கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னணிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில், கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.
தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது.
ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும்,திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.
மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவதில்லை.
எல்லா தோல்விகளும், அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை.
உதாரணமாக, தேர்வு, போட்டி, வியாபாரம் மற்றும் காதலில் தோல்வியடைந்தவர்களில், தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால், அவர்களை விட மோசமான தோல்வியடைந்தவர்கள், "பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்...' என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்பவர்கள் மறு ரகம். நாம் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்!
எப்போதெல்லாம் பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்கநேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், "அதனால் என்ன? அடுத்து என்ன?'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக