View status

View My Stats

புதன், 18 ஜூன், 2025

வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... -பாலகுமாரன்

 வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு... -பாலகுமாரன்

பாலகுமாரன் விகடனில் எழுதிய 'வயசுப் பிள்ளைகளின் பெற்றோருக்கு.
இந்தியாவின் உயிர்நாடி இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் குடும்பம் என்கிற அமைப்பில்தான் இருக்கிறது.
குடும்பமற்று தனியே வாழும் மனிதரை அவர் துறவியாக இருந்தாலொழிய இந்திய மக்கள் பெரிதும் சிலாகிப்பதில்லை. குடும்பம் என்ற விஷயத்தின் பொறுப்புகளை ஏற்று, பொறுமையாகப் போராடி, வாழ்க்கையின் பாதிக்கு மேற்பட்ட வயதைத் தாண்டி, வெற்றிகரமாக நடந்திருக்கும் கிட்டத்தட்ட என் வயதிருக்கும் உங்களிடம் சில விஷயங்களை உரத்து சிந்திக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
வெகுநாள் கழித்து என்னைச் சந்தித்த நண்பர், ‘நான் எதுவும் உன்னைப்போல் சாதிக்கவில்லை. மூன்று பெண் குழந்தைகள். இருவருக்குத் திருமணம் செய்துவிட்டேன். மூன்றாவது பெண்ணுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ என்றார்.
‘இது போதுமே, இதைவிட பெரிய சாதனை வேறு எது இருக்கிறது?’ என்று அவரை நோக்கி கைகூப்பினேன். அந்த நண்பரும் அவர் மனைவியும் அந்த மூன்று குழந்தைகளை ஓர் உயர்நிலைக்கு கொண்டுவர எத்தனை போராடியிருப்பார்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.
எனக்கும் கிட்டத்தட்ட ஐம்பத்துநான்கு வயது ஆனதால், எனக்கும் வயதுக்கு வந்த குழந்தைகள் இருப்பதால் இந்த விஷயம் மிகப்பெரிய சாதனையாகவே தோன்றுகிறது.
பெற்றோர்களின் தியாகங்கள் இல்லாமல் எந்தக் குழந்தையும் உயர்நிலைக்கு வந்துவிடுவதில்லை. வெறும் சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. பள்ளிக்கூட சம்பளமும் பாடப்புத்தகங்களும் மட்டுமே அவர்களுக்கு பலம் கொடுத்துவிடாது. நல்லன சொல்லிக் கொடுத்தும் அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற குழந்தைகள் பிற்காலத்தில் சாதனை படைக்க பலமுள்ளவர்களாகிறார்கள்.
கெட்ட விஷயங்களை கற்றுக் கொள்வதின் வித்து அநேகமாக பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அவர்களுடைய அடக்குமுறையும் அதிகார நடவடிக்கையும்தான் அவற்றுக்கு உரமாகின்றன.
என் மத்திம வயதில் சந்தித்த அந்த மனிதரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவரோடு வேலை நிமித்தம் நெருங்கிய பழக்கம் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அவர் கணக்கில் புலி. மெல்லிய ஆங்கில மேதமை உடையவர். நிர்வாகத்திறன் உடையவர். கடுமையாக உழைப்பவர். புத்திசாலி. பேசிப் பேசி ஆட்களை எடைபோடும் சாமர்த்தியசாலி.
அந்தக் கெட்டிக்கார மனிதருக்கு ஒரு கெட்டிக்கார மனைவி துணையாக வாய்த்தாள். அவருடைய வளர்ச்சிக்கு அந்தப் பெண்மணி மிக முக்கியமான காரணமாக இருந்தாள்.
அவர்களுக்கு ஒரு மகனும் பிறகு ஒரு மகளும் பிறந்தார்கள். சிறப்பாக வாழ்ந்தார்கள். வாழ்க்கையின் வெற்றிப்படிகளில் கால் வைத்து எகிறி எகிறி போய்க்கொண்டிருந்த அந்த மனிதர் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தவர். கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்காதவர்.
அவர் குழந்தைகள் நன்கு படித்தார்கள். குறிப்பாக, அந்தப் பெண் குழந்தை அற்புதமாக படித்தாள். அவள் பள்ளிக்கூடத்தில் முதலாவதாக வருவதையும் படிப்பில் மிக கெட்டிக்காரியாக விளங்குவதையும் அவரால மற்றவரோடு பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியாது. அவர் மகளையும் மகனையும் பாராட்டியே அவரிடம் கடன் வாங்கிக் கொண்டு போனவர்கள் அதிகம் பேர்.
குழந்தைகளின் பருவ வயதுக்கு முன்பு குமாஸ்தாவாக இருந்த அந்த நண்பர் குழந்தைகள் பருவமடைந்த கால கட்டத்தில் அதிகாரியாக மாறினார். பொறுப்புகள் அதிகரித்தன. வீட்டோடு செலவழிக்கும் நேரம் குறைந்தது. ஆனால் வருமானம் பல மடங்கு அதிகரித்தது. வீட்டோடு தன்னால் இருக்க முடியவில்லையோ என்ற ஏக்கத்தை அவர் வேறுவிதமாக ஈடுகட்ட விரும்பினார். காசை வீசியெறிந்து, பொருள்கள் வாங்கி வந்து குழந்தைகள் திகைத்து நிற்பதைக் கண்டு சந்தோசப்பட்டார்.
அதிகாரம் அதிகரித்துக் கொண்டே போக, காசு பலவழிகளில் வந்தது. ரூபாய் நோட்டுகளை எண்ணி கட்டுக்கட்டாய் வைக்க பிள்ளை ஆசைப்பட்டான். கற்றுக் கொள்ளட்டும் என்று அப்பாவும் அனுமதித்தார். காசின் திசை தெரிந்த பிள்ளைக்கு படிப்பு வேகமாக வரவில்லை. ஆனால் விலகியிருந்த பெண் படிப்பில் நல்லபடி தேறினாள்.
மகனும் மகளும் கல்லூரிக்கு வந்த நேரத்தில் அவர் இன்னும் உயர் பதவிக்குத் தாவினார். இன்னும் அதிகம் சம்பாதித்தார். வீடு அவரை தெய்வமென்று கொண்டாடியது.
ஒரு பெரிய தொழிற்சாலையே கட்டித் தூக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்ததால் குடும்பத்தைப் பற்றி அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மனைவி பார்த்துக்கொள்வார் என்று முழுமனதாக நம்பினார்.
மனைவியோ குழந்தைகளே தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணிக்கொண்டாள். குழந்தைகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டார்கள். பெண் பக்கத்துவீட்டுப் பையனைக் காதலித்து ஓடிப் போனாள். பையன் குடிப்பதற்கும் சூதாடுவதற்கும் கற்றுக்கொண்டான்.
வளர்ந்துகொண்டே போன அவரது வாழ்க்கை குழந்தைகளால் அடிபட்டது. அவர் மனைவியைக் குற்றம் சாட்டினார். மனைவி அவரைக் குற்றம் சாட்டினார். இன்று வரையிலும் அந்த விஷயம் சரியாகவில்லை. அந்தக் குழந்தைகள் அவரவர் போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டபோதிலும் என்னுடைய நண்பருக்கு தன்னுடைய வாழ்க்கை மிகப்பெரிய தோல்வி என்பதாகவே இன்னமும் ஓர் உணர்வு இருக்கிறது.
குழந்தைகளோடு அந்நியப்படுதல் கூடாது என்பதை இந்த நண்பரின் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த்து. காசு சம்பாதிப்பதில் தன்னை இழந்து, தன்னை இழந்ததன் மூலம் தன் குடும்பத்தையும் இழந்த பல கதைகள் இங்கே இடைவிடாது நடைபெறுகின்றன. ஆயினும் காசு வேட்டை குறைந்ததாகச் சரித்திரம் இல்லை. குழந்தைகளோடு பேசிச் சிரிக்கிற சந்தோஷத்தைக் காசு வேட்டையிலுள்ள எந்த பெற்றோராலும் கவனித்து நடத்த முடியவில்லை. குழந்தைகளோடு பேசுவது முக்கியம் என்பது குழந்தைகள் உதறி விலகிய பின்னர்தான் பல பெற்றோர்களுக்குப் புரிகிறது.
வயிறு நிறைய சோறும் உடம்பு நிறைய நகையும் பீரோ நிறைய துணிமணிகளும் சந்தோஷமாகாது.
‘இது யார்? உன்னுடைய நண்பனா? அவனை இங்கே கூப்பிடு. நண்பா…உன் பெயரென்ன? உன் தந்தை என்ன செய்கிறார்? உன் வாழ்க்கையில் என்ன லட்சியம் வைத்திருக்கிறாய்? உன்னுடைய பழக்கவழக்கங்கள் எப்படி? ‘ என்று மகனையும் வைத்துக்கொண்டு மகனின் நண்பனிடம் பேச எந்தத் தந்தைக்கு வாய்ப்பிருக்கிறதோ, அவரே குழந்தையின் நலத்தில் அக்கறை உடையவர் ஆகிறார்.
மகள் டி.வியில் தனக்குப் பிடித்த நடிகரைப் பார்த்து குதித்து கும்மாளமிடும்போது வாய்விட்டுச் சிரித்த தாய் அந்த டி.வி நிகழ்ச்சி முடிந்த பிறகு மெள்ள கூப்பிட்டு, ‘இது நம் வீடு. நாம் எப்படி வேண்டுமானாலும் சிரித்து ஆனந்தப்படலாம். ஆனால், இதே விதமாக வேறு வீட்டில் ஏற்படப்போகிறது. கவனமாக இரு. அவர்கள் இதை ரசிக்கமாட்டார்கள் மாறாக உன்னை கேலி செய்வார்கள். எனவே நடிகர்களை ரசிக்கிற விதத்தை சற்று நிதானமாக்கிக்கொள்’ என்று காதோரம் சொன்னால் அந்தத் தோழமை மகளைப் பலப்படுத்தும்.
நிறைய சம்பாதிக்கும்போது நீங்கள் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் போகிறீர்கள். போகிறபோது உங்கள் குழந்தைகளையும் தோள்களில் தூக்கிக் கொண்டு போவதுதான் நல்லது. விட்டுவிட்டுப் போனால் குழந்தைகள் உயரத்திலிருந்து தடுமாறி விழுந்துவிட வாய்ப்பிருக்கிறது.
‘குளித்தால் போதாதா? எதற்குப் பல் தேய்க்கவேண்டும்’ என்று யாராவது கேட்பார்களா? அதேபோல சம்பாதித்தால் போதாதா, எதற்கு குழந்தைகளைப் பேண வேண்டும் என்று கேட்க முடியாது. இரண்டும் மிக மிக அவசியமாய் செய்யவேண்டிய விஷயங்கள்.
குழந்தைகளைப் பேணுதல் என்பது குழந்தைகளைப் பயமுறுத்தல் அல்ல. அடக்கிவைத்தல் அல்ல. அவர்கள் தக்க மரியாதைகளோடும் பிரியத்தோடும் பெற்றோர்களைப் பார்ப்பது…பார்க்கும் படி வைத்தலே குழந்தைகளைப் பேணுதல்.
குழந்தைகள் பயமின்றி இருக்கவேண்டும் என்றால் மனைவி கணவனிடம் பயமின்றி இருக்க வேண்டும். மனைவியிடம் கணவன் பிரியமுடன் இருக்கவேண்டும்.
‘சரி…மனைவியிடம் பிரியமாக இருத்தல் என்பது என்ன?’
மனைவியிடம் உண்மையாக இருப்பது…மனைவியிடம் உண்மையாய் இருத்தல் என்பது என்ன?’
தன் மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணுக்கும் முதன்மை ஸ்தானம் கொடுக்காமல் இருத்தல். எனவே, மிக சூட்சுமமாக உற்றுப் பார்த்தால், குடும்பம் என்பது ஒழுக்கத்தின் விஷயமாக இருக்கிறது.
பெற்றோர்களின் ஒழுக்கத்துக்கு இன்னொரு பெயர்தான் குடும்பப் பொறுப்பு. இந்தக் குடும்பப் பொறுப்பு அல்லது ஒழுக்கம் பெற்றோர்களிடம் பிசிறுகிறபோது குழந்தைகள் மிக ஆர்வமாக அதைக் கவனிக்கிறார்கள். அதைக் கவனிக்கிற வயதில் அவர்கள் தாங்களும் கோணலாகி நடக்கலாமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. எனவே, ஒழுக்கக் கேட்டிற்கு வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ‘வேண்டாம் இது என்னையும் என் மனைவியையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் பாதிக்கும். என் வம்சத்தைப் பாதிக்கும். எனவே, இவர்கள் சொல்கின்ற இந்த தீய விஷயங்களிலிருந்து நான் விலகி நிற்கிறேன்’ என்று கை கூப்பி தனக்குள்ளே ஆழ்ந்து அடங்கி, கெட்ட விஷயங்களுக்குப் போகாமல் இருக்க ஒரு தந்தை, தாய் முயற்சி செய்து விட்டாலே குடும்பம் உருப்பட்டுவிடும். குழந்தை வளர்ப்பு நல்ல நிலைக்குப் பலமாக வந்துவிடும்.
இப்போதும், பிரச்னை முடிந்துவிடுவதில்லை. நீங்கள் மட்டும் ஒழுக்கமாக இருப்பதாலேயே உங்கள் குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்ந்துவிட முடியாது. குழந்தைகள் நீங்கள் இல்லாத நேரத்தில் பல பேரால் வளர்க்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கிற மாணவன், எதிர் வீட்டுப் பெண், வீட்டு வேலைக்காரர்கள், சுற்றியுள்ள உறவினர்கள், அவர்கள் வாழ்க்கை முறைகள், அந்த தெருவின் தன்மை, அந்த நகரத்தின் குணம்,அந்த மாநிலத்தின் இயல்பு என்றெல்லாம் பல விஷயங்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன. கலை, அரசியல் விஷயங்களும் அவர்களைத் தீண்டி திகைக்க வைக்கின்றன... வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் அவர்கள் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் போய் நின்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். பிறகு, வீட்டுக்கு வருவார்கள். வீட்டுக்கு வர, அந்தக் குழந்தைகளிடம் தாயும் தந்தையும் பேச வேண்டும்.
‘என்ன கேள்வியாக இருந்தாலும், எதைப் பற்றிய கேள்வியாக இருந்தாலும் எந்தவிதமான சந்தேகமாக இருந்தாலும் அஞ்சவேண்டாம். உனக்கு சொல்லிக் கொடுப்பதற்கே நான் இருக்கிறேன். உன்னை வழி நடத்தவே தாய் இருக்கிறாள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து உலக விஷயங்கள் பேசும்போது எங்களுக்கு அருகே உட்கார்ந்து நீங்களும் பேசுங்கள்’ என்ற விஷயத்தைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும்.
‘அப்பா எனக்கு ஒரு காதல் கடிதம் வந்திருக்கிறது’ என்று ஒரு குழந்தை அருகே வந்து சொல்லக் கூடிய தைரியத்தை அந்தக் குழந்தைக்குத் தர வேண்டும். ‘கொண்டா…யாரது?’ என்று அமைதியாக வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டு எவனோ உளறியிருக்கிறான். பாவம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். உனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. நீ வெற்றிகொள்ள வேண்டிய விஷயங்கள் பலநூறு இருக்கின்றன. இவற்றில் கவனம் செலுத்தாதே’ என்று சொல்லித்தர வேண்டும்.
கணக்குப் பாடம் போடும்போது, பென்சிலை வாயில் சிகரெட் போல வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையில் அருகே போய், மெள்ள பென்சிலை எடுத்துக் கீழே வைத்துவிட்டு, ‘உதடு மீது இப்படி பென்சிலை உருட்டினால், உனக்கு உள்ளுக்குள்ளே சிகரெட் பிடிக்கிற ஆசை இருக்கிறதென்று அர்த்தம். எனவே, உற்று உன்னைக் கவனித்து, சிகரெட் பிடிக்கிற ஆசையிலிருந்து தயவுசெய்து வெளியே வந்துவிடு’ என்று மகனுக்குத் தந்தை போதிக்கவேண்டும். ‘சிகரெட் மிகப்பெரிய தவறு. அநேகமாக அதற்குப் பெயர் கொலைக்குற்றம். உன்னை நீயே கொலை செய்ய முயற்சிக்கிறாய் என்று அர்த்தம். உன் மனதைச் சோர்வாக்கி, உன்னை வாழ்க்கையின் இடைநிலைக்கு சிகரெட் கொண்டுபோய்விடும். தயவுசெய்து இப்போதே, இந்தக் கணமே, இதிலிருந்து விடுபடு’ என்று தந்தை அவசரமாக உபதேசிக்க வேண்டும். உபதேசிக்கிற மனநிலை, உபதேசிக்கிற நேரம் தந்தைக்கு இருக்க வேண்டும். இந்த உபதேசத்தை அம்மா தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.
அப்பா, அம்மாவிடம் பிரியமாக இருக்கிறார். அம்மா, அப்பாவிடம் அதிக பிரியத்துடன் இருக்கிறார் என்று தெரிந்தாலே வீட்டிலுள்ள குழந்தைகள் பெற்றோர் மீது பிரியத்துடன் இருப்பார்கள். பிரியம் என்பதற்கு அர்த்தமே பயமின்மை. பயமின்றிப் பெற்றோர்களுக்கு அருகே இருந்து பேசத் தெரிந்துவிட்டால், அந்தக் குழந்தைகளை ஜெயிப்பதற்கு இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. காசு கொடுக்கிற பலத்தைவிட, அன்பு கொடுக்கிற ஆரோக்கியம் மிகப் பெரியது. அன்பு என்பது ஒருமுகப்பட்ட அக்கறை. அக்கறையின் வெளிப்பாடுதான் அன்பு. அக்கறை என்பது குழந்தைகள் மீது, குடும்பத்தின் மீது இருந்து விட்டால் அவர்களோடு செலவிட நேரம் நிச்சயம் கிடைக்கும்.
வீடு சரியாக இருந்துவிட்டாலே, வெளியுலகத்தின் ‘சோதனைகளை எதிர்கொள்ள குழந்தைகள் தயாராகிவிடுவார்கள்.
அடிதடிகளும், ரகளைகளும் கோபங்களும் கேலிகளும் அவமானங்களும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் வெளியுலகத்தில் சந்தித்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அங்கே காயப்பட்டால் ஓர் இளைஞன் எங்கே வந்து அழுவான்? அங்கே அவமானப்படுத்தப்பட்டால் ஒரு யுவதி யாரிடம் போய்ச் சொல்வாள்? சொல்வதற்கு இதமாக வீட்டுச் சூழ்நிலை அமைய வேண்டும்.
‘ராகிங்’ என்று தரையில் நீச்சலடிக்க வைத்தார்கள் அம்மா’ என்று பெண் சொன்னால் இரவு அந்தப் பெண் பக்கத்திலேயே தாய் படுத்துக் கொண்டு அவள் தலையைக் கோதி, ‘எல்லாம் சரியாகப் போய்விடும். மறுமுறை அவர்களைச் சந்திக்கிறபோது இறைவன் பெயரைச் சொல். அவர்கள் உற்றுப் பார்த்து விலகிவிடுவார்கள்!’ என்று ஆறுதல் சொன்னால் போதும்…அந்தக் குழந்தை அடுத்த நாள் காலேஜூக்கு மிகுந்த நம்பிக்கையோடு போகும். சோதனைகள் அதிகமானாலும் இறைவன் பெயரைச் சொல்லி ஆறுதல் படுத்தவேண்டும்.
‘கடக்கக் கூடாத இடத்தில் தெருவைக் கடந்தேன் என்று போலீஸார் என்னைப் பிடித்துவிட்டார்கள். நான் இந்த ஸ்டேஷனில் இருந்து பேசுகிறேன். தயவுசெய்து இருநூறு ரூபாய் அபராத பணத்தோடு வாருங்கள்’ என்று மகன் தந்தைக்கு போன் செய்ய அடுத்த பத்து நிமிடத்தில் தந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அபராதம் கட்டி பையனை மீட்டுக்கொண்டு போனது மட்டுமல்லாமல், ‘இனி, சற்று கவனமாக தெருவில் போ…இதை மறந்துவிடு.
இது பெரிய அவமானம் ஒன்றுமில்லை. இதுமாதிரி பலபேருக்கு நிகழ்ந்திருக்கிறது. இனி இன்னொருமுறை இம்மாதிரி செய்யக்கூடாது என்பதற்குதான் அபராதம் விதித்திருக்கிறார்களே தவிர, உன்னை அவமானப்படுத்துவதற்கு இல்லை. துடைத்துவிட்டு உன் வேலையைப் பார்’ என்று ஆறுதலாகத் தகப்பன் சொன்னால் போதும். கற்றுக்கொண்டு அதைத் திறம்பட நடத்த பிள்ளைக்குத் தெரிந்துவிடும்.
இம்மாதிரி சாதாரண சோதனைகள்தானா குழந்தைகளை தொந்தரவு செய்கின்றன? இல்லை. பத்திரிக்கையில் வரும் கள்ளக்காதலும் திரைப்படத்தில் வரும் நெஞ்சை அள்ளும் காதலும் கதைகளில் வரும் இறுக்கமான கதாபாத்திரங்களும் அவர்களை கலைத்துப்போட வாய்ப்பிருக்கிது. பாட்டுக்கள் கிறங்க அடிக்க, தொலைக்காட்சிப் பெட்டியில் காணும் ஆணும் பெண்ணும் கவர்ந்து இழுக்க, அவர்கள் காதலிக்கின்ற இடம் கண்ணைக் கவர, உடைகள் வியப்பில் ஆழ்த்த, கவிதை வரிகள் ‘சுருக்’கென்று தைக்க, தானும் இதில் ஈடுபட்டால் என்ன என்று தோன்றும்.
உடம்பின் பசி அதை உந்தித் தள்ளும். மனசு ஏக்கம் காதலை இழுத்து கொண்டு வரும். கண்ணில் பார்த்த எல்லா பொருட்களும் காதல் சம்பந்தப்பட்டதாகக் காட்சி அளிக்க, அந்த இளைஞனோ யுவதியோ கால் இடறி அந்தகுளத்தில் விழுவது நிச்சயம்.
இந்தக்குழந்தையை எப்படி காப்பாற்றுவது?
காதலிப்பது தவறே இல்லை. ஆனால் காதல் என்பது குடும்ப கௌரவத்தை பலி போட்டு வருவதாக இருக்க்கூடாது. குடும்ப கௌரவம் என்பது உனது படிப்பு வெற்றியிலும் திருமண நிகழ்ச்சியிலும் இருக்கிறது. எனவே, நீ உன் துணையை தேர்ந்தெடுப்பதைவிட அதிக அக்கறையாக நான் உனக்குத் தேர்ந்தெடுப்பேன். கவலையே வேண்டாம்’ என்று மகளுக்கோ மகனுக்கோ வார்த்தை கொடுத்தால் போதும்…அவர்கள் வீட்டைக் காதலிக்கத் துவங்குவார்கள்.
குழந்தைகளோடு பேசினால் கெட்டுப்போக மாட்டார்களா? நான் என் குழந்தைகளோடு தினம் கொஞ்சினேன் அய்யா. ஆயினும் அவன் கெட்டுத்தான் போனான் என்று என்னிடம் சொன்னவரும் உண்டு. இந்த விஷயத்தில் நான் ஒரு மோசமான முன்னுதாரணம். என் அம்மா என்னோடு தயக்கமற பேசுபவள். என்னை அணைத்து பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தவள்.
நான் அவளைக் கதற அடித்திருக்கிறேன். அவளை வேதனைப்படுத்தி இருக்கிறேன். தவறான இடங்களிலும் கால் வைத்து அவளைக் கலவரப்படுத்தி இருக்கிறேன். இடைவிடாது சிகரெட் குடித்து அவளை வெதும்பச் செய்திருக்கிறேன். ஆத்திரமும் கோபமுமாக நடந்து அவளைப் பயமுறுத்தி இருக்கிறேன். ஆனால் அந்தப் பெண்மணி எனக்காக இறைவனிடம் இடைவிடாது பிரார்த்தனை செய்து என்னைப் பல மோசமான விஷயங்களிலிருந்து மீட்டு வந்தாள். அம்மாவின் பிரார்த்தனையால் நான் நன்கு எழுத முடிந்த்து. அம்மாவின் பிரார்த்தனையால்தான் என் கெட்ட பழக்கங்கள் பலதும் என்னைவிட்டுப் போயின. அம்மாவின் பிரார்த்தனைதான் எனக்கு பிரார்த்தனை செய்யவும் சொல்லிக் கொடுத்த்து. அம்மாவின் பிரார்த்தனைதான் எனக்கு குரு என்பவரை அறிமுகப்படுத்தியது. அவரை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள அம்மாவின் பிரார்த்தனை உதவி செய்த்து.
