View status

View My Stats

புதன், 20 நவம்பர், 2013

சேமிப்பு உங்கள் முதல் செலவு



காசு சேமிப்பது பலருக்கும் கடினமான காரியம். செலவைக் குறைப்பதுதான் சேமிப்பின் முதல் படி. வருவாயைப் பெருக்குவது இரண்டாம் படி.
செலவு செய்வது எளிது. நுகர்வு உடனடி மகிழ்ச்சி அளிப்பதால் செலவு நம்மை ஈர்க்கிறது. ஆக, செலவைக் கட்டுப்படுத்துவதுதான் சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.
உடல் எடையை குறைக்க என்ன செய்யவேண்டும் என்று என் நண்பர் ஒருவர் மருத்துவரிடம் கேட்டார். அவர் இரண்டு வழிகளைக் கூறினார். அவர் சொன்ன முதல் வழி.. ‘உனக்கு மிகவும் பிடித்த உணவுகளை சாப்பிடாதே’ என்பது. ஏனெனில், பெரும்பாலும் அதிக கொழுப்பு உள்ள சர்க்கரை, எண்ணெய், பால் சேர்ந்தவைதான் நமக்கு அதிகம் பிடிக்கின்றன. மருத்துவர் சொன்ன இரண்டாவது வழி.. ‘ஒரு நாளைக்கு எந்தெந்த வேளைகளில் என்னென்ன உணவு சாப்பிட்டாய் என்று எழுதிப்பார்’ என்பது. நண்பரும் அதேபோல சாப்பிடச் சாப்பிட எழுதிவைத்தார். தேவை இல்லாமல், பசி இல்லாமலேயே பல நேரங்களில் சாப்பிட்டிருக்கிறோம் என்பதும் ஆரோக்கிய மில்லாத உணவுகளை உட்கொள்கிறோம் என்பதும் எழுதினால்தான் தெரிகிறது. கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல.. செலவைக் கட்டுப்படுத்துவதற்கும் இதே வழிதான். செலவு செய்யச் செய்ய எழுதி வைத்தால், ‘அடடா, வீண் செலவு நிறைய செய்கிறோமே’ என்பது தெரியவரும். அநாவசியச் செலவுகள் தானாக குறையும்.
எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.
மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்.
சில எதிர்கால செலவுகளுக்கு காப்பீடு எடுப்பது அவசியம். மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடும் அவசியம். இதை சேமிப்பு + முதலீடு என்று பாருங் கள், புரியும். சேமிப்பு உங்கள் முதல் செலவாக இருக்கட்டும். இன்று பலருக்கு சம்பளம் வங்கி வழியாக கொடுக்கப்படுகிறது. உங்கள் வங்கி மேலாளரிடம் கூறி, சம்பளம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்தவுடன் அதில் ஒரு பகுதியை வேறு ஒரு சேமிப்புக் கணக்குக்கு மாற்றச் சொல்லுங்கள். இந்த கட்டாய சேமிப்பு, உங்கள் செலவைக் குறைக்க பெரிய அளவில் உதவும்.
நமது செலவும் சேமிப்பும் நமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. சிக்கனமான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது அவசியம். அதற்காக அத்தியாவசியமான செலவுகளை செய்யாமல் இருக்கமுடியாது.
பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்.
முன்பு பொருளில் முதலீடு செய்தோம். இன்று கல்வி, சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். அடிப்படைக் கல்வியும், சுகாதாரமான வாழ்க்கை முறையும் நல்ல மனிதனையும் ஆரோக்கியமான கலாச்சாரமான சமுதாயத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை

வியாழன், 14 நவம்பர், 2013

“நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும்”


எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது யாரும் பார்க்கவில்லையே என்று ஒருவன் கோணல் மாணலாக நாற்றுகளை நடலாம். ஆனால் அவை வளர்ந்த பின் என்ன நட்டிருக்கிறீர்கள் என்பதையும் எப்படி நட்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்குக் காட்டாமல் விடாது. அதனால் தவிர்க்க முடியாத இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அப்படி நடக்க வாய்பேயில்லை. ஏனென்றால் இந்த அடிப்படை விதியிலேயே உலகம் அன்றிலிருந்து இன்று வரை இயங்குகிறது. இந்த விதியே இயற்கை. இந்த விதியே இறைவன்.
எனவே நன்மைகளை தன் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மனிதன் தன் செயல்களில் நன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தீமைகளைச் செய்து விட்டு தனக்கு நன்மை நடக்கும் என்று நம்புபவன் கிழக்கு திசையில் உள்ள ஊருக்குச் செல்ல ஆசைப்பட்டு மேற்கு திசை நோக்கி நடக்கும் முட்டாளுக்கு இணையாகிறான். உங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருக்க இறைவன் மாமூல் வாங்கும் அரசு அதிகாரி அல்ல. ஆகையால் கோயில் உண்டியல்களில் கோடி கோடியாய் கொட்டினாலும் உங்கள் கணக்கு சரியாகி விடாது. உங்கள் கணக்கு சரியாவது அதற்குத் தகுந்த விளைவோடு தான்.
சில சமயங்களில் நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகளும், தீய செயல்களுக்கு தீய விளைவுகளும் கிடைப்பதற்குத் தாமதமாகலாம். அந்த தாமத காலத்தில் இந்த விதி பொய்ப்பது போன்ற தோற்றம் பலருக்கும் தோன்றலாம். ஆனால் தாமதமானாலும் விளைவுகள் வட்டியோடு வந்து சேரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. இடைவெளி எவ்வளவாக இருந்தாலும் செயலும் விளைவும் பிரிக்க முடியாத ஜோடி என்பதால் ஒன்றின் பின்னாலேயே மற்றது வந்து சேர்ந்து தானாக வேண்டும்.
எனவே விளைவுகளை மாற்ற விரும்பினால் மனிதன் செயல்களை மாற்ற வேண்டும். அதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. இந்த விதி நன்மை, தீமைகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. செயலின் சிறப்புத் தன்மைக்கும் இதே விதி தான்.
விளைவைப் பார்க்கையிலேயே அந்த செயல் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விடும். கவனமாகச் செய்தீர்களா, ஈடுபாட்டுடன் செய்தீர்களா, முழு மனதோடு செய்தீர்களா, அந்த செயலுக்குத் தேவையான அறிவுபூர்வமாகச் செய்தீர்களா என்பதை எல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் செயலின் விளைவு சொல்லி விடும். விளைவைப் ’போஸ்ட் மார்ட்டம்’ செய்தால் சின்னத் தவறு கூட இல்லாமல் செயல் செய்த விதத்தைச் சொல்லி விடலாம். சிறப்பாகச் செய்யும் செயல்கள் சிறப்பான விளைவுகளாக மலர்ந்து வாழ்க்கையை சோபிக்கும். வேண்டா வெறுப்பாகவோ, திறமைக் குறைவாகவோ செய்யும் செயல்கள் அதற்குத் தகுந்தாற் போல மோசமான விளைவுகளாக வெளிப்பட்டு களையிழந்து காட்சி அளிக்கும்.
இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பலர் காலம் முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். ’நான் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முன்னேற்றமில்லை’ என்று பலர் புலம்புவதை நாம் கேட்கிறோம். குறிப்பட்ட வகையில் எத்தனை உழைத்தாலும் முன்னேற்றமில்லை என்றால் அந்த உழைப்பில், உழைக்கும் விதத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்றல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் அப்படியே தொடர்ந்து உழைத்துக் கொண்டு போவது முட்டாள்தனம் அல்லவா? எங்கே என்ன தவறு இருக்கிறது அல்லது என்ன குறைபாடு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதன்படி சரி செய்து கொண்டு உழைத்தாலல்லவா நாம் நல்ல விளைவுகளைக் காண முடியும். இந்த அடிப்படை உண்மையை வாழ்க்கையில் உணர பலரும் மறப்பது தான் பரிதாபம்.
செய்கின்ற வேலையில் முன் யோசனையும், திட்டமிடுதலும், தேவையான திறமையும் இருந்தால் அந்த வேலை சீக்கிரமாக முடியும், சிறப்பாகவும் முடியும். ஆனால் உழைப்பு மட்டும் இருந்து முன் சொன்ன மூன்றும் இல்லா விட்டால் வேலையும் முடியாது, வேலை சிறப்பாகவும் இருக்காது. வேலை எதுவாக இருந்தாலும் விதி இது தான்.
செயலின் முடிவே விளைவு என்ற உண்மையே மிகப்பெரிய பாடம் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் நிலைமையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா? நீங்கள் அடைய நினைத்த வெற்றிகளை அடையவில்லையா? உலகம் உங்களை சரியாக மதிப்பிடவில்லை என்ற வருத்தமா? இதில் எதற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால் முதலில் உங்களுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பாருங்கள். செயல்படும் முறையிலும், செயல்படும் நேரத்திலும் குறைபாடுகள் இருக்கலாம். அல்லது செய்ய வேண்டிய ஏதோ முக்கியமானது விடுபட்டுப் போயிருக்கலாம். செய்யக் கூடாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்து கொண்டும் இருக்கலாம். சரியான கூட்டல், கழித்தலை உங்கள் செயல்களில் புகுத்தினால் கண்டிப்பாக விளைவுகள் மாற ஆரம்பிப்பதைப் பார்க்கலாம். அதை விட்டு விட்டு வருந்துவதும், குமுறுவதும், புலம்புவதும் மாற்றத்திற்கு உதவாது.
இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் வேலை செய்வேன், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்பவன் தோற்கத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். செயலின் விளைவு எதிர்பாராததாக இருந்தால் ஏன் என்று சிந்தித்து மாற்ற வேண்டியதை மாற்றி விட்டு மறுபடி செயல்பட வேண்டும்.
அவ்வப்போது நம்மை சரி செய்து கொண்டே இருப்பது தான் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவும். அதுவே நம் வாழ்க்கையை மெருகுபடுத்திக் கொண்டே செல்லும். எல்லா மகத்தான மனிதர்களும், எல்லா வெற்றியாளர்களும், தாங்கள் வேண்டும் விளைவுகளுக்கேற்ப தங்கள் செயல்களை சரிப்படுத்திக் கொண்டே வந்தவர்கள் தான். உலகம் அவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்று சுருக்கமாக அழைத்தாலும் சரியான நேரத்தை, சரியானதை, சரியான விதத்தில் செய்தது தான் அந்த அதிர்ஷ்டத்தின் ரகசியம்.
இதுவே வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகப்பெரிய பாடம். இதில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் சாதிக்க முடியாத இலக்குகள் இல்லை, அடைய முடியாத சிகரங்களும் இல்லை.

புதன், 13 நவம்பர், 2013

திகில் சைபர் வார்!


தொழில்நுட்பம் வளரவளர பிரச்னைகளும் கூடவே சேர்ந்து வளருகிறது. முன்பெல்லாம் காவல் நிலையங்​களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, சைபர் க்ரைம் பிரிவு களில்தான் கூட்டம் நெட்டித்தள்ளுகிறது. செல்போனில் மிரட்டல், ஆபாச  எஸ்.எம்.எஸ்., நைஜீரியர்களின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறவர்கள் என்று இங்கே படை யெடுப்பவர்கள் ஏராளம். இதில் சிக்கிக்கொள் பவர்களும் ஏராளம். விடுபட முடியாமல் தவிர்ப்பவர்களும் ஏராளம். நாடும் நகரமும் டிஜிட்டல் வயப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கும் அவஸ்தைகளைப் பற்றித்தான் இந்த சிறப்புக் கட்டுரை!
பொழுதுபோக்காக அ.தி.மு.க.!
அ.தி.மு.க-வின் இணையதளத்தை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இன்ஜினீயர் ஈஸ்வரன் முடக்கிவிட்டார். இவர், பெங்களூருவில் ஐ.டி. நிறுவன ஊழியர். இப்போது, சென்னை சைபர் க்ரைம் போலீஸ் பிடியில் சிக்கி கம்பி எண்ணுகிறார். சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் அ.தி.மு.க-வின் வெப்சைட்டை ஹேக் செய்து, பாகிஸ்தானைப் பற்றிய சில அவதூறு வாசகங்​களை அதில் பதிவுசெய்து விட்டனர். படாத பாடுபட்டு போலீஸ் அதை மீட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் அதே வெப்சைட் முடக்கப்பட்டது. இந்த முறை போலீஸ் விசாரணையில் குதிக்க... சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் பிடிபட்டார். ஏதோ பொழுதுபோக்காக இதைச் செய்ததாகச் சொல்லியிருக்கிறார் அவர். இப்படி பொழுதுபோகாமல் காரியம் செய்து சிக்கியவர்கள்தான் இந்தக் குற்றங்களில் அதிகம்.
மாமியாரின் ஆபாசப் படம்... சிக்கிய மருமகள்!
பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனது அம்மா, சகோதரி ஆகியோரின்  படம் ஆபாசமாக இன்டர்நெட்டில் வெளியாகியிருக்கிறது. அதை போஸ்ட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இருந்தார். போலீஸ் விசாரணையில் இறங்கியது. அந்தப் படத்தை போஸ்ட் செய்தது யார் தெரியுமா... புகார் கொடுத்தவரின் மனைவி. குடும்பச் சண்டையில் விவாகரத்து வாங்கிய அந்தப் பெண், பழைய பகையை இப்படித் தீர்த்துக்கொண்டுள்ளார். அந்தப் பெண்ணும் இப் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல, ஒரே வீட்டில்  இருக்கும் கணவன், மனைவிக்குள் ஈகோ மோதல் வரும்போது, இன்டர்நெட்டில் அவதூறுச் செய்திகளை போஸ்ட் செய்வது, மார்ஃபிங் செய்து அசிங்கமாகப் படத்தை போஸ்ட் செய்வது என்று சிலர் ஈடுபடுகிறார்கள். நேரடியாக எதிர்கொள்ளத் துணிவில்லாமல் மறைமுகமாக இதுபோல மனரீதியான டார்ச்சர் கொடுக்க நினைத்து போலீஸாரிடம் சிக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன.
சாக்லெட் மாமாவும் ரகசிய கேமராவும்!
சென்னை, சூளைமேட்டில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹும்ஸ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளிடம் அன் பாகப் பேசுவார். சாக்லெட் கொடுப்பார். அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விளையாடி இருக்கிறார். பிறகு அந்தக் குழந்தைகளை தகாத உறவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். அதைத் கேம ராவிலும் வீடியோ எடுத்து நெட்டில் உலவ விட்டிருக்கிறார். இன்டர்போல் போலீஸ் இதைக் கண்டுபிடித்து, சென்னை போலீஸுக்குச் சொல்லியது. வில் ஹும்ஸ் கைது செய்யப்பட்டார். அதன்பிறகுதான் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விஷயமே தெரிந்தது. இந்தச் சாக்லெட் மாமாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
ஆயிரத்துக்கு பத்து!
சோழிங்கநல்லூரில் இருக்கும் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் செய்த தகிடுதத்தம் வித்தியாசமானது. நம்பர் விளையாட்டு என்ற டெக்னாலஜியைத் தெரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி ஆன் லைனில் மோசடி செய்திருக்கிறார். டி.வி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்வார். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய்க்கு இவர் ஒரு பொருளை பர்ச்சேஸ் செய்கிறார் என்றால், இவரது அக்கவுன்ட் உள்ள வங்கிக்குப் போகும்போது நம்பர் விளை​யாட்டை செயல்படுத்துவார். ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதில் வெறும் பத்து ரூபாய்தான் டெபிட் ஆகும். ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் பொருளை விற்கும் கம்பெனிக்குப் போகும். அதைப் பெற்றுக்கொண்ட கம்பெனி இந்த மாணவர் கேட்ட பொருளை சப்ளை செய்துவிடும். ஆக, அந்த மாணவருக்கோ, கம்பெனிக்கோ நஷ்டமில்லை. ஆனால், வங்கிக்குத்தான் நஷ்டம். ஒருகட்டத்தில், வங்கி அதிகாரிகள் உஷாராகி போலீஸுக்கு சொல்ல... அந்த மாணவர் பிடிபட்டார்.
ரகசிய சினேகிதன்!
பிரபல வங்கியின் பின்னணியில் செயல்படும் ஐ.டி. நிறுவனம் அது! அங்கு உயர் பதவியில் இருந்த ஒரு இளம்பெண், தனது காதலனுக்காக கம்பெனியில் திருட்டுத்தனத்தைச் செய் திருக்கிறார். நீண்டகாலமாகப் பயன்படுத்​தாத வங்கிக் கணக்குகள் எவை என்று கணக்கெடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை ரகசியமாக வேறு கணக்குக்கு மாற்றியிருக்கிறார். கணக்கில் பணம் குறைவதை எதேச்சையாகப் பார்த்த கஸ்டமர் வங்கியில் விசாரிக்க... அந்தப் பெண் மாட்டிக்கொண்டார். அதற்குள், ஒரு கோடி ரூபாயைச் சுருட்டி​விட்டார். காதலன் பணத்தை எடுப்பதற்குள் போலீஸ் மடக்கிவிட்டது. அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது கூடுதல் தகவல்.
- இப்படியாக தினமும் ஒரு சைபர் க்ரைம் சம்பவங்கள் நடக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு டாலருக்கு ஒரு​ வைரஸ் என்றெல்லாம் கிடைக்கிறதாம். இதை ஆன்லைனில் விலைக்கு வாங்கி தனக்கு வேண்டாதவர்களின் மெயில், செல் போன்களில் பரவவிடுகிறார்கள் சைக்​கோ குணம் கொண்ட சிலர். அவ்​வளவுதான்..! எதிர்தரப்பினரின் கம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள அத்தனை தகவல்களும் காணாமல் போய்விடும். அவர் படும் அவஸ்தையைப் பார்த்து ரசிக்கும் குரூர குணம் உள்ளவர்களை என்ன செய்வது?
தலைவனை நெருங்காத போலீஸ்!
மதுரையில் ஒருமாதத்துக்கு முன், போலி கிரெடிட் கார்டு கும்பலைப் பிடித்தார் அப்போதைய போலீஸ் டெபுடி கமிஷனர் ஃபெரோஸ்கான் அப்துல்லா. பிடிபட்டவர்கள் சொன்னதில் இருந்து உலக அளவில் அதிக பண பரிவர்த்தனை செய்யும் பணக்காரர்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக விற்கும் வெப்சைட்டுகள் இருப்பதை அறிந்து அதிர்ந்தாராம். அங்கே பணத்தை ஆன்லைனில் செலுத்தி விவரங்களை மதுரைக் கும்பல் வாங்கி மோசடி செய்திருக்கிறது. மதுரை, திண்டுக்கல், நெல்லை என முக்கிய ஊர்களில் உள்ள பிரபல ஜுவல்லரி, துணிக்கடை போன்ற 17 நிறுவனங்களில் 80 லட்ச ரூபாய் வரை போலி கிரெடிட் கார்டில் சுருட்டியிருக்கிறார்கள். இதற்கு மதுரையில் உள்ள வங்கி ஒன்றின் அதிகாரியும் உடந்தை​யாம். இந்தக் கும்பலின் நெட்-வொர்க் வெளிநாடுகளுக்கும் நீண்டிருக்கிறது. திருச்சி ரவி என்பவன்தான் தமிழகத்தில் உள்ள போலி கிரெடிட் கார்டு மோசடிக் கும்பல்களுக்குத் தலைவனாம். அவனை இன்னும் போலீஸ் நெருங்கவில்லை.  தமிழகத்தில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை மோச​டிப் பேர்வழிகள் ஆன்லைனில் ஏமாற்றியிருக்கிறார்கள்.
தலை... உடல்... ஆபாச எஸ்.எம்.எஸ்.!
சென்னை சைபர் க்ரைம் போலீஸ் என்ன சொல்கிறது? ''60 சதவிகிதம் பேர் செல்போன் வழியாக இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். இதில் குடும்ப வன்முறைகள்கூட தொடர்புப் படுத்தப்படுகிறது. பழிவாங்கும் விதமாக, இன்டர்நெட்டில் உள்ள ஆபாசப் படங்களை எடுத்து தங்கள் குடும்பத்து நபர்களின் தலைப் பகுதியை மட்டும் அந்த உடலோடு இணைத்து போஸ்ட் செய்கிறார்கள். மனைவியின் டார்ச்சர் சகிக்க முடியாத கணவன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனைவிக்கே ஆபாச
எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அப்படியாவது, அவள் கவனம் வேறுபக்கம் திரும்பும் என்று தப்புக் கணக்குப் போட்டு சிக்கலில் மாட்டிக்​கொள்கிறார். இதேபோல, கணவரின் டார்ச்சர் தாங்கமுடியாத மனைவிகள் வேறு விதத்தில் கணவர் மீது அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் எங்களிடம் புகார் செய்வார்கள். யார் இதைச் செய்தது என்பதை தெரிந்துகொள்வதற்காகத்தான் எங்களிடம் வருகிறார்கள். எங்கள் விசாரணையில் இன்னார் என்று தெரிந்ததும், புகாரை வாபஸ் பெற்றுச் செல்கிறார்கள். நாங்களும் மனிதாபிமான முறையில் அதைக் கண்டுகொள்ளாமல்விட வேண்டியிருக்கிறது'' என்கிறார்கள்.
திருடப்படும் ரகசியங்கள்!
சென்னையில் உள்ள நாஸ்காம் (தகவல் தொடர்பு மற்றும் சாஃப்ட்வேர் தொழிற்சாலை​களின் கூட்​டமைப்பு) மண்டல இயக்குனர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டோம். ''இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் ஐ.டி. மற்றும் பி.பி.ஒ. துறைகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். 1.2 கோடி பேர் இந்தத் துறைகளில் மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். 100 பில்லியன் டாலர் புழங்கும் துறைகள் இவை. தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி தரும் துறைகள் இவை. இப்போது, டேட்டா திருட்டுதான் பெரிய பிரச்னை. வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம ஊர் சாஃப்ட்வேர் நிறுவனங்களை நம்பித்தான் தங்களின் ரகசியங்களைத் தருகின்றன. இங்குள்ள சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த ரகசியங்களைத் திருடுகின்றனர். இது தெரிந்தால், இந்திய சாஃப்ட் வேர் நிறுவனங்களின் நம்பகத்தன்மை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைப்பார்கள்? சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் எங்களிடம் வந்தார். வேலையை விட விரும்புவதாகவும் ஆனால், அவரை அந்த நிறுவனம் விடுவிக்க மறுப்பதாகவும் புகார் சொன்னார். விசாரித்தால், அவர் என்னென்ன ரகசியங்களை திருடியிருக்கிறார் என்று அந்த நிறுவனம் பெரிய பட்டியலே தருகிறது. இப்படிப்பட்டவரை என்ன செய்வது? இதேபோல், இன்னொரு நிறுவனத்தில் டேட்டா திருடிய நபரை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பினோம். பொதுவாகவே, ஐ.டி. துறையினரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும்தான் இந்தத் துறையில் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல், பாதிப்புகளும் இவர்களிடம்தான் அதிகம். அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தின் நல்லது கெட்டது குறித்து பள்ளியில் இருந்தே படிப்படியாக போதிக்க வேண்டும். அப்போது​தான், எதிர்காலத்தில் கெட்டது நடக்காது'' என்றார்.
சைபர் வார்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் பெரு நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக்கான விசேஷ சாஃப்ட்வேர்களை தயார் செய்கிறது ஃபிக்ஸ்-நிக்ஸ் என்ற தனியார் நிறுவனம். சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகவேல் சங்கரன் நம்மிடம் பேசினார். ''உலகின் பெரிய நாடுகளுக்கு இடையே இந்த நிமிஷம்கூட சைபர் வார் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றாவது உலகப்போர் ஏற்பட்டால், நிச்சயமாக அது சைபர் போராகத்தான் இருக்கும். தரைப் படை, விமானப் படை, கப்பல் படை எதுவுமே  இல்லாமல் ஏ.சி. அறைக்குள் இருந்து கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்திப் பேரழிவை உண்டாக்க தயாராகி வருகிறார்கள். உதாரணத்துக்கு, 2010-ம் ஆண்டு 'ஸ்டக்ஸ்நெட்' என்ற வைரஸை அமெரிக்கா ஏவியது. அது, ஈரான் நாட்டு அணுமின் உலை ஒன்றை நோக்கிப் போனது. அங்குள்ள முக்கிய சிஸ்டத்தை தாக்கியது. இதனால், அது செயல் இழந்தது. அந்த அட்டாக் ரிவர்ஸ் ஆகி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கிய கம்ப்யூட்டர் மையங்களையும் தாக்கி சேதப்படுத்தியது. ஈரான் விடுமா? பதிலுக்கு, அமெரிக்க வங்கிகள் மீது சைபர் போர் நடத்தியது. இப்படி மாறி மாறி போர் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் முக்கிய வெப்சைட்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,191 சைபர் அட்டாக் நடந்திருக்கிறது (முழு விவரங்களுக்கு... பார்க்க  வரைபடம்). எந்த ஒரு அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ள எல்லா வகையிலும் இந்தியாவும் தயாராகத்தான் இருக்கிறது. ப்ரிசம், எட்வர்ட் ஸ்நவ்டன் லீக்குக்கு பிறகு, இந்தியர்களால் தயாரிக் கப்பட்ட மென்பொருட்களை மட்டுமே மத்திய அரசு உபயோகப்படுத்த விரும்புகிறது. இந்தவகையில், சுமார் 20 இந்திய தகவல் பாதுகாப்பு(information security) சாஃப்ட்வேர் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்'' என்றார்.
மெயிலைத் திறந்தால் வைரஸ் வரும்!
புதுடெல்லியில் உள்ள மைக்ரோ சாஃப்ட் இந்திய தலைமை கணினி பாதுகாப்பு அதிகாரி பா.கணபதி சுப்ரமணியத்திடம் பேசினோம். ''லாட்டரியில் நீங்கள் பரிசு வென்று இருக்கிறீர்கள் என்றோ, விலை உயர்ந்த கார் உங்களுக்கு காத்திருக்கிறது என்றோ வரும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு பரிச்சயமாக இருக்கக் கூடும். 'என் ராஜ் ஜியத்தில் பாதி தருகிறேன்’ என்றுகூட உங்களை வசியப்படுத்தலாம். ஆனால், அத்தனையும் டுபாக்கூர். உங்களை ஏமாளியாக்க செய்யப்படும் முயற்சிகள். தொடர்பே இல்லாத, முகமறியாத நபர் எதற்காக இப்படித் தர முன்வருகிறார் என நாம் யோசிப்பதில்லை. அந்த அஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் டாக்குமென்ட்களை நாம் தயக்கமின்றி திறந்து பார்த்தவுடன், ‘malware’ என்று அழைக்கப்படும் தீங்கிழைக்கும் வைரஸ்கள் யாருடைய அனுமதியுமின்றி நம் கணினியில் வந்து அமரக்கூடும். நம் கணினியில் நாம் வைத்துள்ள மற்ற டாக்குமென்ட்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை அழிக்கக் கூடும். வங்கித் தளங்களில் நாம் பயன் படுத்தும் பாஸ்வேர்டை நமக்குத் தெரியாமல் பதிவுசெய்து, இந்த வைரஸை பரப்பியவருக்கு பரிமாற்றம் செய்யும். தவிர, அந்த வைரஸ் வெகுவேகமாக நம் கணினியையும் அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கணினிகளுக்கும் வேகமாகப் பரவக்கூடும்.  Phishing  என்று அழைக்கப்படும் தூண்டில் இன்னொரு வகை அட்டாக். நிஜமான இணையதளம் போன்றதொரு தோற்றத்தில் தயாரிக்கப்படும் போலி தளங்கள் Phishing site   என அழைக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இணையத்தளம் போன்றதொரு போலியான தளத்தின் முகவரியுடன் உங்களுக்கு ஒரு மெயில் வரலாம். அத்தகைய இணைய தளங்களுக்குச் சென்று நாம் நம்முடைய பாஸ்வேர்டு கொடுத்து ஓப்பன் செய்யும்போது, நம் விவரங்கள் அந்தப் போலி தளத்தை இயக்கும் நபருக்குப் போய் சேருகிறது. பிறகென்ன? அந்த வசூல் ராஜாக்கள் நம்முடைய வங்கிக் கணக்குகளில் இருந்து சுல பமாகப் பணத்தைத் திருடுகின்றனர்'' என்றவரிடம், ''இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் இருந்து நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.
''போலி சாஃப்ட்வேர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். தீங்குகள் தரக்கூடிய பல வைரஸ் மற்றும் நாசம் விளைவிக்கக் கூடிய சாஃப்ட்வேர்கள் அத்தகைய போலிகளுடன் மறைந்து வரலாம். ஆண்டாண்டு காலமாக நாம் சேர்த்து வைத்திருக்கும் தகவல்கள் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். எந்த பிரபல நிறுவனத்தின் சாஃப்ட்வேர்களை பயன்படுத்தினாலும் அவற்றின் லேட்டஸ்ட் வெர்சன்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவை மூலமும் வைரஸ் பரவும் ஆபத்து உண்டு. உங்கள் கணினியில் வேறு நபர்களின் மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிஃபென்டர் என்ற மென்பொருளை இலவசமாகத் தருகிறது. www.microsoft.com என்ற முகவரியில் இருந்து நீங்கள் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துவது சரியல்ல. அத்தகைய சாஃப்ட்வேர்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, அதனால் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கை செய்தார்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் சமாளிக்கலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது? உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.

சனி, 9 நவம்பர், 2013

மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி நாம் அறிய வேண்டியவை!!

நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?



ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்க-வில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு " ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் " கட்டாயம் செய்ய வேண்டும்!

பதிவை மறுக்க முடியுமா?
ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!

வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்...
ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பழைய வாகனத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!


சாலை வழிப் பயணம் என்பது ஆபத்துகள் நிறைந்தவையாகும். ஒரு விபத்து உயிர்களை பலி கொள்வதோடு, குடும்பங்களையும் நொடியில் சிதைத்து விடுகிறது. அது போன்ற ஒரு துயர நிகழ்வின் போது, தேவைப்படக்கூடிய நிதியுதவியை உடனடியாக வழங்கி உதவக்கூடியது இன்சூரன்ஸ். மோட்டார் இன்சூரன்ஸின் சில வடிவங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனவே, மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன: செய்ய வேண்டியவை: * இது போன்ற பாலிஸிகளை யார் மூலமும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், உங்கள் வாகன டீலர் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று எவ்வித நிபந்தனையும் கிடையாது என்றும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். * உங்கள் வாகன டீலர் மூலம் இன்சூரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், விண்ணப்பப் படிவத்தை நீங்களே நிரப்பவும். * விண்ணப்பப் படிவத்தை மிகவும் கவனமாகவும், முழுமையாகவும், உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் நிரப்புங்கள். * பரஸ்பர ஒப்புதலுக்குப் பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஒன்றை பத்திரமாக ஆவணப்படுத்திக் கொள்ளுங்கள். * பாலிஸி பற்றிய தகவல் தொகுப்பேட்டை கவனமாகப் படித்துப் பார்த்து, அந்த இன்சூரன்ஸுக்குள் அடங்கக்கூடியவை எவை, அடங்காதவை எவை என்பது பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். * இதில் கூடுதலாகப் பெறக்கூடிய பாதுகாப்பு பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு, அவற்றில் எது உங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் * ஆர்சி புத்தகம், பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரிபார்ப்புக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பியுங்கள். * இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமானது. செய்யக்கூடாதவை: * உங்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள். * படிவத்தில் எந்த கட்டத்தையும் நிரப்பாமல் வெறுமையாக விட வேண்டாம் * உங்கள் பாலிஸியை இடைவெளி விடாது உரிய நேரத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள். * ஏற்கெனவே லைசென்ஸ் எடுக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்கும் போது, சரியான நடைமுறை என்ன என்பது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். * நீங்கள் இன்சூர் செய்யும் வாகனத்தின் உபயோகத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைக் கொடுப்பது தவறான செயல்.


திங்கள், 28 அக்டோபர், 2013

வாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets to get success


வெற்றி பெற்றவர்கள்  பின்பற்றும் 9  ரகசியங்கள்

வேலை பார்க்காமல் வாழ்வு இல்லை. வேலையை பெறுவது முக்கியமல்ல, கிடைத்த வேலையை திறம்பட செய்து முடிப்பதே முக்கியம். அப்போது தான் மேலும் மேலும் வெற்றிகள் நம்மை வந்து சேரும். வெற்றியை அடைய கடின உழைப்பு மட்டுமா முக்கியம்? இல்லை அதனுடன் சேர்ந்து அதன் தரமும் மிகவும் முக்கியம். இது எல்லாம் இருந்தும் சிலர் வெற்றி ஏணியில் நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறார்களே, ஏன்? ஆக்கத்திறனால். ஆம், ஒருவனுடைய ஆக்கத்திறன் தான் அவனின் வெற்றிக்கு வழி வகுக்கும்.


ஒரு உண்மையை சொல்லுங்கள்...அதிகப்படியான ஆக்கத்திறன் கொண்டவர்களை காணும் போது அவர்களை கண்டு பொறாமையோ அல்லது அதிசயித்தோ போகிறோம் அல்லவா? சரி, ஒரு நிமிடம் எதனால் அவர்களுடைய ஆக்கத்திறன் அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப் பார்த்திருப்பீர்களா? அதிக நேரம் வேலை பார்ப்பதாலா அல்லது மேம்பட்ட மணி நிர்வாகத்தினாலா? வேலையை வார விடுமுறை நாட்களிலும் செய்வதாலா அல்லது வெள்ளிக்கிழமையோடு வேலையை முடித்து, சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதாலா? குழம்பாதீர்கள். நல்ல ஆக்கத்திறனை நீங்கள் உங்களுக்குள் வளர்க்க கீழ்கண்ட ஒன்பது பழக்கவழக்கங்களை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
அட்டவணைப்படி நடத்தல் 
பள்ளிக் காலங்களில் நமக்காக தயார் செய்த அட்டவணைக்கு ஒரு காரணம் உள்ளது. ஒரு நடைமுறையை உண்டாக்கி, வேலையை சரியான நேரத்தில், கொடுத்த கால நேரத்திற்குள் முடிக்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்யவே, இந்த அட்டவணை பயன்படுத்துகிறோம். ஒரு தினத்தை நல்ல முறையில் செலவளிப்பவர்கள், கண்டிப்பாக ஒரு அட்டவணையை தயார் செய்து, அதை முடிந்த வரையில் பின்பற்றியவர்களாகவே இருப்பர்.

இலக்குகளில் தெளிவாக இருத்தல் 
தமக்குண்டான இலக்கை தாமே அமைத்து விட்டு, எதனை செய்து முடிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும். அதிலும் அன்றைய நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான குறிக்கோள்கள் தெளிவாக இருக்குமாயின், அது செய்யும் வேளையிலும் அதன் வெளிப்பாட்டின் தரத்திலும் தெளிவாக பிரதிபலிக்கும்

தினத்தை நல்ல விதமாக ஆரம்பித்தல் 
வேலையானது தங்கு தடையின்றி நன்றாக செல்வதற்கு, அன்றைய நாளை சிறப்பாக ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் கொடுத்த காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பதற்கு புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

போதிய இடைவேளையை எடுத்தல்
அதிக நேரம் அரட்டை அடிப்பதும் சரி, நேரத்தை விரையமாக்குவதும் சரி, பெரிய குற்றமே. இருப்பினும், மனதை புத்துணர்ச்சியுடன் வைக்க குட்டி இடைவேளை மிகவும் அவசியம். அதற்கு இடத்தை விட்டு எழுந்து ஒரு சிறு நடை செல்லலாம் அல்லது அலுவலகம் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் ஐந்து நிமிடம் அமரலாம் அல்லது அலுவலக கட்டிடத்தை சுற்றி ஒரு நடை போடலாம். இவ்வாறெல்லாம் செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஆர்வத்துடனும் வேலையை செய்யலாம்.

சரியான இருக்கை நிலை 
ஆக்கத்திறனை அதிகரிக்க சரியான இருக்கை நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உட்காருவதற்கும், ஆக்கத்திறனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது புரிகிறது. மடிக்கணினி முன் தவறான கோணத்தில் அமர்ந்தால், சிறிது காலத்தில் கழுத்து வலியும், முதுகு வலியும் வருவது உறுதி. மேலும் சோம்பல் தோரணையுடன் அமர்வது, திரையை விட மிக கீழே குனிந்து வேலை பார்த்தல் அல்லது முதுகை அதிகமாக வளைத்தல் ஆகியவை சோம்பல் மற்றும் உடல் வலிகளை ஏற்படுத்தும். ஆகவே இவைகள் கண்டிப்பாக ஆக்கத்திறனை குறைக்கும் அல்லவா?

சரியான சாப்பாட்டு அளவு
அதிக சுறுசுறுப்பான மனதும், உடலும் வேண்டுமென்றால் ஆரோக்கியமான சாப்பாடு மிகவும் அவசியம். அதனால் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு ஊட்டச்சத்து நம்மிடம் உள்ளதோ அவ்வளவு ஆக்கத்திறன் ஒருவரிடம் அதிகரிக்கும்.

'வேண்டாம்' என்ற வார்த்தையை கூறிப் பழகுதல்
கெட்டப் பழக்கவழக்கங்கள் இழுக்கிறதா- 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும், அலுவலகத்தில் நேரத்தை விரயம் ஆக்கும் அழைப்புகள் வருகிறதா- 'வேண்டாம்' என்று சொல்லவும். முக்கியமாக அரட்டை அடிப்பதற்கும், அலுவலக அமைப்பை குறை சொல்லுவதற்கும் அதிக நேரம் செலவிடும் உடன் வேலை செய்பவர்களுக்கு பெரிதாக ஒரு 'வேண்டாம்' என்று சொல்லி விட வேண்டும். இதில் ஈடுபடுவதால் விரயமாக போவது நேரமும் ஆற்றலும் தான். பதிலாக நேரத்தை வேலையை வேகமாக முடிப்பதில் செலவு செய்தால், அது தம்மைப் பற்றி தமக்கே ஒரு உயர்ந்த எண்ணத்தை தரும்.

தேவையான அளவு உடற்பயிற்சி 
வாழ்க்கையின் அனைத்து நன்மைக்கும் மூல மந்திரமாக விளங்குவது உடற்பயிற்சி. ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதை பெறச் செய்யும். அதுவே வேலைகளில் கூடுதல் ஆக்கத்திறனை செயல்படுத்த உதவுகிறது.

மகிழ்ச்சியுடன் இருத்தல் 
உறுதியான மற்றும் நேர்மையான எண்ணங்களே ஒருவனுடைய வெற்றிக்கு துணையாக நிற்கிறது. இந்த வெற்றியை அடைய நேர்மறையான சிந்தனையுடனும், சந்தோஷமான மனநிலையுடனும், அன்றாட வாழ்க்கையில் இருக்க வேண்டும். அவ்வாறு மனதை எல்லா நேரமும் தன்னம்பிக்கையுடன் இருக்க பழகிக் கொண்டால், மனமானது சுத்தமாகவும் அதிக ஆக்கத்திறனுடனும் இருக்கும்.

மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு...




  '                                                                                   வினை விதைப்பவன் வினை அறுப்பான்’ என்பது போல, தனியார்மயத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது இந்தியா. பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு, மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணில் பறக்கிறது. 'ஆண்டுக்கு ஒன்பது சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் கொடுப்போம்...’ என கறார் காட்டுகிறது, அரசு. 'இதை எப்படி சமாளிப்பது?’ எனத் தெரியாமல், எரிவாயு இல்லாமலே எரிகிறது, சாமானியனின் வயிறு.
இந்நிலையில், ''விலைவாசியைப் பற்றி கவலைப்படுவதைவிட, அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதுதான் நல்லது. வீடுகளில் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள்... தமிழக அரசின் விலையில்லா ஆடு, மாடுகளை வாங்கியிருக்கும் ஏழை நடுத்தர மக்கள்... அந்தக் கால்நடைகளின் கழிவுகள்  மூலமாகவே சமையல் எரிவாயுப் பிரச்னையைத் தீர்க்க முடியும்'' என்கிறார், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திராவின் இயற்கை வள அபிவிருத்தி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன்.
தொடர்ந்த ராமகிருஷ்ணன், ''சமையலறைக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க உதவும் வகையில், 'சக்தி சுரபி’ என்ற பெயரில் ஒரு கலனை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதைப் பற்றி, 'பசுமை விகடன்' மற்றும் 'அவள் விகடன்' இதழ்களிலும் எழுதியிருக்கிறீர்கள்.
அதன் தொடர்ச்சியாக ஒரு மாடு, நான்கைந்து ஆடுகள், கொஞ்சம் கோழிகள் வைத்திருக்கும் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில், புதிதாக ஒரு கலனை வடிவமைத்துள்ளோம். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட இந்தக் கலனில்,  உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான்(இந்த வாயு சேகரிப்பான், வாயு சேர்ந்த பிறகு மிதக்கும். இதை மிதக்கும் கலன் என்றும் சொல்வார்கள்.)  ஸ்லர்ரி (சாணக்கழிவுக் குழம்பு) வெளியேறும் பகுதி, உற்பத்தியான வாயுவை வெளியே கொண்டு செல்லும் குழாய் என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
இரண்டு வாரத்தில் எரிவாயு!
முதல் முறை உற்பத்தி தொடங்கும்போது... 400 கிலோ சாணத்தை, 400 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்துவிட வேண்டும். இந்த அளவு கரைசல் எப்பொழுதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர் கரைசல்' என்று பெயர். இக்கரைசலை உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம் ஊற்றி, மூடிவிட வேண்டும். சாணத்தில் வைக்கோல் முதலிய மிதக்கும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இந்தக் கரைசலில் 'அனோரபிக்' பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், அந்தக் கலனில் இருக்கும் மிதக்கும் கலன் ஒருவாரத்தில் படிப்படியாக உயரத் தொடங்கும்.
எரிவாயு உற்பத்தியாக உற்பத்தியாக கலன் உயரும். இரண்டு வாரத்தில் சாண எரிவாயு முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். உற்பத்தியான எரிவாயு, வாயு வெளிச்செல்லும் குழாய் மூலம் அடுப்பை அடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பில் தீ பற்ற வைத்து சோதித்துப் பார்க்கலாம். ஆனால், முதல் 5 நாட்கள் வரை உற்பத்தியாகும் வாயுவில், துர்நாற்றம் இருக்கும் என்பதால், அதை அப்படியே வெளியேற்றிவிட வேண்டும். அதன் பிறகு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
தொடர்ந்து, தினமும் கிடைக்கும் சாணத்தில், சம அளவு தண்ணீரையும் சேர்த்து, கலனுக்குள் ஊற்ற வேண்டும். எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, தேவையற்ற கழிவு (ஸ்லர்ரி) தானாக வெளியேறி விடும். இதை, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அசோலா வளர்ப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். நேரடி உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.
இக்கலனில், மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி எரு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விலையில்லா ஆடுகள் அதிகரித்து வருவதால், அவற்றின் கழிவுகளை முறையாக பயன்படுத்தினால், எரிவாயுச் செலவை மிச்சப்படுத்துவதோடு, ஊட்டமேற்றிய உரமும் போனஸாக கிடைக்கும். இதில், 15 ஆடுகளின் கழிவை இட முடியும். அதேபோல 50 கோழிகளின் கழிவை இதில் இட முடியும். மாடுகள் அதிகமாக இருந்தால்... சாண எரிவாயுக் கலன் மூலமாக, மின்சார உற்பத்தியும் செய்யலாம்'' என்ற ராமகிருஷ்ணன்,
21 ஆயிரம் ரூபாய்!
''
இதை எங்கள் மையத்தில் தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது ஃபைபரால் செய்யப்பட்ட கலன் மட்டுமே அமைத்துக் கொடுக்கிறோம். கலன் மற்றும் சாண எரிவாயு அடுப்பு ஆகியவற்றுக்கு 19 ஆயிரம் ரூபாயும், எரிவாயுக் குழாய் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஃபைபர் கலன் என்பதால், செலவு சற்று கூடுதலாக இருக்கிறது. பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டிகள் மூலம் அமைத்தால் செலவு குறையும். அதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் கொண்டு செல்லலாம். வீட்டுக்கு அருகே சாணத்தை குவித்து வைத்தால், ஈ, கொசுத்தொல்லை இருக்கும். அதற்கு பதிலாக, எரிவாயுக் கலனை அமைப்பதன் மூலம், சமையலுக்குத் தேவையான வாயு கிடைப்பதோடு... கூடுதல் பலனாக... ஊட்டமேற்றப்பட்ட உரமும் கிடைக்கும். வயல்வெளிப் பயிர்கள், வீட்டுத் தோட்டப் பயிர்களுக்கெல்லாம் இது அருமையான உரம்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு, ராமகிருஷ்ணன்,
செல்போன்: 94426-53975.