நம் குழந்தைகளைக் காப்பாற்ற, நமது குழந்தைகளை நல்ல வழியில் திசை திருப்ப, நமக்குத் திராணி இல்லாமல் போகலாம். சக்தி குறைந்திருக்கலாம். அதற்கு உண்டான சாமர்த்தியம் இல்லாது போயிருக்கலாம். நாம் மனதார பிரார்த்தனை செய்தால் நம் குழந்தைக்கு அவனுக்கு ஏற்ற குரு கிடைத்துவிடுவார்.
உங்கள் குழந்தைக்கு செல்வம் சேர்த்துவைப்பதைவிட, உங்கள் குழந்தைக்கு படிப்பு கொடுப்பதைவிட, உங்கள் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுப்பதைவிட, மிக முக்கியமான விஷயம். அவனுக்கு ஒரு நல்ல குருவை அறிமுகப்படுத்துதல். தாய், தந்தையர் தன் மகனுக்கு தான் மட்டும் ஆதரவாக இல்லாமல் தன் குடும்பத்துக்கு ஒரு குருவை தேடிக் கொண்டார்கள் என்றால் ஒரு சத்துள்ள மனிதரை ஆதாரமாகப் பிடித்துக்கொண்டார்கள் என்றால் அவரிடம் சரணடைந்து அவரின் ஆலோசனை கேட்டு நடந்தார்கள் என்றால், அந்தக் குழந்தைகள் இன்னும் சீரும் சிறப்புமாக வலம் வருகிறார்கள்.
தகப்பனிடம் கேட்க முடியாததையும் தாயாரைக் கேட்க முடியாததையும் குரு மூலம் தெளிவாகக் கற்றுக் கொள்கிறார்கள். ஆழ்ந்த இறைநம்பிக்கை வைக்கப் பழக்கப்படுகிறார்கள். அமைதியாக இருக்க அவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது.
எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஒரு குருவைத் தேடிக்கொடுக்கவும் நீங்கள் முயற்சி செய்யலாம். அப்போது மொத்த குடும்பமுமே மிக சந்தோசமாக, நிம்மதியாக, பரவசமான ஓர் இடத்துக்கு வந்து நிற்பதை நீங்கள் உணர்வீர்கள். நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் குருவின் அண்மை உங்களைக் காப்பாற்றும். உங்கள் குழந்தைகளைக் கவனமாக அவருடைய சூட்சுமப் பார்வை பதிந்து மேலேற்றும்.
இவையெல்லாம் தாண்டியும் வாழ்க்கை சோதனைகள் நம்முகத்தை வந்து தாக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பெற்றோர்கள் அந்தச் சோதனைகளை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தைப் பார்த்து, குழந்தைகளும் அதே விதமான பக்குவத்தைப் பெறுகிறார்கள்.
மனித நாகரிகம் மெள்ள மெள்ள வளர்ந்த்து குடும்பம் என்கிற விஷயத்தின் மூலம்தான். அற்புதமான விஞ்ஞானிகளையும் உயர்தரமான கலைஞர்களையும் எதற்கும் அஞ்சாத வீரர்களையும் உலகுக்குக் கொடுத்தது ஒரு தாயும் தந்தையும்தான்.
எனவே, தாயும் தந்தையும் அஸ்திவாரமாக இருக்கின்ற குடும்பம் என்ற அந்தக் கோயிலை நாம் பேணிப்பாதுகாத்துவிட்டால் போதும்…நம் குழந்தைகள் அந்தக் கோவிலுக்குள் குடியிருக்கும் தேவதைகளாக விளங்குவார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
அன்புடன் பாலகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக